Book Review

புத்தக அறிமுகம்: “எம்.டி. வாசுதேவன் நாயர் சிறுகதைகள்” தமிழில்:சுரா –  பா.அசோக்குமார்

Spread the love
மலையாள முன்னணி எழுத்தாளர்களில் புகழ்பெற்ற மூவரில் ஒருவரான எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களால் எழுதப்பட்ட ஐந்து சிறுகதைகள் அடங்கிய நூல்.
இடையறாத இலக்கியப் பணிக்காக கேரள அரசின் பல்வேறு விருதுகளையும் சாகித்திய அகாடமி விருதையும் பெற்ற எழுத்தாளர் இவர். இந்திய அரசின் உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஐந்து சிறுகதைகளின் கதைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வெவ்வேறான தளங்களில் பயணிக்கக் கூடிய இனியதொரு வாய்ப்பாகவே அமைந்துள்ளது. இதனை வழக்கம்போல் அழகுத் தமிழில் மலையாள மூலத்தின் சாரம் சிறிதும் குறையாமல் அழகுத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் சுரா அவர்கள்.
*வளர்ப்பு மிருகங்கள்
*மரணத்தின் சறுக்கல்
*உன் நினைவாக
*ஒரு பிறந்த நாள் ஞாபகம்
*அக்கா
ஆகிய ஐந்து தலைப்புகளில் சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
வளர்ப்பு மிருகங்கள்:
சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்படும் மிருகங்கள் என்ற உவமை வாயிலாக சர்க்கஸ் பணியில் ஈடுபடும் பெண்களின் அவல நிலையை தோலுரித்துக் காட்டும் எளிய சிறுகதையே இது. சர்க்கஸை கலையாக கருதும் சூழலில் அதை தொழிலாக பாதிக்கும் மனிதர்களின் மிருக மனதை படம் பிடித்துக் காட்டும் எளிய முயற்சியாகவே இக்கதை பயணிக்கிறது.
விரும்பியோ விரும்பாமலோ இந்த கலைத் தொழிலில் நுழைந்த ஜானம்மா என்ற கதாபாத்திரம் மூலமாகவும் லட்சுமி என்ற கதாபாத்திரம் வாயிலாகவும் பெண்களின் அவல நிலை, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வயது முதிர்வின் துர்பாக்கிய நிலை போன்றவற்றை வளர்ப்பு மிருகங்களுடன் பொருத்திப் பார்க்கும் வண்ணம் கதையை அமைத்துள்ள நேர்த்தி கை தேர்ந்த படைப்பாளியின் கைவண்ணமாகவே மிளிர்கிறது.
மரணத்தின் சறுக்கல்:
குறுகிய கதாபாத்திரங்களைக் கொண்டு மனித வாழ்வின் வறுமை நிலையின் கர்ணக் கொடூரத்தை பளிங்குக் கண்ணாடியாக காட்டியுள்ள சிறுகதை.
உணவு விடுதியில் உணவு உண்ணும் வேளையில் தான் சந்திக்கும் பசியால் வாடும் சிறுவனின் பிச்சை எடுத்தல் மூலம் அவன் அடையும்  துயரங்களைக் கண்டு மனம் இரங்கிய நிலையிலும் தன்னிடம் துளியும் பணம் இல்லாமல் வாடும் நிரந்தர வேலையற்ற இளைஞனின் மனக்குமுறல் நமது நெஞ்சை அறுப்பதாகவே அமைந்துள்ளது.
மரணத்தின் சறுக்கல் என்ற தலைப்பு யாருக்காக சூட்டப்பட்டுள்ளது என்பதை அறிய நாம் சிறிது மெனக்கெடல் செய்வதே கதையாசிரியரின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
M. T. Vasudevan Nair – Wikipedia
உன் நினைவாக:
ஐந்து சிறுகதைகளை இது சற்று வித்தியாசமான முறையில் ஒரு டைரி குறிப்பாக கடிதம் எழுதும் நினைவாக அமைந்துள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தங்கையை பற்றியும் தங்கை வைத்திருந்த ஆந்தை பொம்மை பற்றிய நினைவாக தொடங்கும் கதை தனது தந்தையின் அந்தரங்க வாழ்க்கையை உள்ளார்ந்த முறையில் தெரிவித்து குடும்பத்தின் சறுக்கல்களை தெளிவுபடுத்தும் வடிவில் அமைந்துள்ள கதை.
