Web Series

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9

Spread the love

 

எனக்கு ஒரு சந்தேகம்.

பறந்து பறந்து பறந்து படத்தில் நாயகியின் வருகைக்கு எதற்கு இவ்வளவு பில்டப்? அவர் அந்தக் கதைக்கு வந்து சேருவதற்கே அவ்வளவு நேரமாகும். நிகழ்ந்து கொண்டிருக்கிற கதை அவருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்கு புரிந்து வரும். பத்மராஜன் இப்படி செய்வதில்லையே என்கிற உறுத்தல் இருந்தவாறு இருந்தது.

Malayalam Super Hit Movie | PARANNU PARANNU PARANNU | P.PADMARAJAN ...

எலிசபத் ஒரு கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியை. ஒய்வு பெறுகிறார். கல்லுரியின் பெண் பிள்ளைகளுடன் அதிக பற்று வைத்துக் கொண்டிருந்த அவரை எப்போதும் சந்திக்க அவர்கள் ஒரு பெண்களுக்கான பியுட்டி பார்லர் வைக்குமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர் அதை வைக்கவும் செய்கிறார். எலிசபத்துக்கு தொழில் தெரியாது. வேலைக்கு வந்த பெண்ணிற்கும் அது அரைகுறை தான். பெருகி வந்த கஸ்டமர்ஸ் மெதுவாக வடிந்து ஊற்றி மூட வேண்டிய நிலை. எலிசபத் தளர்கிறார். அவருடன் இருக்கிற அவரது சகோதரன் வக்கச்சனும், மகன் எமிலும் அவரை தேற்றுகிறார்கள். பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறார்கள். நம்பிக்கை பொய்த்து காத்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் வருகிறாள். மினி என்பது அவளுடைய பெயர். அவள் வந்ததற்கு அப்புறம் எல்லாமே மாறுகிறது. கடையை விரிவாக்கம் செய்கிறார்கள். அப்புறம்  பார்லரின் புகழ் அக்கம்பக்கம் பரவி பெண்கள் வந்து அம்முகிற இடமாகி யாவரும் மன நிறைவை அடைகிறார்கள் என்பதெல்லாம் சரி. இந்த காரணங்களுக்காக மினி என்கிற பெண்ணை கதைக்கு கொண்டு வர இவ்வளவு அழுத்தமா என்பதில் இருந்து என்னால் நகர முடியவில்லை.

பறந்து, பறந்து, பறந்து என்கிற படத்துடன், திங்களாழ்ச்ச நல்ல திவசம் என்கிற படத்தையும் பார்க்கப் போகிறோம். இப்படத்தின் மொத்தக் கதையும் ஜானகிக் குட்டி என்கிற பெண்மணியை சுற்றி வருவது. ஒரு அம்மா. அப்பழுக்கில்லாத, தூய்மையான, ஒதுங்கி இருக்கிற ஒரு கிராமத்து வீட்டின் தலைவி. ஒரு சொந்தக்கார பெண்ணுடன் வீட்டை ஆண்டு கொண்டு தனிமையில் இருக்கிறார். ஆடு, மாடு, கோழிகளுடனும். செடிகள், கொடிகள் மரங்களுடனும். விடுமுறைக் காலமாதலால் முதலில் மும்பையில் இருந்து மூத்த மகனும் அவனது குடும்பமும் வருகிறார்கள். அடுத்து மகளுடைய பிள்ளை வருகிறான். கதை நகர்ந்து செல்லுகிறது. கதையில் ஜானகியின் இரண்டாவது மகன் கோபன் கொஞ்ச நாட்களில் வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்து வரும் தினங்களில் ஒருநாள் ஜானகியின் பிறந்த நாளும் வர இருக்கிறது. அதற்குள் அவன் எப்படியும் வந்து விட வேண்டும் என்பதற்கு சரியாக ஒருநாள் அவனும் அவனது குடும்பமும் துபாயில் இருந்து வந்து சேருகிறார்கள். அவனது வருகைக்கு ஏன் இவ்வளவு தாமதம்? அதுவும் கோபனின் பாத்திரத்தை மம்முட்டி ஏற்றிருந்தார்.

Parannu Parannu Parannu 1984 Full Malayalam Movie - YouTube

எலிசபத் வேலையில் இருந்து ஒய்வு பெறும்போது கிடைக்கிற பணத்தைக் கொண்டு வக்கச்சன் வட்டிக்கு விடவும், எமில் வீடியோ சென்டர் வைக்கவும் ஆசைப்பட்டார்கள். அப்புறம் அழகு நிலையம் வந்தபோது அதற்கு ஒத்துழைக்காமல் இல்லை. மினி வந்து இணைந்து தனது சீரிய பணியால் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக்கும்போது அவள் ஒரு நிறைந்த பெண்ணாகவே இருக்கிறாள். சுபாவங்களின்படி எமில் அவளைக் காதலிக்கவும் செய்கிறான். அவளுக்கு அதில் விருப்பம் இருக்கிறது. இப்படி போகும்போதுதான் மினியை புகைப்படமெடுத்து அழகு நிலைய விளம்பரத்துக்காக ஒரு திரையரங்கில் எமில் ஸ்லைடு போட்டுவிட அவளைத் தேடிக் கொண்டு வருகின்றன விபரீதங்கள். எமில் ஒருவிதமாக அதை ஏறிட்டு முடித்து வைக்கும்போது கூட அதைத் தொடர்ந்து மேலும் பிரச்சினைகள் வருகின்றன. சொல்லப் போனால் இந்தப் படமே மினியைக் குறித்தது தான். அவளுடைய பெயரே கூட மினி அல்ல. ஜெசி. ஸ்ரீகுட்டி என்கிற மற்றொரு பெயரும் இருக்கிறது. அவளுடைய வாழ்க்கைப் பாடுகள் தான் கதையின் பேசுபொருள். எமிலின் இடத்தில் நாமிருக்கிறோம். அவளது வாழ்வைப் பற்றி அறிகிறோம். மெதுவாக தனது காதலியின் பொருட்டு எமில் அதில் ஈடுபட்டு கதை முடிச்சுகள் அவிழ்வதைப் பார்க்கிறோம்.

Thinkalazhcha Nalla Divasam (1985)

திங்கள் கிழமை நல்ல நாள் படத்தில் தனது மனைவி குழந்தைகளுடன் வருகிற கோபன் எல்லோருடனும் சந்தோஷமாக இருக்கிறான். தனது மனைவியை மீறின ஊர்ப்பாசமும் தாய்ப்பாசமும் எல்லாம் அவனிடம் இருக்கிறது. ஆனால் சொத்து பிரிக்கும்போது வீடு அவன் பெயரில் எழுதப்பட்டு இருப்பதால், அம்மா ஆளுகிற அந்த வீட்டை விற்று  விட்டு அம்மாவை தன்னோடு கூட்டி செல்லுகிற திட்டம் அவனிடம் இருக்கிறது. அல்லது சொந்த ஊரைத் தாண்டி அவர்களுக்கு நகரத்துக்கு வர விருப்பமில்லை என்றால் முதியோர் பராமரிப்பு விடுதியில் அவர்களுக்கு ஒரு இடம் சொல்லி வைத்திருக்கிறான். இதெல்லாம் எதற்கு என்றால் வேறு என்னவாக இருக்கும்? எதிர்காலத்தைக் குறித்த திட்டங்கள். பிள்ளைகளின் படிப்பு. பெங்களூரில் பிளாட்டுக்கு பாதிப் பணம் கட்டியிருக்கிறான். மிச்சம் கட்ட வேண்டும். இந்த வீட்டை விற்பதற்கு  பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட பேரம் பேசியாயிற்று. கோபன் வருகை தான் கதையின் பிரச்சினையை ஆரம்பித்து வைக்கிறது. கதையை நடத்தி செல்லுகிறது. அவன் தாமதமாக வருவதே பார்வையாளர்களின் சந்தோஷத்தை நீட்டித்து, அப்புறம் அதைக் குலைத்துப் போடுவதற்கு தான். நாம் கண்டிப்பாக நிம்மதி இழக்கிறோம்.

கோபனின் மனைவி எப்போதும் தனது மாமியாரின் தனிமைக்கு கவலைப்படுகிறாள். அவர்களுடைய பாதுகாப்புக்கு கவலைப்படுகிறாள். அது ஆரம்பத்தில் ஒருவிதமான அக்கறையாக தெரிந்தாலும் பின்னர் அந்த சாக்கை வைத்து உண்மைகளை பேசி விடுகிறாள். முதியோர் விடுதி மிகவும் பாதுகாப்பானது, தனிமை கொள்ளத் தேவையில்லை என்றெல்லாம் அவளுடைய விஸ்தரிப்புகள் தொடர்கின்றன. என்ன ஆச்சரியம் என்றால், அம்மா திடுக்கிட்டதாக திரைக்கதையில் இல்லை. ஆனால் அவளுடைய தளர்வுகள் துவங்குகின்றன. விவாதம் செய்வதற்கு பதில் எங்கே நான் இருக்கப்போகிறேன் என்று கேட்டுக் கொள்கிறாள். மூத்த மகனும் மருமகளும் மும்பைக்கு அழைக்கிறார்கள். கோபனும் அவனது மனைவியும் பெங்களுருக்கு கொண்டு செல்லுவதாக கூறுகிறார்கள். அம்மா முதியோர் விடுதியை தான் தேர்வு செய்கிறாள். சோழிகளை உருட்டி நாள் பார்க்கிற சடங்கில் அதை செய்கிறவர் புதன் கிழமை நல்லநாள் என்கிறார். திங்களும் பரவாயில்லை என்கிறபோது அம்மா திங்கள் கிழமையை எடுத்துக் கொள்கிறாள். சீக்கிரம் சென்று விடலாமே? ஆடு மாடு மரம் செடி கொடிகளிடம் மானசீகமாக விடைபெற்று காரில் ஏறும்போது தனது கணவரின் பெயர வைத்த மரத்தைக் காட்டி முன்பு கூறியதை நினைவுறுத்துகிறாள்,  “ எனது மரணம் எங்கே நிகழ்ந்தாலும் அந்த மரத்தை வெட்டி அதன் நெருப்பில் தான் என்னை எரிக்க வேண்டும் ! “

இப்போது கதையின் இடுப்பெலும்பாக இருக்கிற ஜானகிக்குட்டி என்கிற அந்த அம்மா எப்போதும் தனது சுயத்துடன் இருப்பதை ஒருவாறு அறிகிறோம் இல்லையா? அவர்கள் வேறு ஒன்றையும் சொல்லிவிட்டுதான் காரில் ஏறுகிறார்கள். “ என்னைக் கொண்டு சென்று விடுவதோடு சரி. அதற்குப் பின்னர் யாரும் என்னைப் பார்க்க வரக் கூடாது !

Thinkalazhcha Nalla Divasam

அம்மாவை விட்டுவிட்டு வந்த அன்று கோபன் வீட்டை வாங்குவதாக இருக்கிற பக்கத்து வீட்டுக்காரனுடன் குடிக்கிறான். அவர்களுடன் கோபனின் அண்ணனும் வந்து சேர்ந்து இஷ்டம் போல குடித்து போதையாகி பக்கத்து வீட்டுக்காரனை மட்டுமல்ல, தம்பியைக் கூட அடித்து விடுகிறான். அவனும் அவனது மனைவியும் ஜானகியை நேசித்தவர்கள் என்பது தெளிவு. கோபனும் அவனது மனைவியும் கூட தான் அதே மாதிரி நேசித்து இருக்கிறார்கள். ஒருவேளை அண்ணன் கோபனின் இடத்தில் இருந்து இந்த வீடும் அவனுடைய பெயரில் இருந்திருந்தால் அவனும் ஏறக்குறைய இதே காரியத்தை செய்திருக்கக் கூடும். அதற்கான மனித சூழ்நிலைகள் படத்தில் இருக்கிறது, அதை வைத்திருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் பலம். இந்த மாதிரி குடும்ப சித்திரங்கள் எந்த பாதைக்கு சென்று கதை சொல்லக் கூடுமோ, ஜானகி உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் அவர் அதனுடைய எதிர் வழிக்கு சென்றார் என்பதை மட்டுமல்ல, இது போல அவர் தொட்ட திரைக்கதைகளில் எல்லாம் இருந்த புதிய மீறல்களை  சொல்லவே நான் இந்தத் தொடரை விரும்புகிறேன். மறுநாள் காலையில் போன் வருகிறது, அம்மா இறந்து விட்டாள்.

அப்பாவின் பெயர் கொண்ட மரம் வெட்டப்பட்டு, அவள் அதில் எரிந்து முடிந்து போகிறாள்.

முறைப்படி சினிமா கோட்பாடுகளின்படி இந்தக் கதை இங்கே முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.

NFAI on Twitter: "In #Nostalgia, we bring you this still from ...

பறந்து, பறந்து, பறந்து என்பது அற்புதமான ஒரு தலைப்பு. ஜெசி தனது வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து படம் முடிகிற வரை ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தப்பித்து பறந்தவாறே இருக்கிறாள். அவளது அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அப்பா ஹிந்து. அம்மா கிறிஸ்துவர். மெதுவாக அவர்களுடைய மன விலகல்கள் மகள் மீது வந்து விழுகிற தாக்குதல்களாக மாறுகிறது. அம்மா ஜெபமாலை வாங்கி வந்தால், அப்பா குருவாயரப்பன் மோதிரத்தை வாங்கி வருகிறார். அது ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத கட்டத்தை அடைந்து அப்பா வெளியேறி செல்லுகிறார். மகளை எப்போதாவது சந்திக்கும்போது கூட அவர் அவளை தனது பக்கம் இழுக்க முயன்று, கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டும் என்று அழுத்துகிறார். அம்மா பக்கத்து தொடர்புகளை வெட்டி விடுவதற்கு தனது சகோதரி மகனை கட்டி வைக்கவும் திட்டமுண்டு. வீட்டை விட்டு வெளியேறி வந்து,  படத்தின் இறுதிப் பகுதியில் எமிலுடன் ஓடிக் கொண்டிருப்பது கூட அதன் பொருட்டே. காதலர்கள் எவ்வளவோ ஓடியும் பிடிபடுகிறார்கள். ஜெசியை தூக்கி செல்லுகிறார்கள். எமில் ஜெசியின் அம்மாவை சந்திக்கிறான். அந்தப் பக்கம் ஜெசி அப்பாவுடன் இருக்கிறாள். இரண்டு பக்கங்களில் இருவருக்குமே மகள் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொடுக்கலாம் என்கிற எண்ணம் இப்போது வந்திருக்கவே, அம்மாவும் அப்பாவும் போனில் பேசுகிறார்கள். ஈகோக்கள் உடைகின்றன.

காதலர்கள் இணைகிறார்கள்.

அப்பா அம்மா என்கிற அந்தத் தமபதியினரும் தான்.

சுபமான முடிவு.

