Article

சுயசார்பு இந்தியா என்ற பெயரில் தனியாருக்கு நாட்டையே தாரை வார்க்கும் மோடி வித்தை -தாமஸ் பிராங்கோ

1.2kviews
Spread the love

 

உலகையே ஆட்டிப் படைக்கும் கோவிட்-19 எனும் கிருமியால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க சராசரி, நாட்டில் மொத்த வருமானத்தில் 10% செலவிட்டு வருகின்றன. வேலை இழந்தவர்களுக்கு சம்பளம், வேலையில்லாதவர்களுக்கு மானியம் உணவுப் பொருட்கள் விநியோகம், இலவசமாக முகக் கவசம், தொழில் செய்வோருக்கு நிதி உதவி மற்றும் சலுகைகள், விவசாயிகளுக்கு மானியம், புதிய வேலை வாய்ப்புக்கு பயிற்சிகள் என அரசுகள் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. இது தவிர வங்கிகள் மூலம் மிகக் குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படுகிறது. இது அரசு செலவில் அடங்காது.

நாம் தினமும புலம் பெயர் தொழிலாளர்கள் இறந்து கொண்டிருப்பதையும், நடந்து கொண்டிருப்பதையும், சிமெண்ட் கலவை லாரிக்குள் ஒளிந்து கொண்டு பயணிப்பதையும், சைக்கிளில் ஊர் திரும்புவதையும், விவசாயிகள் தற்கொலைகளையும், தொழில் முனைவோரின் துயரங்களையும், உணவுக்காக மக்கள் ஓடுவதையும் ஊடகங்கள் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

புலம்பெயர் தொழிலாளர்களை கேரள மாநிலம் போன்று விருந்தாளிகளாக நடத்தி, வீடு திருமப நினைப்பவர்களை மரியாதையுடன் அரசு செலவில் அனுப்பி வைப்பது; விவசாய கூலிகளுக்கும், மீன்பிடி தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.7500-வது கொடுத்து வாழ வைப்பது, கேரளம் போன்று அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உட்பட 18 பொருட்களை வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வழங்குவது, தொழிலதிபர்களை குறைந்தபட்ச சம்பளமாவது தொழிலாளர்களுக்கு வழங்கச் செய்வது, தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது வங்கிக் கடன்களுக்கான வட்டியைக் கொடுப்பது, புதிய கடன்கள் சலுகை வட்டியில் கொடுப்பது, வேளாண் பொருட்களை அரசு நிறுவனங்களே வாங்கி விற்பனை செய்வது மற்றும் பல. இது மக்கள் கேட்கும் பிச்சை அல்ல. மக்கள் கொடுத்துள்ள வரிப்பணத்தில் இருந்து அரசு செய்ய வேண்டிய கடமைகள்.

Mission Self-Reliant India’: COVID-19 crisis opportunity, says PM …

மாறாக பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது என்ன? மே-12ஆம் தியதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் உரையாற்றினார். நாட்டின் மொத்த வருமானத்தில் 10% ஆன ரூ.20 லட்சம் கோடிக்கு மக்களுக்கான உதவிகளை நிதி அமைச்சர் அறிவிப்பார் என்றார். நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ 5 நாட்களாக தொலைக்காட்சி தொடர் போன்று பேட்டியளித்தார். பேட்டியின்போது புலம் பெயர் தொழிலாளர் பிரச்சினைக்கு வெறும் 4 மாநிலங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசையும், ராகுல் காந்தியையும் சாடினார். அவர்களுக்கு சாப்பாடு கூட வழங்கச் சொல்லியிருக்கிறோம். என்றார். மாநில அரசுகள் (பெரும்பாலும் பா.ஜ.க ஆட்சி நடத்தும் மாநிலங்களே) கடன் வாங்க அனுமதித்திருக்கிறோம். ஆனால் 86% கடன் வசதியை மாநில அரசுகள் பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

முதலில் 80 கோடி பேருக்கு மாதம் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு குடும்பத்திற்கு மாதம் 1 கிலோ பருப்பு என அறிவித்தார். ஆனால் 13ஆம் தியதி பேட்டியின் போது இதுவரை 71000 டன் 6.5 கோடி ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டது என்றார். இது 26 கோடி பேருக்கு சென்றுள்ளது. ஆனால் நாட்டின் மக்கள் தொகை 132 கோடி. 80 கோடிப் பேர் ஏழைகள் என அரசே அறிவித்ததில் மீதி 54 கோடி பேர் என்ன நிலையில் இருக்கிறார்கள் என அரசுக்கு தெரியுமா?

ரூ.500 வீதம் 3 மாதம் 20 கோடி ஏழைப் பெண்களுக்கு ஜன்தன் கணக்கில் போடுவோம் என்றார். ஆனால் அதில் ஒரு பகுதியினருக்கே அது கிடைத்துள்ளது. அதை பெறுவதற்கும் ஊரடங்கின்போதே மாதம் ஒரு முறை வங்கிக் கிளைகளில் சென்று காத்திருக்க வேண்டியுள்ளது. 3 கோடி முதியோர் மற்றும் விதவையினருக்கு 1000 என்றதும் பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை. 8.7 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்திருந்த  ரூ.6000-ல் ரூ.2000 உடனே கொடுக்கப்படும் என்றார். இதுவும் பலருக்கு கிடைக்கவில்லை. இதில் குத்தகை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எந்த நிவாரணமும் இல்லை.

Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA …

இதுவரை  காங்கிரஸ் கட்சியின் பயனில்லா திட்டம் எனச் சொல்லிக் கொண்டிருந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் கீழ் ஒரு நாள் சம்பளத்தை ரூ.20 கூட்டியிருக்கிறோம் என்றார். ஆனால் சென்ற ஆண்டுக்கான 3 மாத தொகை இதுவரை மாநில அரசுகளுக்கு தரப்படவில்லை. சிறிதளவு வேலை இப்போது ஆரம்பித்துள்ளது. ஆனால் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் வசிக்கும் ஏராளம் ஏழைகளுக்கு இதில் இடமில்லை. இந்த திட்டத்தின் கீழ் ரூ.4,0000 கோடி பட்ஜெட்டில் சொல்லப்பட்ட ரூ.6,0000 கோடி (ஓராண்டுக்கு)யை விட அதிகமாக ஒதுக்கப்படுவதாக சொல்லியிருக்கிறார். வரவேற்போம். இது காண்டிராக்டர்களுக்கு சொல்லாமல், லஞ்ச ஊழலில்லாமல் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும். 100 நாள் வேலை என்பது குறைந்தது 250 நாட்களுக்கு இன்னும் குறைந்தது நாளைக்கு ரூ.300 ஆகவும் கொடுக்கப்பட வேண்டும்.

மிகப் பெரிய பிரச்சினையான கோவிட் நோய் பிரச்சினைக்கு இதுவரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.15000 கோடி மட்டுமே. இதுவும் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் கிடைப்பது சில நூறு கோடிகளே. இதை வைத்து முகக் கவசம் வாங்குவதா? மருந்து வாங்குவதா? கவச ஆடைகள் வாங்குவதா? நோய் கண்டறியப் பயன்படுத்துவதா? மாநிலங்கள் மத்திய அரசிடம் பிச்சை கேட்கும்  நிலையில் உள்ளன. மத்திய அரசோ கடன் வாங்கி செலவிடு என்கிறது. மக்களிடம் பெற்ற ஜி.எஸ்.டி வரியில் சட்டப்படி கொடுக்கப்பட வேண்டியதே முழுமையாக கொடுக்கப்படவில்லை. மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி  வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதமான 4% வட்டியில் எங்களுக்கு கடன் தரச் சொல்லுங்கள் என கேட்கிறார்கள். வங்கிகள் ரூ.8,50000 கோடி ரிசர்வ் வங்கியில் போட்டு வைத்துள்ளன. இதில் ஒரு பகுதியையாவது அதே வட்டியில் மாநில அரசுகளுக்கு கொடுப்பதில் ஏன் தயக்கம்?

சிறு குறு தொழில் நிறுவனங்கள் கேட்டதோ-ஊரடங்கு காலத்திற்கான வங்கி கடன் வட்டி தள்ளுபடி, தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் பாதி, எதிர்கால கடன்களுக்கு வட்டியில் சலுகை மற்றும் ஜிஎஸ்டி வரியில் தள்ளுபடி. ஆனால் அறிவிக்கப்பட்டிருப்பதோ கடன் திட்டங்களில் மட்டுமே. ரூ.2800 கோடி இ.பி.எப் தொகை மட்டும் அரசு கட்ட ஒத்துக் கொண்டிருக்கிறது. ரூ.3 லட்சம் கோடி கூடுதல் கடன், ரூ.20000 கோடி வராக் கடன் வைத்துள்ள நிறுவனங்களுக்கு கடன், ரூ.50000 கோடி புதிய கடன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 6.5 கோடி தொழில் நிறுவனங்களில் 45 லட்சம் நிறுவனங்களுக்கே கிடைக்குமாம். வசதியுள்ளவர்கள் பெற்றுவிடுவார்கள். மற்றவர்கள்? தெருவோர கடைகள் வைத்திருக்கும் 50 லட்சம் பேருக்கு அதிகபட்சமாக நபருக்கு ரூ.10000 கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.5000 கோடியை அரசே நேரடியாக 50 லட்சம் பேருக்கு வழங்கியிருக்க வேண்டும். வங்கிகளுக்கு அலைய வைக்காமல் இலவமாக கொடுத்திருக்க வேண்டும்.

Atmanirbhar Bharat Abhiyaan: 10 key highlights from Nirmala …

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் என்பது ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்த ரூ.3.5 லட்சம் கோடியில் ஒரு பகுதியே. ரூ.2097053 கோடி என நிதியமைச்சர் அறிவித்துள்ளதில் 8,70000 கோடி வங்கிகள் கொடுக்கும் கடன். உண்மையில் வங்கிகள் ஓராண்டில் இதைவிட அதிகமாகவே கடன் கொடுக்கின்றன. இதில் எந்த சலுகையும் இல்லை. அரசு கடன்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.4000 கோடி மட்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இவர்களது அறிவிப்பால் இந்த கடன்கள் அனைத்தும் வராக் கடன் ஆகும் சூழ்நிலை வந்துள்ளது. மேலும் வங்கிகளில் ஆட்குறைப்பால் மிகப் பெரும் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் ஊழியர், அதிகாரிகள் நியமிப்பதற்கு பதிலாக மத்திய அரசு வங்கிகளை, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு,(NBFCS) கடன் கொடுக்க வலியுறுத்துகிறது. அவர்களோ 10% -11% வட்டிக்கு கடன் பெற்று வாடிக்கையாளர்களிடம் 24% வட்டி வரை வாங்குகிறார்கள். முத்தூட், மணப்புரம், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் பைனான்ஸ், பேடிஎம் போன்ற பல நிறுவனங்கள் மக்களை கொள்ளையடிக்க இது வழி வகுக்கும். கடன் என்பது சலுகை அல்ல. அது ஒரு சுமை.

வளரும் நாடுகளில் ஒன்றான தாய்லாந்து மார்ச் மாதமே பல சலுகைகளை அறிவித்துள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 3000 மட்டுமே (கோவிட் நோயாளிகள்)

  • தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 (5000 baht)
  • வேலையில்லாதவர்களுக்கு 50% மாதச் சம்பளம்
  • புதிய தொழில்களுக்கான மறுபயிற்சி
  • மருத்துவ காப்பீட்டில் சலுகை மற்றும்

கடன் திட்டங்கள்

கூட்டுறவுகள் மூலம் 0.1% வட்டியில் 2 ½ வருட கடன்

வங்கிகள் மூலம் 0.35% வட்டியில் சிறப்பு கடன்

வங்கிகள் மூலம் 2%  வட்டியில் எளிமையான கடன்

சிறு, குறு நிறுவனங்களுக்கு 3% வட்டியில் கடன் (அங்குள்ள சராசரி வட்டி விகிதம் 15%)

கடன் தவணை தள்ளி வைப்பு, வட்டி குறைப்பு, கடன் மறு சுழற்சி

நாட்டின் மொத்த வருமானத்தில் 10% நேரடி சலுகைகள்.என அறிவிக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டிலோ பல மிகப் பெரிய பொய்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று மார்ச்-24-க்கு முன் நம்மிடம் பாதுகாப்பு கவசங்கள் இல்லை. என்பது உண்மையில் அதற்கு முன்பே நாம் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தோம்.

நடந்து சென்ற புலம்பெயர் ...
நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி

இரண்டு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்துள்ளது. உண்மை நம் எல்லோருக்கும் தெரியும். மூன்று ரூ.2097053 கோடி ஒதுக்கியிருக்கிறோம். இதில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு தங்கள் சேமிப்பு பயன்படுத்த அனுமதித்துள்ளது, ரூ.801603 கோடி. இதை அரசு தரவில்லை. ரூ.8,70000 கோடிவங்கிக் கடன். இது இலவசம் அல்ல. பெரும் சுமை.

அரசு செலவிடப் போவதாக சொல்லியிருப்பது ரூ.425450 கோடி. இதில் 50000 கோடி வரிச் சலுகை-ஏழைகளுக்கா? வீட்டுக் கடன் வட்டிக்கான வருமான வரி சலுகை 70000 கோடி. இதுவும் செலவு அல்ல. வருமான இழப்பு ரூ.7800 கோடி. இபிஎப் வட்டி விகித குறைப்பு ரூ.6750 கோடி. எனவே அரசு செலவிடப் போவதாக அறிவித்திருப்பதே ரூ.290900 கோடி மட்டுமே. இது நாட்டின் மொத்த வருமானத்தில் 1% மட்டுமே.

நிதி அமைச்சர் கோவிட் நோய் நமக்கு ஒரு பெரும் வாய்ப்பை தந்திருக்கிறது எனச் சொல்லி செய்திருக்கும் அறிவிப்புகள் பல.

  1. எல்லா துறைகளிலும் தனியார் நுழைய அனுமதி-இராணுவம், விண்வெளி உட்பட.
  2. மாநில அரசுகள் தங்களுடைய மாநில மொத்த வருமானத்தில் 5% வரை கடன் வாங்கலாம். (இப்போது 3%) 3.5% வரை நிபந்தனைகள் இல்லை. அதற்கு மேல் அதிகரிக்க

அ) ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

ஆ) மாவட்டங்கள் தோறும் எளிதாக தொழில் நடவடிக்கை செய்ய வேண்டும். அதாவது தொழிலாளர் நல சட்டங்கள் கூடாது, இலவசமாக நிலம் போன்ற சலுகைகள் முதலாளிகளுக்கு கொடுக்கலாம்.

  1. மின் வினியோகத்தை தனியார் மயமாக்கி, அவர்களுக்கு இலாபமும் கிடைக்க வழி செய்வது.
  2. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வருமானத்தை பெருக்குவது. அது எப்படி? அனைத்து வரிகளையும் கூட்டுவது.

இ)தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போக செய்வது. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு என பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்கள் அறிவித்து வருகின்றன.

  1. ஓராண்டுக்கு கடன் தீர்ப்பாயம் எந்த புதிய வழக்குகளையும் எடுத்துக் கொள்ளாது. வங்கிகள் குறு, சிறு தொழில்களுக்கு கொடுத்துள்ள கடனை வராக் கடனாக அறிவிக்க கூடாது.
Atmanirbhar Bharat gives booster shots for MSMEs – The Hindu …

வங்கிகளில் வராக் கடன் சுமார் 10 லட்சம் கோடி உள்ளது. ஏற்கனவே சிறு, குறு தொழில்களுக்கு கொடுத்த கடன்கள் வராக் கடன்களாக மாறிய பின்னரும் சென்ற ஆண்டு வராக் கடனாக அறிவிக்கப்படவில்லை. இப்போது ரூ. 1 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாவிட்டாலும் ஓராண்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. தீர்ப்பாயத்துக்கும் செல்ல முடியாது. பத்து லட்சம் கோடி அம்பேல்? கோவிட் காரணமாக ஊரடங்கு. எனவே இப்போது வங்கிகளில் உள்ள ரூ.103 லட்சம் கோடியில் எதையும் வராக் கடனாக அறிவிக்க முடியாது. ஓராண்டுக்குப் பின் என்னவாகும். வங்கிகள் திவாலாகும் சூழல் உருவாகும்.

மக்களின் வரிப்பணத்தில் (நாம் எல்லோரும்-ஏழைகள் உட்பட செலுத்தும் ஜிஎஸ்டி வரி மட்டுமே மாதம் சுமார் 1 லட்சம் கோடி) நடக்கும் அரசு, அனைத்தையும் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்க இந்த பேரிடரை பயன்படுத்துகிறது. எதிர்குரல் எழுப்ப தடை விதித்துள்ளது. ஏற்கனவே 2017இல் நாட்டின் மொத்த சொத்து மதிப்பு கூட்டலில் 73% பெரு முதலாளிகள் 1% பேருக்கே சென்றது. 10% பேரிடம் நாட்டின் மொத்த சொத்தில் 77% குவிந்துள்ளது. 119 பெருமுதலாளிகளின் சொத்து நாட்டின் ஒரு வருட பட்ஜெட்டை விட அதிகம். கோவிட்-19 இவர்களை மேலும் பணக்காரர்களாக்கும். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடைய மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

மார்ச்-24ஆம் தியதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது 600 பேர் மட்டுமே கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுகிறது. ஊரடங்கு மட்டும் தீர்வல்ல. அதனுடன் மக்களின் அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். அது செய்யப்பட்டிருந்தால் அவர்கள் இப்போது பிச்சைக்கார்களைப் போல் நடந்து கொண்டிருக்க மாட்டார்கள். விழித்தெழும் தருணம் இது.

இடிப்பாரே இலா ஏமரா மன்னன்

கெடுப்பாரிலனும்- கெடும்

-திருக்குறள்.

NABARD, SIDBI & IFCI need to be given more power to revive rural ...

(கட்டுரையாளர் முன்னாள் பொதுச் செயலாளர் ,அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மற்றும் ஆலோசகர் ,அகில இந்திய பொதுத்துறை அதிகாரிகள் கூட்டமைப்பு)

Leave a Response