சிறுவயதில் அறிய இயலாத, புரியாத நினைவுகளின் ஊடே பயணிக்கும் புதியதொரு அனுபவத்தை தரிசனம் செய்ய உதவும் கதையே இது.
ஒரு பிறந்த நாள் ஞாபகம்:
இந்த சிறுகதை வளர்ந்த மனிதரின் இளவயது பிறந்தநாள் நினைவை நோக்கிய பின்னோக்கி பயணமாகவே பயணிக்கிறது. இந்த கதையை படிக்கும் போது நம்மையும் அறியாமல் நாமும் நமது இளவயது பிறந்த நாட்களை அசை போடும் வண்ணம் அழகுபட கதையை நடத்திச் சென்றுள்ளார் எழுத்தாளர்.
பிறந்தநாளுக்கு விருந்து வைத்தல் என்ற நிகழ்வின் வாயிலாக குடும்பத்தின் ஏழ்மை நிலையை பந்தி வைக்கும் பாங்கு பரிதவிப்புக்குரியதே. ஆணாதிக்கத்தின் மிரட்டலையும் கையறு நிலை பெண்களின் கையாலாகாத நிலையை காட்சிப்படுத்திய விதத்திலும் இது வெறும் பிறந்தநாள் நிகழ்வுகளாக மட்டுமில்லாமல் சமூகத்தில் நிகழும் ஏழ்மை நிலையை பறைசாற்றுவதாக உள்ளது.
அக்கா:
இந்த சிறுகதையில் முதல் வகுப்பு படிக்கும் சிறுவனின் வாயிலாக அவன் காணும் காட்சிகள் மூலமாக கதையை நகர்த்திச் சென்று உள்ள விதமே ஒரு புதுவித அனுபவத்தை அளிப்பதாகவே உள்ளது. ஆறு வயது சிறுவனின் மனவோட்டம் வாயிலாக கதையை நகர்த்திச் செல்லும் விதம் சிறிதும் பிசிறாமல் கதையை சொல்லும் நேர்த்தியை ரசிக்காமல் இருக்க இயலாது.
இப்படியெல்லாம் ஒரு சிறுகதையை எழுத இயலுமா என்று ஒருவித மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது என்றே இதனை யான் கருதுகிறேன்.
தெளிவில்லாத மூலக்கதையை உணராத வண்ணம் எவ்வித தொய்வும் இன்றி இறுதிவரை கதையின் மூலத்தை கணிக்க இயலாத வகையில் கதையை நகர்த்திய பாங்கு மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது எனலாம்.
அழுகையை பிரதானமாகக் கொண்டு உறவுச் சிக்கலின் பரிபூரணத்தை மறுமணம் என்ற சமூக விழிப்புணர்வை  பிரதிபலிக்கும் அற்புத படைப்பாகவே இதனை நான் பாவிக்கிறேன்.
நான் விழுந்து விளையாடிய நதி ...
இவ்விதமாக இந்தப் புத்தகத்தில் உள்ள ஐந்து சிறுகதைகளும் சமூகத்தின் நிலவக்கூடிய வறுமையையும் வாழ்வின் துயரத்தையும் உறவுச் சிக்கல்களையும் எளிய மனிதர்களின் வாயிலாக படம்பிடித்து காட்டுவதாகவே அமைந்துள்ளது.
நமது அண்டை வீட்டில் நடைபெறக்கூடிய, நம் கண்முன் நிகழும் நிகழ்வுகளாகவே இக்கதைகள் இருப்பதாக நமக்கு தோன்றுவதாக இருந்தாலும், அதனை அவர் எடுத்தியம்பிய பாங்கும் சொல்லாமல் சொல்லிச் சென்ற உணர்வு கடத்தலுமே  இப்படைப்பை தலைசிறந்ததாக கருதச் செய்கிறது எனலாம்.
இந்நூல் மனித மனங்களில் உறைந்துள்ள உள்ளத்து உணர்ச்சிகளைத் தூண்டி  தெளிவான, சமூக அக்கறையுள்ள சமூகத்தை நேசிக்கும் எதார்த்த மனநிலையை தோற்றுவிக்க முயல்வதாகவே உள்ளது.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதைகள்
தமிழில்: சுரா
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்:96
₹.25
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery