Web Series

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 20

 

மனம் முழுக்க ஷோபனா நிறைந்து ததும்பி நின்றதனால் ‘ இந்தலே ‘ எனக்கு மறக்கவே முடியாத படம். அப்படி நிறைந்து நின்றதற்கு அந்த கேரக்டர் தான் காரணம் என்பது பின்னால் புரிந்தது. அந்த கேரக்டர் அப்படி உறுதியாக நின்றமைக்கு திரைக்கதை தான் காரணம் என்பதும் புரிந்து வரத்தானே செய்யும்? ஒரு பஸ் நிலை குலைந்து கரையில் இறங்கி ஒரு ஆற்றுக்குள் விழுந்து விடுகிற விபத்தில் உயிரோடு மீட்கப்பட்டவள் அவள். ஆனால் அவளுடைய எல்லா நினைவுகளும் வடிந்து தான் யார் என்கிற துழாவலில் துன்பப்படுகிறாள். கடந்த காலத்தை முற்றிலுமாக தவற விட்டுவிட்டு யாராவது நிகழ் காலத்தில் காலுன்றிக் கொள்ளுதல் சாத்தியமா? ஒரு மனிதன் தன்னை முழுமையாக ஆராய்ந்து அறிய விரும்பினால் அது மொத்தமும் நினைவுகளின் தொகுப்பு மட்டுமே என்பதில் ஐயமில்லை. அவள் அம்னீஷியா பேஷண்டாக படுத்திருந்த மருத்துவமனையின் அதிபர் டாக்டர் சந்தியாவின் மகன் சரத் தன்னுடைய ஆதரவுக் கரத்தை நீட்டும்போது வெட்ட வெளியில் நிற்பதாக இருந்த அவள் சிக்கென அதைப் பற்றிக் கொள்கிறாள். அது காதலாக மாறும் முன்னே அவளுக்கு அவன் மாயா என்று பெயரிடுகிறான். அது ஒரு பொருத்தமான பெயர் தான். அவள் தான் யார் என்பதை அறிய செய்கிற முயற்சிகள் தோல்வியடைகின்றன. போலீசாரும் மற்றும் பலரும் ஒரு கட்டத்தில் விலகிச் செல்கிறார்கள்.

Old Malayalam Movie Stills - Innale - OLD MALAYALAM MOVIE STILLS

ஒரு கட்டத்தில் சரத்தும் மாயாவும் காதலர்களாக நடக்கிறது. அதுதானே கதையும் கூட?

டாக்டர் சந்தியாவிற்கு ஒரே ஒரு அச்சம் தான். 

அவளுடைய முன் வாழ்க்கையை அறியாமல் அவளைத் தனது மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த நினைப்பு நியாயமானது. நரேந்திரன் என்கிறவன் விபத்தில் தவறிய தன்னுடைய மனைவி துளசியைத் தேடிப் புறப்பட்டிருக்கிறான். சந்தேகமில்லை, மாயா தான் அந்தத் துளசி. அவன் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறான். தான் காதலிக்கிற பெண்ணுக்கு திருமணமாகி விட்டது, அந்தப் பெண்ணின் புருஷன் அவளைத் தேடி வருவதென்றால்? அப்படி நடக்கக் கூடாது என்கிற பிரார்த்தனைக்கு அப்பால் அப்படியே இருந்தாலும் அவளை விட்டுக் கொடுக்க முடியுமா என்கிற துடிப்பில் கொந்தளிக்கிற சரத்தின் மழுப்பல்களை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புன்னகையோடிருக்கிற ஒரு தீவிரத்துடன் நரேந்திரன் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது. அது அவனும் அவனது மனைவியும் எவ்வளவு மனப்பொருத்தம் கொண்டு ஒருவரில் ஒருவர் ஒண்டிக் கொண்டிருந்தனர் என்பதைப் பற்றியது. அந்த ஊரை அடைந்து அங்கே இருப்பது துளசி தான் என்றால் அவள் எவ்வளவு ஞாபக மறதி கொண்டு இருந்தாலுமே, அவனைப் பார்த்த கணம் அவள் அவனைக் கட்டிக் கொள்வாள். எந்த வியாதியும் அவர்களுடைய காதலுக்கு குறுக்கே காலை நீட்டாது. நரேந்திரன் பரஸ்பரம் அவர்களுக்குள் வைத்திருந்த அன்பை நம்புகிறான். மனதில் குரல் போல. அல்லது ஒரு நல்லவனாக இருக்கப்பட்டவன் நீதி நியாயம் தர்மத்தை நம்புவது போல அது.

