Book Review

புத்தக மதிப்புரை: கனவுச் சுமைதாங்கும் விளிம்புநிலை மனிதர்கள் (தேனி சீருடையானின் “நாகராணியின் முற்றம்” நாவல் குறித்து) – அ. உமர் பாரூக்

Spread the love

 

”கடை” , ”நிறங்களின் உலகம்”, “சிறகுகள் முறிவதில்லை” நாவல்களின் மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே விளிம்புநிலை மனிதர்களின் கதைகளையும், பார்வையற்றோரின் உலகையும் பதிவு செய்து கவனம் ஈர்த்த தேனி சீருடையானின் நான்காவது நாவல்  “நாகராணியின் முற்றம்”.

                பொதுவாக நாவல்களில் நாயகன் ஒருவனைப் பற்றிய விவரணைகளே அதிகமாகவும், முழுமைப் படுத்தப்பட்ட தன்மையோடும் இருக்கும். இப்படி இருப்பதைத்தான் நவீன இலக்கியவாதிகள் சிறுகதைத்தன்மை என்றும், குறுநாவல் என்றும் குறிப்பிடுகிறார்கள். தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்கள் மட்டும்தான் கதையின் பல மாந்தர்களின் தனித்தன்மையையும், முழுமையையும் வெளிப்படுத்துகின்றன. அப்படிப் பல பாத்திரங்கள் முழுமை பெற்ற படைப்பாக ”நாகராணியின் முற்றம்” உயிர்ப்போடு அமைந்திருக்கிறது.

                பல சுவாரசியமான பாத்திரங்களாக ஒன் எய்ட் கான்ஸ்டபிள், அம்பியண்ணன், அப்துல் கனி ராவுத்தர், மலையாளம் பேசும் கந்தல் ராணி . என தனித்தனியான பாத்திரப் படைப்புகள் அருமையாக வெளிப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரமும் அதனளவில் முழுமை பெற்று, நாவலுக்கு கூடுதல் சேர்க்கின்றன.

                நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் காட்சி படுத்துதலில் தனித்து நிற்கிறது. பொன்னியின் செல்வனை வாசித்து விட்டு, அதில் வரும் ஊர்களை பார்வையிட பெரும் வாசகர் பட்டாளம் கிளம்பியதை கேள்விப்பட்டிருக்கிறோம். தேனி மாவட்டத்தில் பல பகுதிகளை  ம.காமுத்துரையின் பல கதைகளில் இவ்வாறான காட்சி படுத்துதல் அதிகம் இருக்கும். அதே அனுபவத்தை ”நாகராணியின் முற்றம்” தருவது சிறப்பு. ஆத்துப்பட்டியில் குடியிருக்கும் விளிம்புநிலை மனிதர்கள், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சர்வண்ட் அருவி எனத் தேனியின் பல பகுதிகளை நேரில் காணும் ஆர்வத்தை நாவலின் வரிகள் தூண்டுவது aதன் உயிரோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

மத விமர்சனம்

Religious Diversity, Theories of | Internet Encyclopedia of Philosophy

                இடதுசாரி படைப்பாளர்களின் எழுத்துகள் அடிப்படைவாதம் பேசுகிற, மக்களை சுரண்டுகிற எல்லா மதங்களையும் சமமாகவே எதிர்க்கின்றன. சமீபகாலங்களில் முற்போக்காளர்களின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம் – இந்து மதத்தை எதிர்த்து பேசும் நீங்கள் ஏன் கிறிஸ்துவ, இஸ்லாமிய விமர்சனங்களை முன்வைப்பதில்லை என்பதுதான்.

இந்நாவலின் கதாபாத்திரங்களாக வரும் மிகச் சாதாரண மக்கள் இந்து மதத்தை விமர்சிப்பதோடு நிற்காமல், கிறிஸ்துவ மிஷனரிகளால் சுரண்டப்படுவதற்கு எதிரான கருத்துகளையும் தன்னியல்பாக வெளிப்படுத்துகிறார்கள். முனியசாமி, காளியாத்தாள் மட்டுமல்ல. ..கன்னியாஸ்திரீகளும் சாதாரண மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதை நாவல் பதிவு செய்கிறது.

கால மாற்றம்

                நாவலின் முக்கிய கதையோடு பின்புலத்தில் கதாபாத்திரங்கள் வாழும் தேனி நிலத்தின் கால மாற்றங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பது மிக முக்கியமானது. தேனி குறித்த ஆய்வுகளில் 70 – 80 களின் மாற்றங்கள் இந்நாவலின் வழியே ஆய்வு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம். பல நகர வரலாறுகள் பல்வேறு நாவல்களின் வழியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், எஸ்.அர்ஷியாவின் சொட்டாங்கல் போன்ற நாவல்கள் மதுரையை பதிவு செய்வதைப் போல, ”நாகராணியின் முற்றம்” தேனியின் பின்புல மாற்றங்களை பதிவு செய்துள்ளது.

# மனிதன் இழுக்கும் வண்டிகளுக்கு பதிலாக, அரிமா கைவண்டிகளின் அறிமுகம்

# ஆத்துப்பட்டி மற்றும் சர்வண்ட் அருவியின் கதை

# கொட்டக்குடி ஆற்றின் அன்றைய நிலை

# தேனியின் பஞ்சகாலப் பதிவுகள்

# சினிமா தியேட்டரின் வருகை

# அரசியல் சூழல்

                இப்படியான பல விஷயங்களைக் குறிப்பிடலாம்.

தொழில்சார் ரசாயனங்கள்

The mango you love may have gas welding chemical - India News

            பழங்களை கார்பைட் கல் வைத்து பழுக்க வைப்பது தவறானது, அது உடல்நலத்தை கெடுக்கும் என்று அரசுகள் அலற துவங்கியது 2000 ற்குப் பிறகுதான். எழுபது, எண்பதுகளில் அது குறித்த விழிப்புணர்வோ, அது தவறு என்றோ பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. அக்காலத்தில் கார்பைட் கல் பயன்பாடு மிகச் சாதாரணமாக வழக்கத்தில் இருந்ததை கடை நாவல் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்ததைப் போலவே, 80 களின் சாக்ரீன் எனப்படும் செயற்கை இனிப்பு பயன்பாட்டை இந்நாவல் வெளிப்படுத்துகிறது.

                பிற்காலத்தில், தமிழ் அறிவியல் துறை வலுப் பெற்று அறிவியல் பயன்பாட்டை தமிழ் புதினங்களில் ஆய்வு செய்யும் போது கடை, நாகராணியின் முற்றம் ஆகியவை உணவின் ரசாயனப் பயன்பாட்டின் துவக்க காலப் பதிவுகளாக முன்னிற்கும்.

                ஒரு புனைவிலக்கியத்தில் மொழி, வரலாறு, உணவு என்று பன்முகத்தன்மை வெளிப்படுவதை அவசியமானதும், முக்கியமானதுமாகும்.

மார்க்சிய தத்துவம்

Marxist Communist Party Conference commenced ...

            கதையின் ஊடாக வரும் ஊர்வலங்கள் துவக்கத்தில் செயற்கையாக இருக்கிறது. குறிப்பாக முதல் அத்தியாயத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலம் குறுக்கிடுவது ஒட்டாத தன்மையில் இருக்கிறது. ஆனால், அடுத்தடுத்த நிலைகளில் ஊர்வலம் வழியாக பகிரப்படும் கோட்பாடுகள், அரசியல் நிலைப்பாடு ஆகியவை முக்கியமானவை.

            மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான வர்க்கம், உழைப்பு, உபரி போன்ற கடினமான விஷயங்களை எளிய வார்த்தைகளில் பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு. சாலையோர வியாபாரமும், விபச்சாரமும் மக்களுக்கு இடையூறு விளைவிப்பவைதான். ஆனாலும், அவை ஏன் இப்போதும் இருக்கின்றன என்பதையும், அதற்கும் சங்கம் அமைப்பது ஏன் என்பதையும் “இடைக்கால ஏற்பாடு” என்று விவரித்திருக்கும் விதம் அருமை. அவ்வப்போது சிவந்தநாதன் தலைமையில் வரும் தோழர்கள் தத்துவ வகுப்பை நேர்த்தியாக எடுப்பது சிறப்பாக வந்திருக்கிறது.

