Book Review

நூல் அறிமுகம்: மண்ட்டோவின் “அவமானம்” சிறுகதை தொகுப்பு – ஹேலி கார்த்திக்

Spread the love

 

பத்து ரூபாய்க்காக தன்னுடைய உடலை விற்கும் பெண்ணான சுகந்தியை அவளுடைய தரகரான ராம்லால் நள்ளிரவு இரண்டு மணிக்கு எழுப்பி கண்ணியமான(!) வாடிக்கையாளர் ஒருவர் முன்பு கொண்டு நிறுத்துவான். வாடிக்கையாளனின் புறக்கணிப்பு சுகந்தியின் மனதில் கணலாய் கணத்துக்கொண்டே இருக்கும். இதுவரை எந்த வாடிக்கையாளனையும் புறக்கணித்திடாத சுகந்திக்கு, முதல் முறையாக தான் புறக்கணிக்கப்பட்டதை ஏற்றகொள்ள முடியவில்லை. மாதமொருமுறை வந்து தன்னுடைய உடலையும் பணத்தையும் காதல் என்கிற பெயரில் சூறையாடிச் செல்லும் மாது அன்றிரவும் வந்திருந்தான். தனக்குள் புகைந்துக்கொண்டிருக்கும் ஏமாற்றப்பட்ட உணர்வு மொத்தத்தையும் மாதுவின் மீது கொட்டித் தீர்த்தாள். அறையிலிருந்த அவனுடைய பிரேம் போட்ட படத்தினை ஜன்னல் வழியே விட்டெறிந்தாள். இருளை கிழித்துக்கொண்டு பறந்த அந்த படம் டொங்கென்று நொறுங்கி இரவின் அமைதியை நொடி பொழுதுக்கு மட்டும் கலைத்தது. இறுதியாக மாது அந்த அறையிலிருந்து வெளியேற்றப்பட்டான். அவமாணம் சிறுகதையின் மிக சுருக்கம் இது.

உடலை விற்று பிழைக்கும் பெண்களின் உளவியலை இந்த அளவு நேர்மையோடு எழுத துணிவு நிச்சயம் வேண்டதான் வேண்டும். பெண்களின் இயல்பான எண்ண ஓட்டத்தினையும் ஆண்களின் கீழ்தரமான சிந்தனைகளையும் மண்ட்டோவின் எழுத்துகள் தோலுரித்தன. ஆண்கள், தாங்கள் எவ்வளவுதான் நேர்மையானவர்கள் என காட்டிக்கொண்டாலும் பெண்கள் விடயத்தில் பெரும்பாலான ஆண்கள் அய்யோக்கியர்கள்தான் என அவர் திடகாத்திரமாக நம்பினார்.

நமக்கு தெரிந்த கண்களுக்கு நன்கு புலப்படக்கூடிய சில விண்மீன்களை இணைத்து அதற்கென ஒரு பெயரிட்டு ஓரியன் என அடையாளப்படுத்தி வைத்துள்ளோம். ஆனால், வீண்மீன்கள் கோடிக்கணக்கில் உள்ளபோது நாம் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் வியப்பாக பார்த்து வியந்துக்கொண்டே இருக்கின்றோம் அல்லது அதை கடந்து வேறெதையும் பார்பதைவிடவும் இதை பார்ப்பதை ரொம்ப சௌகரியமாக உணர்கிறோம். கிட்டதட்ட மண்டோவின் படைப்புகளையும், அவரையும் சௌகரியமாக புரிந்து கொள்ள, எவையெல்லாம் எளிதாக கிடைகின்றனவோ அவற்றையெல்லாம் கொண்டு இதுதான் மண்டோ என அடையாள படுத்திக்கொள்கிறோம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை சார்ந்த எழுத்தாளர் என அவரை முத்திரை குத்தி அவரின் படைப்புகளின் கழுத்தில் ஒரு போர்டையும் தவறாமல் மாட்டி வைத்திருக்கின்றோம். கூடுதலாக, விலைமாதர்களை பற்றிய எழுத்தாளர் என்கிற வர்ணணையையும் சேர்த்து பூசியிருக்கின்றோம்.

மண்டோ – எல்லைக்கோட்டின் வலிகளில் ...
சதக் ஹசன் மண்டோ

வானம் தெளிவாக இல்லாத பகல் பொழுதொன்றில் வீட்னுள் நுழைந்த தன் தங்கையின் கணவரை அழைத்து, தற்போதுதான் லாகூரிலிருந்து வந்திருப்பதாகவும், அங்கு ஏதோ ஒரு விடயம் மிக பரபரப்பாக பேசிக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தன்னுடன் இருந்த சக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார் மண்ட்டோ. முன்னமே பேசி வைத்திருந்ததை அப்படியே மச்சான்காரன் சொல்வான். “தாஜ்மஹாலை இந்தியா அமெரிக்கர்களுக்கு விற்றுவிட்டது. எனவே அதனை இங்கிருந்து பெயர்த்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல புதிய தொழில் நுட்பங்களை கொண்ட யந்திரங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளது.” என மச்சான்காரண் முடிக்க. மாமாவாகிய மண்ட்டோ இது குறித்து மிக தீவிரமாக விவாதத்தை தொடங்குவார். ஒரே வாரத்தில் அம்ரித்சர் பஜார் முழுக்க இது பேசு பொருளாக மாறியிருக்கும். யாராவது இந்த விடயத்தை பற்றி தெருவில் பேசிக்கொண்டிருந்தால் அதை கேட்டு மண்ட்டோ விழுந்து விழுந்து சிரிப்பார். வதந்திகளை பரப்புவதில் அவர் மிக அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

