Book Review

நூல் அறிமுகம்: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து… – தேனிசீருடையான்

Spread the love

 

60களில் பள்ளிப்புத்தகத்தில் திருவள்ளுவர் பற்றிய பாடம் இருந்தது. திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்றும் அவர் மனைவி வாசுகி கணவனின் சொல் கடக்காதவர் என்றும் வள்ளுவர் அவரை அழைத்ததும் கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தாலும் கடகாலை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவார் என்றும் மீண்டும் நீர் இறைக்கப்போகும்போது கிணற்றுக்குள் விழாமல் கடகால் அந்தரத்தில்  நின்றிருக்கும் என்றும் அந்தப்பாடத்திலிருந்தது.

இது ஒரு மிகை புனைவுச் செய்தியாகும். காலந்தோறும் இலக்கியத்துக்குள் மிகை புனைவுகள் நடமாடியே வந்திருக்கின்றன. ஆன்மீகக்கலாச்சாரத்துக்குள் மாற்றங்கள் நிகழும்போது இலக்கிய வரலாற்றுக்குள்ளும் இப்படியான இடைச்செருகல்கள் நுழைந்துவிடுகின்றன. வள்ளுவர் ஏறத்தாழ ஏசுகிறிஸ்து வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர். அந்தக்காலத்தில் தமிழகத்தில் இயற்கை வழிபாடு அன்றி தனிமனித வழிபாடு நிகழவில்லை. இயற்கைக்குப்புறம்பான மிகு புனைவுகள் பின்னாளில் நுழைக்கப்பட்டன என உய்த்துணரமுடியும்.

“மநு எதிர்ப்பாளர் திருவள்ளுவர்” என்று தோழர் அ. உமர்பரூக் தீக்கதிரில் எழுதிய கட்டுரையின் விரிவாக்கப்பகுதியாக அதே தலைப்பில் ஒரு சிறிய நூல் இப்போது அவரால் வெளியிடப்பட்டிருக்கிறது. சிறு புத்தகம்தான் என்றாலும் ஏராளமான தகவல்கள் நிறைந்து ததும்புகின்றன. ஆய்வுக்கண்ணோட்டத்துடன்கூடிய வரலாற்றுப்படிமங்கள் சார்புக்கண்ணோட்டமின்றி எடுத்து இயம்பபட்டிருக்கின்றன.

இந்தியா என்று வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில் மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் இரண்டு தத்துவப்போக்குகள் பண்பாட்டு இயக்கத்துக்குள் பிரவேசம் செய்திருந்தன. வைதீகப் பண்பாடு மற்றும் அவைதீகப்பண்பாடு. கடவுளைக் கேள்விக்கு உட்படுத்தாத கொள்கைகொண்டது வைதீகப் பண்பாடு: ஆனால் இயற்கை வழியில்தான் மனித சமூகம் இயங்குகிறது: கடவுளின் அருளால் அல்ல என்பது ‘அ’வைதீகம். தமிழகத்தில் தோன்றிய அவைதீகப் புலவர் திருவள்ளுவர்.

வெள்ளாடை புனைந்து இடதுகையில் ஓலைச்சுவடியும் வலதுகையில் எழுத்தாணியும் கொண்டு அமர்ந்திருக்கும் வள்ளுவரை முதன்முதலில் ஓவியமாய் வரைந்தவர் வேணுகோபால் சர்மா. குறளை ஆய்ந்தறிந்து இந்த உருவத்தில்தான் அவர் இருந்திருக்கமுடியும் என்று யதார்த்தப்புனைவின்வழியே இந்த உருவத்தை அவர் வரைந்திருக்கிறார். ஆனால் இந்து தீவிரவாத அமைப்புக்கள் சில அவர் சிலைக்குக் காவி வண்ணம் தீட்டி அவரை வைதீக மரபுக்குள் சாஷ்டாங்கம் செய்யவைக்க முயல்கின்றன.

எந்த மதத்தையும் சாராத எல்லீசன் என்ற ஆங்கில அதிகாரிதான் அதாவது 1810ல் இருந்து 1819வரை சென்னை மாகாண கவர்னராக இருந்த எல்லீசன்தான் திருக்குறளை ஓலைச்சுவடியிலிருந்து அச்சாக்கம் செய்து மக்களிடம் கொண்டுசேர்த்தார்.

அயோத்தி தாசர் - தமிழ் விக்கிப்பீடியா

அயோதிதாசப்பண்டிதரின் பாட்டனார் கோவை கந்தப்பன் மதுரை கலைக்டர் ஹாரிங்டன் அவர்களிடம் சமயல்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அடுப்பெரிக்க நிறைய ஓலைச்சுவடிகள் வந்தன. அவற்றை கலைக்டரிடம் தந்து அவை இலக்கியப் பொக்கிஷம் என்று கூறினார். ஹாரிங்டன் அவற்றை வாங்கி எல்லீசனிடம் தந்து ஆய்வுசெய்யச் சொன்னார். அவற்றின் முக்கியப் பிரதிகளைத் தனியாகப்பிரித்தெடுத்து, அதில் திருக்குறள் பிரதியை அச்சாக்கம் செய்தார் எல்லீசன். ‘நாலடி நானூறு’ என்ற இலக்கியத்தையும்கூட அவர்தான் அச்சாக்கினார்.

இப்படி நமக்குக்கிடைத்த நூலில் எந்தக்குறளும் வைதீகம் சார்ந்து பேசவில்லை. ஆனால் சமணக் கருத்துக்களையும் தனிமனித ஒழுக்கத்தையும் சிறப்பாகப் பேசியிருக்கிறது. அதைக் காவிமயப்படுத்த முயற்சிப்பது வரலாற்றுத் திரிபு ஆகும்.

