Book Review

நூல் அறிமுகம்: அயலக இலக்கியம் (மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை :மங்கள கௌரி நாவல்) –  சுப்ரபாரதிமணியன்

Spread the love

  தளதளவென்று துளிர் வெத்தலை மாதிரி பளபக்கும் புதிய ஒருகளம்  மங்கள கௌரியின் நாவல் மூலம் கிடைத்திருக்கிறது.

 கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இருக்கும் பூக்கடைக்ளை பலமுறை கூர்ந்து நோட்டமிட்டபடி நானும் சென்றிருக்கிறேன் பூக்கட்டும் அவர்களின் கை வேகமும் லாவகமும் பேச்சு தொணியும் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்தத் தொழிலில் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டையும் அவரின் வாழ்க்கையின் மேலோட்டமான விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது

அப்படி பூகட்டுபவர்கள், பூச்செடிகள் வளரும் தோட்ட காடுகளில் வேலை செய்யும் விளிம்புநிலை மக்கள் பற்றிய ஒரு முழு நாவல் என்ற அளவில் ஒரு முக்கியமான முயற்சி என்றே கொள்ளலாம் ,இதுவரை இக்களத்தில் நாவல் எழுதப்பட்டதில்லை என்றே எண்ணுகிறேன்.

மங்கள கௌரி அவர்கள் சார்ந்த அலுவலகப் பணி ,தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்கள் இவற்றையெல்லாம் முகநூல் பதிவுகளில் அவ்வப்போது கவனித்திருக்கிறேன் ,இவ்வகை சிக்கல்களை எல்லாம் மீறி தொடர்ந்து அவர் எழுத்து முயற்சிகளிலும் நாவலிலும் கவனம் செலுத்துவதும்  முக்கியமான பாராட்ட வேண்டிய பணியாக இருக்கிறது. அவரின் இதற்கு முந்தின நாவல்களின் பணியிலும் தீவிரத்தையும் இந்த நாவலும் அமைந்திருக்கிறது.

 வீரிய விதை கட்டாந்தரையில் முளைக்கும் என்பதற்கு உதாரணமாய் அவரின் பல்வேறு பணிகளுக்கிடையில் இந்த நாவல் முயற்சியையும் சொல்லலாம் .

சொலவடைகளும் பழமொழிகளும் வெகுவாக இந்த நாவல் முழுக்க பூவும் நாருமாகக் கலந்திருக்கின்றன. பூ கட்ட வாழை மரத்தின்  நார் தேவையாக இருக்கிறது .ஆனால் வாழை பயிரிடல் குறைந்துபோய் நார் கிடைக்காதபோது பூ கட்டுவதற்கு உபயோகப்படுத்தும் நூல் வகைகள் பற்றி இருக்கும் குறிப்பு முக்கியமானது ..அப்படித்தான் வாழ்க்கையின் பல கணங்களில் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு மாடுகள் வளர்ப்பு என்பது இல்லாமல் போய்விட்டது  அல்லது குறைந்து விட்டது .ஆனால் மாட்டுப் பொங்கல் வைத்து அந்த நாளைக் கொண்டாடுகிறோம் ..நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

