Web Series

மசக்கை: கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர் – உணவும் பசியும் | டாக்டர் இடங்கர் பாவலன்

Spread the love

தன் கணவன் சாப்பிட்டதும் மிஞ்சியதை மட்டுமே சாப்பிட்டுப் பழகிய சமூகத்தின் பின் வழிவந்த பெண்கள் இன்று மட்டும் மாறிவிடவா போகிறார்கள்?

தனக்குள்ளே உயிருக்கு உயிரான அவளது குழந்தை வளர்வதை உணர்ந்து கணவன் வருகைக்காக காத்திராமல் கர்ப்பவதி நேரத்திற்கு சாப்பிட்டுப் பழகிக் கொள்ள வேண்டும். தான் சாப்பிடுவது கணவன் சாப்பிட்ட பின்பு தான், குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்பு தான் என்றில்லாமல் தன்னையும் தன் வயிற்றில் வளருகிற பிள்ளையையும் நினைத்துக் கொண்டு தனது சில பழக்கவழக்கங்களை கர்ப்ப காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பிறந்தது முதல் கடைசிக் காலம் வரை தாய் தந்தைக்காக, சகோதர சகோதரிக்காக, கணவனுக்காக, தனது அன்புக் குழந்தைகளுக்காக என்று பிறருக்காகவே உணவினைத் தியாகம் செய்யும் பெண்ணானவள் கர்ப்பகாலத்தில் மட்டுமே ஆசைப்பட்டதை தனக்காக விரும்பி உண்கிறாள். அதுவும்கூட அவளுக்காக என்றில்லாமல் வயிற்றில் வளரும் அவளது பிள்ளைக்காகத்தானே! பின்பு எஞ்சிய காலம் முழுவதும் மிஞ்சிய உணவை உண்டே பசியைப் போக்கிக் கொள்கிறாள்.

அப்படிப்பட்ட கர்ப்பகாலத்தில் விருப்பப்பட்ட உணவினை ஆசையோடும், அக்கறையோடும் கணவரும் அவரது குடும்பத்தாரும் வாங்கிக் கொடுத்தாலும் பெண்ணிற்கே உரித்தான கர்ப்பகால ஹார்மோன்கள் சும்மா விடுமா என்ன?

சில கர்ப்பிணிகளுக்கு அதிகமாக பசி எடுக்கும். சிலருக்கு சுத்தமாக பசியே இருக்காது. நல்ல பசியே இருந்தாலும் முன்பு பிடித்தது இப்போது பிடிக்காமல் போயிருக்கும். வித்தியாசமாக யாருமே சாப்பிடாத கரி, மண், சாம்பல், விபூதி, பல்பொடி என கேடு விளைவிக்கும் பொருட்களை சுவைத்துவிடவோ மனம் துடிக்கும்.

ஆகவே எப்படிப்பட்டாவது சத்தான ஆகாரம் சாப்பிட்டே ஆகவேண்டிய நிர்பந்தம் கர்ப்பவதிக்கு வந்துவிடுகிறது. கருவாக இருக்கையிலே அவளது பிள்ளையை நன்றாக வளர்க்க வேண்டுமென்கிற பொறுப்பும், கடமையும் இப்போது கர்ப்பிணித் தாய்க்கு வந்துவிடுகிறது அல்லவா!

என்னதான் கணவனும், புகுந்த வீட்டாரும் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுத்து சாப்பிடச் சொன்னாலும் அவளுக்கு முழுவதுமாக மனசு ஒப்பவில்லை. திருமணமாகி வந்து புகுந்தவீட்டில் யாரிடமும் பேசிப் பழகுவதற்கு முன்பாகவே கருத்தரித்துவிட்டதால் இப்போது வேண்டியதைக் கேட்பதற்கும், சாப்பிடுவதற்கும் கூச்சப்படுகிறாள். தனக்கு கிடைத்ததையும்கூட உடனிருப்பவர்களிடம் பங்கிட்டுக் கொள்கிறாள். பிறந்த வீட்டின் ஞாபகமும், அம்மாவின் பாசமும் கண்முன்னே வந்து வந்து போகிறது.