குறள் ஆய்வாளர்கள் பலரும் வள்ளுவர் சமணர் என நிரூபித்துள்ளார்கள். செந்தீ நடராசன், அருணன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர்.

சமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்

திருக்குறளில் சுட்டப்படுகிற ‘ஆதிபகவன்’ என்பவர் இமயமலையிலிருந்து வந்த ரிஷபதேவர் என்று சொல்வதற்கு நிறையக்காரணங்கள் இருக்கின்றன. அவர் வடக்கிலிருந்து வந்ததால் ஜைனவழிபாடு வடக்குநோக்கியதாகவே இருக்கிறது. வடக்குநோக்கி உண்ணா நோன்பிருந்து மரணமடைவது சமணர்களின் அந்திமகால சடங்குகளில் ஒன்று. அது வடக்கிருத்தல் என்ற பெயருடன் பழந்தமிழ் இலக்கியங்களில் புழங்குகினது. பிசிராந்தையார் என்ற புலவர் கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருந்து உயிர்நீத்தார்.  ஆகவே, ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவரே.

உலகில் தோன்றிய எண்ணும் எழுத்தும் முதல் தீர்த்தங்கரரிலிருந்து தோன்றியது என்பது சமண நம்பிக்கை. ஜைனசமய நூலான ‘சூளாமணிநிகண்டு’ “விருப்புறு பொன் எயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் பரப்பிய ஆதிமூர்த்தி” என்று குறிப்பிடுகிறது. ஜைனநூலான திருக்கலம்பகமும் “ஆதிபகவன் அருகன் என்று” சொல்கிறது. அருகன் என்றால் சமணத்துறவி.

இந்த எடுத்துக்காட்டுகள் எல்லாம் வள்ளுவர் சமணசமயத்தவர் என்பதற்கான புறச்சான்றுகள். அவர் எழுதிய திருக்குறளில் ஏராளமான அகச்சான்றுகள் இருக்கின்றன.

       “பிறப்பொக்கும் எல்லா உணிர்க்கும், சிறப்பொவ்வா

       செய்தொழில் வேற்றுமை யான்.”

அவர் வைதீகத்துக்கு எதிரானவர் என்பதற்கு இந்த ஒருகுறளே போதுமானதாய் இருக்கிறது. செய்யும் தொழில்முறையால் மனிதகுலத்தை வேற்றுமைப்படுத்திப்பார்த்தது மநுவின் சட்டவிதி. மநுவின் கொள்கைகளை ‘மநுதர்மம் என்று சொல்வதே பிசகானது என்று நான் கருதுகிறேன்). மனுவின் கொள்கைகள் எல்லாம் வைதீக அறம்: அதாவது வர்ணாஸ்ரம விதிகளை உள்ளடக்கிய சட்டவிதிகள். அதிகார வர்க்கத்தின்கீழ் அவை மானுட சமுகத்தில் அமல்படுத்தப்பட்டன. மனித சமூகத்தைப் பிளவுபடுத்தி மகிழ்ந்தன. பண்பாட்டு ஏற்றத்தாழ்வு வைதீகத்தின் உள்ளடக்கம்: அது இன்றி வைதீகம் ஜீவிக்காது. ஆனால் சமணம் மனித சமத்துவத்தை வலியுறுத்துகிறது.

மாதவிப் பந்தல்: திருக்குறளில் ...

வைதீகத்துக்கு எதிரான சமயங்களாகிய ஆசீவகம், சமணம், புத்தம் போன்றவை அதிகாரத்துக்கு எதிரான தத்துவங்களை முன்மொழிந்தன. மனித சமூகம் போதை மயக்கத்தில் சீரழிந்துகிடந்தபோது ‘கொல்லாமை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல்’ ஆகிய அறங்களை வலியுறுத்தினார் வள்ளுவர். “தீபம் ஏந்தலாம்: ஆனால் தீயில் எதையும் வெந்துபோகும்படி செய்யக்கூடாது” என்பது சமணத்தின் நடைமுறைக் கொள்கைகளில் ஒன்று.

இந்த அத்தனை கருத்துக்களையும் இந்தச்சிறுநூலில் பதிவிட்டிருக்கிறார் நூலாசிரியர் அ. உமர்பரூக். 30 பக்க நூலுக்கு மூவயிரம் பக்கம் வாசித்திருக்கிறார் என்று தெரிகிறது. நல்ல உழைப்பு: உழைப்புக்கேற்ற பலன். எதிர்கால ஆய்வாளர்களுக்கு இது ஓர் அரிச்சுவடியாய் விளங்கமுடியும்.

 மாணவர்களால் வாசிக்கமுடியும்: எளியநடை!

ஆய்வாளர்களால் ஊன்றிக்கவனிக்க முடியும்: ஆழமான நேர்த்தியான உள்ளடக்கம்!

அறம், பொருள், இன்பம் திருக்குறள் போதிக்கும் வாழ்வியல் நடைமுறை யதார்த்தங்கள்.

அனைவரும் வாங்கி வாசிப்பதன்மூலம் காவிக்கூட்டத்தின் அடாவடித்தனத்தை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளமுடியும்: எதிர்வினையாற்றவும் வழிவகை கிடைக்கும்.

 

மநு எதிர்ப்பாளர் திருவள்ளுவர்.

அ. உமர்பரூக்

கருப்புப்பிரதிகள் பதிப்பகம்.

சென்னை 5.

விலை ரூபா 35.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery