Article

மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டம்: ஆர்.எஸ்.எஸ்சின் ஹிந்து பொருளாதாரத்தின்  மெல்லியதாக மறைக்கப்பட்ட செயல்திட்டமே  – சாகர் (தமிழில்: தா.சந்திரகுரு)

Spread the love

2020 மே 12 அன்று தேசத்திற்கு உரையாற்றிய போது, ஆத்மநிர்பார் பாரத் அபியான் என்ற ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாடு தழுவிய பொதுமுடக்கத்தின் நாற்பத்தொன்பதாம் நாளில், அந்த நோய் ஏற்படுத்திய அழிவுகரமான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிப்பதற்காக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட நிதி தொகுப்பின் ஒரு பகுதியாகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மோடியின் அந்த உரை தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடிமக்களிடம் அவர் ஆற்றிய ஐந்தாவது உரையாக இருந்தது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்குச் சொந்தமானது  என்பதை உறுதிசெய்வதற்கான பொறுப்பைத் தாங்கள் சுமந்து கொண்டிருப்பதை மக்களிடம்  நினைவூட்டுவதற்காக அந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். தற்போதைய ‘உலகளாவிய ஒழுங்கை’ மேம்படுத்துவதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு, இந்த தொற்றுநோயின் விளைவாக இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரே வழி ஆத்மநிர்பார் பாரத் என்றும் அவர் பரிந்துரைத்தார். அந்த 33 நிமிட உரையில், கிட்டத்தட்ட பாதி நேரம் தற்சார்பான இந்தியா குறித்த தன்னுடைய பார்வையை விளக்குவதற்காக மோடி எடுத்துக் கொண்டிருந்தார்.

அன்றைய தினம் கனிவான குரு ஒருவரின் பாத்திரத்தை எடுத்துக் கொண்ட மோடி, தற்சார்பு இந்தியாவின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை விளக்குவதை விட, அந்தக் கருத்தைச் சொல்வதற்கே கணிசமான நேரத்தைச் செலவழித்திருந்தார். அந்த திட்டம் குறித்த விவரங்களை அறிவிப்பது இறுதியில் மத்திய நிதியமைச்சரிடம் விடப்பட்டது. ஆத்மநிர்பார் பாரத் என்ற மிகச் சிறந்த சிந்தனை, பண்டைய கலாச்சாரம் மற்றும் தன்மை ஆகியவற்றின் விளைபொருளாக இருக்கிறது என்றும், அது வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் போன்ற ஹிந்து மத நூல்களின் வேர்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது என்றும் மோடி கூறினார். எதிர்காலத்திற்கான இந்த கோட்பாட்டில் பண்டைய ஞானத்தின் பெருமையை சேர்க்கின்ற வகையில், அவரது விளக்கம் மிகவும் தாராளமாக சமஸ்கிருத மேற்கோள்கள்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Nirmala Sitaraman.jpg

தற்சார்பு ஏன் அவசியம் என்பதைச் சொல்வதற்கு அவர் முண்டகோபனிஷத்தை ‘ஈஷா வ பந்தா’ – இது உங்கள் பாதை என்று மேற்கோள் காட்டினார். இந்தியர்கள் தங்களுடைய  தாயகத்துடன் கொண்டுள்ள தொடர்பைப் பாராட்டுவதற்காக ‘இந்த பூமி நமது தாய், நாம் அதன் மக்கள் – மாதா பூமி: புத்ரோ அஹம் பிருத்வியா’ – என்று மற்றொரு சுலோகத்தையும் அவர் பயன்படுத்தினார். இந்திய நல்லொழுக்கம் உலக ஒழுங்கிற்கு மிகவும் அவசியமானது என்று அப்போது மோடி பரிந்துரைத்தார். ‘ஒட்டுமொத்த உலகத்தையும் தனது குடும்பமாகக் கருதி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நலனை விரும்புகிற, பிரபஞ்சத்திற்கு வணக்கம் செலுத்துவதை நம்புகின்ற கலாச்சாரத்தில்… பாரதத்தின் நிலம் தற்சார்பை அடையுமென்றால், தானாகவே உலகின் செழிப்பை அது உறுதி செய்யும்’  என்றார். தற்சார்பு மட்டுமே ஒரே வழி என்பதைக் காட்டும் வகையில், ‘சர்வம் அதம் வாஸ்ன் சுகம்’ என்ற மற்றொரு சமஸ்கிருத மேற்கோளுடன் தனது உரையை அவர் முடித்தது மட்டுமல்லாது, ஒரு போதகராக ‘நமது அதிகாரத்தில் என்ன இருக்கிறதோ, நம் கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ, அதுமட்டுமே மகிழ்ச்சி’ என்று அதன் பொருளையும் விளக்கினார்.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Atmanirbhar bhaat Modi.jpeg

பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளின் மூலமாக, நாட்டை படிப்படியாக இறக்குமதியற்றதாக மாற்றி, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கின்ற பிரச்சாரமாகவே ஆத்மநிர்பார் பாரத் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  தற்சார்பு குறித்த அந்த சிந்தனை, வழக்கமான பொருளாதாரக் கொள்கைகளின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதை மோடியின் பேச்சு தெளிவுபடுத்தியது. தன்னுடைய பார்வையை நியாயப்படுத்துவதற்காக. மத நூல்களே நாட்டின் கலாச்சாரம் மற்றும் தன்மை ஆகியவற்றை குறிப்பதாக அவர் அளித்த முக்கியத்துவம் ஒளிவுமறைவாக இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து வந்த வாரங்களில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் இந்திய வர்த்தக சபை ஆகியவற்றின் தலைவர்களுடனான பேச்சுகள், மோடி தொகுத்து வழங்கி வருகின்ற வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத், இந்தப் பணியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு திட்டத்தின் துவக்க விழா என்றுபல தளங்களிலும் இந்த புதிய சமூக-பொருளாதார ஒழுங்கை ஆதரித்து மோடி பேசி வந்தார்.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Modi and Mohan Bhagavath.jpg

மோடியின் அந்த உரைக்கு முந்தைய வாரங்களில், அதே தற்சார்பு மாதிரி குறித்து ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் உயர் தலைமை பேசி வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் என்பது மோடியின் தலைமைப் பீடம். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அமைப்பாக இருக்கின்ற அந்த சங்கத்துடன்,  முப்பதாண்டுகளுக்கும் மேலாக காலத்தை அவர் கழித்திருக்கிறார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் உரையாடல் ஒன்றை ஆர்.எஸ்.எஸ்சின் இணைப் பொதுச் செயலாளராக இருக்கின்ற தத்தாத்ரேயா ஹோசாபலே மே 6 அன்று நிகழ்த்தினார். அந்த அமைப்பின் தலைமையில் மூன்றாவது முக்கிய பொறுப்பில் இருக்கின்ற ஹோசாபலே, சமூக-பொருளாதார ஒழுங்கிற்கான புதிய மாதிரி என்பது காலத்தின் கட்டாயம் என்றும், தற்சார்பு மற்றும் சுதேசி சிந்தனைகளின் அடிப்படையில் அந்த மாதிரி இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இந்த தொற்றுநோய் உலகளாவிய முதலாளித்துவம் மற்றும் உலகளாவிய கம்யூனிசம் ஆகிய இரண்டின் சித்தாந்தங்களிடம் இருக்கின்ற வரம்புகளை அம்பலப்படுத்தியிருப்பதால், புதிய சுதேசி மாதிரி என்பது நமக்குத் தேவைப்படுகிறது என்று ஹோசாபலே கூறினார்.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\dattatreya-ji.jpeg

இருந்தபோதிலும், இந்த தற்சார்பு குறித்த முதல் குறிப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவரான மோகன் பகவத்திடமிருந்தே வந்தது. ஏப்ரல் 26 அன்று, ’தற்போதைய சூழ்நிலை மற்றும் நமது பங்கு’ என்ற தலைப்பில் தேசத்திடம் பகவத் உரையாற்றினார். வளர்ச்சிக்கான புதிய மாதிரி என்பது தற்சார்பிற்கான சமஸ்கிருத வார்த்தையான ’ஸ்வவலம்பன்’ அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அப்போது அவர் அழைப்பு விடுத்தார். மோடி பின்னர் பயன்படுத்திய அதே சொற்களை முன்னரே பயன்படுத்தி, இந்தப் பேரழிவை குடிமக்கள் தங்களுக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பகவத் கேட்டுக் கொண்டார். பொதுமுடக்கத்தின் போது சங்கம் எவ்வாறு அணிதிரண்டது, ‘சேவை’ என்று அழைக்கப்பட்ட செயல்களை அது எவ்வாறு நடத்தியது, அந்த சேவைகள் ஹிந்து ராஷ்டிரத்திற்கு எவ்வாறு வழிமுறையாக உள்ளன என்பதை ஏற்கனவே மூன்று பகுதிகளாக வெளியான தொடரின் மூலம் கேரவன் இதழ் ஆவணப்படுத்தியுள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Thaththopant Thengadi.jpg

இந்த புதிய சமூக-பொருளாதார மாதிரி, சங்கம் மற்றும் பாஜகவின் தற்போதைய தலைமையால் அவசரமாகத் தயாரிக்கப்படவில்லை. மோகன் பகவத், ஹோசாபலே மற்றும் மோடி ஆகியோரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தற்சார்பு,  சுதேசி சமூக-பொருளாதார அமைப்பு ஆகியவை தத்தோபந்த் தெங்கடி எழுதிய ‘மூன்றாவது வழி’ (The Third Way) என்ற புத்தகத்தில் மிகத் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு இயற்கை எய்திய தெங்கடி, சங்கத்தின் முறையே வர்த்தகம், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் பிரிவுகளான சுதேசி ஜாக்ரன் மஞ்ச், பாரதிய மஜ்தூர் சங்கம், பாரதிய கிசான் சபா ஆகியவற்றை நிறுவியவர் ஆவார். ‘மூன்றாவது வழி’ என்ற அந்த புத்தகம் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் சரிவிற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1995இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. கம்யூனிசத்தின் சரிவு மற்றும் முதலாளித்துவத்தின் சிதைவு ஆகியவை உலகத்தில் கருத்தியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட தெங்கடி, பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தைப் பொறுத்தவரை, மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்கான புதிய மற்றும் ஒரே மாதிரியாக ஹிந்து அணுகுமுறையே இருக்கிறது என்று தன்னுடைய புத்தகத்தில் முன்வைத்தார்.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Third Way.jpg

சங்கத்தின் ஹிந்து மேலாதிக்க கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கும் வகையில், உலகளாவிய பொருளாதார அமைப்பு குறித்த, ஹிந்து பார்வை மற்றும் ஹிந்து பொருளாதாரம் என்று அவரால் அழைக்கப்பட்ட கோட்பாடுகளின் தொகுப்பை தெங்கடியின் அந்தப் புத்தகம் கோடிட்டுக் காட்டியது. பேரினவாதத்தின் அதே மனப்பான்மை கொண்டு, சுதேசிக் கட்டமைப்பை ஆதரிப்பதன் மூலம், அந்தப் புத்தகம் உலகின் பிற பகுதிகளிலிருந்து ஹிந்துக்களை ஒதுக்கி வைத்தது. அதில் சுதேசிக் கட்டமைப்பே நமது அரசியலமைப்பு என்று நிலைநிறுத்தப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது.

ஹிந்து மத நூல்களான வேதங்கள், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் மற்றும் பிற பிராமண இலக்கியங்களில் வகுக்கப்பட்டுள்ள விதிகளால் நிர்வகிக்கப்படுவதாக ஹிந்து பொருளாதார அமைப்பு இருக்க வேண்டும் என்பதே தெங்கடி முன்வைத்த முக்கிய அம்சமாக இருந்தது. விலை நிர்ணயம், தொழில்துறை உறவுகள், சமூக நலன் போன்றவற்றிற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கு, வேதங்களிலிருந்து சுலோகங்களை அவர் மேற்கோள் காட்டினார். சந்தேகத்திற்கு இடமளிக்கின்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஹிந்து ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகளைப் பயன்படுத்தியே, தான் முன்வைத்த  கொள்கைகளின் செயல்திறனையும், பொருத்தத்தையும் அவர் நிரூபித்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியப் பொருளாதார மாதிரியை மேற்கத்திய சிந்தனை என்று நிராகரித்த தெங்கடி, அது அனார்கிசத்திற்கே வழிவகுக்கும் என்றார்.  சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்ள உதவும் சர்வதேசவாதத்தை இந்தியாவின் பிரச்சினைகளுக்கான மூல காரணங்கள் என்று கருதியதாலேயே, மேற்கத்திய கருத்துக்கள் மீது அவருக்கு விரோதப் போக்கு இருந்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்வைத்த தாராளமயமாக்கலை, சுத்த முட்டாள்தனம் என்று அழைத்ததுடன், சர்வதேசவாதத்தை நாட்டிற்குள் பரப்புவதாகவும் அதன் மீது குற்றம் சுமத்தினார். உலகளாவிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டதன் மூலம், இந்தியாவில் சமூக நிறுவனங்களான இருக்கின்ற சாதி போன்றவை அழிந்து, மக்களின் வாழ்க்கையிலிருந்து மதத்திற்கான பங்கு நீக்கப்பட்டது என்று தெங்கடியின் புத்தகம் கூறியது. சாதிகளின் நிலைகுலைவு மற்றும் சமூகத்தில் மத கட்டமைப்பு இல்லாமை ஆகியவையே நாட்டைச் சுற்றியுள்ள அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் என்பதாகவே தெங்கடியின் கருத்துக்கள் இருந்தன.

ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் மோடியால் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் ’மூன்றாவது வழி’ புத்தகத்திலும்  பரிந்துரைக்கப்பட்டிருப்பதால், தெங்கடியின் புத்தகம் முழுமையாகப் படிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் முழுநேர உறுப்பினர்களாக இருந்து வருகின்ற மூன்று மூத்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளான ராமாஷிஷ் சிங், டி.விஜயன், பிப்லவ் ராய் ஆகியோர் தெங்கடியால் பரிந்துரைக்கப்பட்ட சமூக-பொருளாதார அமைப்பே, மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டமாக இருக்கின்றது என்று என்னிடம் உறுதிபடத் தெரிவித்தனர். கூடுதலாக, மோடியின் முந்தைய பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்கள் பலவற்றின் கருத்தியல் தோற்றம், தெங்கடியின் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளின் ஹிந்து பார்வையையே கொண்டிருந்தது என்பதை அந்தப் புத்தகத்தின் மீதான நெருக்கமான பகுப்பாய்வு நமக்குத் தெரிவிக்கிறது. ஜூன் 11 அன்று வர்த்தக சபையில் உரையாற்றிய மோடி, ‘கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக நாட்டின் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் தற்சார்பிற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வந்துள்ளது. இப்போது ​​ அந்தப் பணியை விரைவுபடுத்துவதற்கு, கொரோனா வைரஸ் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்றார்.

ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைப் பார்த்தால், மோடி அரசாங்கம்  எடுத்துள்ள குறைந்தபட்சம் இரண்டு பெரிய பொருளாதார முடிவுகளில், ஹிந்து பொருளாதாரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக இருக்கின்ற, தொழில்துறை விஷயங்களில் இருந்து அரசாங்கத்தின் மேற்பார்வையை அகற்றுவது என்ற செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வரும். தொழில்துறையில் அரசாங்கம் புரவலராக மட்டுமே செயல்பட வேண்டும் என்று ‘மூன்றாவது வழி’ புத்தகத்தின்  நான்காம் பாகத்தில் உள்ள முதலாவது அத்தியாயத்தில் தெங்கடி வாதிட்டிருக்கிறார். தனது சிந்தனையை விளக்குவதற்காக, அவர் இரண்டு வரலாற்று நிகழ்வுகளைப்  பயன்படுத்தியுள்ளார்.

 ‘மௌரியர்களின் காலத்தில், சிவில் போர்டுகளின் கீழ் இருந்த தொழிற்சாலைகள் உயர்தரமான பொருட்களைப் பயன்படுத்தின. மேலும் அங்கே இருந்த ஊழியர்களுக்கு நகராட்சி வாரியத்தால் நியாயமான ஊதியம் வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் சுரங்கங்களைத் தோண்டுவது மற்றும் தொழிற்சாலைகளை நடத்துவதற்காக அரசாங்கத்தின் செலவில் வேலை செய்யும் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்தது. விஜயநகர் சாம்ராஜ்யத்தின் கீழ், தங்கம் மற்றும் வெள்ளி இழைகளைக் கொண்டு அரசு தொழிற்சாலைகளில் 500 கலைஞர்கள் பணியாற்றி வந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும்கூட, அத்தகைய தொழில்களில் அரசின் பங்கு ஒரு புரவலர் என்ற அளவிற்கான பங்காகவே இருந்தது. தனிமனித சுதந்திரம் மற்றும் மனித ஆளுமையின் இயல்பான வளர்ச்சியைத் தடுக்கின்ற வகையிலான எந்தவொரு மையமயமாக்கலும் இருக்கவில்லை’ என்று தனது புத்தகத்தில் தெங்காடி குறிப்பிட்டுள்ளார்.

மௌரிய மற்றும் விஜயநகர சாம்ராஜ்யங்கள் புவியியல் மற்றும் கலாச்சார ரீதியாக முற்றிலும்  வேறுபட்டவை. குறைந்தபட்சம் அவையிரண்டும் தங்களுக்கிடையில் 1400 ஆண்டுகளால் பிரிக்கப்பட்டவையாக இருந்தன. ஆயினும் அரசுக் கொள்கைகளில் அவையிரண்டிற்கும் இடையே தொடர்ச்சி இருந்ததாக தெங்கடி நிறுவுவதை அவற்றால் தடுக்க முடியவில்லை. அவர் குறிப்பிடுகின்ற சுரங்கங்கள் அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்து வந்துள்ளன என்ற போதிலும், அரசு ஒரு புரவலராக மட்டுமே இருந்தது என்பதை தெங்கடி எப்படி முடிவு செய்தார் என்பது தெளிவாக இல்லை.

அரசை வெறும் புரவலர் என்று சொன்ன தெங்காடியின் கருத்தின்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வணிகரீதியிலான சுரங்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக மே 16 அன்று அறிவித்தார். வணிகரீதியான சுரங்கத் திட்டமானது, ஒரே தளத்திலிருந்து நிலக்கரி மற்றும் தாதுக்களை எந்த வரம்பும் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும், அவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ளவும், எந்தவொரு ஒழுங்குமுறை அமைப்பின் மேற்பார்வையும் இல்லாமல் அவற்றை விலை நிர்ணயம் செய்து கொள்ளவும் தனியார் சுரங்கங்களை வைத்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்குகிறது. ஆத்மநிர்பார் பாரத் அபியான் நிவாரண நடவடிக்கைகளின் நான்காவது தவணையின் கீழ், 50 நிலக்கரி நிலப்பகுதிகள் உடனடியாக ஏலத்திற்கு விடப்படும் என்று சீதாராமன் அறிவித்தார். அந்த திட்டத்தை ஜூன் 18 அன்று மோடி தொடங்கி வைத்தார். 41 பகுதிகள் ஏலத்தில் விடப்பட்டன. ‘நாங்கள் இன்று வணிகரீதியான நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தைத் தொடங்கவில்லை. மாறாக பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த நிலக்கரித் துறையை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்’ என்று மோடி அப்போது கூறினார். முந்தைய ஆட்சிகளில் நடந்ததற்கு மாறாக, சுரங்கத் தொழிலில் முன் அனுபவம் இல்லாதவர்களும், தங்களிடம் முன்பணம் செலுத்தும் திறன் இருந்தாலே, ஜூன் 18 அன்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஏகபோகம் முடிவிற்கு வந்து விட்டது என்று தனியார் துறையினர் இந்த முடிவைப் பாராட்டிய போதிலும், நாட்டின் பரந்த இயற்கை வளங்களைச் சுரங்கப்படுத்துவதில் அரசாங்கத்திடம் இருந்த கட்டுப்பாட்டை இந்த முடிவு திறம்பட நீக்குவதையே செய்து தந்திருக்கிறது.

1957ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2015ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக அவசரச் சட்டம் என்ற வழியை, 2020 ஜனவரியில் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு பயன்படுத்தியது. அவசரச் சட்டங்கள் என்பவை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மத்திய அமைச்சரவையால் அறிவிக்கப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகின்ற சட்டங்கள் ஆகும். இவ்வாறான சட்டங்களே வணிகரீதியான சுரங்கங்களுக்கு உதவின. சுரங்கங்களின் முதல் தவணை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும் என்றாலும், தொற்றுநோய் காரணமாக சற்று தாமதிக்க வேண்டியிருந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசின் மேற்பார்வையை அகற்றுவதற்கான இரண்டாவது பெரிய பொருளாதார முடிவாக, மே 15 அன்று சீதாராமனால் அறிவிக்கப்பட்ட விவசாய சந்தைகளை ஒழுங்குபடுத்துதல் இருந்தது. விவசாய விளைபொருட்களை அரசாங்கச் சந்தைகளில் விற்பனை செய்வதற்கான கட்டாயத்தை அரசாங்கம் தள்ளுபடி செய்தது. இந்த முடிவு குறித்து கவலை தெரிவித்த அகில இந்திய கிசான் சபா போன்ற இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள், இனிமேல் பயிர்களின் விலைக்கான ஆதரவு மற்றும் உறுதிப்படுத்தல் என்று எந்த ஏற்பாடுகளும் இருக்காது என்பதால், அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளை வேளாண் வணிக நிறுவனங்களின் தயவில் விட்டுவிட்டு வெளியேறுவதாகவே இருக்கும் என்று செய்தி இணையதளமான தி வயரிடம் தெரிவித்திருந்தன.

தெங்கடியால் முன்மொழியப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்சால் தீவிரமாக ஆதரிக்கப்படுகின்ற, அரசு என்பதை புரவலரின் பாத்திரமாகக் குறைக்கின்ற தொழில்துறைக் கட்டமைப்பானது பாராளுமன்றத்தின் பங்கை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் மட்டுமே வைக்கிறது. சாமானியர்களால் நிதியளிக்கப்பட்டு, நுகர்வோரால் பயன்படுத்தப்பட்டு, பாராளுமன்றத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, அரசின் உதவியுடன், இறுதியாக தர்மத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதாகவே தொழில்துறை கட்டமைப்பு குறித்த தெங்கடியின் மாதிரி இருக்கிறது.

இந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னால் இருக்கின்ற நோக்கங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஜூன் 2 அன்று மோடி சிஐஐயில் உரையாற்றியதைக் கவனிக்கலாம். ‘எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தங்கள் என்பவை முடிவுகளை எடுத்து, தர்க்கரீதியான முடிவுகளுக்கு அவற்றை எடுத்துச் செல்கின்ற தைரியத்தையே குறிக்கின்றன. ஐபிசி [திவால் நிலை மற்றும் திவால்நிலைக் குறியீடு], ஜிஎஸ்டி [சரக்கு மற்றும் சேவை வரி] அல்லது முகமறியாத வருமான வரி முறை என்று எதுவாக இருந்தாலும், அந்த அமைப்பில் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைப்பதற்கே நாங்கள் எப்போதும் பாடுபட்டு வருகிறோம்’ என்ற மோடி மேலும் தொடர்ந்தார். ‘செங்கோட்டையில் இருந்து பேசியபோது, முடிந்தவரை மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசாங்கத்தின் இருப்பை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களிடம் நான் சொன்னேன்’ என்று குறிப்பிட்டார். அந்த உறுதிப்பாட்டை தன்னுடைய அரசாங்கம் எவ்வாறு பின்பற்றியது என்பதை நிரூபிக்கவே, நிலக்கரி மற்றும் தாதுக்களை வணிக ரீதியாக சுரங்கப்படுத்த அனுமதிப்பது மற்றும் விவசாய சந்தைகளை ஒழுங்குபடுத்துவது போன்ற முடிவுகளை மோடி மக்களுக்கு வழங்கினார். கூடுதலாக, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற மிகமுக்கியமான துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு மோடியின் அமைச்சரவை ஜூன் 24 அன்று ஒப்புதலை  அளித்தது.

இந்த புதிய தற்சார்பு சமூக-பொருளாதார அமைப்பின் கீழ் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு, பொதுமுடக்க காலத்தில் வீடு திரும்பிய தொழிலாளர்களின் ‘திறன் வரைபடத்தை’ தொடங்குவதாகும். ஜூன் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்துகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்கள் குறித்த தரவுகளை வரைபடமாக்குகிற அமைச்சகம், தொழிலாளர்களின் வீடுகளுக்கு அருகே இருக்கின்ற வேலை வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதற்கான சான்றிதழ்களை அளிக்கிறது.

