Poetry

மௌனன் யாத்ரீகா கவிதைகள்…

Spread the love
1
மூர்க்க நிமித்தம் 
மூர்க்கன், கோபத்திலிருக்கும் விலங்கு என்றார்கள்
ஊரில் யாருடைய குருதியை அவன்
ருசி பார்க்க காத்திருக்கிறானென்று
அவர்களுக்குள் கதையிருக்கிறது
தன் முன்னோர் திருத்திய நிலத்தில்
இருந்த பனைகளையெல்லாம்
கீழே சாய்த்துவிட்டு
தைல மரங்களை வளரவிட்டிருக்கும்
பெருங்கொண்டைக்காரனுக்கு
குண்டியில் நடுக்கத்தைத் தந்திருந்தான் மூர்க்கன்
பனம்பழங்கள் அழுகி நாறுவதுபோல்
கனவு வருவதாக ஊரில்
பலரும் பேசிக்கொண்டார்கள்
மந்தையில் புலி பாய்ந்ததுபோல்
ஊரில் வெயில் புகுந்து கொளுத்துவது
அதற்கான நிமித்தம் என்றான்
ஒரு முது கணியன்.
2
மூர்க்கனின் சருகலம் 
“நீர்நிலைச் சுண்டி சருகலம் நடுங்கும்
சகதி மீனின் கதியெனக்கு
நாடிச் செத்த கிழடு கூட
இரை கிடைப்பது இலகு என்பதுபோல் பார்க்கிறது
என்னைக் கொண்டுபோய்
உன் நெஞ்சுக்கூட்டில்
முங்கச் செய்யேன் மூர்க்கா”
செவ்வரி அழிந்த அவள் கண்களில்
உப்புக்கல் போல் ஒரு கண்ணீர்த்துளி
அதைக் கண்ணுற்றதும்
மூர்க்கனின் தொண்டைக்குழியில்
கடும் வறட்சியின் கோழைக் கட்டியது
அவன் பெருமூச்செறிகிறான்
மூர்க்கனின் மார் மீது
துவண்ட பூசணிப்பூ போல்
விம்முகிறது அவள் முகம்
இருளில் கசிகிறது குயிலின் கேவல்.
3
மூர்க்கனின் இரவுக்குறி 
“சுட்ட ஈரலைப்போல் இருக்கீக,
நிறத்திலும் ருசியிலும்”
மூர்க்கனின் செவித்துளையில்
நுனிநா நுழைத்து
உள் மடலில் கூதலடிக்க வருடி
வெளி மடல் கடித்து சொன்னாள் வஞ்சி
“யாத்தே, உனக்கு பித்தம் முத்திப் போச்சடி,
வெல்லம் காய்ச்சும் கொப்பரையில்
நுரைத்துச் சுழலும் பாகைப்போல்
கமழ்கிறது உன் காமம்”
அக்குளில் கட்டைவிரல் கொடுத்து
வஞ்சியை தூக்கி நிமிர்த்திய மூர்க்கன்
அவள் தொண்டைக் குழிக்கு ஏறும்
நெஞ்சுக்கூட்டு காற்றைத் தணித்தான்
“கல்லுப்பு கிட்ட இருந்தும் வடிகஞ்சி ஆறுது,
சுருக்கென்று உந்திச் சுடணும்
எடுத்துக் குடிடா எங்கொம்பேரி மூக்கா”
துவரைக் கட்டைத் தடுக்கி
தரையில் விழுந்த முயலைப்போல்
மூர்க்கனின் மார் மீது துடித்தன வஞ்சியின் தனங்கள்
அவளின் இடக்கால் பெருவிரலைக் கவ்வினான் மூர்க்கன்
வலக்கால் பெருவிரலால் அவனுக்கு திலகமிட்டாள் வஞ்சி
காட்டுப்பூவுக்கு சுளுக்கெடுக்க
சுத்தியடித்தது எசக்காத்து.
4
களவாணி மூர்க்கன் 
மூர்க்கன் பனைக்கருப்பு
பனையில் பாதி வளத்தி
அடிப்பனைத் தடிமன்
ஓங்குத்தாங்கான ஆள்
துரத்தப்படும் பன்றியைப்போல் கத்திக்கொண்டே ஓடுவான்
மிரள வைத்து நடுக்கத்தைத் தரும் யுக்திக்குப் பின்
தன் கைவரிசையைக் காட்டுவான்
காட்டுவழிப் பாதையில் பயத்தில்
அப்படியே போட்டுவிட்டு ஓடும் தூக்குச்சட்டியில்
மணத்துக் கிடக்கும் அடிப்பிடித்த கறிச்சோறு
அதைத் தின்னும்போது மூர்க்கனை
ஊரார் நேரில் பார்த்ததில்லை
அவர்களுக்கு அவன் ‘ஜெகஜால’ களவாணி.
5.
மூர்க்கனின் கத்தி 
ஒருநாள் வசமாகப்
பிடிபட்டுக் கொண்டான் மூர்க்கன்
அசகாயச் சூரனை ஊர் கூடிப் பார்த்தது
அவன் பிச்சுவா கத்தியைப்
பிடுங்கி சோதித்தவர்கள்
அதில் ரத்தத்தின் கறையோ வீச்சமோ
காணாமல் திகைத்தனர்
இதுவரை ஒரு குருவியின் உடலைக் கூட
கிழித்ததில்லை மூர்க்கன்
கத்தியென்பது அவனுக்கு
வெறும் கபடக் கருவி மட்டுமே.
6.
மூர்க்கன் 
பன்றி மூத்திரத்தைச்
சுடச்சுட மிதித்தான் மூர்க்கன்
ஆளுயர வேலியை ஒரே தவ்வில் தாண்டியதில்
கால்களில் குடைச்சல்
நேர்ந்துவிட்ட கிடாயின் காமத்தோடு
காட்டில் அலைகிறானென்று ஊரில் பயந்தார்கள்
வேலத்தின் உள்வளையத்திலிருந்து பிதுங்கும் பிசின் நிறத்திலிருக்கும் ஒருத்திக்கு மட்டும்
மூர்க்கனின் கொம்பை சீவி விடும் காதல்
அவள் போகிறாள் எல்லா இரவுகளிலும்
ரத்தப் பொரியலோடு அவனைத் தேடி
பேய்க்கதை ஊரில் பரவுகிறது.
 — மௌனன் யாத்ரீகா

Leave a Response

Top Reviews

Video Widget

gallery