இந்த சிரிப்புகள் அவருடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கவில்லை. தீராத குடியினால் சிரோஸிஸ் நோயால் தாக்கப்பட்டார். மூன்று வேளைக்கு தலா ஒரு ஸ்பூன் என மூன்று ஸ்பூன் விஸ்கியை கொடுக்க வேண்டும். யாரும் பிழைக்க முடியாத, மருத்துவர்கள் இறுதிநாள் குறித்துவிட்ட பின்னர் அதிசயமாக மீண்டெழுந்துவந்தார்.

மோஸல், சுதந்திரத்திற்காக, திற, சில்லிட்ட சதை பிண்டம், நூறு விளக்குகளின் வெளிச்சம், என பல கதைகளை மண்ட்டோ சிறந்த படைப்புகளாக வெளியிட்டிருந்தாலும், தொடக்கத்தில் இருந்த அளவு பின்னர் சினிமா கம்பெனிகளின் வளர்ச்சி குறைந்ததன் காரணமாக அவர் பொருளாதார ரீதியாக பெருதும் பாதிக்கப்பட்டார். அவரை பொறுத்தவரை நன்றிகடன் படாமலிப்பதுதான் சிறந்த வாழ்வு. தீராத குடியினால் தன்னுடைய இறுதி நாட்களில் முன்பின் தெரியாத நபர்களிடமெல்லாம் கடன் கேட்கத்தொடங்கிவிட்டார்.

இறுதியாக தன் தங்கையிடம், “அவனை எழுத்தாளனாக மாற அனுமதிக்காதே. இதற்காக நீ உன் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவாய்.” என கூறியுள்ளாதாக அவருடைய தங்கையின் கணவரும் எழுத்தாளருமான ஹமீத் ஜலால் மண்ட்டோ குறித்த நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். பல வழக்குகள் மண்ட்டோவின் கதைகள் மீது பதியப்பட்டன. நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டிருக்கிறார். பெரும் உளைச்சள். எழுத்தாளனுக்கு இச்சமூகம் கொடுக்கும் வெகுமதி இதுதான்.

இவையெல்லாம் ஒரு எழுத்தாளனின் திரை மறைவு பக்கங்கள். இந்திய சமூகத்தில் புத்தகங்களும், புணர்ச்சிகளும் இரவு உறக்கத்திற்காக என்கிற எழுதப்படாத விதி ஒன்று இருப்பதாக யாரோ சொல்லி கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், இரவு படுக்கைக்கு முன் நீங்கள் மண்ட்டோவை வாசித்துவிடாதீர்கள்.

Saadat Hasan Manto And His 'Scandalous' Women

எவ்வித வார்த்தை அலங்கரிப்புகளும் இல்லாத அவருடைய எழுத்துக்கள் இலக்கியத்தின் வரையறையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அரசியலையோ, அல்லது யதார்த்தத்தையோ இலக்கியம் என வரையறுக்க முடியாது என்கிற இலக்கிய துரோகிகள் மண்டோவை கொண்டாடுவதாக காட்டிக்கொள்கிறார்கள்.

இந்த சமூகத்தின் சிக்கல்களும், பெண்களுக்கு மதத்தின் பெயராலும், ஆண் என்கிற அதிகாரத்தின் அத்துமீறல்களாலும் இழைக்கப்படும் அநீதிகளை தோலுரித்திருக்கும் அவருடைய எழுத்துக்களில் மண்ட்டோ இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்தின் காதாப்பத்திரங்கள் நீங்களும் நானும்தான். இங்கு எதுவுமே மாறிவிடவில்லை. அவமானம் சிறுகதையின் மாதுக்களாகவும், சேட்டுக்களாவும் நாம் இன்னமும் திரிந்துக்கொண்டிருக்கின்றோம் என்றால் அது மிகையல்ல.

கோடிக்கணக்கான விண்மீன்களுக்கு மத்தியில் ஓரியனை மட்டும் ரசித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனத்தைத் தவிர வேறென்ன?

நூல்: அவமானம் 

ஆசிரியர்: சாதத் ஹசன் மண்ட்டோ

தமிழில்: ராமானுஜம் 

வெளியீடு: பாரதி புத்தகாலயம் 

விலை: ரூ. 50

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/avamanam-4131/

Leave a Response

Top Reviews

Video Widget

gallery