இந்த திட்டத்தைத் தொடங்கிய முதல் மாநிலங்களில் ஒன்றாக இருந்த உத்தரபிரதேச மாநிலம், ஆத்மநிர்பார் உத்தரபிரதேச ரோஜ்கர் யோஜனா திட்டத்தின்கீழ் அதை நடைமுறைப்படுத்தி உள்ளது. மாநிலத்தின் இந்தத் திட்டம், உள்ளூர்த் தொழில்களில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதை உறுதியளித்திருப்பதுடன், தொழிலாளர்களின் வர்த்தகம் மற்றும் அவர்களின் திறன் தொடர்பான கடன் வசதிகளையும் வழங்குகிறது. விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா (VSSY) என அழைக்கப்படுகின்ற மாநிலத்தின் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு இந்த திறன் வரைபடத் தரவுகளைப் பயன்படுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிதி அளிப்பதன் மூலம் பாரம்பரிய வர்த்தகங்களை விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா ஊக்குவிக்கிறது. இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறுவதற்கு, தொழிலாளி ஒருவர் முடிதிருத்துபவராக, தையல்காரராக, தச்சராக, செருப்பு தைப்பவராக, மிட்டாய் தயாரிப்பவராக, பனை இலைகள் வேய்பவராக, நெசவாளராக, இரும்பு கொல்லராக, கொத்தனாராக, பொற்கொல்லராக பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும். இந்தியாவில், பல பாரம்பரிய வர்த்தகங்கள் சாதி சார்ந்தவையாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, செருப்பு தைப்பவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகளாகவும்,  முடி திருத்துபவர்கள், பொற்கொல்லர்கள், இரும்பு கொல்லர்கள், மிட்டாய் தயாரிப்பவர்கள் பெரும்பாலும் சூத்திரர்களாகவும் இருக்கின்றனர்.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\1587977624_modi-2 Yogi.jpg

ஜூன் 26 அன்று யோகி ஆதித்யநாத் என்று பொதுவில் அழைக்கப்படுகின்ற உத்தரப்பிரதேச முதல்வர் அஜய்சிங் பிஷ்ட் உடன் வீடியோ அழைப்பு மூலமாக இணைந்து, ஆத்மநிர்பார் உத்தரபிரதேச ரோஜ்கர் யோஜனாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்த வீடியோ அழைப்பின் போது, விஸ்வகர்மா திட்டத்திற்கான தரவுகளை ​​பிஷ்ட் வழங்கினார்.  ‘உத்தரப்பிரதேச விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டத்தின்கீழ் 5000க்கும் மேற்பட்ட பாரம்பரிய வர்த்தகர்களுக்குத் தேவையான கருவிகள் இன்று பிரதமரின் புனிதமான கைகளால் விநியோகிக்கப்படுகின்றன. இந்த 5000 பாரம்பரிய வர்த்தகர்களில், 1650 பேர் தையல்காரர்கள், 1088 பேர் இரும்பு கொல்லர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் போன்று உலோக வேலைகளில் ஈடுபடுபவர்கள், 250 பேர் கண்ணாடி வேலைகளிலும், 130 பேர் மெத்தை செய்யும் வேலைகளிலும், 669 பேர் மிட்டாய் தயாரிப்புகளிலும், 212 பேர் முடி திருத்தும் பணியிலும், 137 பேர் கூடை செய்வதிலும், 120 பேர் மட்பாண்டங்கள் தயாரிப்பிலும், 95 பேர் கொத்தனார் வேலையிலும், 112 பேர் காலணி தயாரிப்பு வேலையிலும் ஈடுபடுவர்களாக இருக்கின்றனர்’ என்று அவர் கூறினார். அந்த வேலைவாய்ப்பு திட்டத்திற்காக பிஷ்டை வாழ்த்திய போது, ‘யோகிஜியின் அரசாங்கம் மத்திய அரசின் திட்டத்தை தரமான வகையில் அளவு குறையாமல் செயல்படுத்தியுள்ளது. கூடுதல் திட்டங்களை உத்தரப்பிரதேச அரசாங்கம் அதில் சேர்க்கவில்லை என்றாலும், பயனாளிகளின் எண்ணிக்கையை அது அதிகரித்துள்ளது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் குறிக்கோளுடன் அவற்றை உண்மையாக இணைத்திருக்கிறார்’ என்று மோடி கூறினார்.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Book Caste.jpg

‘மூன்றாவது வழி’ புத்தகத்தில் தெங்கடி குறிப்பிட்ட கோட்பாட்டையே இந்த திட்டம் செயல்படுத்துகின்றது. ‘உற்பத்தி, தகவல் தொடர்பு போன்ற நுட்பங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், 3,000 பாரம்பரிய வர்த்தகங்களில் பெரும்பாலானவை வழக்கற்று அல்லது பொருளாதாரமற்றதாக மாறி, புதிய வர்த்தகங்கள் தோன்றியுள்ளன. இதன் விளைவாக பாரம்பரிய சாதி அமைப்பு முறிந்து போனது’ என்று தெங்கடி எழுதியிருந்தார். சாதி ஒழுங்கை மீட்டெடுப்பதற்கான வழிமுறையாக, தொழில்வாரியான அமைப்புகளை உருவாக்குவதற்கான இத்தகைய ஆலோசனையை தெங்கடி தான் முதன்முதலில் முன்வைத்தவர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் இந்த திட்டம் இந்தியாவில் உள்ள சாதி அமைப்பின் அடிப்படையை ஊக்குவிக்கிறது, ஒருங்கிணைக்க முயல்கிறது என்று சொல்வதில் தவறேதும் இல்லை. ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிநிலை சமூக அமைப்பான வர்ணாசிரமம், பிறப்புகளின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக மக்களைப் பிரிக்கிறது. அந்த வரிசையில் பிராமணர்கள் மிக உயர்ந்தவர்கள், சூத்திரர்கள் மிகவும் கீழானவர்கள். அதே சமயத்தில் தலித்துகள் இந்தக் கட்டமைப்பிற்கு முற்றிலும் வெளியே வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அவர்ணா என்ற வர்ணம் அல்லாத நிலை வழங்கப்படுகிறது. அவர்கள் சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டவர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர்.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Indian Caste System.jpg

தெங்கடி மேலும் கூறுகையில், ‘தொழில் அல்லது வர்த்தக குழுக்களின் ஒருங்கிணைப்பும், அமைப்பாக்கமும் தொடர வேண்டும். அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்… நமது மக்களில் பெரும்பான்மையானவர்களாக உள்ள விவசாயிகள், நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், சுயவேலை செய்யும் கைவினைஞர்கள், விவசாய மற்றும் வனத் தொழிலாளர்கள் போன்றவர்கள் இன்னும் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்படாது இருக்கிறார்கள். தொழில் வாரியாக அவர்களை ஒழுங்கமைப்பது விரைவுபடுத்தப்பட வேண்டும்’  என்றார். தெங்கடி இந்த யோசனையை ஆர்.எஸ்.எஸ்சின் இரண்டாவது சர்சங்சாசலக் எம்.எஸ்.கோல்வல்கருக்கு வழங்கினார். அந்த ‘மூன்றாவது வழி’ புத்தகம் தெங்கடியைப் போன்று பிராமணராக இருந்த கோல்வால்கருக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

புதிய சமூக-பொருளாதார அமைப்பு குறித்த ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தத்தை விரைவுபடுத்துவதற்கானதொரு வாய்ப்பை இந்த தொற்றுநோய் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ள நிலையில், அந்தக் கருத்துக்களை தனது கொள்கைகளுக்குள்ளாக மோடி முன்பிருந்தே ஒருங்கிணைத்து வருவதாகவே தெரிகிறது. 2019 நவம்பரில் தொழில்துறை உறவுகள் தொடர்பான தொழிலாளர் விதிகள்-2019ஐ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. மற்ற விதிகளுடன், எந்தவொரு அரசாங்க ஒப்புதலும் பெறாமலே தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு செய்யும் காலவரம்பை 100 நட்களிலிருந்து 300 நாட்களாக உயர்த்துவதற்கு அரசுகளுக்கு அதிகாரம் இருக்கும் என்று அந்த மசோதா முன்மொழிந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை, முன்பிருந்த 45 நாட்களுக்குப் பதிலாக, 15 நாட்கள் சராசரி ஊதியமாகக் குறைப்பது போன்ற பல தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும் அந்த மசோதா பரிந்துரைத்திருந்தது; நிர்வாகங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்குத் தகுதி பெறுவதற்கு, முன்பிருந்த 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்கள் இனிமேல் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவைக் காட்ட வேண்டும்; எந்தவொரு தொழிற்சங்க ஆதரவுடனான வேலைநிறுத்தத்தையும் அறிவிப்பதற்கு முன்பாக 14 நாள் கால அவகாசத்தில் அறிவிப்பு தரப்பட வேண்டும் என்றும் அந்த சட்ட மசோதா பரிந்துரைத்திருந்தது. முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் உரிமைகளைத் திறம்படப் பறிப்பதாகவே அந்த மசோதா இருந்தது.

தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் அரசு தலையிடக் கூடாது என்கிற இந்தக் கருத்து மீண்டும் தெங்கடி தனது புத்தகத்தில் முன்வைத்த கருத்தாகவே இருக்கிறது. எந்தவொரு கட்டாய அரசு கட்டமைப்பும் இல்லாமல், தங்களுக்குள்ளேயே குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டால்தான், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் ஒரு கற்பனாவாத கலாச்சாரம் இருக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில் அர்த்தசாஸ்திரத்தை தெங்கடி மேற்கோள் காட்டியிருந்தார்.

அர்த்தசாஸ்திரத்தில் தனியார் நிறுவனங்கள் கூட்டுறவுக் குழு என்றே குறிப்பிடப்படுகின்றன. ‘இந்த கூட்டுறவுக் குழுக்களுக்கு தன்னாட்சித் தன்மை இருந்தது. அதன் உறுப்பினர்கள் அனைத்து உள்சச்சரவுகளையும் தங்கள் சொந்த சட்டங்களின்படி தீர்த்துக் கொள்ள வேண்டும். குழுவிற்கு வெளியே உள்ள எந்தவொரு சக்தியோ அல்லது நபரோ இந்த வேலையைச் செய்வதற்குத் தகுதியற்றவர்கள். தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் சர்ச்சை எழுகின்ற போது தவிர, இந்தக் குழுவின் உள்நிர்வாகத்தில் அரசால் தலையிட முடியாது’ என்று தெங்கடி எழுதியுள்ளார். தெங்கடியைப் பொறுத்தவரை, முதலாளிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிடும். தொழிலாளர்களைப் பொறுத்தவரை மூன்றாவது தரப்பு உதவி அவர்களுக்குத் தேவையில்லை என்பதாகவே அவரது கருத்து இருந்தது.

தெங்கடியின் பார்வையில், தர்மத்தால் நிர்வகிக்கப்படுகின்ற சமூக-பொருளாதார அமைப்பின் கீழ், பிராமணர்கள் மற்றும் மூன்றாவது வர்ணமான வைசியர்கள் ஆகியோரிடம் மட்டுமே வணிகங்களுக்கான உரிமை இருக்க வேண்டும். இந்த பிரிவினருக்கென்று தனிப்பட்ட குறை தீர்க்கும் முறை இருக்க வேண்டும், அதே நேரத்தில் தங்களுடைய பாரம்பரிய வர்த்தகங்களை மேற்கொள்வதற்கும், தொழிலாளர்களாகப் பணியாற்றுவதற்கும் விரும்புகின்ற சூத்திரர்கள், தர்மத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் தங்களுடைய முதலாளிகளுக்கு அவசியம் செவிசாய்க்க வேண்டும். தெங்கடியின் ஹிந்து பொருளாதாரத்தின் கீழ், சமூகம் என்பது, தனிமனிதர்களைக் கொண்ட உடல் என்பதாக வரையறுக்கப்பட்டது. இந்த வரையறை தன்னுடைய வேர்களை ரிக் வேதத்தில் உள்ள பாடலான புருஷோக்தாவில் கொண்டிருக்கிறது. அந்தப் பாடல் சாதி அமைப்பைப் புனிதப்படுத்துவதாக இருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\rss-chief-mohan-bhagwat-addresses-during-a-750439.jpg

