Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும்.. நன்மைகளின் கருவூலம் நூல்…!

Spread the love

பலருடைய கவனம் கொண்டாட்டங்களில் இருக்கிறது; வெகு சிலருடைய கவனம்தான் பிரச்சினைகளில் இருக்கிறது. சமூக சிந்தனையும், மனித நேயமும் கொண்டோர் பிரச்சினைகளின் உலகில் புகுந்து புகுந்து விடை தேடுகின்றனர். கண்டும் காணாதது போல் நடக்க அவர்களால் முடியாது.அப்படிப்பட்ட இருவர் – கல்வியாளர் பிரிய சகி; உளவியலாளர் ஜோசப் ஜெயராஜ்.இருவரும் சேர்ந்து உருவாக்கிய புத்தகம் ‘நன்மைகளின் கருவூலம்’.குடும்பத்தையும் வகுப்பறையையும் இணைத்துப் பிரச்சினைகளைப் பேசியதில் இந்நூல் தன்னிகரற்று நிற்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் பொதுப்படையான அறிவுரையுடன் தொடங்கவில்லை. ஒரு சம்பவத்துடன் தொடங்குகிறது.

அதன் காரணமாகக் கட்டுரைகள் கதை வாசிக்கும் ஆர்வத்தைத் தருகின்றன. கவனிக்கப்படாத குழந்தைகள், பெற்றோரின் பெரும் பாதுகாப்பு வளையத்துக்குள் சிக்கிக் கிடக்கும் குழந்தைகள்-என இருவருமே காப்பாற்றப்பட வேண்டிய குழந்தைகள்தான்.அக் குழந்தைகள் மீதான அக்கறை நூல் முழுக்க நிரம்பிக் கிடக்கிறது. சில கட்டுரைத் தலைப்புகளே நீண்ட யோசனையை உருவாக்குகின்றன. அப்படியொரு தலைப்பு ‘குடும்பத்தினுள் தனித் தீவுகள்’. தலைப்பே ஒரு கவிதை. கட்டுக்கோப்பான அமைப்புகளுக்குள்ளும் தனித் தீவுகள் உண்டு என்பது நுட்பமான உண்மை.ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கவிதையோடு தொடங்குவது நூலின் இன்னொரு அழகு.

Image result for நன்மைகளின் கருவூலம்

நீங்கள் பேசுவது / அவர்களுக்குப் புரியவில்லை/ அவர்கள் பேசுவதில் / உங்களுக்குக் கவனமில்லை / இடைவெளிகளில் தொலைகிறது. உங்களிருவருக்குமான உறவு (ஜெய் கணேஷ்) -என்ற கவிதைக்குள் ஒரு கட்டுரையின் சாராம்சத்தைப் பார்க்கிறேன். நூலில் சொல்லப்பட்டிருக்கும் ஆலோசனைகள் கூட ஒரு வரிக் கவிதைகளாக மிளிர்கின்றன. ‘உடனிருத்தல் என்பது தொணதொணத்தல் அல்ல’’ என்பது அத்தகையதொரு கவிதை. தலையிடுவதுதான் அன்பு; நச்சரிப்பதுதான் அக்கறை- என்றுதானே பல குடும்பங்களும் வகுப்பறைகளும் புரிந்து வைத்திருக்கின்றன.