Image

பூ கட்டும் வேலையில் உள்ள சிரமங்கள் ,பூச்செடிகள் இருக்கும் தோட்டக் காட்டு பகுதியில் வேலை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை துல்லியமாகவும் விரிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது, பூச்செடிகளுக்கு மருந்தடிக்கும் பணியில் ஏற்படும் சிரமங்கள் மன அவஸ்தைகளாகச் சொல்லப்பட்டு இருக்கிறது .அப்படி சிரமப்பட்டு தொழில் செய்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தைச் சிரமத்துடன் கவனித்துக் கொண்டிருக்கும் போது  அந்த இடம் மின்சார  இலாகா விற்குச் சொந்தமான இடம் என்பதால் காலி செய்யப்பட வேண்டிய கட்டாயம் வருகிறபோது அந்த மக்கள் நிலை குலைந்து போகிறார்கள் .இந்த நாவலின் கதாநாயகி புனிதாவின் சிரமங்கள் சொல்லிமாளாது. .தொடர்ந்து அவர் மீது தாக்குதல் இருந்துகொண்டே இருக்கின்றன .குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய சூழலில் பூக்கட்டுவது பூச்செடி பராமரிப்பும் அவரின் வாழ்க்கையை மொத்தமாக ஆக்கிரமித்து விடுகின்றன. இந்த நிலையில் காணாமல் போகும் கணவனும் அவனைப் பற்றின விபரீத விஷயங்களும் அவளைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன ஆறுதல் தர சுப்பையா கிழவன் போன்றவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் தன் பழைய காதலன் பாலு போன்றவர்களும் அவருடைய நல் எண்ணங்களும் நடவடிக்கைகளும் அவளுக்கு உறுதுணையாக இருக்கின்றன பாலுவின் காதல் தியாகம் என்ற அளவில் இருக்கிறது . முத்துவின்  பூக்கடை உதவி இன்னொரு பக்கம் அர்ப்பணிப்புடன் தியாகம் ஆகிறது. சுப்பையா அவர்களின் வாழ்க்கையும் ஒரு தியாக பிம்பமாக இருக்கிறது. இப்படி பல தியாக பிம்பங்களாக ஆண்களை பெண்கள் படைப்பது அபூர்வம் இவர்களெல்லாம் வாசத்தை பறிகொடுத்த பூக்களைப் போன்றவர்கள்.

” புனிதா…? அவள் யாருக்காக அழுவாள்? சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் பிள்ளை ஒரு புறம், செத்துப் போனதாக சொல்லப்படும் புருஷன் ஞாபகம் ஒரு புறம், தன்னைத் தாங்கிக் கொண்டு, ஆறுதலும் தேறுதலும் சொல்லி, தனக்கு ஒரு பாதை போட்டுத் தந்து,  ‘இப்படியே போ… பொழச்சிக்குவ..’ என்பதாய் தனக்கென பிழைப்புக்கு ஒரு வழியும் தேடி வைத்த சுப்பையா மாமாவின் மாபெரும் இழப்பு, தன்னால் ஒதுக்கப்பட்ட பாலு மாமாதான் தனக்காக எல்லாம் செய்தவன் என்ற உண்மையில் உறைந்துநிற்கும் அவளது குற்ற உணர்ச்சி, இதில் எதை நினைத்து அவள் கவலைப்பட .. “

 கதவை அடைத்து விட்டாலும் ஜன்னல் திறந்து விடும் அனுபவத்தில்இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதும் வாழ்க்கையை ஏதோ ஒரு கணத்தில் நேசிக்க வைக்கிறது .கையாலாகாதவன் பொண்டாட்டி என்ற முத்திரை  உடன் புனிதா தன் வாழ்க்கையை கடக்க வேண்டியிருக்கிறது .பொம்பளையும் சாமியும் இருக்கிறவரை யாருக்கு நிவாரணம் இருக்கிறது என்ற அபிப்பிராயம் சொல்லப்பட்டிருக்கிறது. பசியில் கலையை காணமுடியுமா என்ற ஒரு முக்கியமான கேள்வியும் எழுப்பப்படுகிறது .பெண்கள் பற்றின தியாக பிம்பங்களும் சில மக்களும் பல நாவல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் பூக்கட்டிகளின் மத்தியில் ஒளிரும் புனிதா என்ற நட்சத்திரம் பற்றிய அற்புதமான சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது

,”  அடுத்த வீடு பற்றி புறணி பேசுபவர்கள், சதா அடுத்தவர் பற்றியே பேசத் துடிப்பவர்கள், மற்றவர்களுக்கு சிறப்பானதாக காணப்படும் விஷயங்களையும் நக்கீர பார்வையோடு நோக்கி, குறை சொல்லும் குணாதிசயங்கள் கொண்டவர்களின், இளமை பருவம் அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது இரண்டுமே கூட சிறப்பானதாக இருக்காது! அல்லது தனிப்பட்ட முறையில் இவர்களே கூட ஏதோ ஒரு தவற்றை செய்துவிட்டு, குற்ற உணர்ச்சி அரிக்கும் நேரமெல்லாம் அடுத்த வீட்டு சுவற்றைத் தேடுவார்கள் சொறிந்துக் கொள்ள! ” இப்படி பல கதாபாத்திரங்கள் .

நாவல் தன்மையில் ஒற்றை கதாபாத்திரம் சார்ந்த அனுபவங்கள் மட்டும் இல்லாமல் அவளின் சமூகவியல் வாழ்க்கையில் பின்தொடரும் பலரின் அனுபவங்களின் கூட்டமைப்பால் அமைந்ததுதான் சிறப்புத்தன்மை .அப்படி புனிதாவின் வாழ்க்கையைச் சுற்றிய பல கதாபாத்திரங்களை கொண்டு இந்த நாவல் பல படிமங்களை உருவாக்கியிருக்கிறது.

 தனிமனித வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை மிஞ்சுகின்றன. இதில் சமூகவியலும் அரசியலும் எங்கும் தென்படவில்லை அதை மெல்லிய கீற்றாக நாவலில் அங்கங்கே கோலமாகப் பிடித்திருக்கலாம். சாதாரண வார்த்தைகள் கூட ஆங்கிலத்திலேயே பல இடங்களில் பயன்படுத்தப்படுவது தேவையில்லாத  இருக்கிறது

” மலர்ந்து உலர்ந்து போன அவள் வாழ்வில்  அவச்சொல்லும் வீண்பழியும் வந்து சேர வேண்டுமா? எலே பாலு… எம் பேத்தியே மல்லிப்பூமாதிரிதான்.’

‘ஆமா… அவ  மல்லிப்பூ மாதிரித்தான்! என்னிக்கும் நெறம் மாற மாட்டா..!’ இப்படியான வசனங்கள் அங்கங்கே மிளிர்ந்து திரைப்பட வசனகளை ஞாபகபடுத்தினாலும் உள் மனதின் வடிவங்களே அவை.

ஒரு முக்கிய களத்தையும் அதன் வழியாக மலேசியா வாழ் தமிழர்களின் வாழ்க்கையும் பதிவு செய்கிற நல்ல முயற்சியாக இந்த நாவல் இருக்கிறது .இந்த நாவலின் காலமும், களமும் மனிதர்கள் இயல்பும் கதாபாத்திரங்களின் பெயர்களும் அறிமுகங்களும் தமிழகச் சூழலில் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசிக்கிற அனுபவத்தை தருவது இந்நாவலின் இன்னொரு வகையான வெற்றி என்று கூட சொல்லலாம்

நவீனகட்டிடங்களுக்கு மத்தியில் காணப்படும் பிரிக்பீல்டிஸ்ன் சாதாரணப் பூக்கடைகள் இயல்பானவை . நவீன கதை சொல்லாடல்கள், யுத்திகள் மத்தியில் தென்படும் சாதாரண விளிம்பு நிலை மக்களின் பதிவுகள் கொண்ட இந்நாவல் அவ்வகையில் தனித்தே நிற்கும்.

( கோதை பதிப்பகம், குளித்தலை , திருச்சி  ரூ.200 /202 பக்கங்கள்  )

1 Comment

  1. வணக்கம் சுப்ரபாரதி அண்ணா. நீங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிராவிட்டால் இந்த நாவல் நிச்சயம் நூல் வடிவம் பெற்றிருக்காது. அதற்காகவே என் இரு கரம் கூப்பிய நன்றி. அன்பும் நன்றியும் அண்ணா

Leave a Response

Top Reviews

Video Widget

gallery