My Home Town Story

என் ஊரின் கதை: காமாட்சிபுரம் – திரு.கார்மல் அமல்ராஜ்

Spread the loveபள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட முதல் 10 கதைகளுள் இக்கதையும்  ஒன்று.

போட்டி முடிவுகளை காண கிளிக் செய்க : ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள்

        என் ஊரின் பெயர் காமாட்சிபுரம் . என் ஊர் பெரிய ஊருமன்று , பெரும் புகழ்பெற்ற ஊருமன்று. இந்த ஊரில் பழங்காலத்துக் கோவில் ஏதுமில்லை. ஒரு நடுகல் கூட இல்லை.  வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை. ஏனென்றால் இந்த ஊர் தோன்றி சுமார் 225 அல்லது 230 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் இந்த ஊர் தோன்றிய வரலாறே சற்று சுவையானதுதான். மேல் ஜாதியின் அடக்குமுறையின் விளைவாய்த் தோன்றியதுதன் இந்த ஊர். அந்தச் சுவையான வரலாற்றைப் பார்ப்போம்.

        காமாட்சிபுரம் , தேனி மாவட்டத்தில் தேனி நகருக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவிலும் , சின்னமனூர் என்ற ஊருக்குக் கிழக்கே 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.  சின்னமனூர் என்றால் , “சின்னமனூர் செப்பேடுகள்” என்று கூறுகிறார்களே அந்தச் சின்னமனூர்தான். கி.பி. 768  ஆம் ஆண்டில் இல் மதுரையை ஆண்ட ஜடில பாரந்தக நெடுஞ்சடையான் என்ற வரகுணபாண்டியன், முல்லையாற்றின் கரையில் “பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன்  “ கோவிலைக் கட்டி அங்கு செப்பேடுகளையும் தந்து அந்த ஊருக்கு “அரிகேசரி மங்கலம்” என்று பெயரிட்டான். பின்னாட்களில் தெலுங்கு பேசும் நாயக்கராட்சியில் கண்டமனூர் ஜமீந்தாரின்  முகவராக இந்த ஊருக்கு வரி தண்டவந்த கண்டமனூர் ஜமீந்தாரின் உறவினர் சின்னமநாயக்கர் தன் பெயரை இந்த ஊருக்கு வைத்துச் “சின்னம நாயக்கனூர்” என அழைத்தார். எப்படிக் கண்டம நாயக்கனூர் “கண்டமனூர் ஆனதோ, அதே போன்று சின்னம நாயக்கனூர் “ சின்னமனூர் “ஆனது.

          சின்னமனூருக்குக் கிழக்கே ஒரு கரடு உண்டு. அந்தக் கரட்டை ஏறி கிழக்குப்பக்கம் சென்றால் சற்று தொலைவில் சீப்பாலக்கோட்டை என்று ஒரு கிராமம் வரும். அது சற்று பெரிய ஊராகும். இந்த ஊர்தான் சுற்றி இருக்கும்  ஊர்களுக்கெல்லாம் “தாய் கிராமம்” ஆகும். தாய்கிராமம் என்றால் சுற்றியுள்ள சிற்றூர்களுக் கெல்லாம் இதுதான் தலைமை கிராமம். அந்த கிராமங்களுக்கெல்லாம் கிராம முனிசீப், கணக்குப்பிள்ளை மற்றும் நிலப் பத்திரம் , பட்டா அனைத்தும் இங்குதான் இருக்கும். 

மாரியப்ப நாடார்

            இந்த சீப்பாலக்கோட்டையில், மாரியப்ப நாடார் என்றொருவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். அவரது பூர்வீகம் திருநெல்வேலிச் சீமையில் உள்ள “சாத்தான்குடி” ஆகும். அவர்களது குலதெய்வம் “பெரியாண்டவர் “ ஆவார்.  அவருக்கு அந்த ஊரில்  வீடு, நிலம்கரை எல்லாம் இருந்தது . அவர் அங்கு நல்ல வசதியோடும், மதிப்பு, மரியாதையுடனும் வாழ்ந்து வந்தார்.