‘குடும்ப உறவுகளுக்குள்ளும் எல்லை இருக்கு; எந்தக் காரணத்துக்காகவும் அடுத்தவங்களோட எல்லைக்குள்ள நாம் மூக்கை நுழைக்கக் கூடாது’ என்று உளவியல் அறிஞர் எரிக் எரிக்சன் கருத்தை நெருக்கமானவர் என்ற பெயரில் அடுத்தவர் உலகில் முட்டி முட்டி உள்ளே நுழையப் பார்க்கும் தலைகளுக்குப் புரிய வைக்கிறது ‘மழலை வளர்ப்பிற்கான மகிழ் மந்திரங்கள்’ என்ற கட்டுரை. சொந்த அனுபவங்களின் வழி மட்டும் பேசாமல், உளவியல் ஆய்வாளர் பலரின் கருத்துகள் வழி நூல் பேசுகிறது. குழந்தைகளை நெறிப்படுத்துவதில், ‘பெரியவர்களின் அமைதியான கண்டனங்கள் உரத்த குரலில் செய்யப்படும்கண்டனங்களை விடப் பயன் மிக்கவையாக உள்ளன’ என்று டிராட்மேன் கூறும் கருத்து குடும்பங்களுக்குள்ளும் வகுப்பறைகளுக்குள்ளும் கொண்டு சேர்க்க வேண்டிய கருத்து. வினையாகும் விளையாட்டுகள்’ இன்றைய தலைமுறைக்குத் தேவையான மிக முக்கியமான கட்டுரை.

Image result for children's use of mobile phones

தெரு இன்று வெறிச்சோடிக் கிடப்பதைச் சுட்டிக் காட்டிக் கட்டுரை தொடங்குகிறது. கூடி ஆர்ப்பரித்து விளையாடும் குழந்தைகளைக் காணோம். அவர்களில் பலர் வீடுகளுக்குள் ஸ்மார்ட் போன், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று நாற்காலிகளுக்குள் சுருங்கிக் கிடக்கின்றனர். எங்கள் காலத்தில் தெரு- மற்றொரு பள்ளிக்கூடம்; இன்னொரு வீடு. நினைத்துப் பார்க்கிறேன். பெருமூச்சுதான் மிச்சம். மனச்சாட்சி உருவாக்கி இருக்கும் தடைகளைத் தகர்த்து,வேறு தகாத செயல்களில் ஈடுபட வீடியோ விளையாட்டுகள் பிள்ளைகளை எவ்வாறு தூண்டுகின்றன என்பதை விளக்கும் அருமையான கட்டுரை இது. கேள்விகளையும் விவாதங்களையும் தூண்டும் நூல் இது.

நூலைப் படித்து முடித்ததும், ‘ தம் குழந்தைகள் அனைவரிடமும் சமமாக அன்பு செலுத்தும் குடும்பம் இருக்கிறதா?’ பாடத்தைக் கவனிக்காமல் ஏதோ காரணத்தால் கடைசி பெஞ்சில் தூங்கி வழியும் மாணவனை எரிச்சல் அடையாமல் பார்க்கும் வகுப்பறை இருக்கிறதா?’- என்பன போன்ற கேள்விகள் வெடிக்காமல் போகாது.

Image result for நன்மைகளின் கருவூலம்

பிரச்சினைகள் பலவற்றுக்கு எளிய உதாரணங்களுடன் எளிய மொழியில் விடை கூறுவது நூலின் மிகப் பெரிய சிறப்பு. ஓரிரு தீர்வுகளோடு மட்டும் என்னால் உடன்பட முடியவில்லை. உதாரணமாக- சுவரில் முட்டிக் கொள்ளும் குழந்தையைக் கவனிக்காமல் விட்டுவிடும் தீர்வு. அப்படிச் செய்தால், மிருதுவானவர்களை- எளிதில் நொறுங்கிப் போகிறவர்களைப் புரிந்து கொள்ளமுடியாமல் போகும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஒருவரிடம் அன்பு செலுத்துவதைப் போல் முக்கியமானது ஒருவரைப் புரிந்து கொள்வது. அத்தகைய புரிதல்களை உழைத்து உருவாக்கியுள்ள நூல் இது. நூலின் ஒரு கட்டுரை ‘கொஞ்சம் புரிஞ்சுக்கோங்களேன் ப்ளீஸ்’ என்கிறது. நூலை வாசிப்போம்.குழந்தைகளைப்புரிந்து கொள்வோம்.
– ச.மாடசாமி

Leave a Response

Top Reviews

Video Widget

gallery