Article

மோடியின் கோவிட் குளறுபடி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

Spread the love

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ள நாடுகளில்,  இந்தியா, ஜூலை 5 தேதியன்று உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து உலகில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் நாடாக இந்தியா வந்துவிட்டது. இம்மூன்று நாடுகளுமே வலதுசாரி எதேச்சாதிகாரத் தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வருவதென்பது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல. தற்போது இந்தியா, இவ்விருநாடுகளுடனும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் அதிக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைப் பதிவு செய்வதிலும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. தற்போது, ஒவ்வொரு நான்கைந்து நாட்களிலும் ஒரு லட்சம் தொற்றாளர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இத்தொற்றால் இறப்போர் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. (உண்மையில் இதுவும் குறைத்து அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரம்தான்.)

இவை அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் படுதோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. தற்போது அரசாங்கம் இதுதொடர்பாக எவ்விதமான மாற்று திட்டங்களும் இன்றி, கொரோனா வைரஸ் தொற்று அதன் போக்கிற்குச் செல்லட்டும் என்று விட்டுவிட்டதுபோன்றே தெரிகிறது. இத்தொற்று தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் நாள்தோறும் அளித்துவந்த அறிக்கைகள் கடந்த சில வாரங்களாகக் கைவிடப்பட்டுவிட்டன. தொற்றிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை விகிதம் மேம்பட்டுக்கொண்டிருக்கிறது, அல்லது இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இறப்போர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது போன்று கண்மூடித்தனமான முறையில் சில சாக்குப்போக்குகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். தொற்றிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை விகிதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று கூறுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. ஏனெனில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 98 முதல் 99 சதவீதத்தினர் மீளவும் குணம் அடைந்துவிடுவார்கள். மிக மோசமாக இறப்போர் எண்ணிக்கை விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் இறப்போர் எண்ணிக்கை என்பது பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இறப்போர் எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாகும்.

கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பது தொடர்பான அரசின் ஒட்டுமொத்த கொள்கைகளும், அவற்றின் அமலாக்கமும் மோடி அரசாங்கம் எந்த அளவிற்கு குழறுபடியை உருவாக்கி இருக்கிறது என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கம், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை மந்தப்படுத்தியிருந்தாலும், மேலும் இந்தக் காலத்தை பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதியை விரிவாக்குவதற்கும், அதன் மூலம் போதுமான அளவிற்கு மருத்துவத் தளவாடங்களையும், சுய பாதுகாப்பு உபகரணங்களையும் மற்றும் பல மருத்துவ உபகரணங்களையும் பெறுவதற்கு உத்தரவாதப் படுத்தியிருந்தாலும்  பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் எதார்த்த உண்மைகள் இதற்கு நேரெதிராகக் காட்டுகின்றன. சமூக முடக்கம் அறிவித்து, இரண்டு வாரங்கள் கழித்து, இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதையும், கடும் கட்டுப்பாடு முடிவடைந்த மே 31 அன்று தொற்றாளர்கள் எண்ணிக்கை பல்கிப் பெருகி இருந்ததையும் பார்க்க முடிந்தது.

இத்தொற்று தொடர்பாக அரசாங்க மருத்துவமனைகளில் வசதிகளை விரிவாக்குவதற்காகவும், மருத்துவ உபகரணங்களை வாங்குவது தொடர்பாகவும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்பவை நிச்சயமாகப் போதுமானவை அல்ல.  இத்தொற்று தொடர்பபாக அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பில், சுகாதாரத் துறைக்கு என்று ஒதுக்கிய தொகை என்பது வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமேயாகும். இந்தத்தொகையைக்கூட படிப்படியாக பல கட்டங்களாக, செலவிடப்பட வேண்டும். அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகள் சிலவற்றை, கோவிட் சிகிச்சைத் திட்டத்தின் ஓர் அங்கமாக,  நேரடியாகத் தன் கட்டப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இது நடைபெறவில்லை.

Activists arrests an ominous pointer, says CPI (M) mouthpiece ...

சமூக முடக்கம் அமல்படுத்தப்பட்ட விதம், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்கிற அதன் பிரதான குறிக்கோளையே நிலைகுலைவித்துவிட்டது. பல லட்சக்கணக்கான மக்களை, மிகவும் சிறிய இடங்களிலும், சேரிகளிலும் தங்க அனுமதித்ததானது, அவர்களுக்குள் தனிநபர் இடைவெளியை (physical distancing) ஏற்படுத்துவதென்பதை இயலாததாக்கி விட்டது. எவ்விதத் திட்டமிடலுமின்றி திடீரென்று அரக்கத்தனமான முறையில் அறிவித்த சமூக முடக்கம், பத்து கோடிக்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாரதாரங்களை அழித்து, அவர்களைத் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி வெளியேறுவதை வலுக்கட்டாயமாக்கி, தொற்று புதிய பகுதிகளுக்கும் பரவுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது.

மத்திய அரசாங்கம் தன்னுடைய அணுகுமுறையில் அறிவியலைப் பின்பற்ற வில்லை. சோதனை செய்வது தொடர்பாகவோ, மக்களை வைரஸ் தொற்று பாதிக்கப்படாதவாறு தனிமைப்படுத்தி வைத்திருப்பது தொடர்பாகவோ சுகாதாரத்துறை வல்லுநர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களைச் சார்ந்திருக்கவில்லை. கோவிட் சிகிச்சைத் திட்டங்களை அமல்படுத்திவந்த மாநில அரசுகளுக்குப் போதுமான நிதியை அளித்திடவும் மறுத்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுமே முறையிட்டிருக்கின்றன. இதற்காக அமைக்கப்பட்ட பிஎம்கேர்ஸ் நிதியம் எப்படி செயல்படுகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. இது தொடர்பாக எவ்விதமான அதிகாரபூர்வ கணக்கும் கிடையாது. இந்த நிதியத்திற்காக, கார்ப்பரேட்டுகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதிகள், பிரதமரின் அரசியல் நலன்களுக்கு ஏற்றவிதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் சேர்ந்து, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்காக மருத்துவமனைகளில் சேரும்போது அவர்கள் மிகவும் வெறித்தனமான முறையில் துன்பத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு முறையாக சோதனைகள் செய்யப்படுவதில்லை. அவற்றைச் செய்திடும் சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு போதுமான அளவிற்கு சுய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகள் மிக அதீதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. இப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் பல லட்சக்கணக்கான ‘ஆஷா’ மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குப் போதுமான அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் அவர்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கிறது.

மோடி அரசாங்கம், கோவிட் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, சில குறுகிய கால அரசியல் ஆதாயங்களை ஏற்படுத்துவதிலேயே மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது. கோவிட் தொற்றை முறியடித்திட அறிவியல் அடிப்படையில் எவ்விதமான வழிமுறைகளையோ திட்டத்தையோ முன்வைப்பதில் தோல்வியடைந்துள்ள நிலையில், கடைசியாக கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை உள்துறை அமைச்சகம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) போன்ற நிறுவனங்கள் தரம் தாழ்த்தப்பட்டு, அரசாங்கத்தின் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஐசிஎம்ஆர் ஊனீரியல் (serological) ஆய்வினை மேற்கொண்டு, மக்கள் தொகையில் 0.73 சதவீதத்தினர் மட்டுமே ஏப்ரல் இறுதி வாக்கில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள் என்று கூறியது. எனினும், இது தொடர்பாக ஐசிஎம்ஆர் தன்னுடைய அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தும் விதத்தில் தாக்கல் செய்யவில்லை. மேலும் தான் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் குறித்தும் அது எதுவும் கூறவில்லை. உதாரணமாக, மக்கள் தொகையில் 0.73 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இதன் பொருள், ஏப்ரல் இறுதிவாக்கில், ஒரு கோடி பேர் இத்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதாகும். இவ்வாறு ஆய்வறிக்கையை வெளியிட்ட ஐசிஎம்ஆர், அடுத்த மூன்று மாதங்களில் இத்தொற்றால் பாதிக்கப்படுவோர் நிலை குறித்தும் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த தன் திட்டத்தினையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு சுயேச்சையாக எவ்விதமான முடிவினையும் அது எடுக்காது அனைத்தையும் அது கைவிட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

Hydroxychloroquine reduces death rate in hospitalised COVID-19 ...

ஐசிஎம்ஆர், ஹைட்ராக்சிக்ளோரோகின் (hydroxychloroquine) சோதனை அடிப்படையில் அளிக்கலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும் அதனை ஒரு முன்னெச்சரிக்கை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்களாலும், முன்னணி சுகாதாரப் பணியாளர்களாலும் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. இந்த மருந்து பயனளிக்கும் விதத்தில் செயல்படவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தன் முடிவினை வெளியிட்டபின்னரும்கூட இவ்வாறு கூறப்பட்டு வந்தது. இந்தியாவில் உள்ள பிரதான மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகளுக்கு டிரம்ப்தான் வழிகாட்டும் ஒளி விளக்காக இருப்பதாகவே தோன்றுகிறது. மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது ரெம்டேசிவிர் (Remdesivir) உற்பத்தி  செய்திட கட்டாய உரிமம் வழங்கிட மறுத்திருக்கிறது. ரெம்டேசிவிர் மருந்து, கோவிட் தொற்றுக்கு எதிராக கொஞ்சம் செயல்திறனைக் காட்டியிருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் கிடைத்திடவில்லை. அது, அமெரிக்க மருந்துக் கம்பெனி ஒன்றுக்கு சொந்தமானது. அது தான் உற்பத்தி செய்த அனைத்தையும் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறது. கட்டாய உரிம மார்க்கம் இந்த மருந்தை இந்தியக் கம்பெனிகளால் உற்பத்தி செய்யப்படுவதற்கு அனுமதித்திடும்.

சமீபத்தில், ஐசிஎம்ஆர் 12 மருத்துவமனைகளுக்கு, கோவாக்சின் என்னும் தடுப்பூசி தொடர்பாக அவை மேற்கொண்டுள்ள மருத்துவப் பரிசோதனைகளை ஆகஸ்ட் 15க்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. இவ்வாறு ஒன்றரை மாதங்களுக்குள் மூன்று கட்ட பரிசோதனையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவது ஓர் அரசியல் இலக்காக இருக்குமேயொழிய, அது அறிவியல்ரீதியான ஒன்றாக இருக்காது. ஐசிஎம்ஆர்-இன் இந்தக் கட்டளையை அறிவியலாளர்களும், சுகாதார வல்லுநர்களும் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். இது தொடர்பான ஒட்டுமொத்த நடைமுறையும் முடிவுதற்கு எப்படியும்  குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தேவை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிகழ்வு மோடி அரசாங்கத்தின் கவலைப்படும் அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அறிவியல் குறித்தோ பொது சுகாதாரம் குறித்தோ அக்கறையின்றி செயல்பட்டுவரும் இந்துத்துவா ஆட்சியாளர்கள் அறிவியலற்ற நடைமுறைகள் மற்றும் வித்தைகள் மீது அதிக அளவில் சாய்ந்திருப்பதன் காரணமாக தங்களுடைய வலுவான தலைவரின் சித்திரத்தை உயர்த்திப்பிடிப்பதற்காக ஏதேனும் செய்திட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இத்தகைய அணுகுமுறையானது சுகாதாரத்திற்கும் நாட்டு மக்களின் நலனுக்கும் ஊறு விளைவித்திடும்.

கோவிட் தொற்று இப்போதும்கூட உலக அளவில் அதன் ஆரம்ப கட்டங்களில்தான் இருக்கிறது. இதற்கெதிராக வலுவான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரையிலும் நாம் நீண்ட காலம் காத்திருக்கத்தான் வேண்டும். அரசாங்கம் இதனைக் கணக்கில் கொண்டு தன்முன்னுரிமைச் செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டிய நிலையில் இருக்கிறது. பொது சுகாதார அமைப்புமுறையை ஒரு போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்திட வேண்டும், திட்டமிட்ட முறையில் அனைவருக்கும் சோதனை மேற்கொண்டு, தொற்றாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்திடும் வேலையை பெரிய அளவில் செய்திட வேண்டும், இத்தொற்றுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் மாநில அரசாங்கங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும், மக்களிடம் உண்மை நிலைமைகளை உணரச் செய்து அவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெற்றிட வேண்டும். இவை அனைத்திற்கும் ஒரு பொருளாதாரத் திட்டத்தையும் அறிவித்து, அதன் மூலம் தேவைப்படுவோருக்கு ரொக்க மாற்று, உணவு தான்யங்கள் இலவசமாக விநியோகம், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் விரிவாக்கம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் வருமானங்களுக்கும் புத்துயிரூட்டிட வேண்டும்.

(ஜூலை 8, 2020)

தமிழில்: ச. வீரமணி

Leave a Response