Book Review

நூல் அறிமுகம் : ஊர்வசி புட்டாலியா எழுதிய மௌனத்தின் அலறல் : இந்தியப் பிரிவினையால்பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலம் – தேனிசுந்தர்

Spread the love
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்த அறிக்கை 1947, ஜூன் 3ஆம் தேதி வெளிவந்தது. அடையப்பட்ட தீர்வு உண்மையில் ஒரு தீர்வும் அல்ல.. இந்தத்  தொடக்கம் ஒரு தொடக்கமும் அல்ல..

கால அவகாசம் போதுமானதில்லை என்றேன். ஆனால் ஜின்னா, நேரு, படேல் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் ஆகஸ்ட்,15க்குள் எங்களுக்கு ஒரு கோடு வேண்டும் என்றார்கள். நான் ஒரு கோட்டைப் போட்டுக் கொடுத்தேன்.. – சிரில் ராட்கிளிப்

1946 மார்ச் முதலாகவே கலவரங்களும் கொலை, கொள்ளைகளும் அரங்கேறின.. பிரதமர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 1947, ஆகஸ்டு 17ல் தான் தலைவர்கள் சந்தித்து குடிமக்களைப் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேசிக் கொள்கின்றனர்.. அதற்குள்ளாகவே பல இலட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர்.. ஏராளாமானோர் உயிர் இழந்திருந்தனர்..

 
பெண்களையே மதத்தின் மாண்பாகக் காட்டி பெண்களையே தியாகப் பலிகொடுத்து, பெண்களையே கடத்தி, கற்பழித்து, கொலைகள் செய்து, பெண்கள்  உடலே சரித்திரமாக, இரத்த சரித்திரமாக மாறிய கதைகள்..
எந்த சரித்திர நூல்களும் சொல்லாத, சொல்லிவிட முடியாத,  இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் சந்தித்த, மக்கள் என்றால் இந்துக்களும் முஸ்லீம்களும் சந்தித்த சொல்லொணாத் துயரங்களை அவர்களின் நீண்ட நெடிய மௌனத்தை உடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பகிர்ந்த வலிகளை, வேதனைகளை அரிய ஆவணமாக வழங்கியுள்ளார் ஊர்வசி புட்டாலியா.

இவரும் ஒரு பிரிவினை அகதிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். பெண்ணியச் செயல்பாட்டாளர். 1984 அக்டோபரில் நடந்த இந்திராகாந்தி படுகொலையும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய வன்முறைகளும் பிரிவினை குறித்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் எடுத்த ஏ டிவிஷன் ஆப் ஹார்ட்ஸ் என்கிற ஆவணப்படத்திற்கான மக்கள் சந்திப்புகளும் இந்தப் பணிக்கான தூண்டுதலாக இருந்துள்ளன. பிரிவினைக்குப் பிறகு சுமார் நாற்பதாண்டுகள் கழித்து நடந்த நேர்காணல்கள் இவை.

சரித்திரம், பிரிவினைக்குக் காரணமான அரசியல் மாற்றங்களுடன் நிறுத்திக் கொண்டு விட்டது. பிரிவினையுடன் சம்பந்தப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு என்ன ஆயிற்று என்கிற மனிதப் பரிமாணத்துக்கு சரித்திரம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரிவினை என்பது முடிந்துபோன, கடந்த கால சமாச்சாரம் என்று தான் சரித்திரம் சொல்கிறது. பிரிவினையின் உண்மையான புரிதல் இந்திய தேசத்தின் சரித்திரத்தைக் காட்டிலும் அதில் தொடர்புடைய வட இந்தியக் குடும்பங்களின் சரித்திரத்தில் தான் இன்னும், இன்றும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தாக்கியவரும், தாக்குதலுக்குப் பலியானவர்களும் இருந்தார்கள்.

1946ல் வங்காளத்திலும் நவகாளியிலும் பிகாரிலும் கர்முக்தேஷ்வரிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் தங்களுக்குள் வன்முறையில் இறங்கினார்கள். 1947ல் ராவல்பிண்டியில் கலவரம். ஆயிரக்கணக்கான மரணங்கள், கொள்ளை, கலகங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள் இவையெல்லாம் பிரிவினையின் இரத்த அடையாளங்களாகப் பதிந்தன.