கனவுகளின் எதார்த்தம்

ரசனை – சொல்வனம் | இதழ் 224

நாவல் முழுவதும் பல கனவுகள் வந்து போகின்றன. பெரும்பகுதி கனவுகளை நாயகனும், இன்னும் சில கனவுகள் மற்ற பாத்திரங்கள் வழியாகவும் வெளிப்படுகின்றன. கனவுகள் என்பவை எதார்த்த வாழ்வின் கூறுகளே என்ற உளவியல் உண்மையை நாவல் வெளிப்படுத்துகிறது. எதிர்பார்ப்பும், ஆசைகளும் எதார்த்தத்தை மாயாவாதம் கலந்ததாக மாற்றுவதையும் கனவுகள் வழியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உச்சக்கட்டமாக, நாயகனின் ஒரு கனவு முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டு நாட்டார் தெய்வங்கள் நாயகனின் கனவில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்கின்றன. விதம் விதமான தாக்குதல்களும், எதிர்த் தக்குதல்களும் நடக்கின்றன. தோற்கும் நிலையில் இருக்கும் ஒரு நாட்டார் தெய்வம் கடைசியாகக் கத்துகிறது . . ”உன் வாயில் கப்பை மாவை கரைத்து ஊற்றி விடுவேன்”. இதைக் கேட்டு அரண்டு போகும் இன்னொரு தெய்வம் ஓடி மறைகிறது. தேனியின் பஞ்சகாலத்தில் பசிக்கு உணவின்றி கப்பை மாவை தினமும் குடித்து வரும் ஒரு விளிம்பு நிலை மனிதனின் கனவு இது.

ஒவ்வொரு  கனவும் வெவ்வேறு விதங்களில் வாசகனுக்கு புதிய உலகை திறக்கின்றன. உரையாடல்களின் வழியே எதார்த்தத்தை பகிர்வதும், அதையே கனவுகளின் வழியாக பிரதிபலிப்பதும் சிறந்த உத்தி.

இன்னும் சில. . .

# நாவலின் இன்னும் பல அம்சங்கள் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. போலிஸ்காரர்கள் 70 – 80 களிலேயே மாசக்கடைசிக்கான வசூலை துவங்கியிருப்பதும், இப்போது ஹெல்மெட் – லைசென்ஸாக மாறியிருக்கும் நவீன வசூல் முறை டைனமோ வழியாக வெளிப்பட்டிருப்பதும் காலப் பதிவு.

# போலீசை எதிர்ப்பதாக இருக்கட்டும், தர வேண்டிய பணத்தை தராத முதலாளியோடு சண்டை போடுவதாக இருக்கட்டும் நாயகியின் போராட்ட குணம் தனித்துவமானது. வழக்கமான தமிழ் கதை மாந்தர்களிலிருந்து நாகராணி வேறுபட்ட படைப்பு.

இப்படி ஒவ்வொரு கூறையும் பிரித்தெடுத்து ஆய்வு செய்வதற்கான சாத்தியங்களை நாவல் பக்கங்கள் தோறும் விட்டு செல்கிறது.

நாவலின் நெருடலான பகுதி – பாலியல் சார்ந்த விஷயங்கள். சில பகுதிகளில் வரும் பாலியல் சார்ந்த சில வர்ணனைகள், விவரிப்பு ஆகியவை சற்றே மிகையாக வெளிப்படுகிறது. கிராமத்து மனிதர்களின் உரையாடல்களில் வெளிப்படும் கேலியில் மறைந்திருக்கும் பாலியல் கூறுகள் மென்மையானவை, மறைவானவை. ஆனால், நேரடியான விவரணைகளில் வெளிப்படும் பகுதிகள் சற்றே விரச உணர்வை தருகின்றன.

சமுதாயத்தின் அரசியல், பண்பாட்டு விழுமியங்களை சிறப்பான முறையில் பதிவு செய்துள்ள நாவல் இது என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery