Web Series

மசக்கை-5 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

Spread the love

 

ஹைபெரெமிசிஸ் கிராவிடேரம்

ஒரு வீட்டிற்கு மருமகளாக இருப்பதென்பது அத்தனை சுலபமான காரியமா? கணவருக்குத் தோசை பிடிக்குமென்றால் மாமனாருக்கு இட்லி வேண்டும் என்பார். தனக்கென ஆசையாய் மல்லிச் சட்னி அரைத்து வைத்துக் கொள்ளலாம் என்றால் மாமியாருக்குக் காரமான தக்காளி சட்னிதான் வேண்டுமென்று முகத்தைத் திருப்பிக் கொள்வாள். இத்தனை இடிபாடுகளுக்கும் மத்தியில்தான் மருமகள் தனக்குப் பிடிக்காத சாப்பாட்டுக் குவியலுக்குள்ளிருந்து ஏதேனும் ஒன்றைத் தேடிப்பிடித்து வயிறாரச் சாப்பிட்டாக வேண்டும். இந்தக் குடும்ப சாப்பாட்டுச் சண்டைக்கு நடுவே அவளோ கருத்தரித்துவிட்டால் அப்புறமாக மசக்கையின் குமட்டலால் மருமகள் படுகிற அவஸ்தையைச் சொல்லி முடியாது.

ஒரு சிலருக்கு குமட்டலும் வாந்தியும் சாதாரணமாகவே வரக்கூடிய சங்கதிதான். உணவு பிடிக்காமல் போனால், உணவு கெட்டுப் போயிருந்தால், மோசமான வாசனை வந்தால், மலையேற்றம் என்றால், பேருந்தில் பயணம் சென்றால், வயிறு சரியில்லையென்றால் என்று குமட்டலும் வாந்தியும் வருவதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன.

கருத்தரிப்பவர்களில் 80 சதவீதமானவர்கள் அவர்களின் கர்ப்பகாலத்தில் குமட்டல் மற்றும் வாந்தியால் சர்வ சாதாரணமாகவே அவதிப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் கிட்டத்தட்ட அனைவருமே வாந்தியால் அவதிப்படுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு குமட்டலுக்கும் வாந்திக்குமாக இன்றைய கர்ப்பிணிகள் முழுவதுமாக பழகிப் போயிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கர்ப்பவதியும், வாந்தியும் இணைபிரியாத் தோழிகளைப் போல பின்னிப் பிணைந்தே வாழத் துவங்கிவிட்டார்கள்.

June 2018 - Hyperemesis Gravidarum - TRAUMArama | Urgent Care RAP

இத்தகைய கர்ப்பிணிகளில் ஆயிரம் பேரில் ஒரு நபருக்கும் (<1/1000) குறைவான எண்ணிக்கையிலே சிலர் கட்டுக்கடங்காத குமட்டல் மற்றும் வாந்தியினால் அவதிப்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரியவருகிறது. “அது என்ன கட்டுக்கடங்காத வாந்தி? எனக்கும் அப்படித்தானே இருக்கு!” என்று ஒருசிலரது மனதிற்குள் சந்தேகம் வரக்கூடும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மசக்கை ஏற்படுவது எல்லாம் நமக்குத் தெரிந்த விஷயமே! அந்த மசக்கைக் காலத்தில் குமட்டலும் வாந்தியும் மிகச் சாதாரணமாகவே இருக்கும். அதாவது குமட்டல் வந்தால் பிஸ்கட், ப்ரெட் போன்று எதையாவது வாயில் கடித்துக் கொண்டோ, லெமன் ஜுஸ் போன்று ஏதாவது குடித்துக்கொண்டோ சமாளித்துவிடும் அளவிற்குத்தான் இருக்கும். அப்படியே வீட்டுவேலைகள், அலுவலக வேலைகளென சுழன்றடித்து அனைத்துமே முடித்துவிடுவார்கள். இந்த சாதாரண வாந்தியால் இலேசான அசதிகள் இருந்தாலும்கூட அதனால் அவர்களின் உடல் நலம் பெரிதாக பாதிப்படைவதில்லை.

ஆனால் ஒருசிலருக்கு வரும் குமட்டலும் வாந்தியும் அவர்களை மருத்துவமனைக்கே அழைத்துச் சென்று உள்நோயாளியாகச் சேர்க்கும் அளவிற்கு வீரியமுடையதாக இருக்கும். எதற்குமே கட்டுப்படாமல் தொடர்ந்து தொல்லைகள் செய்து அவர்களை பாடாய்ப்படுத்தும். இத்தகைய தீவிரமான குமட்டல் மற்றும் வாந்தியைத்தான் ஆங்கிலத்தில் “ஹைபெரெமிசிஸ் கிராவிடேரம்” (Hyperemesis Gravidarum) என்று குறிப்பிடுகிறார்கள்.

Hyperemesis Gravidarum - Nausea During Pregnancy! - By Dr. Bhavna ...

ஹைபெரெமிசிஸ் எதனால் வருகின்றன?

முன்பு காலத்தில்தான் “வரதட்சணைச் சீர்வரிசையெல்லாம் நம்மளை மாதிரியான ஏழைங்களால சமாளிக்க முடியாதப்பா! சின்ன வயசுலயே சொந்தத்துல ஒன்னுக்கொன்னா கட்டிக் கொடுத்துப்புட்டா செலவு குறைவுதான்” என்று சிறுவயதிலே திருமணம் முடிக்கும் வழக்கம் இருந்தது. இன்றைய சூழலிலும்கூட அத்தகைய குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே மறைமுகமாக தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன. இப்படி சிறுவயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கே இந்த ஹைபெரெமிசிஸ் பிரச்சனைகள் அதிகமாக வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்ளப் போகும் பெண்களைவிட, இதுதான் எனக்குத் தலைப்பிரசவம்! என்று முதல் பிரசவத்தைக் கொண்டாடுகிற கர்ப்பவதிகளுக்குத் தான் இத்தகைய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. இதனால் முதல் பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே தவிர அதற்காக பயப்படத் தேவையில்லை.

“ஒரே பிரசவத்துலயே என் மருமவ ரெண்டு புள்ளையப் பெத்துக் கையில கொடுத்துப்புட்டா! ” என்று இரட்டைப் பிரசவத்தைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள் அல்லவா! அப்படி இரட்டைக் குழந்தையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் ஹைபெரெமிசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

What Causes Hyperemesis Gravidarum? Symptoms, Treatment ...

பல குடும்பங்களில் இந்த ஹைபெரெமிசிஸ் பாதிப்புகள் ஒரு குடும்பப் பழக்கமாகவே தொற்றிக் கொண்டு வருகிறது. அம்மாவுக்கும், அக்காவுக்கும், தங்கைக்குமாக இப்படி குடும்பமே கட்டுக்கடங்காத வாந்தியால் அவதிப்பட்டே பிள்ளையைப் பெற்றிருப்பார்கள். இப்படியாக குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தால் கருத்தரித்தவுடனே மருத்துவரை முன்பே அணுகி தக்க ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது.

“சரி, மொத பிரசவத்துல தானே வரும். எனக்குதான் இது ரெண்டாவது பிரசவமாச்சே! இப்பவும் எனக்கு இந்தப் பிரச்சனை வருமா?” என்று சந்தேகம் வரலாம். முதல் பிரசவத்தில் ஹைபெரெமிசிஸ் பாதிப்பால் அவதிப்பட்டிருந்தால் அவர்கள் இரண்டாவது பிரசவத்திலும் அதே குமட்டல் வாந்தியால் அவதிப்பட அதிக வாய்ப்புள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே கர்ப்பவதிகள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

ஹைபெரெமிஸிஸ் என்ன செய்யக்கூடும்?

பொதுவாக கருத்தரித்த பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களிலேதான் மசக்கையின் பாதிப்பு அதிகமாக வருகிறது. நான்காவது அல்லது ஐந்தாவது வாரத்தில் ஆரம்பித்து ஒன்பதாவது வாரத்தில்தான் அதன் உச்சத்தைத் தொடுகிறது. அப்போது வெத்து வாந்தியாக இருக்கும். எதற்கெடுத்தாலும் குமட்டிக்கொண்டு வரும். எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வரும். சிலருக்கு சாப்பாட்டைப் பற்றி நினைத்தாலே ‘குவாக்’ ‘குவாக்’ கென்று வாந்தி எடுத்துக்கொண்டு இருப்பார்கள். சாதாரண வாந்தியாக இருக்கும்பட்சத்தில் அது படிப்படியாக குறைந்து பதினாறாவது வாரத்தில் நின்றுவிடுகிறது. ஆனால் ஹைபெரெமிசிஸ் பாதிப்பிற்குள்ளான கர்ப்பிணிகளுக்கோ இது மாதக்கணக்கில் நீண்டு கொண்டே செல்கிறது.

Hyperemesis Gravidarum: Definition, Causes, Symptoms, Treatment ...

ஹைபெரெமிசிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மெதுவாக ஆரம்பிக்கும் இந்த தொந்தரவானது சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று குமட்டிக் கொண்டு வாந்தி எடுக்க வைத்துவிடும். நம்மூர் பஸ் எப்போது வரும்? எப்போது போகும்? என்று யாருக்குமே தெரியாது அல்லவா. அதுபோலவே “இந்த பாழாப்போன வாந்தி எப்ப வரும், போகும்னே தெரியலையே!” என்று எந்நேரமும் உங்களை அலார்ட்டாகவே வைத்திருக்கும். ஹைபெரெமெசிஸ் பாதிப்புகள் உணவுகளால் ஏற்படுவதில்லை என்றாலும்கூட பிடிக்காத உணவுகளைப் பற்றிக் கேட்டாலோ, பார்த்தாலோ அல்லது நுகர்ந்தாலோ அதுவே ஹைபெரெமெசிஸ் பாதிப்பைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். ஒரு சிலருக்கு “இப்ப வாந்தி வந்துருமோ?” என்று யோசித்து பயந்து கொண்டிருக்கும்போதே குமட்டிக்கொண்டு கொள்ளைப் பக்கமாக ஓட வைத்துவிடும்.

தீராத குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்படும் கர்ப்பிணிகளால் தொடர்ந்து சாப்பிட முடிவதில்லை. அதனால் எப்போதுமே பசித்தபடியே இருக்கிறார்கள். ‘சாப்பிட்டால் வாந்தி வருமே! சாப்பிடாமல் இருந்தா பசிக்குதே!’ என்ற நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தலைமுடியை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழலில் ஆசுவாசமாக பேசி மனைவியைச் சமாதானப்படுத்த கணவர்களும் அருகிலே இல்லையென்றால் அவர்களின் நிலையோ இன்னும் பரிதாபம்தான். ஏனென்றால் இத்தகைய சூழலில் பிடித்ததை ஆசையாய் வாங்கித்தர கேட்க முடிகிற ஒரே உறவு கணவராகத்தானே இருக்க முடியும்.

பொழுதிற்கும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் கர்ப்பிணிக்கு உடலில் உள்ள நீர்ச்சத்தும், சுறுசுறுப்பாக இயங்கத் தேவையான ஊட்டச்சத்துக்களும் வெளியேறிவிடுகின்றன. ஏற்கனவே சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பவதிக்கு உடலில் சேமித்து வைத்திருந்த கொஞ்ச நெஞ்ச சத்துகளும் வாந்தியால் வெளியேறுவது அவளுக்குக் கூடுதல் பாதிப்பைத் தருகிறது. கர்ப்பவதிக்கு உடம்பெல்லாம் ஒரே அசதியாக இருக்கிறது; தலை வலிக்கிறது; மயக்கம் வருவதைப் போல் இருக்கிறது.

I Lost So Much Weight During Pregnancy Due to Hyperemesis ...

பத்தாவது மாதத்தில் பத்திலிருந்து பன்னிரெண்டு கிலோ வரை கூடவேண்டிய கர்ப்பிணியின் எடையோ இறங்குமுகமாக குறைந்து கொண்டே செல்கிறது. உடம்பில் நீர்ச்சத்து வற்றிப்போவதால் தோலிலும் மினுமினுப்பு குறைந்து சுருங்கத் துவங்குகிறது. நாக்கு மற்றும் உதடுகளும் வறண்டபடி தாகத்திலேயே தவித்தபடி இருக்கிறது. சாப்பிடவும் முடியாமல், தாகத்திற்குத் தண்ணியும் குடிக்க முடியாமல் சோர்ந்துபோய் கண்ணுப்பட்டை சுருங்கி கண்ணே உள்வாங்கியது போலக் காட்சியளிக்கிறது. இவையெல்லாம் தொடர்ச்சியாக வாந்தியெடுத்தும் சிகிச்சையெடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்குத்தான் வருகிறதே தவிர மற்றபடி எல்லோருக்குமே வருவது கிடையாது.

கர்ப்பகாலத்தின் கடைசி மாதங்களில் கட்டுப்படுத்த முடியாத வாந்தியால் அவதிப்படுபவர்களில் பலர் கர்ப்பகால இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் கட்டுக்கடங்காத குமட்டலும் வாந்தியுமாக தொடர்ந்து இருக்கும்போது கர்ப்பிணிகள் அடிக்கடி ரத்த அழுத்தத்தையும், சிறுநீரில் புரதம் வெளியேறுகிறதா? என்பதையும் தொடர்ச்சியாக பரிசோதித்துக்கொள்ள வேண்டியதுள்ளது. ஏனென்றால் இத்தகைய பாதிப்புகள்தான் தாயையும் பிள்ளையையும் அதிகமான ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

எந்நேரமும் குமட்டலும் வாந்தியுமாக அன்றாட வேலைகளைச் செய்யவிடாமல் சிரமப்படுத்துவதோடு கூடவே மேலே சொன்ன அறிகுறிகளும் கர்ப்பவதிக்குத் தென்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிசிக்க வேண்டும். அதன்மூலம் உங்களுக்கு இருப்பது சாதாரண வாந்தியா அல்லது ஹைபெரெமிசிஸ் தொந்தரவால் ஏற்படுகிற கட்டுங்கடங்காத வாந்தியா என்பதைப் பரிசோதித்து சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும்.

When Pregnancy Hurts, Part 2: Hyperemesis Gravidarum

இத்தகைய பாதிப்புகளையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கவனிக்காமல் இருந்துவிட்டால் அதுவே கடுமையாகி இரத்தஅழுத்தம் குறைந்து உடலின் மற்ற உறுப்புகளினுடைய செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுதல் அதனால் மயக்கமடைதல் என்று உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் மோசமான நிலைமைக்கும் கொண்டுபோய் விட்டுவிடும். ஒரு சிலரோ குடலே வெளியில் வந்து விழுவதுபோல தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டு இருப்பார்கள். இதனால் இரைப்பை மற்றும் உணவுக்குழாயில் புண் ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பவதிகளே! ஆதலால்தான் நீங்கள் மசக்கையின் காரணமாக உடல் நலக்குறைவாக உணர்ந்தாலே மருத்துவரிடம் சென்று ஆலோசித்துக் கொள்வது நல்லது. மருத்துவரிடம் செல்வது வைத்தியத்திற்காக என்றில்லாமல் நம்முடைய உடலின் ஆரோக்கியம் பேணுவதற்கான ஆலோசனைகளைப் பெறவும் செல்லலாம் என்பதையும் நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மருத்துவர் பரிசோதித்த பின்பு மசக்கையின் தீவிரத்தன்மையை உணர்ந்து உங்களை உள்நோயாளியாக சேர்ந்து குளுக்கோஸ் போட்டுக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினால் தயங்காமல் போட்டுக் கொள்ளுங்கள். ஹெபெரெமிசிஸ் என்பது எளிதில் சரிசெய்யக்கூடிய விசயம்தான். ஆனால் அதை சரிசெய்ய முடியும் என்பதை நாம் முழுவதும் புரிந்து கொள்வதற்காகவே இத்தகைய விழிப்புணர்வு தேவையாயிருக்கிறது.

 

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.co.in/masakkai-medical-series-by-dr-idankar-pavalan/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.co.in/masakkai-medical-series-for-pregnant-women-2/

தொடர் 3ஐ வாசிக்க 

https://bookday.co.in/masakkai-medical-series-for-pregnant-women-3/

Leave a Response