         இவ்வாறு இருக்கும் வேளையில் அவரது இளையமகன் ஐயப்பன் , அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வேற்று இனப் பெண் ஒருத்தியைக்  காதலித்து அவளைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்டான். இது அந்தச் சமூதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவமானத்தையும் , ஆத்திரத்தையும்  ஏற்படுத்திவிட்டது. அவர்கள் சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் மாரியப்ப நாடார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் கேவலமாகப் பேசியும் ஏசியும் வந்தனர்.  நடந்து முடிந்த நிகழ்வுக்கு அவர் ஏதும் செய்ய முடியாது. அந்த சமுதாயத்தினரை அவரால் எதிர்க்கவும் இயலாது. ஏனென்றால் அந்தப் பெண்ணின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரில் எண்ணிக்கையில்  மிகவும் கூடுதலாக இருந்தனர். மாரியப்பனின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ மிகவும் குறைவு.

          இதற்கிடையில் அந்தப் பெண்ணின் சமுதாயத்தைச் சேர்ந்த இளவட்டங்களில் சிலர்,  “அவன் வீட்டிலும் வயதுக்கு வந்த பெண் ஒருத்தி இருக்கிறாள்.  அவளைக் கையைப் பிடித்து இழுத்தால் என்ன?” என்று பேசிருக்கிறார்கள். இந்தப் பேச்சு அவர் காதில் விழுந்ததும், அவர் நேராகக் கண்டமனூர் ஜமீனுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் ஜமீந்தாரைச் சந்திக்க இயலவில்லை. ஜமீந்தாரின் தாயாரைச் சந்தித்து இது பற்றிப் புகார் அளித்திருக்கிறார். ஜாமீந்தாரினி அம்மாவோ தன்னால் ஏதும் செய்ய இயலாது என்று கையை விரித்துவிட்டர்கள். மாரியப்ப நாடாரோ இத்தகைய இக்கட்டான நிலைமையை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என அறியாது ,ஏதும் செய்ய இயலாத நிலையில் கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்.

மகளின் தியாகம்

            குடும்பத்தின் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்கான தீர்வை மாரியப்ப நாடாரின் மகளே  தீர்த்துவைத்திருக்கிறாள் . சாதாரனத் தீர்வா அது ? யாரும் நினைத்துப் பார்க்க முடியாத தீர்வை,  நினைத்தாலே நெஞ்சம் பதைபதைக்கும்  அந்த தியாகத்தைத் தன் குடும்ப மானம்  காப்பதற்காகச் செய்திருக்கிறாள் மாரியப்ப நாடாரின் மகள். எப்படி ? மாரியப்ப நாடாரின் தோட்டத்தில் விளைந்த, அறுவடை செய்து அடுக்கி வைத்திருந்த  துவரைமார்களுக்கு நடுவே உள்ளே புகுந்து தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு துவரைமார்களுடனே சேர்ந்து எரிந்து சாம்பலாகிவிட்டாள்.

           சமைந்த குமரியைத் தீக்குப் பலிகொடுத்த குடும்பம் அழுது புலம்பித் தீர்த்தது. வேறு என்ன செய்யமுடியும் ?  எல்லாம் முடிந்தபின் மாரியப்ப நாடார் ஒரு முடிவுக்கு வந்தார். தன் மகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்த இந்த ஊரில் இனி இருக்க வேண்டாம் என எண்ணினார். அது மட்டுமன்று தான் இத்தனை இக்கட்டான சூழலில் இருக்கும்போதும் தனக்கு உதவி செய்ய மறுத்த இந்த கண்டமனூர் ஜமீன் மண்ணிலேயே இனிக் குடியிருக்கக்கூடாது என முடிவு செய்தார். 