எந்தக் கோட்டைக் கடந்து மக்கள் சென்றார்களோ அந்த எல்லைக் கோடு மெல்ல மெல்ல அவர்களின் குடும்பங்களுக்குள்ளும் பரவியது. குடும்பங்கள் சிதைந்தன. சின்னாபின்னமாகின.

இருபுறமும் ஏராளமான விமானங்கள் பறந்தன. பலமுறை பறந்தன. அவை பணக்காரர்களுக்கு. பல்லாயிரக் கணக்கில் இடம்பெயர்ந்தனர். அவர்களுக்கு பிரச்சனையில்லை. 673 அகதிகள் இரயில்கள் கிட்டதட்ட முப்பது இலட்சம் பேரை இருபுறமும் ஏற்றி இறக்கின. இரயில்களை மறித்து வெட்டிக் கொல்வதும் தீயில் எரிப்பதுமாக ஏராளம் நடந்திருக்கிறது. கார்களில், பெரிய வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம் பெயர்ந்தவர்களுக்கும் பெரிதாக ஒன்றும் சிரமம் இருந்திருக்காது. இலட்சக் கணக்கிலானவர்கள் கடல்வழியாகவும் புலம்பெயர்ந்தனர். இருதரப்பு ஏழை, எளிய மக்கள்? அவர்கள் நடந்தனர்.

மௌனத்தின் அலறல் / Mounathin Alaral (Tamil Edition ...

கஃபீலா.. பிரமாண்ட மனிதக் கூட்டங்களின் நடைபயணம் தான் கஃபீலா.. எல்லைக்கோட்டிற்கு இருபுறம் இருந்தும் மக்கள் தங்கள் தேவைக்குப் போதுமானவற்றை எடுத்துக் கொண்டு இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ளனர். பல கஃபீலாக்கள்.. பல இலட்சக்கணக்கான மக்கள்.. ஒரு கஃபீலா ஒரு குறிப்பிட்ட இடத்தைக்  கடந்து செல்ல எட்டு நாட்கள் வரையிலும் கூட ஆனதாம். ஒருவருக்கொருவர் சகமனிதனுக்கு விரோதியாகத் தோற்றம் கொடுத்து, தன்னை அழிக்குமுன் தான் அழித்துவிட வேண்டும் என்கிற வெறி.. இருபுறமிருந்தும் பெருங்கூட்டங்கள் சந்திக்கும் வேளைகளில் மோதல்கள் உருவாகி இரத்த ஆறுகள் வெள்ளமாய் ஓடியிருக்கின்றன. பாகிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்கு குறிப்பிட்ட எல்லை வரை பாகிஸ்தான் இராணுவமும் அதன் பிறகு இந்திய இராணுவமும் என மாறிமாறிப் பாதுகாப்புக்கு வந்திருக்கின்றனர். காவல்துறையும் இராணுவமும் நடுநிலையானவர்கள் என்ற நம்பிக்கைகளும் கூட பலமுறை பொய்த்துப் போயின.

இராணுவம் வாகனங்கள் மூலம் கொண்டு வந்த உணவை வழங்கியிருக்கிறது. எப்படி போதுமானதாக இருக்கும். ஒரு முகாமில் பசி தாங்காத ஒரு விவசாயி, சுவர் ஏறிக் குதித்து அருகிலிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் செல்ல, அவரையும் இன்னும் சிலரையும் இராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. அந்த விவசாயி உடல், அவர் கொண்டு வந்த வண்டியையே விறகாக்கி எரித்து தகனம் செய்யப்படுகிறது..

இந்த நடைபயணங்களின் போது ஆயிரக்கணக்கான பெண்கள் இருதரப்பாலும் கவர்ந்து செல்லப்பட்டனர். மாற்று மதப் பெண்களின் உடம்பில் தங்கள் மதச்சின்னங்களை முத்திரை பதித்தனர். தெருக்களில் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டனர். மார்புகள் அறுக்கப்பட்டன.  மாற்று மதத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்காகவே பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கருவுறச் செய்யப்பட்டனர். கொலைசெய்யப்பட்டனர்.   இப்படி எத்தனையோ கொடுமைகளை அரங்கேற்றினர். இவை வன்முறைகள், படுகொலைகள்..

ஆனால் பல இந்துக் குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கு பத்துபேர், இருபது பேர் என அந்தந்த வீட்டுப் பெண்கள் அவர்களது தகப்பனார் அல்லது சகோதரர்களாலேயே குடும்பத்தினர் கண் முன்னாலேயே வெட்டிக் கொல்லப்படுகின்றனர். சில பெண்கள் தாங்களாகவே கத்தியைத் தங்கள் கழுத்தில் வைக்கின்றனர். மதத்தின் மாண்பைக் காக்கிறோம் என்ற பெயரில் நடந்த இது போன்ற கொலைகள் தியாகப் பலிகள் எனப் போற்றப்படுகின்றன.

தோவா கல்சா சம்பவம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. “பெண்கள் வல்லுறவுக்கு உட்பட்டு வேற்று மதத்தின் குழந்தை விதைக்கப்படும் போது அந்தப் பெண்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மதமே புனிதம் கெட்டு விடும் என்று நம்பியவர்கள் தங்கள் இனத்தின் பெண்களைப் பலி கொடுத்தால் தான் இனத்தின் மாண்பு காக்கப்படும் என நினைத்தார்கள். பாகிஸ்தானில் தோவா கல்சா எனும் கிராமத்தில் வாழ்ந்த பெண்கள் கூடிப் பேசினார்கள். மானம் ஒன்றைத்தவிர இழப்பதற்கு வேறொன்றும் இல்லை என்று கூறி, மறுநிமிடமே 90 பெண்கள் கிணற்றில் விழுந்து மாண்டார்கள். போதிய நீர் இல்லாததால் மூன்று பெண்கள் மட்டும் மீட்கப்பட்டார்கள்..”

வயதானவர்கள், விதவைகள், தனித்து வாழும் பெண்கள் திட்டமிட்டு, அவர்களின் சொத்துகளை அபகரிப்பதற்காகவே கவர்ந்து செல்லப்பட்டனர். இதுபோன்ற சமூகக் கலவரங்களின் போது வெளியாட்கள் தான் பெண்களைக் கவர்ந்து செல்வார்கள் என்பதும் கூட சில நேரங்களில் பொய்யானது. அரசின் ஆவணங்களின்படி 25000 பெண்கள் கவர்ந்து செல்லப்பட்டவர்கள் அல்லது காணாமல் போனவர்கள்.. ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் மேல் என்கிறார்கள்.

இந்தியப் பெண்களுக்கு திருமணம் என்பதே ஒருவிதத்தில் கவர்ந்து செல்வது தான். எனவே கவர்ந்து போனது வேற்று மதத்தைச் சேர்ந்த ஆண் என்பதால் வித்தியாசமாகப் பார்க்க முடியுமா? சிலருக்கு கிடைத்த புதுவாழ்க்கை வசதியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்துப் பெண்கள் இஸ்லாமியர்களின் வீடுகளிலும் இஸ்லாமியப் பெண்கள் இந்துக்களின் வீடுகளிலும் பிடிக்காமலும் போகப்போக உண்மையான அன்போடும் கூட வாழத் தொடங்கியிருந்தனர். விரும்பிக் கருவுற்றனர். குழந்தைகள் பெற்றனர். ஆனால் துயரம் இன்னும் முடியவில்லை.

தங்கள் வீட்டுப் பெண்களைக் காணவில்லை என இருதரப்பிலும் நிறைய புகார்கள் வந்ததால் அரசாங்கம் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை முடுக்கிவிட்டது. பிரிவினைக்கு பிறகு பத்தாண்டுகள் வரையிலும் மீட்புப் பணிகள் நடந்தன. 1946 மார்ச் மாதத்திற்கு பிறகு வேற்று மதத்தினருடன் வாழும் அனைத்துப் பெண்களும் கவர்ந்து செல்லப்பட்டவர்களாகவே அறிவிக்கப்பட்டனர். பெண்களின் விருப்பு வெறுப்பு குறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை. இணைந்து வாழப் பழகிய பிறகு திரும்பி வர விரும்பவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாகப் பிரித்து முகாம்களுக்கும் பின்னர் அவரவர் நாடுகளுக்கும் கொண்டுவரப்பட்டனர். பாகிஸ்தான் சென்ற பெண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். பெரிய அளவிற்கு பிரச்சனைகள் இல்லை.

கவர்ந்து செல்லப்பட்டிருந்தாலும் காதலுடன் வாழ்ந்து இரு குழந்தைகளையும் பெற்ற பிறகு பிரித்துச் செல்லப்பட்ட ஷைனாப் – பூட்டா சிங் கதை திரைப்படங்களை மிஞ்சும் காதலுக்கு உதாரணமாக உள்ளது.

இந்தியாவில் நிலைமை வேறு. கவர்ந்து செல்லப்பட்ட இராமனின் மனைவி சீதை புனிதம் கெடாமல் மீண்டு வந்தாள் என்று பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. காந்தியும் நேருவும் உங்கள் வீட்டுப் பெண்கள் தூய்மை கெடவில்லை. ஏற்றுக்கொள்ளுங்கள் என மீண்டும் மீண்டும் வேண்டுகோள் வைத்தனர். கவர்ந்து செல்லப்பட்ட பெண்களின் குழந்தைகள் கடைசி வரையிலும் அவலத்தின் அடையாளமாக, சாட்சியாக இருப்பார்கள். எனவே குழந்தைகளை விட்டுவிட்டு வர வேண்டும் என்று இந்துக்கள், சீக்கியர்கள் எதிர்பார்த்தனர். அப்படி குழந்தைகளோடு வந்தவர்களை உறுதியாக ஏற்க மறுத்தனர். கருவுற்று வந்த பெண்கள் கட்டாயப்படுத்தி, சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்யப்பட்டனர். கலைக்கமுடியாத பெண்கள் குழந்தை பெறும் வரை மருத்துவமனையில் இருந்து குழந்தையை விட்டுவிட்டு பிரிய மனமில்லாமல் தேம்பித்தேம்பி அழுதபடி தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். பெரிய குழந்தைகள் ஆசிரமங்களில் விடப்பட்டனர்.

Urvashi Butalia: “Feminism is heading very confidently into the …

இஸ்லாமியத் தகப்பனுக்கு உருவான குழந்தை, இந்துத் தகப்பனுக்கும் இஸ்லாமியப் பெண்ணுக்கும் உருவான குழந்தை.. எந்தக் குழந்தை எந்த மதம்? சட்டப்பூர்வக் குழந்தை எது? சட்டப்பூர்வமற்ற குழந்தை எது? மார்ச், 1946க்கு முன்பே கருவுற்ற நிலையில் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணின் குழந்தை யாருக்குச் சொந்தம்? என கொஞ்சமும் யோசிக்கமுடியாத, குழப்பமான சூழ்நிலைகளுக்கு கடைசியில் பலியானவர்கள் குழந்தைகள்..

விடுதிகளில் இடம்பெற்ற குழந்தைகளுக்கு  எதிர்காலம் என்று ஒன்று இருந்தது.. ஆனால் அந்த வாய்ப்புக் கிடைக்காத குழந்தைகள்… அந்த ஆண்டுகளில் நிறைய குழந்தைகள் பிச்சை எடுத்ததாகப் பதிவுகள் இருக்கின்றன. ஆசிரமங்களில் இருந்த குழந்தைகளைத் தத்தெடுக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. வந்தவர்களுக்கு குழந்தைகள் தேவை என்பதை விட வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேவையாக இருந்திருக்கிறது. பாலியல் தொழிலுக்கு பெண் குழந்தைகள் தேவைப்பட்டிருக்கின்றன.

“ஜலந்தர் ஆசிரமத்திற்கு வந்த இருமாத குழந்தை ஒன்று.. யாரென்றே தெரியவில்லை. இந்துவா முஸ்லீமா? சரித்திர நிகழ்வில் உருவான அந்தக் குழந்தைக்கு அதன் சரித்திரம் தெரியவில்லை…”

என்னுடையதாக இருந்ததை நான் நிராகரித்தேன். நான் ஏற்றுக்கொண்ட புதிய நம்பிக்கைகள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. என் சொந்த மகனே என்னை இந்து உளவாளி என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளான் என்கிறார் ஊர்வசி புட்டாலியாவின் மாமா ராணா. இவரைப் போல பலபேர் சூழ்நிலை காரணமாக தங்கள் சொந்த மதங்களில் இருந்து மாறினாலும் முற்றிலும் மாற முடியாமலும் சக குடும்பத்தினர் மத்தியிலேயே அந்நியமாகவும் வாழ நேர்ந்த வேதனைகளும் இருக்கின்றன.

அப்துல் ஷதூல் என்பவருடைய கதை. டெல்லியில் காவலராக சமீபத்தில் பணியேற்று இருந்தார். இந்தியாவிலேயே தொடர்ந்து வசிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனாலும் உறவினர்கள் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறார்கள். செல்லும் முன் சில நாட்கள் இருந்துவிட்டு வரட்டும் என்று தன் மனைவியை இருமாதக் குழந்தையுடன் அவளது தாய் வீட்டிற்கு அனுப்புகிறார். ஆனால் செல்லும் வழியில் ஏற்பட்ட குழப்பங்களால் ஒரு முகாமிற்கும் முகாமிலிருந்து பாகிஸ்தானுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார் அந்தப் பெண். ஷதூல் சில நாட்கள் கழித்து மனைவியை அழைத்துச் செல்ல மாமனார் வீட்டுக்கு வருகிறார். வரவே இல்லையே என அதிர்ச்சியடைகின்றனர்.. அலைகிறார்.. தேடி அலைகிறார்.. பின் தகவல் கிடைத்து பாகிஸ்தானுக்கே சென்று அவரது மனைவி மற்றும் சகோதரருடன் வாழ்கிறார். காவலர் பணியை பாகிஸ்தானுக்கு மாற்றித் தரும்படி உரிய அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கிறார். இந்தியத்தரப்பில் இருந்து சரியான பதில்கள் இல்லை. பொறுமை இழந்தவர் தன் முடிவை மாற்றிக்கொண்டு தன் மனைவி மற்றும் குழந்தையுடன் டெல்லியில் உள்ள தன் பழைய வீட்டிற்கே திரும்புகிறார். ஆனால் அங்கு ஒரு இந்துக் குடும்பம் குடியேறி இருக்கிறது. தன் நிலைமையை விளக்கிய பிறகு தங்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்யும் வரை இருப்பதாகக் கூறி, அதன்படி சில வாரங்களில் வேறு வீட்டிற்கு மாறி விட்டார்கள். சுற்றிலும் இந்துக் குடும்பங்கள் குடியேறியிருந்தன. ஆனாலும் அவர் அங்கு தான் தலைமுறைகள் தாண்டியும் நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை எந்த நாடு, எந்த மதம் என்பதெல்லாம் பிரச்சனையில்லை. எனக்கு என் வேலை, என் மனைவி, என் குழந்தை இவை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்கிறார்.

தமயந்தி சாகல், அனிஸ் கிட்வாய், நிருபளா சாராபாய், கமலாபென் பட்டேல் உள்ளிட்ட மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பலர் அளித்த தகவல்களும் இவருடைய மாமா ராணா, பசந்த் கௌர், ராஜேந்திர சிங், மங்கள் சிங் என ஏராளமானவர்களைச் சந்தித்தும் ஆவணங்களின் மூலம் தகவல்களைத் திரட்டியும் இந்நூலை உணர்வுப்பூர்வமாக உருவாக்கியுள்ளார் ஊர்வசி புட்டாலியா.

ஊர்வசி புட்டாலியா, பிரிவினைக் காலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட கமலாபென் என்பவரைச் சந்தித்து, ஏன் நீங்கள் அவற்றைக் குறித்து எழுதவில்லை என்று கேட்கிறார். அதற்கு அவருடைய பதில் : “ஏன் எழுதவில்லை என்றால், நான் பார்த்த பல விசயங்களை என்னால் ஏற்கவே முடியவில்லை. மனிதர்களால் இப்படியும் இருக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிரிவினை என்பது ஒரு ருத்ர தாண்டவம். அந்த அளவுக்கு அசாதாரண நிகழ்வுகளை நான் பார்த்தேன். எதை எழுதுவது? ஏன் எழுத வேண்டும்? என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்..”

ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களைக் குறித்துப் பேசவே இல்லை. பெண்கள் தங்களைக் குறித்துப் பேசவே இல்லை. அவர்கள் பேசிய பல தகவல்கள் அந்தக் குடும்பத்திற்கே புதிய தகவல்களாக இருந்தன. எங்கே தங்களது கடந்த காலம் குறித்த பேச்சு நிகழ்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுமோ எனவும் அஞ்சினர்.

அனைத்தையும் முழுமையான உண்மைகளாகச் சரித்திரத்தில் பதிவு செய்வது சிரமம் தான். ஆனால் அவற்றுக்கு சரித்திரத்தில் இடமே தேவையில்லை என்று நினைப்பது எப்படிச் சரியாகும்? உண்மையில் சுதந்திரம், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை குறித்த பேச்சு, எழுத்து, வரலாறு என்றாலே அந்த உரைகளிலும் பக்கங்களிலும் தலைவர்களின் பெயர்களும் பேட்டிகளுமே நிரம்பி வழியும்.. ஆனால் அந்த அவலத்தின் சாட்சியாக வாழும் மக்களின் சரித்திரத்தை வாசிக்கத் தந்திருக்கிறார். வேதனை மிகுந்த வரலாற்றைத் தான் வாசிக்க வேண்டியிருக்கிறது.

இந்துக்கள், சீக்கியர்கள் ஒருபுறமும் முஸ்லீம்கள் ஒருபுறமுமாக மோதிக் கொண்டார்கள்.. இருதரப்பிற்கும் நாங்கள் தீண்டப்படாதவர்கள் தான் என பிரிவினை நேரக் கலவரங்களை வெறும் பார்வையாளராக மட்டுமே பதிவு செய்யும் தலித் மாயாராணி..
முஸ்லீம் மக்களைக் காப்பாற்றிய இந்துக் குடும்பங்கள், அதேபோல இந்துக்களை காப்பாற்றிய முஸ்லீம் மக்கள்..
தன் வீட்டில் யாரோ குடியிருப்பார்கள்.. யாரென்று தெரியாது.. குடியிருப்பவர் என்று பொதுவாக விளித்து தன்னுடைய புத்தகங்களை அனுப்பி வைக்கக் கோரி கடிதம் அனுப்பிய இந்து மதத்தை சேர்ந்த ஆசிரியர், அதை மிகவும் பத்திரமாக அனுப்பி வைத்த முஸ்லீம் குடும்பம் இடையே நீண்ட காலத்திற்கு தொடர்ந்த கடிதப் போக்குவரத்து…
இந்தியாவிற்கு தன் 13 வயது மகளைத் தேடி அடிக்கடி வந்து, உளவாளி என்று கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவித் தந்தை..
வெளியேற மனமின்றி பிரச்சினைகள் முடியும் வரை தங்கள் வீட்டிற்குள்ளேயே பதுங்கி இருந்த முஸ்லீம் குடும்பத்தை பத்திரமாக அனுப்பி வைப்பதாகச் சொல்லி லாரியில் ஏற்றிய இந்து இளைஞர்கள் அவர்களை லாரியோடு எரித்த கொடுமை…
உலக சரித்திரத்தில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்ட (ஒன்றேகால் கோடி) இடப்பெயர்வும் வன்முறைகளும் படுகொலைகளும்  வேறெங்கும் நடந்ததே இல்லை.. இருதரப்பிலும் இத்தனை துயரங்களை ஏற்படுத்திய இதன் நினைவாக எங்குமே ஒரு சிறிய நினைவுச் சின்னங்கள் கூட உருவாக்கப்படவில்லை.. துயரத்திலும் துயரமான அச்சம்பவங்களை நினைக்கவோ நினைவுபடுத்தவோ யாருக்கும் விருப்பம் இல்லை..
சொல்வதற்கு இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கே.ஜி.ஜவர்லால் தமிழாக்கம் செய்துள்ளார். பக்கங்கள் 350. விலை ரூ.250
–   தேனிசுந்தர்–

Leave a Response

Top Reviews

Video Widget

gallery