இருக்கட்டும்.

கணத்துக்கு ஒருமுறை கூட தன்னை முகம் மாற்றியவாறு இருக்கிற பூமி. செல்கள். காலம். வாழக்கை முறைகள். மனித மனம். ஆனால் நாம் நமது அன்பைப் பற்றி மட்டும் உறுதியாக ஒன்றை நம்புகிறோம். நம்முடைய அகங்காரம் என்றுமே கூட அதைப் பகுக்க வேண்டும். ஒருவர் மீது வைத்திருக்கிற அன்பை மடைமாற்ற முடியாது என்பதற்கு அப்பால் மாற்றக் கூடாது என்கிற விதிகளை பேணியவாறு இருக்கிறோம். துரோகிகளைப் பற்றின கசப்பை சொன்னால் அந்த ருசியை அறியாதவர் யார்? எனவே நாம் நமது வளையத்துக்குள் இருக்கிற ஆளைப் போற்றுவதால், அதை விட்டு நகர்ந்து போவோரை வெறுப்பதால் நாம் அன்பை ஒரு பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

எனினும், அது பல நேரம் அதிர்ஷ்டத்துக்கு விழுகிற சீட்டாகக் கூட இருக்கிறது என்பதை கவனிக்காமல் இருக்கிறோம்.

அதுவும் இருக்கட்டும்.

வாஸந்தி எழுதின கதையைத் தான் பத்மராஜன் திரைக்கதை செய்திருக்கிறார்.

கவிதை பாடும் அலைகள் என்கிற பெயரில் தமிழில் இயக்குனர் ஸ்ரீதர் செய்திருக்கிறார். அது சரியாக வரவில்லை என்பது தெரியும்.

பாக்கியராஜ் கூட இக்கதையின் மையப் புள்ளியை வைத்துக் கொண்டு ஒரு படம் செய்திருக்கிறார். பெயர் மறந்து விட்டேன்.

Old Malayalam Movie Stills - Innale - OLD MALAYALAM MOVIE STILLS

சொல்லப் போனால் சில நாடகங்கள், திருப்பங்கள் இருந்தாலுமே இதை மகத்தான கதை என்று வரையறுத்து விட முடியாது. பெரிய நம்பிக்கைத்தன்மை உள்ள கதையாகவும் சொல்ல முடியாது. இந்தக் கதையை வைத்துக் கொண்டு சத்தமான ஒரு சில்லறைக் காவியம் பண்ணிக் காட்ட முடியும். ஏற்கனவே சீரியல்களில் வருடக்கணக்கில் வைத்து இந்த விளக்கை எல்லா பக்கமும்  தேய்த்து எவ்வளவோ பேர் பணம் பார்த்து இருக்கிறார்கள். அப்படியெல்லாம் இருக்க இப்படம் எந்த திக்கில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?