Kamatchipuram city Photos, Photos of Kamatchipuram city

சிறுத்தை வந்தது

            சில முக்கியமான சாமான்களைமட்டும் மூட்டை முடிச்சுக்களாகக் கட்டிக் கையில் எடுத்துக் கொண்டு, வீடு வாசல், தோட்டம் துறவு அத்தனையையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு மாரியப்ப நாடாரின் குடும்பம்  இரவோடிரவாகச் சீப்பாலக்கோட்டையை விட்டு வெளியேறி விட்டது.  எங்கு செல்வது என்ற ஒரு இலக்கின்றித் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினர். மறுநாள்  சுருளி அருவி அருகில் இருக்கும்  “நாராயனத்தேவன்பட்டி” யை வந்தடைந்தனர். மிகவும் கவனமாக ஊருக்குள் செல்வதைத் தவிர்த்துவிட்டு ஊருக்கு வெளியிலேயே மலைக்கு மிக அருகில் தங்க முடிவு செய்தனர்.  அந்த இடத்தில் ஒரு குடிசையும் அமைக்கத் தொடங்கினர், அந்த  இடத்திலேயே  உழுவதற்காக நிலத்தைப் பண்படுத்தத் தொடங்கினர். அப்போது ஒரு நாள் எதிர்பாராத விதமாக அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு ஒரு சிறுத்தை வந்துவிட்டது.

          இனி இந்த இடத்தில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தார் மாரியப்ப நாடார். ஆனால் அவர் பக்கத்தில் உள்ள ஊருக்குள்ளும் செல்ல விரும்பவில்லை. எங்கு சென்றாலும் தம் குடும்பத்திற்கென்று ஒரு தனி இடம் தெரிவு செய்து தங்கவேண்டும் என்ற முடிவோடு  இருந்தார் அவர். இனி ஒரு ஊரில் பெரிய ஜாதிகளுடன் சேர்ந்து குடியிருப்பதில்லை என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.

          ஆகவே, அங்கிருந்து மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு இம்முறை நேரே வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கியது அந்தக் குடும்பம். இம்முறை பகல் நேரத்திலேயே தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஏறக்குறைய பொழுது சாயும் நேரத்தில் முல்லைக்கரட்டின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர்  மாரியப்பன் குடும்பத்தார் . அப்புறமும் பயணத்தைத் தொடர்ந்தனர். மிகவும் கவனமாக வழியில் வந்த சீப்பலக்கோட்டையைத் தவிர்த்துவிட்டு அந்த ஊருக்கு மேற்கே மிகவும் தள்ளியே பயனத்தைத் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் மிகவும் இருட்டிவிட்டது.  இரவுப் பொழுதை எங்காவது கழித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அப்போது ஒரு பெரிய உடைமரக்காடு வந்தது. அந்த உடைமரக்காட்டுக்கு நடுவில்  இருந்த ஒரு சிறு குளத்தின் கரையில் இருந்த மரத்தடியில் மூட்டை முடிச்சுகளை இறக்கிவைத்து விட்டு அங்கேயே தங்க முடிவு செய்தனர். இரவு அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு விட்டு அந்த மரத்தடியிலேயே படுத்துத் தூங்கினர்.

எலிக்குட்டிகளால் வந்த முடிவு

            காலையில் எழுந்து  நீராகாரத்தைக் குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கலாம் என்று மூட்டை முடிச்சுகளை எடுக்கும்போது, ஒரு துணி மூட்டையிலே எலி ஒன்று குட்டி போட்டுவிட்டுச் சென்றிருப்பதைக் கண்டார் மாரியப்ப நாடார். கண்திறக்காத குட்டிகளைக் கீழே தூக்கி எறிவது கருக்கலைப்பதற்குச் சமம் என்று அவற்றை அப்படியே விட்டு விட்டார்.  நாம் ஏற்கனவே ஒரு குமரிப் பெண்ணைப் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோம். குடும்பத்துடன் எங்காவது குடியேறலாம் என எண்ணி இடம் தேடி அலையும்போது இவ்வாறு  கருக்கலைக்கும் வேலையைச் செய்யவேகூடாது என்று அவர் மனம் கூறியது. அதையே அவர் தன் மக்களிடம் கூறினார். நம் குலதெய்வம் பெரியாண்டவர் நமக்கு விதித்துள்ள இடம் இதுதான் போலத்தெரிகிறது. இனி வேறு எங்கும் அலைய வேண்டாம் இங்கேயே குடியேறிவிடலாம் என்று முடிவுசெய்தார். அதையே குடும்பத்தாரிடமும் கூறினார் அவர்களும் அவர் முடிவுக்குச் சம்மதித்தனர்.

         அப்படியே அந்த உடைமரக்காட்டில் வாகான இடம் ஏதும் தென்படுகிறதா என்று மாரியப்ப நாடார் தேடி வந்தார். அங்கு ஒரு இடத்தில் ஒரு வில்வமரம் இருந்தது அதன் அடியில் ஒரு விளக்கு போட்டுவிட்டு அதனை வணங்கி அங்கேயே குடியேறினர். அந்த இடம்தான் பின்னாளில் காமாட்சிபுரம் எனப் பெயர் பெற்றது.

Theni district | Mapio.net

காமாட்சிபுரம் — பெயர்க்காரணம்

         அந்த இடத்தைச் சுற்றி  அரை மைல், கால் மைல் தொலைவில் நான்கு, ஐந்து ஊர்கள் இருந்தன. இங்கு குடியேறி சில நாட்களுக்குப்பின் கண்டமனூர் ஜமீனில் பிறந்து, எரசக்கநாயக்கனூர் ஜமீனில் வாழ்க்கைப்பட்டுள்ள  ஜமீந்தாரினி காமுலம்மாள்  தாய் வீட்டுக்கு  வந்துவிட்டுத் திரும்பச் செல்வதாக மாரியப்ப நாடாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இப்போது அவர்கள் குடியேறியுள்ள இடத்திற்கு ஒரு மைல் கிழக்கேதான் மங்கம்மா சாலை செல்கிறது. அது வழியாகத்தான் ஜமீந்தாரினி அம்மாள் செல்ல வேண்டும் என்பதை அறிந்து அங்கே மாரியப்பன்  வரிசைத்தட்டை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்தாருடன் காத்திருந்தார்.

               வெகு நேரம் காத்திருந்தபின் தொலைவில் வண்டிகள் வருவது தெரிந்தது. முன்னும் பின்னும் வண்டிகள் செல்ல நடுவில் திரை போட்ட வில்வண்டியில் ஜமீந்தாரினி அம்மாள் வந்தார்கள். அவர்கள் வண்டியைச் சுற்றி தாட்டியான ஆட்கள் நாலைந்துபேர் வேல்கம்புடன் கூடவே நடந்து வந்தார்கள். மாரியப்பன் வண்டியைக் கைகாட்டி நிறுத்தினார். உடனே வேல் கம்புடன் இருந்த ஆட்கள், வண்டிக்குப் பின்னால் அணைகட்டி நின்றதுபோல நின்று கொண்டனர். ஜமீந்தாரினி அம்மாள் திரையை விலக்கிப் பர்த்து,

“ வா, மாரியப்பா, எப்படி இருக்க ?” என்றுகேட்டார்.

 அவர் அவ்வாறு கேட்டதுதான் தாமதம். மாரியப்பனின் கண்களில்  கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது. உடனே அவர் வாய்க்குள் அழுகையை அடக்கிக்கொண்டு, “ வளந்த கொமரியப் பலி கொடுத்திட்டு நிக்கிறனேயம்மா? “ என்று கூறிக்கண்கலங்கினார்.

“ சரி , அவ வாங்கி வந்த வரம் அவ்வளவுதான். அதையே நெனச்சிக்கிட்டிருந்தா எப்படி? “ என்றார் ஜமீந்தாரினி அம்மாள்.  மேலும் , “ ஆமா ,எங்க அப்பன் வீட்டு ஜமீனில குடியிருக்க மாட்டேன்னயாமே ? இப்போ, எங்கிட்டு இருந்து வந்து இந்த அத்துவானக்காட்டில நிக்கிற ?” என்று கேட்டார்.

 “ எங்களுக்கு இங்கினக்குள்ள குடியிருக்கத்தான் உத்தரவாயிருக்கம்மா” என்றார்.

“ நல்லதுதான், எப்படியோ எங்க அப்பன் வீட்டு ஜமீன்தான்னு ஒனக்கு விதிச்சிருக்கு, நல்லா இருங்க .” என்று கூறிவிட்டு,அவர் புறப்பட ஆயத்தமானார், உடனே மாரியப்பன்,”  அம்மா , இந்த ஊருக்குஒரு நல்ல பேரச் ஒல்லுங்கம்ம.” என்றார்.

“ என்  பேரையே வச்சுக்க.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

அன்றிலிருந்து இந்த ஊர் “ காமுலம்மாள்புரம் “ என வழங்கப்பட்டு அதன் பின் நாளடைவில் “காமாட்சிபுரம் “ஆனது.

பச்சையப்ப நாடார்

          விளக்குப் போட்ட இடத்தில் ஒரு கல்லை நட்டு அதனைக் காளியம்மனாக வழிபட்டனர் மாரியப்பன் குடும்பத்தார்.  நாளடைவில் அது காளியம்மன் கோவிலானது. ஊரில் முதலில் காளியம்மன் கோவில் தெருதான் ஏற்பட்டது. மாரியப்ப நாடாரின் மூத்தமகன் பச்சையப்பன் தென்னாட்டுப்பக்கம் சென்று நாங்கள் ஒரு ஊர் கட்டியுள்ளோம் விருப்பமுடையவர்கள் அங்கு வந்து குடியேறலாம் என அழைப்பு விடுத்தார். அந்தக்காலக்கட்டத்தில் திரு நெல்வேலிச் சீமையில் சற்று குழப்பமான சூழ்நிலை நிலவியது.  தீவெட்டிக் கொள்ளை நடைபெற்றது. அதுவுமன்றி , தாது வருடப் பஞ்சமும் சேர்ந்து கொள்ள மக்கள் செய்வதறியாது திகைத்து நின்ற  நேரத்தில் பச்சையப்ப நாடாரின் அழைப்பு அவர்களுக்கு ஆறுதலளித்தது. நிறையக் குடும்பங்கள் அங்கிருந்து புலம் பெயர்ந்து, காமாட்சிபுரத்தில் வந்து குடியேறினர்.

          திரு நெல்வேலிச் சீமையிலிருந்து குருவிகுளம், குருக்கள்பட்டி, சுரண்டை, கடைகண்டார்ஊர், ஆரல்வாய்மொழி  போன்ற ஊர்களிலிருந்து பல நாடார் இன மக்கள் இந்த ஊரில் வந்து குடியேறினர். அதுவுமன்றி உடன்குடிப் பக்கத்திலுள்ள செட்டியாபத்து என்ற ஊரிலுள்ள ஐந்துவீட்டு சாமியை வணங்கும் தேரிக்காட்டு நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் பலர் வந்து குடியேறினர்.

         பச்சையப்ப நாடார், ஒரே ஒரு ஜாதி மட்டும் குடியேறினால் நன்றாக இருக்காது என்று கருதி சில வேற்று ஜாதி ஆட்களையும் கொண்டுவந்து குடியேற்றினார். அவர்களெல்லாம் புதிதாக ஏற்பட்ட பிள்ளையார் கோவில்தெருவில் குடியமர்த்தப்பட்டனர்.  பின் ஒரு நாள் ஊருக்குத் தீவெட்டிக்கொள்ளை அச்சுறுத்தல் வந்த போது ஊரை காக்க இரவு முழுவதும் இரவல் வாங்கிய துப்பாக்கியுடன் காவல் காத்த பச்சயப்ப நாடர் அவர்களைக் காலையில் சென்று எழுப்பும்போது ஒரு முக்காலியில் அமர்ந்து அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த துவரை மாற்றின் மீது சாய்ந்தபடி உயிர் விட்டிருந்ததைக்  கண்டுபிடித்தனர்.