மோடி அரசாங்கம், முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்ஸின் முத்திரையைக் கொண்டுள்ள இந்த புதிய சமூக-பொருளாதார அமைப்பையே பகிரங்கமாக முன்னிலைப்படுத்தியுள்ளது. 2020 ஏப்ரல் 26 அன்று ஆற்றிய தனது உரையில், இந்த புதிய வளர்ச்சிக்கான மாதிரியை முதன்முதலாக குறிப்பிட்டவர் மோகன் பகவத்தே ஆகும். ‘இந்த புதிய மாதிரி, நவீன அறிவியலின் மிகவும் பயனுள்ள அம்சங்களின் கலவையாக இருக்க வேண்டும். நன்கு நிறுவப்பட்ட நமது மரபுகளை அது நிறைவேற்ற வேண்டும்’ என்றார். ‘இந்த மாதிரியை அரசால் மட்டுமே செயல்படுத்த முடியாது. அதற்கு குடிமக்களின் ஆதரவு தேவை. அந்த ஆதரவு தற்சார்பு வடிவத்தைக் கொண்டிருக்கும்’ என்று பகவத் கூறினார். வழக்கமான பொருளாதார மாதிரி போன்று இந்த புதிய வளர்ச்சி மாதிரியானது இல்லாததால், குடிமக்கள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்தான் முதன்முதலில் கூறினார். சுயத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்வா ஆதரித் தந்த்ர என்பதைப் பின்பற்றும்படி பகவத் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஸ்வா ஆதரித் தந்த்ர என்ற அந்தக் கருத்தை, தெங்கடி முன்வைத்த சமுதாயம் குறித்த கருத்திலிருந்தும், ஒரு நபர் அதற்குள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலிருந்தும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு நபரும் தாங்கள் சேர்ந்த சமூகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சமூகக் குறியீடுகளைப் பின்பற்ற வேண்டிய, அனைத்து சமூகங்களின் ஆரோக்கியமான தொடர்ச்சிக்கு ​​அவசியமான ஸ்வதர்மம் என்ற கருத்தை தெங்கடி தனது புத்தகத்தில் விவரித்திருந்தார். நடைமுறையில் அவரது கருத்து சாதி அமைப்பை மீட்டெடுக்க முயற்சிப்பதாகவே இருக்கிறது.

‘தன்னுடைய இயல்பு குறித்த உண்மையான சட்டம் மற்றும் விதிமுறையாக இருக்கின்ற ஸ்வதர்மத்தை ஒவ்வொரு நபரும் உண்மையாகப் பின்பற்றுவதாலேயே பிரபஞ்சத்தில் மனித வாழ்வின் சரியான ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என்பதே பண்டைய இந்திய சிந்தனையாக உள்ளது. இத்தகைய தன்மை குழுவாக இருக்கின்ற, உயிர்ப்புள்ள கூட்டு வாழ்க்கையையும் அதேபோன்று இருக்கச் செய்கிறது. குடும்பம், குலம், சாதி, வர்க்கம், மதம், தொழில்துறை அல்லது பிற சமூகம், தேசம் என்று மக்கள் அனைவரும், தங்களுக்கான தர்மத்தை உருவாக்கிக் கொண்ட உயிரோட்டமான குழுவாழ்க்கை வாழ்பவர்களாகவே இருக்கின்றனர்; அவற்றைப் பாதுகாப்பது,  ஆரோக்கியமாகத் தொடர்வது மற்றும் அவற்றின் சிறந்த செயல்பாடுகள் அந்த தர்மத்தைப் பின்பற்றுவதன்  அடிப்படையிலேயே  இருக்கும்’ என்று தெங்கடி எழுதியுள்ளார்.

‘சமூக சுதந்திரம் மற்றும் சுயநிர்ணயம் குறித்த சிக்கலான அமைப்பாக இந்திய ஆட்சிமுறை இருக்கிறது; சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழுவும் தனக்கான சொந்த இயல்பான இருப்பை பெற்றுள்ளது. தனக்கான சரியான வாழ்வையும், வணிகத்தையும் செயல்படுத்துகிறது. அதன் தளம் மற்றும் வரம்புகளை மற்றவற்றிலிருந்து பிரித்து இயற்கையான எல்லையை நிர்ணயம் செய்து வைத்துக் கொள்கிறது’ என்று தெங்கடி மேலும் எழுதியுள்ளார். எனவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படுகின்ற தற்சார்பு என்பது தங்களுடைய பிறப்பால் உருவாக்கப்பட்ட எல்லைகளை சுயமாக செயல்படுத்திக் கொள்பவர்களைக் கொண்டுள்ள அடுக்கடுக்கான சமூகத்தையே குறிக்கிறது.

தெங்கடியின் இந்த தத்துவமும், ஆர்.எஸ்.எஸ்சின் விரிவாக்கமும் உலகின் மிக உயர்ந்த சக்தியாக தர்மம் இருக்கின்றது என்ற கருத்தில் நியாயம் இருப்பதாகவே காண்கின்றன. ’நடைமுறையில் தர்மம் என்பது மாறாத, நித்தியமான, உலகளாவிய சட்டங்கள் மற்றும் இந்த உலகளாவிய சட்டங்களின் வெளிச்சத்தில் எப்போதும் மாறிவருகின்ற சமூக-பொருளாதார அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று தர்மம் குறித்து தெங்கடி வரையறை செய்திருக்கிறார். ‘எடுத்துக்காட்டாக, ஆண்-பெண் உறவில் அறநெறி என்பது உலகளாவிய சட்டம். ஆனால் அறநெறியைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் உள்ள நிறுவன ஏற்பாடுகள் நிரந்தரமானனவையோ அல்லது உலகளாவியவையோ அல்ல’  என்று கூறுகின்ற அவரைப் பொறுத்தவரை, எந்தவொரு விஷயத்தையும் தீர்மானிப்பதற்கான இறுதி குறிப்பு புள்ளிதான் தர்மம் மட்டுமே.

தர்மத்தின் குறியீடாக, பண்டைய ஞானத்திலிருந்து பெறப்பட்ட உலகளாவிய சட்டமாக, பல்வேறு ஸ்மிருதிகளை தெங்கடி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், அந்த ஆதாரத்தை ‘பண்டைய இந்தியாவில் புரட்சி மற்றும் எதிர் புரட்சி’ என்ற தலைப்பிலான தனது ஆய்வறிக்கையில் பீம்ராவ் அம்பேத்கர் நிராகரித்தார். அவர் ஸ்மிருதிகளை பிராமணியத்தின் இலக்கியம் என்றே குறிப்பிட்டார். கிமு185க்குப் பிறகே ஸ்மிருதிகள் இயற்றப்பட்டன என்று எழுதிய அம்பேத்கர், ஸ்மிருதிகள் மிகவும் பழைய காலங்களில் எழுதப்பட்டவை என்ற ஹிந்து நம்பிக்கையானது, வெறுமனே நம்பிக்கைதானே தவிர வேறொன்றும் இல்லை என்றும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

அரசு விஷயங்களிலும் கூட, ஒரே வழிகாட்டும் கொள்கையாக தர்மத்தைப் பாதுகாத்து வைப்பது குறித்து ‘வேதரிஷிகள் 13 வெவ்வேறு வகையான அரசாங்கங்கள் குறித்த சோதனைகளை மேற்கொண்டனர்’ என்று தெங்கடி எழுதியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, முகம்மதிய படையெடுப்பிற்கு முன்னதாக, தெய்வீக சக்தியாகவும், தர்மத்தின் பாதுகாவலராகவும் அரசர் என்பவர் செயல்பட்ட இந்திய முடியாட்சியே நேர்மையான ஆட்சி வடிவமாகும். ‘மதம், நெறிமுறை, சமூகம், அரசியல், நீதித்துறை மற்றும் வழக்கமான சட்டம் சார்ந்த உயர்ந்த இறையாண்மையான தர்மம், அரசர் ஒருவரை விட மிகஇயல்பாக மக்களின் வாழ்வை நிர்வகிக்கும்’ என்கிறார். இவ்வாறாக, ஆர்.எஸ்.எஸ்சின் சமூக-பொருளாதார வரிசையில் அரசும், அரசாங்கங்களும் தர்மத்திற்கு அடிபணிந்தவையாகவே அமைந்து விடுகின்றன.

அனைத்து சமூகங்களின் ஒற்றுமைக்குத் தேவைப்படுகின்ற பண்டைய இந்திய சமூக-அரசியல் அமைப்பின் இயற்கையான வளர்ச்சி என்றே சாதி போன்ற சமூக நிறுவனங்கள் அவர்களால் வரையறுக்கப்படுவதால், அத்தகைய ஆட்சிமுறையையே லட்சியம் என்று தெங்கடி ஆதரிக்கிறார். ‘சாதி, மதசமூகம், கூட்டுக்குழு, கிராமம், நகரம், பிராந்தியம் அல்லது மாகாணத்தின் உயிர்ப்பான வழக்கங்களில் அல்லது அவற்றின் சுதந்திரமான செயல்பாட்டில் தலையிடுவது அல்லது ஆக்கிரமிப்பது, அவற்றின் உரிமைகளை ஒழித்துக் கட்டுவது போன்றவை அரசு அதிகாரத்தின் வேலையல்ல. சமூக தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கு அவை அவசியமானவை என்பதால் இயல்பானவை’ என்று அவர் எழுதினார்.

அரசு மற்றும் நிர்வாகம் குறித்த இந்த சிந்தனையை மோடியின் உரைகளும், அதனுடன் தொடர்புடைய காட்சி குறிப்புகளும் மிகநுட்பமாக முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 19 அன்று, சமண மத குருவான ஆச்சார்யா மகாபிரக்யா என்ற துறவியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி மோடி அஞ்சலி செலுத்தினார். அந்த வீடியோ உரை, மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும், அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படுகின்ற பல தொலைக்காட்சி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ‘என்னை அதிர்ஷ்டசாலி என்றே நான் கருதுகிறேன். குஜராத்தின் முதல்வராக நான் இருந்தபோது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது; ஆச்சார்யாஜி குஜராத்திற்கு வந்திருந்தார். அந்த நேரத்தில், அவரது அகிம்சை யாத்திரையில் பங்கேற்று, மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது’ என்று மோடி பேசினார். அவ்வாறு பேசியபோது, ​​அவருடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் தோன்றிய மற்றொரு திரையில், அவர் அந்த மத குருவின் கால்களைத் தொடும் படம் தோன்றியது. மற்றொரு சட்டகத்தில் மோடி குவித்த கைகளுடன் அந்த குருவின் முன் நின்று கொண்டிருந்தார்.

‘பின்னர் ஆச்சார்யாஜிக்கு முன்னால், அவருடைய கருத்து என்னுடையதாகவும் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவரது கருத்து என்னுடையது என்பதை ஆச்சார்யா மகாபிரக்யாவின் அன்பு உறுதி செய்தது. மேலும் ஆச்சார்யாஸ்ரீயிடம் என்னையே ஒப்படைத்தேன்’ என்று மோடி தொடர்ந்தார். மதகுரு ஒருவரிடம் பிரதமர் காட்டிய அடிமைப்பணிவு மற்றும் அடுத்தடுத்து வைக்கப்பட்ட அந்த பிம்பங்கள் ஆகியவை அரசின் தலைவரேகூட மதகுருவிற்கு கீழே இருப்பவர் என்பதையும், மோடி ஒருகாலத்தில் அந்த குருவின் ஆசீர்வாதங்களைப் பெற்றவர் என்பதையும் சித்தரிப்பதாகவே இருந்தன.

C:\Users\Chandraguru\Pictures\Atmanirbhar caravan\Acharya 100 04.jpg

தன்னுடைய அஞ்சலியை முடித்துக்கொண்ட மோடி, ‘நமது  ரிஷிகள், நமது புனிதர்கள் மற்றும் அவர்களுடைய ஆன்மீக ஆத்மாக்களால் அளிக்கப்பட்ட சமூகம் மற்றும் தேசத்திற்கான மாதிரியை நிலைநிறுத்துவதற்கான உறுதியை விரைவிலேயே நம் நாடு நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்’ என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

மூத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களே மோடி அரசாங்கத்திற்கான செயல்திட்டத்தை தெங்கடி முன்வைத்த கோட்பாடுகளே உருவாக்கியுள்ளன என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளனர். ‘மோடியின் ‘திறன் இந்தியா’ என்கிற, அதிகாரப்பூர்வமாக பிரதான் மந்திரி கௌசல் யோஜனா என்றழைக்கப்படுகிற தொழில்துறை தொடர்பான திறன் பயிற்சித் திட்டம், சிறு நிறுவனங்களுக்கு கடன்களை வழங்குகின்ற மத்திய அரசின் திட்டமான முத்ரா யோஜனா ஆகியவை தெங்கடியால் முன்வைக்கப்பட்ட தத்துவத்தைச் செயல்படுத்துபவையாகவே இருக்கின்றன’ என்று தென்வங்காளத்தின் பொறுப்பாளராக இருக்கின்ற பிப்லவ் ராய் என்னிடம் கூறினார். வாரணாசியைச் சேர்ந்த ராமாஷிஷ் சிங், ஒருபடி மேலே சென்று, ‘தத்தோபந்த்ஜியை முழுமையாகப் படித்தீர்கள் என்றால், அவருடைய கோட்பாடுகளுக்கும் மோடிஜியின் கொள்கைகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உங்களால் காண முடியும்’ என்கிறார்.

https://caravanmagazine.in/amp/politics/narendra-modi-atmanirbhar-bharat-rss-hindu-economics-rashtra?fbclid=IwAR0RgbrbuUa3L6wuwuVFUufBo7Nd0VeU9rNFedpwcTBsK50-teyS_Z8o0JU

நன்றி: தி கேரவான் இணையைதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Response

Top Reviews

Video Widget

gallery