Article

நீட் தேர்வு: சமூக நீதிக்கு எதிரானது…..ஏன்? – துளசிதாசன்

Spread the love
நீட் தேர்வு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் சந்தித்து வருகிற பிரச்சனைகள், துயரங்கள் எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடங்காது. குறிப்பாக வட இந்திய மாணவர்களைக் காட்டிலும் தமிழக மாணவர்கள் மிக மிகக் கடுமையான மன உளைச்சலையும் துன்பத்தையும் சந்திக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், எங்கோ தொலை தூரத்தில் கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு என்பது கானல் நீராக இருக்கிறது. காரணம் நீட் நுழைவுத் தேர்வு வருவதற்கு முன்பாக தங்களுக்கு கிடைத்த, ஏதோ ஒரு பள்ளியில் சேர்ந்து, சரியோ தவறோ மனப்பாட முறையில் படித்து, மதிப்பெண்களைப் பெற்று, ஒரு வட்டாரத்திலே இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒவ்வொரு தாலுக்காவிலும் இருந்து ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலே மருத்துவர்களாயினர். அவர்களுக்கான இடம் உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய சூழல் நிச்சயமாக அப்படியில்லை.
கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் உறுதியாக நீட் தேர்வை எதிர்கொள்ளவே முடியாது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை என்ற பொய்யைச் சொல்லி நாம் தவிர்த்து விட முயற்சி செய்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. அரசு, ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்குகிறது. அரசு, பள்ளிக் கல்விக்கு ஒதுக்கும் தொகை என்பது, ஒட்டுமொத்த ஜிடிபியில் மிகக் குறைவு. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர் இடங்கள் நிரப்பப்படவில்லை, கற்பித்தலுக்கு தேவையான பயிற்சி கருவிகள் வழங்கப்படவில்லை, இப்படி பல்வேறு காரணங்களால்தான் அரசு பள்ளிகள் சரியான உயரத்தைத் தொட முடியவில்லை என்பதை மறைக்க முடியாது. 25,000 கோடி ரூபாயில், பெருவாரியான பணம் அரசு ஆசிரியர்கள் சம்பளத்திற்கே போய்விடுகிறது. 5,000 கோடி ரூபாய் மேல்நிலைப்பள்ளி கல்விக்கு மட்டும் செலவு செய்வதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்டு ஒன்றுக்கு அரசுப் பள்ளியிலிருந்து 100 மாணவர்கள் கூட மருத்துவகல்லூரிக்கு செல்வதில்லை.
நீட் தேர்வு வருவதற்கு முன்பு….
Anti-NEET protests continue in Tamil Nadu – Mysuru Today
மதிப்பெண் முறைத் தேர்வில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டு, ஆசிரியர்களின் உதவியோடு நல்ல மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் பள்ளிக்கு ஐந்து அல்லது ஆறு பேர் இருந்தனர். அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பிருந்தது. அந்த வாய்ப்பு இப்பொழுது மறுக்கப்படுகிறது. என்றைக்கு நீட் தேர்வு வந்ததோ அன்றிலிருந்து, கிராமப்புறத்திலிருந்து வரும் மருத்துவ மாணவர்கள் இல்லாமல் போனார்கள். ஆகவே நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது.
அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை 
கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆண்டுதோறும் உத்தேசமாக 9 ½ லட்சம் மாணவர்கள் எழுதுகிற +2 பரீட்சையில் அரசுப் பள்ளியிலிருந்து பத்து, இருபது மாணவர்கள் கூட மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முடியாத சூழல் தற்பொழுது இருக்கிறது. எவ்வளவு பெரிய வலி இது? 7½ கோடி மக்கள் வாழ்கிற தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லை.
அறிவில்லாதவர்கள், தகுதியில்லாதவர்கள் படிக்க முடியாது. அறிவுள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்கிற குறுகிய வாதம் நிலவுவது இன்னும் வேதனை அளிக்கிறது. சமமற்ற சமூகத்தில் எங்கோ ஒரு கிராமத்து மூலையில் படிக்கும் மாணவரின் அறிவுடன், எல்லா வாய்ப்பும் கிடைக்கும் நகர்ப்புற மாணவரின் அறிவை ஒப்பிடுவது தவறான அணுகுமுறையாகும். எல்லா மனிதர்களுக்கும் அறிவு சமமானது என்று அறிவியல் அறிஞர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால், பயிற்சியும் திறன்களும் வேண்டுமானால் மாறுபாடாக இருக்கலாம். ஒரே மாதிரியான பயிற்சியும் திறன்களும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும்போது அவர்களின் அறிவும் சமமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை போன்ற பெரு நகரங்களில் இருப்பவர்களுக்கான வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. நகர்ப்புற அரசுப்பள்ளியிலிருந்தும் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கிறது.
