Web Series

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 8

Spread the love

 

மம்முட்டிக்கு கதை சொல்வதற்கு பத்மராஜன் போயிருக்கிறார். ஒரு  அறையில் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து அவர் தனது கதையை சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார். அதற்கு எதிரே மம்முட்டி கட்டிலில் படுத்துக் கொண்டே அதைக் கேட்டிருக்கிறார். இதை அறியும்போது நமக்கு ஒரு உறுத்தல் உண்டாகிறது இல்லையா? பின்னொரு நாளில் அப்படி ஒரு உறுத்தல் உண்டாகி, இப்படி நடந்ததை பொது வெளியில் சொன்னவர் மம்முட்டி தான். அது எந்த அர்த்தத்தில் என்றால், நானெல்லாம் என்ன பெரிய ஆள், பத்மராஜன் போன்ற கலைஞனுக்கு முன்னால் நானெல்லாம் எம்மாத்திரம் என்கிற தனது அறியாமையை நொந்து கொண்டு சொன்னது. அவருக்கு அவ்விஷயத்தில் அவ்வளவு வருத்தம் இருந்திருக்கிறது.

Image may contain: 2 people, people smiling

கொஞ்ச காலத்துக்கு முன்பு இந்தப் பேட்டியைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு சொன்னவர் சுகா. நாங்கள் அப்புறம் பல டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பத்மராஜனைப் பற்றின வியப்புகள் பெருகியவாறு இருந்தன. இன்று வரிசையாக அவரது படங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையிலும் அது வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

முன்னமே சொன்னது போல, அவர் கோட்பாடுகளின் ஆள் அல்ல. மனம் பேசுவதைப் படைத்து தனது திரைக்கதையால் பல்லாயிரம் மனங்களோடு அவர் உரையாடல் நடத்த முற்பட்டார்.

Novemberinte Nashtam | Malayalam Full Movie | Madhavi ...

நவம்பரின்ட நஷ்டம் என்று ஒரு படம். அவர் எழுதி இயக்கியது தான். அதிகமாக போனால் ஐந்து அல்லது ஆறு கதாபாத்திரங்கள். மீரா என்கிற பெண்ணைப் பற்றினது கதை. அண்ணனுடன் இருக்கிறாள். அம்மா இல்லை. அப்பா வேறு ஒரு குடும்பத்துடன் செட்டிலாகிப் போனவர். என்னதான் அண்ணனுடன் பாசமாக இருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும், தாஸ் என்கிற ஒரு காதலனே கூட இருந்தாலும் தனிமை பழகாமல் மனதின் அடியே ஒரு பயம் ஓடிக் கொண்டிருக்க, தொடர்ந்து லூயி புனுவலின்  பெல்லி டி ஜோர் கதாநாயகி போல விபரீத கனவுகள் கண்டு கொண்டிருக்கிறாள் அவள். அது நடக்கிறது. எதிர்காலத்தை மட்டுமே கனவு காணுகிற அவளது காதலன் அவளை விட்டு செல்லுகிறான். அவளுக்கு சொல்லவொண்ணாத பாதிப்புகள் நிகழ்கின்றன. ஒருநாள் மீரா கிளம்பி சென்று அவனுடன் உடலுறவு கொண்டு அவன் தூங்கும் போது சர்வ நிதானமாகக் கொன்று முடிக்கும் போது படம் முடிவடைகிறது.

Past To Present Who Can Replace Mammootty Suhasini And Rahman If ...

இன்னொரு படத்தைப் பற்றிப் பார்க்கலாம். கூடெவிடே? மிகவும் பிரபலமான படம். கதை ஆலிஸ் என்கிற பெண்ணைப் பற்றியது.  ஒரு மலைப்பிரதேசத்தில் இருக்கிற பள்ளிக் கூடத்தில் ஆசிரியை. ஒரு அரசியல்வாதியின் மகனான ரவி மெல்ல மெல்ல ஆலிசுடன் இணக்கமாகி அந்தப் பள்ளிக்கே செல்லப் பிள்ளையாகி உயர்கிறான். ஆலிசுடன் அவனுக்கு ஒரு பிணைப்பு உண்டாகிறது. அந்த வயதின் மன ஓட்டங்களுக்கு அவளை அவன் தனது தாயாகவே நினைத்துக் கொள்கிறான். இருந்த ஒரு அண்ணனையும் விபத்தில் பறிகொடுத்து ஜார்ஜை ஆலிஸ் திருமணம் செய்வதாக இருந்த நேரத்தில் ஜார்ஜிற்கு ரவியைப் பிடிக்கவில்லை. அது மோதலாக வெடித்து வளர்ந்து ஒருநாள் ரவியை ஜார்ஜ் ஜீப்பில் துரத்த பிரேக் பிடிக்காமல் ரவி இறந்து போகிறான். ஜார்ஜ் ஜெயிலுக்குப் போகிறான். ஆலிஸ் தனிமையில் நிற்கிறாள்.

