இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்பொதுவுடமைவாழ்க்கை வரலாறு

இளையோருக்கு மார்க்ஸ் கதை!

புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு வந்து மீதி… புத்தகம் முடிந்துவிட்டது. அவ்வளவு அருமையான, எளிமையான, வசீகரிக்கும் நடை. நூலாசிரியர் ஆதி.வள்ளியப்பன் அவ்வளவு எளிமையாகத் தந்துள்ளார். இவரின் நாராய் நாராய், மனிதர்க்குத் தோழனடி, சிட்டு உள்ளிட்ட பல நூல்கள் எனது பள்ளியில் உள்ள மாணவர் நூலகத்தில் மாணவர்களால் மிகவும் விரும்பப் படும் நூல்கள்.
 
digital illustration of Marx
பலருக்கு வாய்க்காத எளிமையான நடை ஆதி.வள்ளியப்பன் அவர்களுக்கு இயல்பாக கைகூடி வந்துள்ளது. இது இவரின் பல நூல்கள் வழியே நானறிந்த உண்மை. இந்நூல் வழியேயும் மார்க்ஸ் என்னும் மிகப்பெரும் ஆளுமையை மிக எளிதாக, இயல்பாக வாசகனுக்குக் கடத்துகிறார்.. அந்த வாசகனுக்கு பதினாறு வயதும் இருக்கலாம்… தொன்னூறு வயதும் இருக்கலாம்.
ஒரு உண்மை சொல்லட்டுமா..
இந்நூல் இளையோருக்கு மார்க்ஸ் கதை என்று இருக்கிறது. உண்மையில் முப்பதுகளில் உள்ள நானும் மார்க்ஸைப் பற்றி அறிந்திருக்கும் வகையில் இளையவனே. ஆங்காங்கே தனித்தனியாக மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி படித்ததுண்டு, ஆனால் இந்நூல் வழியே மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக மிக எளிமையாக, அதே சமயம் முழுமையாகவும் அறிந்து கொள்ளலாம்.
இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மிகாத 38 தலைப்புகளில் இந்நூல் உருவாகியுள்ளது.
முதலாவது தலைப்பு “பேரன்பும் பெருங்கோபமும்” என்று தொடங்குகிறது. பேரன்பும் பெருங்கோபமும் முரணாகத் தெரிகிறது. ஆனால் சமீபத்தில் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் ஒரு பேட்டியில் “சக மனிதர்கள் மீது கொண்ட அன்புதான் ஒருவனை மிகப்பெரிய கலகக்காரனாக மாற்றுகிறது” என்பார். இது அப்படியே நூற்றுக்கு நூறு மார்க்ஸ் அவர்களுக்குப் பொருந்தும்.
1818 ஆம் ஆண்டு மே 5ம் நாள் ஜெர்மனியில் பிறந்தது முதல் 1883 மார்ச் 14 ஆம் தேதி காலமானது வரையான அவரது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை (படிப்பு, பக்கத்து வீட்டினரான ஜென்னியுடன் திருமணம், வறுமை வாழ்க்கை, வறுமையிலும் தளறாத மன உறுதி, குழந்தைகளின் பிறப்பு, அவ்வப்போது நிகழும் குழந்தைகளின் அகால மரணங்கள், பல இன்னல்களுக்கு நடுவே தொடரும் தோழர் எங்கெல்ஸின் நட்பு, இறுதி பேரிடியாக விழுந்த மனைவி ஜென்னியின் மரணம்) என அழகுற இந்நூல் தொகுத்துள்ளது. என்ன ஒரு பயனுள்ள வாழ்க்கை இது . மார்க்ஸின் இருநூறாவது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இத்தருணத்தில் உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தை உய்விக்கவும், பொதுவுடமை சமுதாயத்தை நிலைபெறச் செய்யவும் மார்க்சியம் ஒன்றே வழி என உலகுக்கு வழிகாட்டி நிற்கிறது. இதன் பின் மார்க்ஸ் என்ற மனிதரின் தொலை நோக்குப் பார்வையும், வறுமை, தனது குழந்தைகள் மரணம் போன்ற பல இன்னல்களுக்கு நடுவிலும் அவரின் அயராத உழைப்பும் உள்ளது.
இளம் மார்க்ஸ் மனதில் பொதுவுடமைச் சிந்தனை விதை, அக்காலத்திய ஜெர்மானிய சிந்தனையாளரான பிரெடெரிக் ஹெகல் விதைத்தது.
“மோதல்கள், போர்கள், புரட்சிகள் மூலமாகவே மனித இனம் முன்னேறுகிறது. ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஒடுக்கப்படுபவர்களின் போராட்டங்கள்தான் உலகில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகின்றன”
இந்த வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை. காலங்கள் கடந்தும் சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சியான போராட்டமும் இதையே நமக்கு உணர்த்துகிறது. 13 க்கும் மேலான உயிர்களைப் பலி கொடுத்தபின் தான் ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதை நிறுத்தப்போவதாக தூத்துக்குடி ஆட்சியர் அறிவிக்கிறார்.
என்றும் அழியா ஹெகலின் சித்தாந்தங்களை முன்மாதிரியாகக் கொண்டு தன் சிந்தனை ஓட்டத்தை வடிவமைத்துக் கொள்கிறார் மார்க்ஸ்.
தீராத வாசிப்புக்குச் சொந்தக்காரரான மார்க்ஸ், தன் அயராத உழைப்பினால் எங்கெல்ஸோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், மூலதனம் என்னும் அரும்பெரும் நூலையும் படைத்தளித்தார். பொதுவுடமைச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் இந்நூல்களை இவ்வுலகுக்கு உருவாக்கித்தர மார்க்ஸ் கடந்துவந்த வறுமை நிறைந்த, வலி நிறைந்த பாதையை நாம் அறியும்போது உண்மையில் நம் மனதிலும் வலி படரும்.
இளையோருக்காக கதை போல மார்க்ஸ் வரலாற்றை இந்நூலாசிரியர் எழுதியிருந்தாலும் , மார்க்ஸ் அவர்களின் முக்கியமான கருத்துக்களை இந்நூலில் குறிப்பிட மறக்கவில்லை…
• உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, கைவிலங்குகளைத் தவிர. ஆனால் , பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் உண்டு – 1848 ல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கை தொழிலாளர்களுக்கு விடுத்திருந்த அறைகூவல் இது.
• படி, படி, படி – மார்க்ஸ் அடிக்கடி இட்ட ஒரே உத்தரவு.
• இதுவரை தோன்றிய தத்துவச் சிந்தனையாளர்கள் உலகைப் பல்வேறு வழிகளில் விளக்கிவிட்டார்கள். இப்போது நாம் செய்ய வேண்டியது உலகை மாற்றுவதுதான்- காரல் மார்கஸ்.
• எல்லோரும் சமம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடமைக் கொள்கைதான் கம்யூனிசம் என்று அறியப்படுகிறது. இன்னொரு வகையில் உலகில் உள்ள எந்த மனிதரும் ஒடுக்கப்படக்கூடாது என்று சொல்வதும் கம்யூனிசம்தான்.
மார்க்ஸ் ஒரு புரட்சிமூளை. உலகத்தில் எத்தனையோ பொதுவுடமைப்புரட்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கெல்லாம் மூளையாகச் செயல்பட்டவர் என்பதால் மார்க்ஸை ‘புரட்சியின் மூளை’ என்று சொல்வது மிகவும் பொருத்தமானது என்பார் அறிஞர் வெ.சாமிநாத சர்மா.
இப்பெரும் புகழ்கொண்ட மார்க்ஸ் வாழ்வை மிக எளிய நடையில், மார்க்ஸின் முக்கியமான கருத்துகள் விட்டுப்போகாமல் திறம்பட இந்நூல் விளக்குகிறது.
இளையோருக்கு மட்டுமல்ல, மனித குல நலனை நேசிக்கும் எல்லோருக்கும், எந்த வயதினருக்கும், மார்க்ஸைப் பற்றி அறிய அவசியமான நூலாக இது விளங்கும். இந்நூலுக்கு எழுத்தாளர் ஜா.மாதவராஜ் அழகான முன்னுரை வழங்கியுள்ளார்.
வாசித்துப் பாருங்களேன்… மார்க்ஸின் உன்னத வாழ்வை..
 
புத்தகம்: இளையோருக்கு மார்க்ஸ் கதை
ஆசிரியர்: ஆதி.வள்ளியப்பன்.
வெளியீடு: Books for Children (மே,2018)
விலை:80/-
Review by: இராமமூர்த்தி நாகராஜன்
  புத்தகத்தை இங்கு வாங்கலாம்
featured cover image courtesy: twitter/KarlMarxCymraeg

Leave a Response