Book Review

நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும் – நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ், தேனி

Spread the love

இத்தொகுப்பில் இரண்டு நூல்கள் உள்ளன. நான் கண்டதும் கேட்டதும் என்பதில் பன்னிரண்டு கட்டுரைகளும், பழையதும் புதியதும் என்பதில் இருபது கட்டுரைகளும் உள்ளன. கட்டுரைகள் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

கண்டதும் கேட்டதும்

ஒரு புலவனும் மனைவியும் காட்டுவழியே செல்கின்றனர். அப்போது கள்வர் கூட்டத்திடம் சிக்குகின்றனர். கள்வர்களைப் பார்த்து அந்தப் பெண் அண்ணண்மார்களே எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்க, இரக்கப்பட்ட திருடர்கள் அவர்களுக்கு தஞ்சம் அளிக்கின்றனர். ஆனால் திருடுவதற்கு புலவரும் உடன் வரவேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். சரியென உடன்படுகின்றனர். ஒரு நாள் ஒரு ஜமீன்தார் அரண்மனையில் கன்னக்கோல் இடுகின்றனர். ஆள் நுழையும் அளவில் ஓட்டை ஏற்படுகிறது. அதன் வழியே புலவரை அனுப்பி திருடி வரச்சொல்கிறார்கள், புலவரும் உள்ளே நுழைகிறார், அது ஜமீன்தாரின் படுக்கையறை. புலவர் இன்னது செய்வதெனத்தெரியாமல் திகைத்து நிற்கிறார். இரவின் நான்காம் ஜாமம். ஜமீன்தாரும் மனைவியும் விழித்துக்கொண்டதைப்பார்த்தப்புலவர் பயந்து கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்கிறார். அப்போது ஜமீன்தாரும் மனைவியும் தங்களது உரையாடலை இலக்கியத்தின்பால் செலுத்துகின்றனர், ஜமீன்தார் ஒரு பாடலுக்கான முதலிரண்டு வரிகளைக்கூறி, மீதி இரண்டு வரிகளை ராணியைக் கூறுமாறு வேண்டுகிறார்.

இந்த நிலையில் கட்டிலுக்கு கீழே இருந்த புலவர் வந்த வேலையை மறந்து இலக்கிய நாட்டம் கொண்டு தன்னிலை மறந்தவராக மீதியிரண்டு அடிகளையும், ராணியின் தயக்க நிலையைப்பயன்படுத்தி கூறுகின்றார். திடுக்கிட்ட ஜமீன்தார் கட்டிலை விட்டிறங்கி யாரது என அதிகாரமாக கேட்க அப்போதுதான் தன்னுணர்வு வந்த புலவர் பயந்து நடுநடுங்கியவாறு கட்டிலின் கீழிருந்து வெளியே வருகிறார். நடந்ததை எல்லாம் ஜமீன்தாரிடம் விளக்குகிறார். தமிழின் மீது பற்றுக்கொண்ட அந்த ஜமீன்தார் புலவர் மீது இரக்கப்பட்டு, தனது கஜானவினுள் அழைத்துச்சென்று, விருப்பப்பட்டதை எடுத்து செல்லுமாறு புலவரிடம் கூறுகிறார். அதுவரை அவ்வளவு செல்வதை பார்த்திராத புலவர் அங்கிருந்த ஒரு பெரியபெட்டியை சுட்டிக்காட்டி அதுதான் வேண்டுமென்கிறார். ஜமீன்தாரும் உடனே அந்தப்பெட்டியை எடுத்து கையில் கொடுக்க வந்தவழியே செல்வதற்கு விரும்பிய புலவருக்காக அந்தப்பாதையை சற்று பெரிதாக்கி புலவரை இன்முகத்துடன் வழியனுப்புகிறார் ஜமீந்தார். காத்திருந்த கள்வர்கள் நேரமானதால் அங்கிருந்து சென்று விட்டனர். புலவர் தனியொருவராக அந்தப்பெட்டியை சுமந்து காடு வந்தடைகிறார். இருப்பிடம் வந்தபின் பெட்டியை திறந்து பார்க்கின்றனர். பெட்டி நிறைய வாண உப்பு. அதிர்ச்சியடைந்த புலவர்,

” நாடெல்லாம் செந்நெல் விளையினும் நாட்டின்
நதியெல்லாம் நவமணி தரினும்
காடெல்லாம் ஆடை காய்க்கினும் மேகம்
கனகமே பொழியினும் மடவாய்
ஆடலே புரியும் அம்பலவாணர்
அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல்
வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும்
விதியல்லால் வேறு ஒன்று உளதோ? “

என்று தன் மனவருத்தத்தை அழகிய தமிழால் பதிவு செய்துள்ளார்.

பரம்பரை குணம் என்ற கட்டுரை. இது எழுபதுகளின் இறுதியில் எட்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒரு பாடமாக (இரண்டாவது பாடம்) இருந்தது. இப்பாடத்தை நடத்தும்போதெல்லாம் வகுப்பில் உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்திருக்கிறேன். அந்தக்கட்டுரையை இதில் கண்டவுடன் நினைவுகள் பின்னோக்கி சென்று திரும்பிய ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது.சுந்தர ராமசாமி சொன்ன மாதிரி நம்மைப்பற்றி பேசுவதென்பது வெல்லக்கட்டி மாதிரிதான். நாற்பது ஆண்டுகளுக்குப்பின்னால் என்பதே மகிழ்ச்சி தரும் விஷயம்தானே.

தமிழுக்கு மணிமேகலையை தந்துதவிய ஊர் மிதிலைப்பட்டி. இந்த ஊரில் அழகிய சிற்றம்பலகவிராயர் எனும் பெரும்புலவர் வாழ்ந்துவந்தார். உ. வே. சா. வின் நண்பர். யானை கட்டிப்போட்ட சின்னங்கள் உடைய வீட்டுக்காரர். நல்ல வசதி. அவர் ஒரு நாள் தொலைவிலிருந்து ஊருக்குப் போய்விட்டு மிதிலைப்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வண்டிக்காரன் கறாராக வாடகைப்பேசினான். அதுவுமின்றி இரவு வெகுநேரம் ஆகிவிடுமாதலால் காலை உணவும் கொடுக்கவேண்டுமென நிபந்தனை விதிக்கிறான். பயணம் தொடங்குகிறது. நிலவொளி, வண்டிக்காரனின் தெம்மாங்கு பயணத்தை இனிமையாக்குகிறது. வண்டிக்காரன் பாட்டை நிறுத்தியதும் கவிராயர் பேசத்தொடங்குகிறார். கவிராயருடைய முன்னோர்கள் சேலத்தைச்சேர்ந்தவர்கள். பரம்பரையே கவிவாணர்கள்தாம். அப்படிப்பட்ட கவிராயர்களில் ஒருவரான என் முன்னோர்களில் ஒருவருக்கு இப்போது இருக்கும் மிதிலைப்பட்டியை வெங்களப்ப நாயக்கர் எனும் ஜமீன்தார் தானமாக கொடுத்தார். அந்த சாசனம் இன்னமும் எங்கள் வீட்டில் உள்ளது. அதன்பின் ராமநாதபுரம் சமஸ்தானம், சிவகெங்கை சமஸ்தானம் போன்றவர்களால் எங்களுக்கு பெரும் பெரும் பரிசுகள் வழங்கப்பட்டன, ஆனால் எங்களுக்கு இந்த ஊரைத் தானமாக அளித்த அந்த வெங்களப்ப நாயக்கர் குடும்பம் மட்டும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும் போது மனதில் வருத்தம் எழத்தான் செய்கிறது,என்று கவிராயர் கதை சொல்லி முடிக்கவும் ஊரும் வந்தடைந்தனர்.

வண்டிக்காரனைச் சாப்பிடச்சொன்னார் கவிராயர் . பசியில்லை என்று கூறி மறுத்துவிட்டான். வாடகை ரூபாயை எடுத்து அவனிடம் கொடுக்க முனைந்தார், அப்போது வண்டிக்காரன் பணிவாக அதை மறுத்து அது தங்களிடமே இருக்கட்டும் என்று கூறினான். நேற்று கராறாகப்பேசிய வண்டிக்காரன் இன்று வாடகை வேண்டாமெனக்கூறுவதை கேட்ட கவிராயர் திகைத்து விட்டார். தான் பேசியது மூன்று ரூபாய்த்தானே, அதைப்பெற்றுக்கொள்வதில் தயக்கமேன், ஒருவேளை கூட கேட்கிறானோ என்ற சந்தேகத்தில் ஏனப்பா வேண்டாம் என்று சொல்லுகிறாய் என்று வினவினார். அதற்கு அந்த வண்டிக்காரன், “ஐயா, நீங்கள் உங்களுடைய கதையை கூறினீர்கள். தாங்கள் சின்ன வெங்களப்ப நாயக்கனின் பரம்பரையில் வந்தவன் நான். ஏதோ விதி வசத்தால் நாங்கள் இந்தநிலைமைக்கு வண்டியோட்டி பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். கொடுத்ததை என்றும் திரும்ப வாங்கக்கூடாது என்று எங்கள் பெரியவர்கள் கூறியுள்ளனர், ஏதோ இந்தமட்டுமாவது உங்களுக்கு உதவி செய்யுமளவிற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததே எனது பெருபாக்யமாகக்கருதுகிறேன் அய்யா “என்று பணிவாகக்கூறிவிட்டு நிமிர்ந்து நடந்து வண்டியை ஓட்டிச்சென்றான் அந்த வண்டிக்காரன். அந்தக்கவிராயர் உ. வே. சா. விடம் இந்தக்கதையின் இறுதியை கூறும்போது தழுதழுத்துள்ளார்.