இந்த இரண்டு படத்திலும் பத்மராஜன் பேச விரும்பினது பெண்களைப் பற்றி.

அவர்களின் பிரச்சினைகள் அவர்கள் விரும்பின ஆண்களிடத்தில் இருந்தன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே உருவாகக் கூடிய உறவுகளில் இருவருடைய நிலைகளும் என்னவாக இருந்தன என்பதை இவ்விரு படங்களும் பேசின.

നഷ്ടമല്ല, മീരാ പിള്ള നവംബറിന്റെ ...

சிஸ்டம் போதிக்கிற நூறு வரையறைகளுக்கு ஒப்புக் கொடுத்திருந்தாலும் இயற்கையாக ஓடுகிற நதியைப் போன்றவள் பெண். விதி இருந்தால், அதிர்ஷ்டம் இருந்தால், சமாதனங்களுடன் தன்னை உயிர் வளர்த்து பிழைத்துப் போகிறவளாக இருந்தால் அவள் வாழ்வதும் தெரியாது. அப்படி வாழ்ந்து முடிவதும் தெரியாது. அதற்கு அப்பால் நின்று திரும்பிக் கேள்வி கேட்டவர்களின் கதைகள் இவை. ஒருவன் தாஸ். அவன் வாழ்க்கைக்கு பயப்படுகிறான். மீராவிடமும் பயப்படுகிறான். பெண்ணிடம் இருந்து தப்பி செல்கிற ஒரு வகை ஆண்களில் ஒருவன். அவன் படித்து வசதியாகி நல்ல செல்வ செழிப்பான பெண்ணைக் கட்டி அவளிடமிருந்து டைவர்ஸ் வாங்கி வந்த பின்னரும் மீராவின் காதல் முடிவடையவில்லை. கர்ப்பமடைகிறாள் கூட. தப்பித்து ஓடுவதற்கு நான் தான் தகப்பன் என்பதற்கு ஆதாரம் என்ன என்று அவனால் கேட்க முடியும். பெண் தரும் சுகத்தை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு அவன் அந்தப் பெண்ணை உதறித் தள்ளியாக வேண்டும். சொல்லப் போனால் அது ஒரு ஆணின் விடுதலை உணர்ச்சி. மற்றொரு புறத்தில் தப்பித்து ஓடுகிற கோழைத்தனம். தனக்கு ஓட வேண்டியிருக்கிற அவசரத்தில் இன்னல்களையும் அவமானத்தையும் இழைத்த, காதலை அவமானித்த  தாசை மீரா கொல்லாமல் எப்படி?

Malayalam full movie | P.Padmarajan Classic movie | Koodevide ...