           ஊரைக்கட்டிய உத்தமர், ஊரைக்காவல் காக்கும் போது உயிர் நீத்தார். திராவிட மக்களின் குலவழக்கப்படி ,உயிர் நீத்த இந்தப் பாட்டன் உடல் உயிர் நீத்த இடத்தில் கல்லறையாகப்பட்டு இன்றும் ஊரின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார்.

Theni Kamatchipuram தேனி காமாட்சிபுரம் – YouTube

புவியியல் அமைப்பு

         காமாட்சிபுரம் ஒரு புதுமையான புவியியல் அமைப்பைக் கொண்டது. காமாட்சிபுரத்தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவிலேயே ஏழு ஊர்கள் உள்ளன. இவற்றுள் தாய்க்கிராமமான சீப்பாலக்கோட்டை தவிர மற்றவை அனைத்தும் காமாட்சிபுரத்தை விடச் சிறிய ஊர்களாகும்.. அதற்கு அடுத்தபடியாக அரை மைல் சுற்றளவில் இன்னும்  நான்கு ஊர்கள் உள்ளன. இந்தப் பதினோரு ஊர்களுக்கும் காமாட்சிபுரம்தான் நடுநாயகமாகத் திகழ்கிறது. 

           புதுமையான புவியியல் அமைப்பு என்ன தெரியுமா? காமாட்சிபுரத்திற்கு மேற்கே    முல்லைகரடு இருக்கிறது.  ஊருக்குக் கிழக்கே குதிரைமலை என்று ஒன்று இருக்கிறது.  முல்லை கரட்டுக்கு மேற்கே முல்லைப்பெரியாறும்,  குதிரை மலைக்குக் கிழக்கே வைகை நதியும் ஓடுகின்றன. மேற்கே  ஆறு கி,மீ தொலைவிலும் கிழக்கே நாலு கி.மீ தொலைவிலும் இரண்டு ஆறுகள் ஓடினாலும்  நடுவில் இருக்கும் “ காமாட்சிபுரம் பள்ளத்தாக்கு” என்னவோ வானம் பார்த்த பூமிதான். அதிலும் குறிப்பாகக் காமாட்சிபுரம் சற்று மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. அதனால் 100 அடி ஆழத்துக்கீழ் தோண்டினால்த்தான் கிணற்றில்  தண்ணீரையே பார்க்கமுடியும் .  ஆனால் மண் ? அது பொன் விளையும் பூமி. குறைந்த நீர்  பாய்ச்சலிலும் மிகுந்த மகசூல் தரும். ஆந்திராவுக்கு அடுத்த படியாக நீள மிளகாய் இங்குதான் மிக நன்றாக விளையும். வெங்காயம், வெள்ளைப்பூண்டு வகைகளும் மிக நன்றாக வளரும். ஒரு காலத்தில் கொத்தமல்லி, சீரகம் , புகையிலை, முட்டைகோஸ் ஆகிய பணப்பயிர்கள் செழித்து வளர்ந்த ஊர் இது. இன்று அதற்கான மழை பொய்த்துப் போய் விட்டபடியால் அத்தகைய வெள்ளாமைகளை யாரும் விளைவிப்பதில்லை.

          மேட்டு நிலத்தில் இருந்தாலும் , நடுநாயகமகத் திகழ்வதால் எற்பட்ட நன்மைகள் பல உண்டு.  காமாட்சிபுரம் பள்ளத்தாக்கிலேயே கடைசியாக ஏற்பட்ட ஊர்: ஆனால் இங்குதான் முதன் முதலில் 1926 ஆம் அண்டு ஓரு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது மற்ற எந்த ஊரிலும் பள்ளிகள் இல்லை. அது பின்பு  மூன்று பள்ளிகளாயின. இந்தப் பகுதியிலேயே முதன் முதலில் காமாட்சிபுரத்தித்தான் , உயர் நிலைப்பள்ளியும், மேநிலைப்பள்ளியும் வந்தன. இங்குதான் இந்தப் பகுதிக்கே முதன் முதலில் மின்சாரம் வந்தது. மின்சாரம் வருவதற்கு முன்னமே நீராவியால் இயங்கும்  ஓர் அரவை மில் வந்துவிட்டது. என்ன காரணமோ தெரியவில்லை மக்கள் அதனை “ரோதை” என்று அழைப்பார்கள். .சுற்றியுள்ள மொத்தம் 23 ஊர்களும் இங்கு வந்துதான் தானியம் அரைத்துக்கொண்டு செல்லவேண்டும் . 

           அந்தக்காலத்திலேயே இந்த ஊரில் எட்டு ஜவுளிக்கடைகள் என  அழைக்கப்படும் துணிக்கடைகள் இருந்தன , மூன்றுக்கு மேற்பட்ட சாப்பாட்டுக்கடைகளும் , பல தேனீர்க்க்கடைகளும் இருந்தன. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு சாப்பாட்டுக்கடையின்பெயர் “ ராம விலாஸ்” அதற்கெதிராக இருந்த  சாப்பாட்டுக்கடையின் பெயர் “ராவணன் நிலையம்” அங்குதான் முதன் முதலில் இரட்டைக் குவளை, சிறட்டை (கொட்டங்கச்சி) முறை ஒழிக்கப்பட்டது. சமூதாய விடுதலையிலும்  இந்த ஊர் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது. ஜாதிய அடக்குமுறையின் விளைவாய் உருவான ஊரல்லவா? அப்படி இருப்பதில் வியப்பொன்றுமில்லையே ?

            கத்தோலிக்கக் கோவில் மற்றும் சி,எஸ்.ஐ. கோவில் என இரண்டு கிருத்தவக் கோவில்கள் இந்த ஊரில் உள்ளன. அந்தக் கோவில்களின் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில், கிராமப் பொது நிதியில்  இருந்து நன்கொடை அளித்து கிராம நிர்வாகமே பங்கெடுத்துக்கொள்கிறது. மத நல்லிணக்கத்திலும் இந்த ஊர் முன்னோடியாகத் திகழ்கிறது. அதே போல ஊரில் நடக்கும் காளியம்மன், மாரியம்மன் சித்திரைப் பொங்கலில் ஊர்மக்கள் அனைவரும் ஒற்றுமையாகப் பங்கெடுத்துக்கொண்டு மூன்று நாளும் தேர் இழுக்கின்றனர்.

            இன்றும் காமாட்சிபுரம் ஒரு கிராமமாக இருந்தலும் கூட ஒரு நகரத்திற்குரிய அத்தனை வசதிகளையும் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது. இந்த ஊரில் ஒரு வேளான் ஆராய்ச்சிமையம் உள்ளது. இரண்டு பொதுவுடமையாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் படிப்பைமுடித்த பலர்,  அரசு வேலைகளில் பெரிய பெரிய பதவிகளில் இருந்திருக்கின்றனர்; இன்றும் இருக்கின்றனர்.

          இதுதான் என் ஊரின் கதை. இந்த ஊரை, என் ஊர் என்று கூறும்போது பெருமையாகத்தான் உள்ளது.


1 Comment

  1. மிகவும் அருமை. சுவாரஸ்யமான நடை. நல்லதோர் வரலாறு. அவ்வூரின் வழியே பயணித்தவன் என்ற முறையில் மனதிற்கு மிக நெருக்கமாக அமைந்தது. நன்றி.

Leave a Response