புகுந்த வீட்டில் இருந்தால் நன்றாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட மாட்டாள்; அதனால் ஒரு நல்ல நாள் பார்த்து வளைகாப்பு நடத்தி பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று பெண்ணின் தாயவளும் ஆசைப்படுகிறாள். அதனால் ஏழாவது மாதத்தில் அனைத்துச் சொந்தங்களும் ஒன்றுகூடி வளைகாப்பு விழாவினை மாப்பிள்ளையின் வீட்டில் வைத்து கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

நமது பாரம்பரிய கலாச்சாரமான வளைகாப்பு விழாவில் கர்ப்பவதிக்கு மஞ்சள் பூசி, தாலியில் சிவப்பு குங்குமமிட்டு, மாலை அணிவித்து, திருமணச் சேலையில் புதுப்பெண்ணாக அலங்கரித்து மகிழ்ச்சி பொங்க அழகான கண்ணாடி வளையல்களையும் அணிவிக்கிறார்கள். வளைகாப்பு விழாவில் கர்ப்பவதி தன்னையே மெய்மறந்து பூரிப்பில் திளைத்துக் கொண்டிருப்பாள். இந்த மகிழ்ச்சிக்காகத்தானே இந்த மாதிரியான விழாக்களையெல்லாம் நடத்துகிறார்கள்.

அதன் கூடவே ஒற்றைப்படை எண்ணிக்கையில் சத்தான, வெவ்வேறான சுவையுடன்கூடிய உணவினை கொடுத்து சுவைக்கச் செய்வார்கள். அது பல வகையான உணவிற்கு நாவைப் பழக்குவதற்கும், எந்த வகையான உணவின் ருசியானது கர்ப்பவதிக்கு பிடிக்கிறது என்பதை வைத்து அவளது உடலிற்கு ஏற்ற உணவை கண்டுகொள்வதற்கும் உதவியாயிருக்கும்.

அவள் வளைகாப்பு முடிந்து கடைசி மூன்று மாதங்களில் தாய்வீடு செல்கிறாள். தாயாகப்போகிற தன் மகளுக்கு அவளது அம்மாவும் அறுசுவை உணவுடன் தாய்ப்பாசத்தையும் சேர்த்து ஊட்டி வளர்க்கிறாள். அவளோ கொழுகொழுவென்று அழகான குழந்தையைப் பெற்றெடுத்து தனது தாயை பாட்டி ஆக்கிவிட்டு மீண்டும் புகுந்தவீடு வந்து சேர்கிறாள்.

உங்களுக்குத் தெரியுமா, முதல் எட்டுவார முடிவில் கருக்குழந்தையின் எடை வெறும் ஒரு கிராம் மட்டுமே! அதாவது ஒரு பால்பாய்ண்ட் பேனா மூடியின் எடையளவு. கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையினை சிசுவானது தனது ஏழாவது மாதத்தில் தான் அடைகிறது. அதன் பின்பாக கடைசி மூன்று மாதங்களில், ஒரு மாதத்திற்கு எழணூறு கிராம் முதல் தொல்லாயிரம் கிராம் வீதம் எடை அதிகரித்து சராசரியாக இரண்டரையிலிருந்து மூணரை கிலோ எடையுடன் குழந்தைகள் நிறைமாதத்தில் பிறக்கிறார்கள். இந்த கடைசி மூன்று மாதங்களில் எடை அதிகரிப்பும், ஏழாவது மாத வளைகாப்பின் பின்பு கர்ப்பவதிகள் பிறந்தவீடு புகுவதற்குமான ஒற்றுமையும் இப்போது புரிகின்றதா? ஆதலால் பெரியோர்களே! தயைகூர்ந்து வளைகாப்பு விழாவினை முடிந்தவரை தள்ளிப்போடாதீர்கள்.

இறைவனைக் காண தவமிருக்கும் மாமுனிவரைப் போல உங்கள் பிள்ளையைக் காண இன்றிலிருந்தே பிரசவ தவத்தை துவங்குங்கள். பிரசவித்த உடனே உங்கள் கண்முன்னே உதிக்கப் போகின்ற பிள்ளையின் ஆனந்தப் புன்னகையில் மூழ்கி பரவசமாகிவிட இப்போதிலிருந்தே தயாராக இருங்கள். அத்தோடு உங்களது உடல் நலத்தினையும் சேர்த்து முழுவதுமாக கவனித்துக் கொள்ளுங்கள்.

இந்த பத்து மாத கர்ப்பகாலமும் வேறு யாருக்காகவும் இல்லாமல் உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும் மட்டுமே சுயநலமாக வாழுங்கள். அத்தகைய சுயநலத்தால்தானே உங்களது குழந்தையை எந்தவித கவலையுமின்றி கர்ப்பப்பைக்குள் பரிபூரணமாக வளர்க்க முடியும். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா! அத்தகைய குழந்தையாக இறைவனைக் காண மகிழ்ச்சியோடு உங்களது கர்ப்பகாலத்தை அனுபவிக்க இன்றே, இப்பொழுதே தயாராகுங்கள்.

Top Reviews

Video Widget

gallery