படம் பார்க்கும்போது எமில் ஜெஸியின் அம்மாவிடம் தங்களுடைய காதலை சொல்லி முடிக்கும்போது அதை ஆமோதிப்பதற்கு முன் அவள், அவனது மதத்தைப் பற்றி, அதன் உள்பிரிவைப் பற்றிக் கூட கேட்டு தெரிந்து கொள்ளுவதைப் பார்க்க முடியும். ஒரு பாத்திரம் முக்கியமான இடத்தில் வழுக்குவதை சொல்ல பத்மராஜன் அஞ்சியதே இல்லை. தூவானத்தும்பிகள் என்கிற பிரபலமான படத்தில் வருகிற நாயகனுக்கே அம்மாதிரி சறுக்கல்கள் இருக்கும். பத்மராஜன் அவன் இந்த ஒரு விஷயத்தில் வீக் என்று சப்பைக்கட்டு கட்டவே மாட்டார். அது பாட்டுக்குப் போகும். இன்றைய கல்லுடைப்பார்கள், மன்னிக்கவும், கட்டுடைப்பாளர்கள் அள்ளிக் கொண்டு கொஞ்ச அவரிடம் அப்படி பல சமாச்சாரங்கள் இருக்கின்றன. திங்கள் கிழமை நல்ல நாள் இல் கூட ஜானகி அம்மா பரம்பரை செருக்கு உள்ளவர் என்பது அப்பட்டமாக இருக்கும். பக்கத்து வீட்டுக்காரன் பசியால் அவர்களிடம் சோறு வாங்கி உண்டவன். இன்று அவரது பிள்ளைகள் உழைப்பினால் உயர்வை அடைந்தவர், அவருக்கு ஒரு வீட்டை வாங்க உரிமை இல்லையா என்ன? ஆனால் ஜானகி அன்றெல்லாம் முற்றத்தில் உட்கார வைத்து சாப்பாடு தருவோம், இன்று முடியுமா என்பார். ஒருபோதும் அவனால் என் முன்னே உட்கார முடியாது என்பார். சொல்லப்போனால் அவர் பக்கத்து வீட்டுக்காரனை மட்டுமா புறக்கணிக்கிறார்? இரண்டு மகன்களையும் அவர்களுடைய வீடுகளையும் புறந்தள்ளுகிறார். முதியோர் இல்லத்தை அடைந்த பிறகு யாருடைய முகத்தையும் ஏறிட்டு பாராமல், தியாகம் பேசாமல் அனைவரயும் மனதால் உதறி விட்டு செல்லுகிறார். பார்க்கும்போது நமக்கு உறுத்தக் கூடிய பகுதி. இம்மாதிரி ஒரு திரைக்கதை எழுதுவது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளுவது போல. இருந்த போதும் பலவீனங்களும், பலமும் சேர்ந்தது தான் மனிதப் பிறவி. அவைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் தான் ஒரு முகம் முழுமை பெறும். சொல்லப் போனால் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தவிர்க்காமல் சொல்லுகிற உண்மையின் அழகே அழகு.

Monday is a Good Day (1985) – MUBI

பெரியவனும் குடும்பமும் கிளம்பி செல்கிறார்கள். இனிமேல் ஒரு விடுமுறையிலாவது சேர்ந்து இருக்க வீடு இல்லை, மறக்காமல் கடிதம் எழுதிக் கொள்வோம் என்று பிரிகிறார்கள். ஜானகி அம்மா இறந்து போனது உண்மைதான். ஆனால் அந்த நாட்டுப்புறத்தின் அழகை கோபனின் குழந்தைகள் உட்கொண்டிருந்தன. அதுகளுக்கு ஆடு மாடு மரம் செடி கொடிகளும் குளமும் வேண்டும். ஆமாம், சின்னது குளத்தை விமானத்தில் எடுத்துச் செல்லலாம் என்று கூட சொல்லியிருக்கும். ஒரு விடியலில் பக்கத்துவீட்டுக்காரன் வீட்டை வாங்கத் தயாராக இல்லை என்பதை சொல்ல வருகிறான், இறந்து போன ஜானகி அம்மா நடமாடினால் அந்த வீட்டில் நான் உட்கார கூட முடியாது என்கிறான். கோபன் தனது நஷ்டங்களை எல்லாம் எண்ணிப் பார்த்து அவனை அடிக்கவே செய்கிறான். பழைய வீடு, பூட்டிவிட்டு சென்றால் சிதிலமாகி விடும். அப்போதுதான் அந்த மாற்று எண்ணம் வருகிறது. அம்மாவைக் கொன்றோம் என்கிற உள்மனதின் கொலைவாளுக்கு முன்னால் குறுகிக் கொண்டிருக்க வேண்டாம் என்றால் நாம் இங்கேயே இருந்து விட்டால் என்ன?

அவ்வீட்டின் முற்றத்தில் இனி அந்தக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்.

ஜானகி அம்மா பரவசத்துடன் அதைப் பார்த்திருப்பார்கள் கூட.

 

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.co.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.co.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.co.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

 

Leave a Response