Web Series

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 12

Spread the love

 

நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள் படத்தைப் பற்றி இரண்டு அத்தியாயங்களாக எழுதினேன். இன்னும் சொல்லாமல் விடுபட்டதாக பல விஷயங்கள் தோன்றியதே தவிர, அதிகம் எழுதியதாக படவில்லை. பத்மராஜன் தனது திரைக்கதைகளில் அவ்வளவு வைத்திருக்கிறார் என்பது தான் நான் சொல்ல வருவதின் சுருக்கம். கட்டுரைகள் படித்து பின்னால் ஒருவேளை கொஞ்சம் மக்கள் அவருடைய படங்களை அப்படி பார்க்க போகிறார்கள் என்றால், நானே எல்லாவற்றையும் சொல்லி முடித்திருக்கக் கூடாது என்கிற ஒரு நெறியை முடிந்த வரையில் தொடர்கிறேன். எனது கட்டுரைகளில் சொல்லப் பட்டதையும் மீறி படத்தில் வியந்து போக பலவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  கரியிலா காற்று போலே என்கிற இந்தப் படமும் முழுமையாக சொல்லி முடித்து விடக் கூடிய கதை அல்ல.

Kariyilakkattu Pole (1986) | Kariyilakkattu Pole Malayalam Movie ...

அதே நேரம் இதை ஒரு துப்பறியும் படம் போலவோ, த்ரில்லர் போலவோ மயங்கி விடக் கூடாது என்று முதலிலேயே எச்சரிக்கிறேன்.

சில கதைகளை விஸ்தீரணம் செய்ய முடியாது.

அவைகளை சுருக்கமாக சொல்ல வேண்டியிருக்கும்.

அதன்படி பாய்ன்ட் ஆப் வியு என்கிற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு குறுக்குவெட்டுத் தோற்றங்களில் துண்டு துண்டாக கிடைக்கிற உண்மைகளை மட்டும் தொகுத்து செல்கிற முறையை பத்மராஜன் கையாண்டிருக்கிறார்.அந்த உத்தி வழியாகவே  இப்படத்தின் கதை மாந்தர்களுடைய முழு வாழ்வையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்கிற அளவில் அவர் தனது திரைக்கதையில் வெற்றி பெற்றிருக்கிறார். வழக்கமான துப்பறியும் கதைகளில் வந்துவிடக் கூடிய தட்டையான வெறுமை படத்தின் எந்தப் பகுதியிலும் கிடையாது. படத்தின் மூலக்கதை, ஒரு நாவல். சுதாகர் பி நாயர் என்பவர் எழுதியிருக்கிறார். திரைக்கதை வழக்கம் போலவே பத்மராஜன்.

ஹரி கிருஷ்ணன் என்கிற திரைப்பட இயக்குனர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான் படத்தின் துவக்கம்.

Image may contain: 5 people, people smiling, closeup and indoor

அவர் நல்ல படங்களை செய்பவராக இருந்திருக்கிறார். தனிமை விரும்பியாக இருந்திருக்கிறார். உட்கார்ந்து எழுதுவதற்கு தனியாக ஒரு வீட்டை தேர்ந்து கொண்டு நண்பர்கள் கூட இல்லாமல் இருந்திருக்கிறார். பெண்கள் சகவாசம் உண்டு. அதைப் பற்றி பேச்சுக்கள் உண்டு என்று சொல்லும்போது, அதில் உண்மைகளும் வதந்திகளும் உண்டு. படம் பார்த்து முடிக்கையில் நாம் அறிந்து வருவது, அவர் எப்போதும் தனது குண நலன்களைப் பாதுகாப்பவரோ, தவறாக நினைக்கிறவரிடம் தன்னை நிருபிக்க முற்படுபவரோ அல்ல. நல்லது எனில் நல்லது, கெட்டது என்றால் கெட்டது எல்லாம் அவரிடம் இருக்கிறது. பார்க்கிறவர் கோணங்களில் அவரால் நிமிரவும் முடியும். சரியவும் முடியும். சர்ச்சையும் சண்டையுமாக தான் அவரது சம்சார வாழ்க்கை இருந்திருக்கிறது. நிரந்தரப் பொறாமையுடன் ஒரு கணமும் நிம்மதியின்றி அவரைக் காதலித்து கல்யாணம் செய்த மனைவி தனது வாழ்வில் தோற்றுப் போயிருக்கிறாள்.

இப்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது ஒரு பெண்ணினால் என்று கிடைத்த சில தடயங்களால்  முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

எவ்வளவு பெண்கள் அவரது வாழ்வில்?

இறுதியாக, சினிமா காலத்துக்கு முன்னால் ஆசிரியராக இருந்த ஹரி நேசித்திருந்த பார்வதி என்கிற சாமியாரிணியை அடைகிறோம். 

അറം' അങ്ങനെ 'കരിയിലക്കാറ്റുപോലെ' ആയി ...

அவள் நிச்சயமாக கொலைகாரியாக இருக்க முடியாது. ஆனால் அவளுக்கு வேறு பல விஷயங்களும் தெரியும். அவள் அதை சொல்ல மறுக்கிறாள். கைதான பின்னரும் மிக உறுதியுடன் நான் அதை சொல்ல முடியாது என்கிறாள். அதன் சித்திரம் தெளியும்போது ஷில்பா என்கிற இளம்பெண் ஹரியுடன் தனக்கு இருந்த உறவை சொல்ல வருகையில் தன்னுடைய அம்மா அதைத் தடுத்துக் கொண்டே இருந்ததையும் சொல்ல வேண்டியிருக்கிறது. உண்மையில் ஷில்பா ஹரியின் மகள். அவளுடைய அம்மாவின் பார்வைக்கு ஒரு பெண் பித்தனான ஹரி தனது மகளையும் நாசம் செய்து விடக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. கத்தி எடுத்துக் கொண்டு அவனை முடிக்கப் போனாள். அதற்கு முன்னால் வேறு யாரோ அவரை முடித்திருந்தார்கள்.  

இப்படத்தின் திரைக்கதை என்பது இப்போது நான் சொன்ன ஆர்டருக்கு முற்றிலும் எதிரானது. ஹரி கொலை செய்யப்பட்டு அதை துப்பறிய வருகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. பெயர் அச்சுதன் குட்டி. முற்றிலுமாக அவர் கண்டுபிடித்தவாறே வரும் உண்மைகளின் மூலம் நாம் இந்தக் கதையை அறிந்தவாறு வருகிறோம். முக்கியமாக நல்ல ரசனையுள்ள சினிமா ரசிகர்கள் பத்மராஜனின் திரைக்கதையை வியந்தவாறே வர வேண்டும். ஏனென்றால் ஒரு மாபெரும் வாழ்க்கை நாடகத்தை நாம் பார்த்து முடித்திருக்கிறோம். யார் எந்த காரணத்துக்காக யாரை கொலை செய்தார் என்பதெல்லாம் வெறும் ஒரு சாக்கு. பத்மராஜன் சொல்லிமுடித்த படமே வேறு.

எந்தக் குருரங்களுக்கு பின்னாலும் ஒருவேளை இருந்து மிஞ்சுகிற அன்புக்கு படம் மரியாதை செலுத்துகிறது.

அவருடைய மிக நல்ல படங்களில் இது மிக மிக முக்கியமானது. 

படத்தின் முக்கிய அங்கமாக இருக்கிற ஒரு கதாபாத்திரத்தை விளக்குவதன் மூலம் ஹரி உள்ளிட்ட மற்ற நபர்களை மேலும் அறிந்து கொள்ள முடியும் என்கிற அளவில் நாம் அவரைப் பற்றி பார்ப்போம். ஷில்பாவின் அம்மா, அவர் படத்தின் முதுகெலும்பு. படம் துவங்கி ஓடிக் கொண்டிருக்கும் போதெல்லாம் நாம் அவரை அவ்வளவாகக் கண்டிருக்க மாட்டோம். ஸ்ரீபிரியா அந்த பாத்திரத்தை அட்டகாசம் செய்திருந்தார். 

Image may contain: 6 people, people standing

ஹரி கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கே பார்வதியும் ஸ்ரீ பிரியாவும் இருக்கிறார்கள். கோபிகைகளுக்கு நடுவே ஸ்ரீ கிருஷ்ணன் போல மிதந்து கொண்டிருந்த ஹரி மீது ஸ்ரீ பிரியாவிற்கு வெறுப்பு. ஆனால் பார்வதிக்கு மோகம், அது தீவிரமான காதலும் கூட. தன்னை விட சிறியவளும், ஊர்க்காரியுமான பார்வதி சற்று அசடுமே கூட. ஸ்ரீ ப்ரியா அவளை காபந்து செய்ய நினைக்கிறாள். ஆனால் பார்வதி கட்டுக்குள் வருவதில்லை. இது தொடர்பாக ஹரியிடம் மோத வேண்டி வருகிறது. ஒருமுறை இருவரும் முத்தமிட்டுக் கொண்டு நிற்பதைப் பார்க்கிறாள். கல்லூரியில் பெண்களுடன் நாடக ஒத்திகையில் இருக்கிற ஹரியை அவள் நேரடியாக மிகக் கடுமையான மொழியில் விமர்சனம் செய்ய, அவன் அதற்கு இரண்டு மடங்காக அவளை தாக்குகிறான். யாருமே ஏறிட்டு பார்க்க முடியாத முரடாய் இருந்து கொண்டு இளமையும் தவறி காம்ப்ளக்சில் உழலுகிற உனக்கு எரிவது வெறும் பொறாமை என்கிறான் அவன். உணர்ச்சிகளைத் தீர்த்துக் கொள்ள ஏதாவது தெருவில் சென்று நில்லு, யாராவது லாரி டிரைவர்கள் கிடைப்பார்கள் என்கிற வார்த்தைகள் அவளை பைத்தியமாக்குகிறது. கொல்லத் தோன்றிவிட்ட வெறியுடன் அவனது இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் அவனை அறைகிறாள். மேலே நடப்பதுதான் கதையின் உச்சம். ஹரி அவளை துகிலுரிந்து, படுக்கையில் தள்ளி பலாத்காரமே செய்கிறான். ஒரு ஆணின் உச்சபட்ஷ அகங்காரம் முழுமையாக சொல்லப்படும். எல்லாம் முடிந்து அவர்கள் படுக்கையில் இருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. பார்வதி இருவரையும் பார்க்கிறாள். மனம் பதற திரும்பிப் போகிறாள்.

அந்த சம்பவத்தால் பணியை விட்டுவிட்டு மூவரும்  மூன்று திசைக்குப் போகிறார்கள். மூவருடைய வாழ்க்கையும் வேறு ஒன்றாகிறது.

Image may contain: 3 people, people sitting and indoor

ஸ்ரீ பிரியா நைஜீரியாவில் எட்டு வருடம் தனது மகளுடன் இருந்திருக்கிறார். கணவன் இறந்து போன பிறகு விதவை என்கிற கட்டுக்கதை அவளுடைய வாழ்க்கையாக இருந்திருக்கிறது. மகள் ஹரிக்கு பின்னால் சுற்றுவது என்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. பார்வதியைப் போலவே தன்னை மீறி செல்கிற மகளை அடைத்துப் போட்டுவிட்டு ஹரியை கொல்ல செல்கிறவள் அங்கே ஷில்பாவிற்காக இருந்த கிப்ட் பொதியை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறாள். வீட்டில் வந்து அதைப் பிரித்துப் பார்க்கையில் அவை அனைத்தும் ஹரி எழுதின புத்தகங்கள். ஷில்பா விரும்பிக் கேட்டவை தான் அவை. எல்லாவற்றிலும் ஹரியின் கையெழுத்து போடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல. நீ தீவிரமாக வெறுக்கிற உன் அப்பனிடமிருந்து தன் மகளுக்கு என்று எல்லா புத்தகங்களிலும் எழுதி ஹரி நான்தான் உனது தந்தை என்று அவளுடைய பிறந்த நாளில் சொல்ல முடிவு எடுத்து இருந்திருக்கிறான். உண்மையில் ஸ்ரீபிரியா முதலில் இருந்தே ஹரியை விரும்பியிருக்க வேண்டும். பார்வதியின் காதலை ஒப்புக்கொள்ள முடியாமல் ஒழுக்கம் பேசி அதைத் தடுத்துக் கொண்டு அவளது மனம் நடித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அந்த பாலியல் வன்முறை செயல்பாட்டில் கூட இறுதியில் அவளுக்கு ஒரு மௌனம் இருந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். மேலும் அவள் அந்தக் குழந்தையை தவிர்க்க வேறு வழிகளிருந்தும் பெற்றெடுத்து வளர்த்திருக்கிறாள். இந்தியா திரும்பிய பின்னர் ஹரியை சந்திக்க முடியாத அளவிற்கு அவளுக்குள் காயங்கள் இருந்தன. அது மட்டுமல்ல அப்போது கேள்விப்படுவதும் அவன் ஸ்திரீ லோலன் என்பதைத்தான். வெறுப்பும் விருப்பமும் அவளுக்குள் சுழன்று அவளைத் தளர்த்திக் கொண்டிருக்கையில், அவள் வெறுப்பை மட்டுமே முன்னிறுத்தி தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒன்று உடைகிறது. அவளுக்குள் இருந்து அது கொஞ்ச நேரத்துக்கு வெளியே வருகிறது. இப்போது வாழ்வில் முதன்முறையாக அவள் அந்தப் புத்தகங்களைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்.

அது ஒருவர் மீதிருந்த காதல் தான் என்பது எவ்வளவு துயர்?

அப்புறம் அவைகளை எல்லாம் எரித்துப் போட்டுவிட்டு மறுபடியும் தனது மனதை மூடிக் கொள்கிறாள்.

ஒருவேளை ஹரி இறக்காமல் இருந்து, நீங்கள் அங்கே போனதும் உணமைகளை பேச வேண்டி வந்து, அதனால் நீங்களும் ஹரியும் ஷில்பாவும் ஒருவிதமான பிணைப்புக்கு ஆளாகியிருப்பீர்களா என்று போலீஸ் அதிகாரி கேட்பது சும்மா இல்லை.

ஆனால் ஷில்பாவின் அம்மா எதையும் ஒப்புக் கொள்கிற கேரக்டர் இல்லை.

அப்படி ஒன்று நடந்தால் என்று கேட்பதற்கு ஒன்றுமே இல்லையே, என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஹேஷ்யம் சொல்ல முடியாது என்கிறாள்.

முழுக்க முழுக்க இறுக்கமான மதக் கட்டுப்பாட்டில், அதை நடைமுறைப்படுத்தியவர்கள் ஆளுமையில் வளர்ந்து அதன் இருப்பை கடக்க முடியாமல் இன்றளவில் வரண்டிருந்து இறுகிப் போன ஸ்ரீபிரியா தான் மொத்த படத்துக்கும் காரணம். சொல்லப் போனால் மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டிலும் பெரிதாக முற்றுகையிட்டு அவனது கலாச்சாரக் கோட்பாடுகளே அவனை ஆளுகின்றன.

Image may contain: 6 people, people smiling

ஒரு பார்வைக்கு கடின சித்தம் கொண்டவனாக இருக்கிற ஹரி கிருஷ்ணன் மற்றவர்களைக் காட்டிலும் எவ்வளவோ மேல்.

ஆனால் அவனைப் புரிந்து கொள்ளுவதில் தான் எல்லா சிரமங்களும் இருக்கின்றன. 

படத்தின் முடிவு ஒரு கொலைகாரனைக் காட்டித் தருகிறது இல்லையா? அவனும் நாம் எல்லோரையும் போல வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு சம்பிரதாயவாதி தான்.

நமது நியமங்கள் நியதிகள் யாவும் மண்ணில் ஊன்றினவை. மிகக் குறுகிய வெளியில் தன்னைப் பரப்பிக் கொண்டு தனது அதிகாரத்தை பறை சாற்றுகிறவை. என்றால் மனங்களில் வீச்சு ஆகாயம் போல. அது எல்லையற்றது. மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவில் பாவம் எந்த மனிதனும் அல்லாடியே ஆக வேண்டும் என்று அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஹரிக் கிருஷ்ணன் அப்படி செய்த தவறுகளும், அவனை சூழ்ந்திருந்தோர் அவனைப் புரிந்து கொள்ள முடியாத தவறுகளும் ஒன்று சேர்ந்து அவனுடைய உயிரைப் பறித்துக் கொண்டன எனலாமா?

சுந்தர ராமசாமி குறிப்பிட்ட பிழைகளின் அவமானம் மட்டும் நிரம்பியதே இங்கிருப்பவர்களின் வாழ்க்கை. இதில் அன்பைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் மிஞ்சுவது மகத்தான வெறுமை மட்டும் தான்.

Image may contain: 5 people, people smiling, people sitting

***

 

     

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.co.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.co.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.co.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.co.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

               

Top Reviews

Video Widget

gallery