Book Reviewஇன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்: மாயி சான் – ஹிரோஷிமாவின் வானம்பாடி – தேனி சுந்தர்

 

நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்த பிறகு என்னுள் மிக ஆழமாகப் பதிந்த சிந்தனைகளில் ஒன்று போருக்கெதிரான இயக்கங்களில் தீவிர கவனம் செலுத்துவது. ஒவ்வொரு ஆண்டும் ஆக.6,9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினங்களில் அறிவியல் ஆக்கத்திற்கே என்பதை வலியுறுத்தி பேரணி, மனிதச் சங்கிலி இயக்கம் மற்றும் கருத்தரங்குகள்.. 1945ல் நடந்த போர்தானா, இல்லை சமீபத்தில் எதுவும் போர் நடந்ததா என பல நண்பர்கள் ஆச்சரியமாகக் கேட்கும் அளவிற்கு தேனி மாவட்டம் முழுவதும் பெரும் வீச்சாக ஒவ்வொரு ஆண்டும் நடத்துவோம்.. ஆக்கத்திற்கே ஆக்கத்திற்கே அறிவியல் ஆக்கத்திற்கே, மறக்கமாட்டோம் மறக்கமாட்டோம் ஹிரோஷிமா துயரங்களை மறக்க மாட்டோம் மறக்க மாட்டோம் என குழந்தைகளும் ஆசிரியர்களும் வீதிகளில் முழங்கி அணிவகுப்பதை காணும் போதெல்லாம் உள்ளம் சிலிர்க்கும். போருக்கெதிரான இந்தச் சிந்தனையைக் குழந்தைகளிடம் உருவாக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள நூல் தான் மாயிசான்.

இந்நூலின் ஆசிரியர் தோசி மாருகி. இவர் ஜப்பானின் கொக்கயிடோவில் அணுகுண்டு வீச்சின் பாதிப்புகளை விளக்கும் வகையில் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்துகின்றார். அந்தக் கண்காட்சிக்கு அரைகுறை மனதோடு வந்த பெண் ஒருவர், உண்மையில் சரியான அக்கறையோடும் அர்த்தத்தோடும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டு அழுகிறார். அணுகுண்டு வீச்சோடு இரத்தமும் சதையுமாகக் கலந்த என் கதையை நீங்கள் கேட்பீர்களா? என்று கேட்கிறார். மேடையேறி அவர் பகிர்ந்து கொண்ட கதை தான் இந்த மாயிசான்.

1945 ஆம் ஆண்டு, ஆக.6ஆம் தேதி, எல்லா நாட்களையும் போல தான் அன்றும் விடிந்தது. ஹிரோசிமாவின் ஏழு நதிகளும் தன் கரைகளோடு கதைகள் பேசி குதூகலமிட்டபடி நகர்ந்து கொண்டிருந்தன. சூரியனின் உற்சாகமூட்டும் இளவெயிலில் மனிதர்கள் அவரவர் அன்றாடப் பணிகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். எப்போதும் போல சாலைகளில் போக்குவரத்து. ஆனாலும் போர்க்காலம் என்பதாலும் டோக்கியோ, ஓசாகோ, நகாயா ஆகிய நகரங்களில் ஏற்கனவே அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. ஹிரோசிமாவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வான்வெளி தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற சிந்தனை அவர்கள் எல்லோருக்குள்ளும் ஓடிக் கொண்டு தான் இருந்தது. தீயணைப்பு மற்றும் தீப்பரவல் தடுப்பு ஏற்பாடுகள் என அரசு தன் தரப்பில் செய்து கொண்டிருந்தது. தீப்பற்றாத ஆடைகள், நடப்பவர், பேருந்துப் பயணிகள் உட்பட தலைக்கவசம் அணிந்துகொண்டு செல்கின்றனர்.

இன்று ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினம் ...

மாயி சான், படு சுட்டியான ஏழு வயதுச் சிறுமி. தன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த அத்தை மகன் கொண்டுவந்த சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை அம்மா எப்போது வேகவைத்து தருவாள் என்ற ஆர்வத்துடன் அன்று சீக்கிரமே எழுந்துவிட்டாள். ஆர்வத்தில் சீக்கிரமே பசிக்கவும் செய்தது. மகளின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அம்மாவும் அதற்கேற்ப சீக்கிரமே உணவைத் தயாரித்துவிட்டாள். எல்லோரும் ஆவலாய் மேசையைச் சுற்றி உட்கார்ந்து விட்டனர். மாயி சான் ஆர்வமாய் சாப்டிக்ஸை (உணவை எடுத்துச் சாப்பிடும் சோடி மரக்குச்சிகள்) எடுக்கிறாள். திடீரென காதுகளைச் செவிடாக்கும் சத்தம். கண்களைக் குருடாக்கும் வெளிச்சம். ஆளுக்கொரு திசையில் தூக்கி எறியப்பட்டனர். சில நிமிடங்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றனர்.