அடுத்தவன் ஜார்ஜ். ரவியிடம் அசூயைக் கொள்ள வேண்டிய ஆள் தானா அந்த சிறுவன் ரவி? அல்லது ஆலீஸ் தான் அவ்வளவு காமம் ததும்பும் சாகசக்காரியா? ஜார்ஜின் அடிமனம் ஆலிசை அறியும். தனது பொறாமைகள் தரக்குறைவானவை என்பது தெரியும். என்னதான் அவன் பெண் அனுபவங்கள் கொண்டு இருந்தவனாக இருந்தாலும் கூட, ராணுவத்தில் இருந்து இழக்கிற சுரனைகளால் இங்கிதம் கெட்டவனாக இருந்தாலுமே கூட ஆண் முழக்கம் தவறு என்று அறிந்தவாறே இருந்து தனது விபரீதத்தை நிறுத்திக் கொள்ளாதவன். அவனுக்கு ரவி அல்ல சிக்கல். தனது சொல்லை கணக்கில் எடுத்துக் கொள்ளாத பெண்ணை தனது அதிகாரத்திற்குள் கொண்டு வர எண்ணுகிறான். தன்னை ஸ்தாபிக்க முயலுகிற அவனது நோய் மனம் தான் அவனது சிக்கல். காதலோ, கல்யாணமோ ஒருவிதமான ஆரம்ப மோகங்களுக்கு அப்புறம் வெற்றியடைவது யார் என்கிற மோதலில் ஆணின் மனம் மிகவும் காயப்பட்டு விடும். தான் காண விரும்பிய பெண்ணை செதுக்க அவன் வலுக்கட்டாயமாக முயலும்போது தான் இதுவரை பார்க்காத வேறொரு ஆணைக் கண்டு திடுக்கிடுகிறாள் பெண். நீ எனக்கு வேண்டுமா என்பதையே யோசிக்க வேண்டியிருக்கிறது என்பதாக ஆலிஸ் சொல்லும்போது அங்கே முற்றும் தோல்வியடைகிற ஜார்ஜ் அவளது மீது கோபத்தை காட்ட முடியாமல் போக, கண்ணில் படுகிற ரவியை முட்டுகிறான். அவன் இவனை தாக்கி விட்டு தப்பி செல்ல ஜார்ஜ் அவனை  ஜீப்பில் துரத்துகிறான். ஒரு கட்டத்தில் அவனை சாகடிக்கக் கூடாது என்று முந்தியபோதும் விபத்தாக ஜீப் மோதி ரவி செத்து முடிக்கிறான். ஜார்ஜ் ஜெயிலுக்குப் போகிறான். ஆலிஸ் தனியாக நிற்கிறாள்.

தான் இருக்கிற பாட்டில் வாழ முயன்றாலும் பெண்ணில் வந்து அவளுடைய மூச்சுக் காற்றைப் பிடுங்கிக் கொள்கிற இந்த ஆண்கள்.

Koodevide (1983) | Koodevide Malayalam Movie | Movie Reviews ...

இந்த இரண்டு படங்களையுமே பெரும்பாலான ஆண்கள் விரும்ப மாட்டார்கள் என்று படுகிறது. அந்த காலத்தில் எப்படி இந்தப் படங்கள் எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்பதும் சரிவரப் புரியவில்லை. அது போகட்டும், இன்றுமே கூட அங்கிருந்து இந்த விஷயங்கள் ஒரு அங்குலமாவது நகர்ந்து மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் கிடையாது. வேண்டுமெனில் கொஞ்சம் புரட்சிகர கோஷங்கள் நிரம்பியிருப்பதைத் தவிர. இதில் நாம் பார்க்க வேண்டியிருப்பது என்னவென்றால் பத்ம ராஜனின் இந்த இரண்டு திரைக்கதைகளுமே யாரையுமே படம் பார்க்கிற அளவில் ஒரு மொழியைப் பேசியது. அதாவது நாம் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற போது, நாம் உண்மைகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற நம்பகத்தன்மை. படத்தில் வருகிற ஆண்களை தன்னையே நிலைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல தோன்றிய பிறகும் பத்மராஜனிடம் ஒரு ஆட்சேபனை தோன்றுவதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை. உண்மையில் மாஸ்டர்களின் வெற்றி அங்கே தான் இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கிறோமா?

ஒரு கதையை திரைக்கதையாக சொல்லுவதற்கு அடிப்படை கதாபாத்திரங்களின் கூட  பிற பாத்திரங்களை உபயோகப்படுத்துவது வழக்கம். பத்ம ராஜன் அதற்கு மிகக் குறைந்த ஆட்களையே எடுத்துக் கொள்வார். ஆனால் அவைகளின் உறுதி அவ்வளவு தரம் கொண்டிருக்கும்.  நவம்பரின்ட நஷ்டம் படத்தில் மீராவின் அண்ணனாக வருகிறவர் பெரும் மனம் உள்ளவராக காட்டப்படுவார். ஏறக்குறைய அவரது வாழ்வே தங்கையைப் பார்த்துக் கொள்வதில் தான். அவளது சிறு அசைவைக் கூட கவனித்து கவலைப்படும் மனம் அவருடையது. படம் வளர்ந்து செல்லும்தோறும் நாம் அவருடைய கண்களால் மீராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் கவனம் கொண்டாலே புரிந்து விடும். மீரா தனிமையாகும் பொழுதுகளை நாம் வெறிக்கிறோம். அவளது மனம் குழம்பி மெதுவாக நோயாளியாகி மறையும்போது நமக்கு பதட்டம் உருவாகிறது. அவள் ஒருவாறு தேறி வந்து புழங்குகையில் அடுத்தது என்ன என்று பயம் கொண்டிருக்கும்போது மருத்துவமனையில் யாரோ ஒருவர் செயலால் அவள் கர்ப்பமடைந்திருக்கிறாள் என்பது ஒரு இடி விழுவதாக வருகிறது. கடைசியாக அவள் தாசைக் கொலை செய்யப் போகும்போது தான் கொஞ்சம் விடுபட்டு நாம் பார்ப்பது சினிமா என்கிற உண்மையை தொட முடியும். அப்படி நமது மனதை பயணம் செய்ய வைக்கிற இந்த சிறிய படத்தில் வேறு ஒரு பாத்திரமும் உண்டு. அண்ணியாக வருகிறவர். நமது எதிர்பார்ப்புகளை நொறுக்கி இறுதி வரை அவர் தனது குணங்களைக் கை விடாததில் பத்மராஜனின் எழுத்துக்குப் பொறுப்புண்டு. அதைப் போலவே மீராவின் தந்தை. படத்தின் போக்கில் கதியற்றவர். அவரைப் பரிதாபப்பட நமக்கு ஒரு தயக்கம் இருக்கும்.  அவருடைய கடந்தகால நடவடிக்கைகளே இப்படத்தின் மொத்த விளைவுகளுக்கும் அடிப்படை காரணம்.

Malayalam Full Movie || Padmarajan Classics || KOODEVIDE ...

கூடெவிடே படத்தின் கதை வாஸந்தி. அதை பத்மராஜன் திரைக்கதை செய்தார். அதைப் போல இந்நலே என்கிற படமும் அப்படியே.

நானறிந்து முன்பு தொடர்கதைகள் அல்லது நாவல் எழுதின பெண்களில் வாஸந்தி மிகுந்த தனித்துவம் கொண்டிருக்கவில்லை என்பதாக தான் நினைவு. ஆனால் அவரது கதைகளில் மெல்ல மெல்ல மனதை வெல்லும் போக்கை படித்திருக்கிறேன். காலப்போக்கில் மனத்தால் நெருங்கிக் கொள்பவர்களை அவர் நிதானமாக கதை சொல்லியிருக்கிறார். வாஸந்தி கற்பனை செய்த ஆலிசை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றால், அதை திரைக்கதையாக்கிக் கொண்டு வந்து வந்து படத்தில் அவளை உயிர் கொள்ள வைத்து விட்டதில் நிகழ்ந்தது மனம் மனதை தொடர்வதில் இருக்கிற மேதமை தான். நான் நம்புவது சரியா தவறா என்பது தெரியாது. வாழ்வைப் பற்றின மனிதர்களைப் பற்றின யோசனைகள் முகிழ்ந்து அவர்கள் மீது  பரிபூரண ஆசை கொண்டவர்களினால் தான் சரியான முறையில் கடவுளையோ, சாத்தானையோ படைக்க முடியும். திறமை, அறிவு, சாதூர்யம், மதிநுட்பங்கள் போன்ற யதார்த்த காரியங்களுக்கு அப்பால் படைப்பாளி விருப்பு வெறுப்பற்ற ஒரு வெறுமையில் அவன் தன்னை நிலவ வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவனால் தான் காற்றில் எழுத முடியும். அல்லது விநோதங்களை புனைய முடியும். ஒரு படைப்பின் சரியான நீதியை வந்து அணைய முடியும்.

Advaid അദ്വൈത് 🌹 on Twitter: "Director Padmarajan with ...

அவர் தனது இறுதிக் காலங்களில் சினிமாவை விட்டுவிட்டு எழுதிக் கொண்டிருக்க விரும்பியிருக்கிறார். கூட்டம், சத்தம், ஓங்கி அறைகிற யதார்த்தங்கள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு தனிமைக்கு ஒதுங்கி எழுதியவாறு இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்ததை அவரது மனைவி பல பேட்டிகளில் சொல்லியிருந்ததைப் பார்த்தேன். ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் கூட விட்டு விட எண்ணும் துணிச்சல் இருக்கிறது இல்லையா, அதற்கு ஒரு தூய மனம் வேண்டும்.

அதன் விளைவுகளே அவருடைய படங்கள்.

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.co.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.co.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.co.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

 

 

 

Top Reviews

Video Widget

gallery