Book Review

நூல் அறிமுகம்: மம்முட்டியின் “காழ்ச்சப்பாடு” தமிழில் “மூன்றாம் பிறை” – வே.சங்கர்

 

இயல்பாகவே பிரபலங்களின் புத்தகங்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.  அதுவும் சினிமா நடிகர் எழுதிய புத்தகம் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படியான ஒரு புத்தகம்தான் மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வாழ்பனுபவங்களை விவரிக்கும் இப்புத்தகம்.

”மூன்றாம் பிறையில்தான் நல்ல விசயங்கள் செய்வார்கள், மூன்றாம் பிறை கண்ணுக்குப் பெரிதாய்த் தெரியாது.  சட்டென மறைந்துவிடும்.  ஆனால் மிக முக்கியமானது” – என்ற உரையுடன் தொடங்கும் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா மம்முட்டியின் “காழ்ச்சப்பாடு” என்ற புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் வழியே தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கொண்டுவந்துள்ளார்.

முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டுதான் ஒருவர் இப்புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பு  என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. தப்பித்தவறிக்கூட சிறு பிசிறும் வந்துவிடாதபடி மிக நேர்த்தியாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார் கே.வி.ஷைலஜா. அட்டகாசமான அட்டைப்படமும் அழகான தலைப்பும் இந்நூலின் பலம்.

பின்அட்டைப் படத்தில் மம்முட்டியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளதை உள்ளது உள்ளதுபோலச் சொன்னால் ”தான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கித் தள்ளாமல், அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார்”.

முகமது குட்டி - மம்முட்டி ஆனது ...

கேரளாவில் வைக்கத்திற்குப் பக்கத்தில் ‘செம்பு’ என்ற கிராமத்தில் இஸ்மாயில் – ஃபாத்திமா தம்பதிகளின் மகனாகப் பிறந்த மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் ‘மம்முட்டி’ என்று அனைவராலும் அறியப்பட்ட பி.ஐ.முகம்மது குட்டி தன் வாழ்வனுபவங்களை இருபத்தி மூன்று தலைப்புகளின்கீழ் தொகுத்து ஒரு முழுப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

பி.ஐ.முகம்மது குட்டி என்றும்  பெற்றோர்களால் ‘மம்மது குஞ்ஞே’ என்றும் அழைக்கப்பட்ட பெயர் பட்டிக்காட்டுத்தனமாக தோன்றுவதாக நினைத்து,  கல்லூரியில் பயிலும்போது எகிப்தின் நடிகரான ஒமர் ஷெரீஃப் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டு பலவிதக் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வாழத்துடித்த ஒரு கல்லூரி மாணவன் எப்படி ‘மம்முட்டி’ என்ற பெயரில் அறியப்பட்டான் என்பதையும் அப்பெயரே இன்றுவரை நீடிக்கிறது என்பதையும் முதல் அத்தியாயத்தில் மிக சுவாரஸ்யமாகப் பதிவு செய்துள்ளார்.

ஹிந்தித் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பாடம் எப்படி தனது கர்வத்தை உணரவைத்தது என்பதில் தொடங்கி, பின்வரும் அத்தியாயங்களில் பெண்கள் மீதிருந்த ஈர்ப்பு காதல் இல்லை என்பதை உணரவைத்த ஷூக்கூர் பாவா பற்றியும், துரோகம் இழைத்த படத்தயாரிப்பாளரிடம் துளியும் விரோதம் கொள்ளாத மனோதிடம் பற்றியும், சினிமா உலகில் பிரவேசிப்பதற்கு முன் வக்கீலாக பணியாற்றியபோது பெற்ற அனுபவம் என தேர்ந்தெடுத்த டைரிக்குறிப்புகளைப்போல சம்பவங்களை நினைவுகூர்ந்து கோர்வையாக எழுதியிருப்பது மட்டுமல்லாமல் அச்சம்பவங்கள் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தையும் தாக்கத்தையும் மிக எளிய மொழி நடையில் கொண்டு நகர்த்துகிறார்.

சில இடங்களில் உரைநடைபோலவும், சில இடங்களில் உரையாடல் போலவும் சில இடங்களில் தத்துவவாதியைப் போலவும், சில இடங்களில் சமூகத்தின் மேல் கொண்ட விருப்பு வெறுப்புக்களை அழுத்தமாகவும், தன் மனதில்பட்டதை பாரபட்சமில்லாமல் அப்பட்டமாகச் சொல்லவும் முயற்சித்துள்ளார் மம்முட்டி.

பல சம்பவங்கள் படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றவை.  வெளிமாநிலங்களில் ஒரு மலையாளி மற்ற மலையாளிகளுடன் மேற்கொள்ளும் சம்பாஷனைகள், தன் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் தாய்மொழியான மலையாளத்தை கற்றுக்கொள்ள மேற்கொள்ளும் முனைப்பு ஆகியவற்றைக் கண்டு வெளிப்பட்ட மனக்குமுறல்களைக்கூட விட்டுவிடாமல் பதிவுசெய்துள்ளார் மம்முட்டி.

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் ...

காஷ்மீரில் படப்பிடிப்பிற்குச் சென்றபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் எதிர்பாராமல் கிடைத்த உதவியையும் மறவாமல் நினைவுகூறுகிறார்.  ”பல நேரங்களில் சொல்ல வருவது அதே நீள, அகல, ஆழத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதுதான் பலரின் பிரச்சனை” எனச்சொல்லும் இடங்களில் மம்முட்டி தனித்துவமாகத் தெரிகிறார்.  

தான் வேகமாகக் கார் ஓட்டுவதில் அதீத விருப்பம் கொண்டவர் என ரசித்துச் சொல்லும் மம்முட்டி ஒரு பின்னிரவு நேரத்தில் பிரசவ வலியில் துடித்த முன்பின் தெரியாத பெண்ணையும் உடனிருந்த பெரியவரையும் தன் காரில் ஏற்றிச் சென்று சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததற்காக  அந்தப் பெரியவர் கையில் திணித்துச் சென்ற இரண்டு ரூபாயை இன்னும் மறவாமல் நினைவில் வைத்திருப்பதாகத் தெரிவித்திருப்பது வாசிக்கும் பலரை சிலிர்க்க வைக்கிறது.

வாசிக்கும்போதே மம்முட்டி பேசும் தமிழ் காதுகளில் ஒளித்துக்கொண்டே இருப்பதுபோல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. மொழிபெயர்ப்பாளருக்கும் வம்சி புக்ஸ் பதிப்பகத்திற்கும் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் எப்போதும் தகும்.

அதீத எதிர்பார்ப்புகளுடன் வாசிக்கப்படும் பிரபலங்களைப்பற்றிய புத்தகங்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது.  அந்த வரிசையில் இந்தப்புத்தகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக – பால்யகால நினைவுகள், வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள், சமூகம் கற்றுத்தந்த பாடங்கள், அதற்கு அவர் ஆற்றிய எதிர்வினைகள் என வரிசைகிரமம் மாறாமல் வெற்றுக் குறிப்புகளாக மட்டும் தராமல்  தத்துவார்த்த வரிகளையும் குழைத்துக் கொடுத்துள்ளார் மம்முட்டி. மூன்றாம் பிறை வளர்கிறது. நன்றி.

மூன்றாம்பிறை : மெகா ஸ்டார் ...

நூலின் பெயர் : மூன்றாம் பிறை, வாழ்வனுபவங்கள்

ஆசிரியர் : மம்முட்டி

மொழிபெயர்ப்பாளர்   : கே.வி.ஷைலஜா

பதிப்பகம் : வம்சி புக்ஸ்

பக்கம் : 128

விலை : ரூ.100

2 Comments

  1. அருமையான முன்னுரை. முன்னுரையை படிக்கும்போதே புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுவதை மறுக்க முடியாது.

  2. வாசிப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் தெளிவான நடை. சிறு நிகழ்வுகளையும் ஆழ்ந்து படித்து அது குறித்த தனது கருத்தைத் ெதெளிவாகக் கூறியுள்ளார். வாழ்த்துக்கள்.

Leave a Response