பின்னர் சுதாரித்து எழுந்து கொண்டாள் அம்மா. நடப்பதை என்னவென்றே அவளால் யூகிக்கமுடியவில்லை. சுற்றிலும் நெருப்பு. மாயி சான்.. மாயி சான்.. என சத்தம் போட்டு அழைக்கிறாள். அழைப்பது கேட்டாலும் உதடுகளைத் திறந்து அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கைகளை உயர்த்திக் காட்டுகிறாள். மகளைக் கட்டியணைத்தவளுக்கு கணவனின் நினைவு வரவே அச்காய்.. அச்காய்.. அழைக்கிறாள். திடீரென நெருப்புக்குள் குதித்து அந்தப்பக்கம் சென்று உடலெங்கும் தீக்காயங்களுடன் கிடந்தவனை தோளில் போட்டு தூக்கி வருகிறாள். அத்தை மகன்.. எங்கு தேடியும் இடிபாடுகளுக்குள் ஒன்றும் தெரியவில்லை. இனி யோசிக்க நேரமில்லை. கணவனுக்கு கிடைத்த துணிகளைக் கிழித்துக்கட்டி முதலுதவியைச் செய்து கொண்டு எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக கடற்கரைக்குச் சென்றுவிட முடிவெடுக்கிறாள். ஒரு பக்கம் தோளில் கணவனை அணைத்துக் கொண்டாள். மறு கையில் மகள்.. அத்தனை சக்தி எப்படி வந்தது அம்மாவுக்கு.. மாயிசான் வியக்கிறாள்.

திசையெங்கும் தீ… எங்கும் மரண ஓலங்கள்.. மயங்கியவர்கள் யார், மரணித்தவர்கள் யார் ஒன்றும் தெரியவில்லை. அணிந்திருந்த உடைகள் எரிந்துபோன நிலையில் பெரியவர்களும் குழந்தைகளும், உடலெங்கும் காந்துவதால் நீரைத்தேடி அலைஅலையாய் ஓடி வருகின்றனர். மழை பொழிகிறது. உடலெங்கும் பிசுபிசுக்கச் செய்யும் அமில மழையாகப் பொழிகிறது. வரலாறு அதனைக் கருப்பு மழை என்று பதிவு செய்திருக்கிறது.

ஒரு நதியைக் கடக்கும் போது மாயிசான் கால்களுக்கிடையில் ஒரு வானம்பாடி பறகை தன் சிறகிழந்த உடலைக்கொண்டு டப்டப் என்று அடித்தபடி நீரில் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்க்கிறாள். மனித உடல்களும் போகின்றன. சோர்ந்து மயங்கி விழும் நீரில் விழும் மகளின் தலைமுடியைப் பற்றிக் கொண்டு கரையேறுகிறாள் அம்மா.. களைத்துச் சோர்ந்த மகளைத் தேற்றித்தேற்றி ஒவ்வொரு நதியாய்க் கடக்கிறாள்.

Hiroshima: 73rd anniversary of atomic bombing | Patrikai - Tamil ...

ஒருவழியாக கடற்கரையை அடைந்து விட்டனர். துயர்மிகுந்த பயண அலுப்பில் சற்றே மணலில் சாய்ந்தவர்கள். மீண்டும் கண் விழித்தபோது தேதி ஒன்பதாகி விட்டிருந்தது. அன்றைய தினம் தான், இத்தனை அழிவுகளைப் பார்த்த பின்னும் இரக்கமற்ற வகையில் அமெரிக்கா ஜப்பானின் இன்னொரு நகரமான நாகசாகிமீது ஒரு அணுகுண்டை வீசியது. இந்த குண்டுகளுக்கு அமெரிக்கா வைத்த பெயர்கள் சின்னப் பையன், குண்டுப் பையன்.

நான்கு நாட்கள் கடற்கரையில் பிணம் போலக் கிடந்தவர்களில் அம்மா தான் முதலில் எழுந்தாள். மகளையும் கணவனையும் எழுப்புகிறாள். மாயிசானுக்குப் பசிக்கிறது. நான்கு நாள் எப்படி அந்தக் குழந்தை பசியைத் தாங்குவாள். அழுகிறாள். அந்தச் சத்தம் கேட்டு பக்கத்திலிருந்த பாட்டி ஒருத்தி விழித்து, தன் பையில் இருந்த பொறிஉருண்டையை எடுத்து நீட்டியவாறே சரிந்துவிட்டாள். அதை ஆவலாக உண்ண கைகளை நீட்டுகிறாள் மாயிசான். கைகளில் அவள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிட எடுத்த சாப்டிக்ஸ் குச்சிகள்.. மூடிய கை, தோல்கள் தீயில் கருகி விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கிடக்கின்றன. அதற்குள் அந்தக் குச்சிகளும் அப்படியே இருக்கின்றன. எத்தனை முயன்றும் அவளால் பிரிக்கமுடியவில்லை. அம்மா தான் மிகவும் கஷ்டப்பட்டு பிரித்து விடுகிறாள். ரத்தமாக கசிகிறது.

அந்தப் பாதிப்பில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றைய தினமே மாண்டுபோயினர். மற்றவர்கள் முகாம்களுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு தாங்கள் வாழ்வதாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். புதிய புதிய நோய்கள், மாயிசானின் அப்பாவுக்கு உடலெங்கும் கொப்புளங்கள்.. இருமினால் இரத்தமும் சேர்ந்து வருகிறது. கொஞ்ச நாளில் இறந்துபோகிறார். ஆண்டுகள் பல கடந்தும் மாயிசான் வளர்ச்சி குன்றி அப்படியே தான் இருக்கிறாள்.. குண்டுவீச்சுக்கு இலக்கான பகுதிகளில் புல் பூண்டுகள் கூட முளைக்கவில்லை. பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவே பிறக்கின்றனர். என்னவென்றே தெரியாமல் மக்கள் இந்தநோய்க்கு அணுகுண்டு நோய் என்றே பெயர் வைத்தனர். ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமாகவே உருவாயினர்.

மாயி - சான் ஹிரோஷிமாவின் வானம்பாடி ...

ஒவ்வொரு ஆண்டும் அணுகுண்டு வீசப்பட்ட நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாகப் பாதிக்கப்படாதவர்கள் அனைவரும் ஹிரோசிமா நகர நதிகளில் உலக அமைதியை வலியுறுத்தி காகித விளக்குகளை மிதக்க விடுகின்றனர். மாயிசான் இரண்டு விளக்குகளை மிதக்க விடுகிறாள். ஒன்றில் அன்புள்ள அப்பா என்றும் மற்றொன்றில் அன்புள்ள வானம்பாடி என்றும் அம்மாவின் உதவியுடன் எழுதி அனுப்புகிறாள்.

இந்நூலை தமிழில் மறு ஆக்கம் செய்துள்ளவர் கொ.மா.கோ.இளங்கோ. இது அவரது முதல் சிறார் மொழிபெயர்ப்பு நூல். ஆனால் அதை முன்னுரைக்கு முன்பக்கம் உள்ள தாளில் பார்த்தால் தான் நீங்கள் அறிய முடியும். அவ்வளவு அழகாக உணர்ச்சி பொங்க வழங்கியிருக்கிறார்.

வாசிக்கையில் உங்கள் கண்களில் நீர் சுரக்கவில்லை என்றால் நீங்கள் இதயமற்றவர் என்று அர்த்தம். படித்து முடித்த பிறகு ரௌத்ரம் பிறக்கவில்லை என்றால் நீங்கள் உணர்வற்றவர் என்று பொருள் என்கிறார் இந்நூலுக்கு முன்னுரை எழுதிள்ள விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள்.

சாதி, மதங்கள் மற்றும் போர் எனும் பெயரில் நடக்கும் தேச வன்முறைகளுக்கு எதிரான உணர்வை இந்நூல் அளிக்கிறது. பகுத்தறிவுடன் மக்கள் நலனுக்கு அறிவியலைப் பயன்படுத்த வேண்டும். அறிவியலை மக்கள் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். ஆக்கத்திற்குப் பயன்படும் அறிவியலையும் அழிவுக்குப் பயன்படுத்தப்படும் அறிவியலையும் மக்கள் அன்னப்பறவை போல பிரித்து அறிய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

பாரதி புத்தகாலயம் வெளியீடு. பக்கங்கள் 50. விலை ரூ.35/-

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/maayi-chan-4861/

தேனி சுந்தர்

Leave a Response