புதியதும் பழையதும்

சங்கராபரண நரசய்யா என்ற கட்டுரை.

தஞ்சை மராட்டிய மன்னர் அவையில் நரசய்யர் எனும் புலவர் மற்றும் இசையறிஞர். நன்கு பாடும் திறன் வாய்ந்தவர். ஒரு நாள் சங்கராபரணம் மெட்டில் பாடியுள்ளார். அவையினர் மேசிலிர்த்தனர். அரசர் நரசய்யரை பெறுமளவு பாராட்டி தகுந்த சீர் வரிசையெல்லாம் செய்து அவருக்கு சங்கராபரணம் நரசய்யர் எனும் நமக்காரணத்தையும் சூட்டுகிறார். அன்றிலிருந்து அவர் அந்த பெயராலேயே அழைக்கப்படுகிறார். ஒரு சமயம் நரசய்யருக்கு பணமுடை. நிறைய பணம் தேவைப்பட்டது. கபிஸ்தலம் ராமபத்ர மூப்பனாரிடம் செல்கிறார். அவரிடம் உதவி கேட்கிறார். மூப்பனார் எவ்வளவு வேண்டும் எனக்கேட்க எண்பது பொன் வேண்டும் எனக்கூறுகிறார். நிறைய தொகையாய் உள்ளதே, அதற்கு எதாவது பிணை ஏதும் தருகிறீரா எனக்கேட்க, நரசய்யர், “அய்யா என்னிடம் ஒரே ஒரு நகையுள்ளது, அதைத்தான் பிணையாக வைக்கமுடியும் “என்று பதிலளிக்க, மூப்பனார் என்னவென்று அவளோடு வினவ, சங்கராபரணம் எனும் ஒரே ஆபரணம் மட்டுமே உள்ளது, இந்தக்கடனை திருப்பி அளிக்கும்வரை எந்த இடத்திலும் அந்த ராகத்தை படமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார் நரசய்யர்.

மூப்பனாரும் ஒரு கடன்பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு அந்த எண்பது பொண்ணை கொடுத்தார். சிலகாலம் சென்ற பின்னர் வாலிஸ் துரையின் அன்புக்குக்கு பத்திரமான வாலிஸ் அப்புராயர் அவர் வீட்டு திருமண விழாவில் நரசய்யரின் கச்சேரி நடக்கிறது . இவரின் இசைத்திறமையை கேள்விப்பட்ட அப்புராயர் நரசய்யரின் பாடலில் மெய்மறக்கிறார். அப்போது ராயரின் உடனிருந்தவர்கள் இவர் சங்கராபரணம் ராகத்தை அருமையாகப் பாடுவார் என்று சொல்ல, ராயர் நரசய்யரிடம் படுமாறு விண்ணப்பிக்கிறார். நரசய்யர் பாட மறுக்கிறார். காரணம் கேட்டதுக்கு, நடந்ததை கூறுகிறார்.

உடனே அந்தக்கடன் தொகையும், அதற்குண்டான வட்டியையும் சேர்த்து ஒருவரிடம் கொடுத்தனுப்பி அந்தக்கடன் பாத்திரத்தை மீட்டுவரச்சொல்கிறார். மூப்பனார் அந்தக்கடன் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அப்புராயரிடம் வருகிறார். பணம் வேண்டுமென்றால் கொடுத்திருப்பேன், கடனக்கக்கேட்டார், அதனால்தான் பத்திரம் எழுதிவங்கினேன். வேறொன்றுமில்லை, இதை ராயரும், நரசய்யரும் மறந்துவிடவேண்டும் என்று கூறி பணத்தை வாங்க மறுத்து, இத்தனைநாள் நரசய்யரின் சங்கராபரணத்தை சிறைவைத்ததற்ககான அபராதத்தொகையாக இதை தந்துவிடுகிறேன் என்று மூப்பனார் கூறுகிறார். நரசய்யரின் செய்கையும், மூப்பனாரின் செய்கையும் புதுமையிலும் புதுமை. எல்லோராலும் பாராட்டப்பட்டது. மறுநாள் கச்சேரியில் நரசய்யரின் சங்கராபரணம் அனைவரையும் மெய்ம்மறக்கச்செய்தது.

இந்த தொகுப்பு ஒரு வரலாற்று பெட்டகமாகும். அறியாத நிறைய விஷயங்கள் இதில் நிரம்பியுள்ளன.

ஆசிரியர் – உ. வே. சாமிநாதையர்
பதிப்பு – அமராவதி.
விலை – ரூ. 80/

Leave a Response

Top Reviews

Video Widget

gallery