இந்தத் தொடரில் நான் பலமுறை சொல்ல வேண்டி வந்திருக்கிறது. நல்ல திரைக்கதை என்பதே ஒரு மனம் தான். அதன் போக்குகள் தான். அதன் குனநலமும் தான். அதன் தொடர்ச்சி மற்றும் அது சம்மந்தப்பட்ட எதிர்பார்ப்புகள் எல்லாம் இதில் அடங்கும். பத்மமராஜனின் மாயா அல்லது துளசி என்பவள் கணிசமாக படத்தை எடுத்துக் கொள்வது பற்றி முன்பே சொன்னேன், அவள் விபத்தில் சிக்கி தன்னுடைய பெயருக்கு திக்குகிற ஞாபக மறதி நோயாளியாக ஆகிற கதையின் முதல் முடிச்சு ஒரு அதிர்ச்சியை உண்டாக்கினாலும், அதை வைத்துக் கொண்டு ஏதேனும் கதை சொல்லி தொடருவது சில்லியாக மட்டுமே இருக்கும். இப்படத்தில் கூட வருகிற சம்பவங்கள் கூட ஓரளவில்  அப்படிப்பட்டவையே. ஆனால் மாயாவை பத்மராஜன் கவனமாக தொடர்கிறார். நான் யாரென்று அறியாத நிலையின் திக்பிரமையில் இருந்து அவள் ஒரு அமைதியும் சாந்தமுமான பெண்ணாக இருப்பது நல்ல அவதானிப்பு. மெல்ல நிற்கும் நிலத்தில் காலூன்றி, காதலன் இருக்கிற பின்னணியில், அவள் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் கொணரும் தருணங்களை பத்மராஜன் வரிசைப் படுத்தியவாறு வருவதில் உள்ள நுட்பம் எல்லோருக்கும் பிடிபட்டிருக்காது என்றாலும் படத்தை விரும்பியவாறே தொடர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவள் நரேந்திரனின் துளசியாக இருந்த போது இருந்த உடல்மொழி மனமொழி எல்லாமே ஒரு கட்டத்தில் முழுமையாக வெளிவந்து அவள் முழுமையாக கேரக்டர் உள்ள பெண்ணாக இருக்கும்போதுதான் நரேந்திரன் அவளை வந்து பார்க்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். ஆமாம், நரேந்திரன் வந்து பார்ப்பது அவன் அறிந்த துளசியை. நாம் இப்படத்தில் நம்மை இழக்கக் காரணம், மாயாவின் முழுமை தான். பத்மராஜன் அதை அசாத்தியமான பொறுமையுடன் சாதித்து எடுத்திருக்கிறார் என்பதையே தான் திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்.  

Old Malayalam Movie Stills - Innale - OLD MALAYALAM MOVIE STILLS

படத்தின் ஹீரோவும், மாயாவினால் காதலிக்கப்படுபவனான சரத் அந்த மருத்துவமனைக்கு முதலாளி. பெரிய வீடுகளும் கிளப்பும் ஸ்கூலும் எல்லாம் அவனுக்கு சொந்தமாக இருக்கின்றன. மேனன் சாதி வகுப்பு. ஒரு தன்னம்பிக்கை மிக சாதாரணமாகவே இருக்கும். எங்கிருந்தோ வந்து சேர்ந்த பெண்ணின் மீது விருப்பப்பட்டு ஆதரவு கொடுத்து அவளுடைய காதலை முயன்று பெற்றும் விடுகிறான். அது அவனால் முடியும் என்பது மட்டுமல்ல, அவன் இடத்தில் இருந்திருந்தால், யாருமே அந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியும். இப்படிப் பார்த்தால் நரேந்திரன் டாக்டரேட் வாங்கியவன், முதிர்ச்சி அடைந்த ஒரு ஜென்டில் மேன். அவன் உலகம் நல்ல செல்வந்தனுக்கு உரியது தான். ஆனால் மாயா என்கிற துளசியை அடைந்தது அபூர்வமான ஒரு வழியில். அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் எல்லாமுமாக இருந்தார்கள். அவர்களுக்கு மேலே மேலே வாழப் போவதற்கான கற்பனைகளும், சாத்தியக் கூறுகளும் அற்புதமான விதத்தில் இருந்தன. இளமையும் காலமும் கூட அதற்குக் காத்திருந்தது. இப்போது அவை யாவும் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. நரேந்திரன் சரத்துடன் ஒரு நண்பன் போல அவள் தங்கியிருந்த வீட்டுக்கு வருகிறான். அவள் சலனமே அடையவில்லை. சரத்துடன் தனக்கு இருக்கிற நெருக்கத்தை சரளமாகக் காட்டிவிட்டு இருவருக்கும் காப்பி போட உள்ளே செல்லுகிறாள். பாருங்கள், இப்போது நரேந்திரனுக்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. அவனிடம் அவர்கள் இருவரும் தம்பதிகளாக இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நியாப்படி மட்டுமல்ல சட்டப்படி கூட வெகு அலட்சியமாக அவளை அழைத்துக் கொண்டு செல்ல அத்தனை உரிமைகளும் இருக்கின்றன. வழிகளும் இருக்கிறது. இன்னொருவனை விரும்பி அவன் மனதில் விழுந்து விட்ட அவளை எப்படி திரும்ப அழைத்துக் கொள்வது?

விழுந்து விழுந்து செலுத்தின அவளுடைய அன்பு இப்போது வெறும் இறந்த காலம். அதற்கு திரும்பி செல்லவே முடியாது.

( இதைப் போலவே வேறு ஒரு படத்தில் காலத்துக்கு திரும்பி செல்ல முடியாத வேறு ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. பாலு மகேந்திரா சொன்ன மூன்றாம் பிறை. )

நரேந்திரன் தனது துளசியைக் காண முடியாத துயருடன் மாயாவை தனது மனைவி அல்ல என்று மறுத்துவிட்டு செல்லுகிறான்.

Old Malayalam Movie Stills - Innale - OLD MALAYALAM MOVIE STILLS

திரைக்கதை என்ன என்பது பற்றின ஒரு யோசனை இருக்கிறதோ இல்லையோ வட்டம் போட்டு உட்கார்ந்து பீடி சுற்றுவது போல பலரும் செய்கின்றனர். பலவேறு திசைகளில் இருந்து பொறுக்கி வந்த அறிவை தேவையோ, இல்லையோ அதன் மீது பிரயோகம் செய்கின்றனர். ஒரு கதை அல்லது இலக்கியம் , படைப்பு போன்றவை எல்லாம் என்ன, எப்படிப்பட்டவை என்றெல்லாம் கூட அறிமுகம் இல்லாதவர் இரண்டு மூன்று படங்களை எல்லாம் கூட எடுத்து முடித்து வெற்றியாளராக அறியப்பட்டு மீடியாக்களில் உட்கார்ந்து மக்களுக்கு திரைக்கதை பற்றின பாடம் எடுப்பதை எல்லாம் இப்போது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் மாடு சாணிப் போட்டு செய்தியாகி விட்டால் அது பற்றி எல்லாம் திடீர் கட்டுரை எழுதி விடுகிற, அறிவுஜீவி என்று நம்பப்படுகிற ஒருவர் படம் யாரைப் பற்றி கதை சொல்லுகிறதோ அவரில் இருந்து துவங்கி அவரிலேயே அது முடிய வேண்டும் என்பதாக இலக்கணம் பினாத்தியிருந்தார்.

இந்தப் படம் விபத்தில் துவங்கி அந்தப் பெண்ணைத்தான் தொடர்ந்து வந்தது.

ஆனால் முடிக்கவில்லை. படத்தின் இறுதி வரையில் வந்திருந்த அவள் கொஞ்சமே சொல்லப்பட்ட நரேந்திரனை கைவிட்டு முடித்த உடன் அவன் பக்கம் திரும்பி அவனது கார் நீண்ட பாதையில் செல்லுவதை துயருடன் சொல்லிக் கொண்டு படத்தை முடிக்கிறது. ஏனெனில் படம் தனது முடிவாகக் கூறுவது ஒன்றை மட்டுமே. நஷ்டங்கள் பல்வேறு சூழல்களால் உருவாக்கப்படும். நஷ்டமடைந்தவனுக்கு மட்டுமே அந்த வலி. படம் நஷ்டப்படுத்திக் கொண்டிருந்தவர்களைக் காட்டிக் கொண்டிருந்து நஷ்டப்பட்டவனை குறிப்புணர்த்தி சொல்லி முடிந்தே விடுகிறது. நான் சொன்ன அறிவு ஜீவிகளுக்கெல்லாம் இலக்கணம் முக்கியம்.

பாத்மராஜன் என்கிற கலைஞனுக்கு தோல்வி அடைகிறவர் மீது இருக்கிற பரிவு முக்கியம்.

Watch Innale | Prime Video

***

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.co.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.co.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.co.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/

தொடர் 15ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-15/

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-16/

தொடர் 17ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-17/

தொடர் 18ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-18/

தொடர் 19ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-19/

Leave a Response