Book Review

நூல் அறிமுகம்: எழுத்தாளர் பாமாவின் “மனுசி” – திவாகர். ஜெ

Spread the love

 

திருமணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை யாரையும் சார்ந்திராமல் செய்ய வேண்டுமென நினைக்கும் ஒரு பெண் இச்சமூகத்தால் சந்திக்கும் இன்னல்கள் கணக்கில்லாதவை. ஆண்களால் மட்டும் தான் என்றில்லை பெண்களாலேயே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவள் சந்திக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணோ, பெண்ணோ திருமணம் செய்யாமல் வாழவே கூடாது என்பது தான் சமூகம் தனக்குத் தானே கட்டமைத்துக் கொண்டுள்ள சட்ட திட்டம்.

அன்னை தெரசா, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா,….. போன்ற திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காகவே வாழ்ந்த,வாழும் தேசிய, உலக பெண் தலைவர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் இதே சமூகம், தன் அக்கம் பக்கத்து வீட்டு பெண்ணொருத்தி  திருமணம் ஆகாமலோ திருமணம் செய்து கொள்ளாமலோ இருந்தால் அவர்கள் பார்க்கும் பார்வையோ, கேட்கும் கேள்விகளோ சொல்லிலடங்காதவை.

திருமணம் செய்து கொள்ளாமலிருப்பது என்பது ஏதோ ஒரு கொலைக்குற்றத்தை விட மோசமானதைப் போல அவர்கள் பேசும் வார்த்தைகளைக் கேட்கையில் நமக்குத் தோன்றும்.

இப்படிப்பட்ட பலவித கேள்விகளையும் சகித்துக் கொண்டு தலித் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட ராசாத்தி என்ற பெண்ணின் கதை தான் – மனுசி.

ராசாத்தி இச்சமூகத்தால் படும் அவஸ்தைகளை வாசிக்கையில் நாமும் இந்த சாக்கடையில் தானே இத்தனை நாளும் புரண்டு கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி இயல்பாகவே எழுகிறது. ஒருவேளை ராசாத்தியின் நிலையில் நாம் இருப்போமாயின் இக்கதை மாந்தர் ஒவ்வொருவரையும் வெட்டி வீழ்த்தி விடலாமென்ற எண்ணம் கூட தோன்றுகிறது. அவ்வகையில் இக்கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டு தன்னை மிதித்துத் துவைக்கும் இதே சமூகத்துக்கே தன்னால் இயன்ற  உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் ராசாத்திகள் பாராட்டத்தக்கவர்களே…

*”எல்லாரும் சந்தோசமானதுன்னு நம்பிக்கிட்டு இருக்குறது எல்லாருக்கும் சந்தோசமானதா இருக்கணும்னு அவசியமில்லையே…. அவுங்கவுங்களுக்குப் பிரியப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துட்டு போறத உட்டுட்டு பொம்பளைனா இப்பிடித்தான் இருக்கணும்; பொம்பளைக்குன்னு இதுதான் நியமிக்கப்பட்ட வாழ்க்கைன்னு பிடிவாதம் பிடிக்குறதுல அர்த்தமே இல்ல”* – கல்யாணம் பண்ணிக்குறது தான் மனுசப் பிறவியோட லட்சியம்னு நெனச்சிக்கிட்டு இருக்குற சனங்களுக்கான ராசாத்தியின் வரிகள் இவை.

திருமணமாகாத பெண்களுக்கு ஆண்களிடமிருந்து பாலியல் ரீதியான சீண்டல்கள் ஒரு பக்கம்னா, பெண்களிடமிருந்து உளவியல் ரீதியான கொடுமைப்படுத்தல்கள் ஒருபுறம்னு இன்னைக்கும் பல ராசாத்திகள் நம் கண்ணெதிரே வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க.

அதேசமயம், திருமணம் செய்து கொண்ட பெண்கள் அனைவரும் சந்தோசமாக இல்லை என்பதையும், உள்ளே ஒரு வேசம், வெளியே ஒரு வேசம் என நாளுக்கு நாள் நன்றாக இருப்பதைப் போல் நடிப்பதிலேயே அவர்களின் காலம் கழிகிறது என்பதையும் கதை மாந்தர்கள் வழியே நூலாசிரியர் கூறிச் செல்கிறார்.

மனுசி - பாமா - விடியல் பதிப்பகம் ...

இந்த நாவலில் ராசாத்தியின் பாட்டி அவளிடம் கூறுவது போல ஒரு பத்தி இடம்பெறும். நாவலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை :

*” தெருவுக்குள்ள போனா நாலு நாய்க நம்மள பார்த்து கொரைக்கும். அதுக்காக அங்ன நின்னு அதுகளப் பாத்து நாமளும் கொரைக்கக் கூடாது. புத்திகெட்ட நாய்க கொரைக்குதுன்னுட்டு நாம நம்ம வேலையை பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும்.  இல்லன்னா அங்னக்குள்ளேயே நின்னுகிட்டு இருக்க வேண்டியது தான். போக வேண்டிய எடத்துக்கு போய் சேர முடியாது.”*

இதைத்தான் என் அப்பா சிறுவயதில் என்னிடம் இவ்வாறு கூறுவார். *மலையைப் பார்த்து நாய் கொரைக்குது. அதுனால மலைக்கு எந்த இழப்புமில்ல. நாய்க்குத்தான் தொண்ட தண்ணி வத்திப்போகும். நாம என்னைக்குமே மலையா தான் இருக்கணும்னு”*

நாவலில் ராசாத்தியின் பாட்டியின் வரிகளைப் படித்ததும் எனக்கு இவைதான் ஞாபகம் வந்தது. நாம் ஒவ்வொருவரும் என்றைக்கும் மலையாய் இருக்கப் பழகினால் தான் அடுத்தவரின் அனாவசியப் பேச்சுகளை பொருட்படுத்தாமல் முன்னேற முடியும்.

இந்த நாவலைப் பற்றி இன்னும் ஏகப்பட்ட விசயங்களைக் கூறிக் கொண்டே போகலாம். ஒரு பெண்ணின் உணர்வுகளை மிக வெளிப்படையாக இதைவிட மேலாக எழுத முடியுமா என்பது சந்தேகமே.

நூலை வாசிக்கையிலும், வாசித்து முடிக்கையிலும் எனக்குத் தோன்றியது இதுதான்:

*”இனி திருமணமாகாத யாரையும் அது ஆணோ, பெண்ணோ நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை”* என்று கேட்கக்கூடாது என்பதுதான்.

மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு, யாரையும் காயப்படுத்தாமல் வாழ வேண்டுமென்ற எண்ணமுடைய ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் – மனுசி.

வாசிப்பும், பகிர்வும்

 

*~ திவாகர். ஜெ ~*

கணித ஆசிரியர்

காஞ்சிபுரம்

 

நூல் : மனுசி

ஆசிரியர் : பாமா

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பக்கங்கள் : 222

விலை : ₹ 200

Leave a Response

Top Reviews

Video Widget

gallery