அரசுப் பள்ளிகளிலே தமிழ் மீடியம் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடும், இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் தேவை. தமிழக அரசு இந்நிலைப்பாட்டில் உறுதியோடு இருந்தால், அரசின் கருணையும் பெருந்தன்மையும் தமிழக மாணவர்களுக்கு கிடைக்குமானால் ஒரு சிறப்பு அரசியல் சட்டத்தின் மூலமாக நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு கிடைக்கும். இதைப்பற்றி கல்வியாளர்கள் நிறைய பேசியிருக்கிறார்கள். நம்முடைய அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் உறுதியாக நீட் தேர்வினை எதிர்க்க வேண்டும்.
நீட் நெருக்கடி
மாணவ சமுதாயத்திற்கு நீட் கொடுக்கிற நெருக்கடி அதீதமான நெருக்கடி, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுடைய (சிலபஸ்) பாடத்திட்டத்தை படிப்பதே கடினமான ஒன்றாகும். மதிப்பெண் முறையில் நமது தேர்வுகள் இருக்கக்கூடாது என்று பல காலமாக கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். அதற்கு மாற்றுத்திட்டம் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து இந்த முறை இருந்து வருகிறது.
11ம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாடத்திட்டத்தை படிக்கிற அதே நேரத்தில் நீட்தேர்வுக்கும் தயாராவது என்பது இரட்டைக் குதிரையிலே சவாரி செய்வது போன்றது. இது மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே கடினமான காரியம். இப்படிப் படிப்பது என்பது தனியார் பள்ளியில் படிப்பவருக்கும் அரசுப் பள்ளியில் படிப்பவருக்கும் மிகவும் கடினமானதுதான்.
மாணவர்களிடம் கேட்டுப் பார்த்தால்தான் அந்த வலி நமக்கும் புரியும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகும் முறை வேறு. நீட் தேர்வுக்கு தயாராகும் முறை வேறு. பாடத்திட்டத்திலுள்ள இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய தேர்வின் முறை வேறு. காலையிலிருந்து மாலை வரை பள்ளிப் பாடத்திட்ட பொதுத்தேர்வு முறைக்கு தயாராகிவிட்டு மாலையில் வேறு ஒரு வடிவத்திலுள்ள நீட் தேர்விற்கு தயாராதல் எத்தனை சிரமம்?
ஒரே வருடத்தில் இரண்டு விதமான தேர்வுகளுக்கு தயாராவது போன்ற கொடுமை எந்த நாட்டிலுமே இல்லை. பதின்பருவத்தில் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டிய மாணவர்கள். இரண்டு தேர்வுகளுக்கு தயாராவதால், மன உளைச்சலை சந்திக்கிறார்கள்
பள்ளி ஒரு நெருக்கடி கொடுக்கிறது. நீட் தேர்வு ஒரு நெருக்கடி கொடுக்கிறது. குடும்பம் ஒரு நெருக்கடி கொடுக்கிறது. சுற்றியுள்ள உறவும் சுற்றமும் நெருக்கடி கொடுக்கிறது. நண்பர்கள் (Peer group) ஒரு நெருக்கடி கொடுக்கிறார்கள். சுயமாகவே மாணவன் தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கடி என்று இத்தனை நெருக்கடிகளுக்குள்ளும் நீட் தேர்வு தேவையா? இந்நெருக்கடிகள் தான் மாணவர்களை தற்கொலைவரை தூண்டுகிறது.
How Many Times Did Anitha Need to Prove Her Merit to an ...
12ஆம் வகுப்பு படிக்கும்பொழுதே இரண்டு தேர்வுகளுக்கு தயாராவது மட்டுமல்ல, படிக்கின்ற முறை, பாடத்திட்டத்தை புரிந்து கொள்கின்ற முறை, பாடத்திட்டத்திலே வருகின்ற கடினமான பகுதிகளை எதிர்கொள்கின்ற முறை, நகர்ப்புறத்தில் மிகச்சிறந்த தனியார் பள்ளியிலே படித்து தனியார் கோச்சிங் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கே இத்தனை நெருக்கடிகள் என்றால் ஆசிரியர்களே இல்லாமல், வகுப்பறைகளே இல்லாமல், பள்ளிக்கு போய் வருகின்ற வசதிகளே இல்லாமல், வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் கதி என்ன?
நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்றால், 80 சதவீதம் கிராமங்களைக் கொண்டுள்ளள இந்த தேசத்தில் நீட் தேர்வு நடத்துவது எந்த வகை நியாயம்?
ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் 9 ½ லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 4 ½ லட்சம் மாணவர்கள் அறிவியல் குரூப் அதாவது மருத்துவ தேர்வு எழுதுவதற்கான குரூப் படித்து வருகிறார்கள். அதில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்த 2 லட்சம் மாணவர்களிலிருந்துதான் ஒரு ஆண்டிற்கான 7,000 மருத்துவ இடங்களை நிரப்புகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. (அரசுப்பள்ளிகளிலிருந்து 10 – 20 மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு செல்வதே அரிதாகி விட்டது)
தனியார் பள்ளிகளின் 2 லட்சம் மாணவர்கள்தான் தமிழ்நாட்டினுடைய மருத்துவப் படிப்பு மட்டுமல்லாது, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் இடங்களையும் நிரப்புகிறார்கள். இவர்கள்தாம் பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி
என முதன்மையான அரசு கல்லூரிகளுக்கெல்லாம் செல்கிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை. அப்படியென்றால் மற்ற 7 ½ லட்சம் மாணவர்கள் என்ன ஆகிறார்கள்?
ஒரு லட்சம் மாணவர்கள் ஆண்டு தோறும் மருத்துவக்கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதில் 7,000 மாணவர்கள் தான் மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள். மீதியிருப்பவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்கள் அடுத்த ஆண்டிற்கு தயார் செய்கிறார்கள். அடுத்த ஆண்டின் மாணவர்களுடன் இணைந்து இவர்களும் தேர்வு எழுதுகிறார்கள்.
(ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதிற்குள் மூன்று முறையும், மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இத்தேர்வை எழுத முடியும்.)
முதல் வருட நீட் தேர்வில் தேர்வு ஆகாதவர்கள், அடுத்த கல்வியாண்டில் 93,000 பேர் எழுதுகிறார்கள் என்றால் அவர்களில் 1,000 பேர்தான் தேர்வாகிறார்கள். சிலர் 4, 5 ஆண்டுகள் கூட நீட் தேர்விற்கு தயாராகி தோற்கிறார்கள். அவர்களின் நிலை என்னவாகும்?
(அவர்கள் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்கூட மருத்துவராக முடிவதில்லை, மற்ற துறை சார்ந்த படிப்புகளை படிக்க விருப்பமில்லாத மனநிலைக்கு ஆளாகிறார்கள்).
மீதி இருக்கும் மாணவர்கள் என்னவாகிறார்கள்?
• உள்ளுரிலிருக்கும் கல்லூரிகளுக்கு போகிறார்கள்.
• தவறான பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.
• தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். (முழுமையான புள்ளி விவரங்கள் நம்மிடம் இல்லை)
நீட் தேர்வு இல்லையென்றால்….?
T.N. students crack NEET code, 49% of the candidates qualify - The ...
மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் பள்ளி பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் (Single Window) பொறியியல் கல்லூரிக்கு, பல் மருத்துவ கல்லூரிக்கு, விவசாய கல்லூரிக்கு செல்ல வாய்ப்பிருந்தது. இப்பொழுது மருத்துவ கல்லூரிக்கு மட்டுமே படிப்பவர்கள் தேங்கி போகிறார்கள். நீட் தேர்வை 3 முறை எழுத வாய்ப்பு கொடுப்பதால் அந்தந்த வருடம் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது சமூக நீதிக்கு எதிரானது.
உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காத 7 ½ லட்சம் மாணவர்களின் நிலை….?
சொல்வதற்கே வருத்தமாக இருந்தாலும் உண்மை நிலை… மாணவர்கள் அந்தந்த ஊரிலுள்ள அரசு கலைக்கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற இடங்களில் சேருகிறார்கள். போதிய மொழி அறிவும் இல்லாமல் போதிய பயிற்சியும் இல்லாமல் Group IV தேர்வு கூட எழுதி வெற்றி பெற முடியாத சூழலே உள்ளது. எல்லா அரசு போட்டித் தேர்வுக்கும் பயிற்சி பெற புற்றீசல் போல கோச்சிங் சென்டர்கள் உருவாகியுள்ளன. அதில் வெற்றி பெறுபவர்கள் எத்தனை பேர்? வேலை பெறுபவர்கள் எத்தனை பேர்?
எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காதவர்கள், சுண்ணாம்பு அடிக்கவும், வெல்டரிங் பட்டறைக்கும், மெக்கானிக் பட்டறைக்கும் வேலைக்கு செல்கிறார்கள். சாதி கட்சிகளில், சாதி சங்கங்களில் சேர்கிறார்கள். ரசிகர்மன்றங்களில் சேர்கிறார்கள். மதுவிற்பனை கடைக்கு செல்கிறார்கள். 40 வயதில் 60 வயது தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். இதுதான் அவர்களது அசலான நிலைமை. இன்று, மேலோட்டமாக பார்த்தால் பல உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பது போல தோற்றமளிக்கின்றன. ஆனால் 100% க்கு 12% பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். மற்ற மாணவர்களின் கதி என்ன?
மருத்துவ போராளிகள் அதிகமாகத் தேவைப்படும் இன்றைய கொரோனா காலத்திலாவது நீட் தேர்வு தேவையா என்பதை  சற்றே சிந்திப்போம் !
துளசிதாசன்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery