ArticleBook Review

ஆண்கள் அருகிப்போன உலகம்..! – அ. குமரேசன்

ஊழித்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனாக்கிருமியைக் கட்டுக்குள் கொண்டுவரும் உலகப் போராட்டத்தினிடையே, பெருந்தொற்றுகள் பற்றிய முற்கால இலக்கியப் பதிவுகள் அதிகமாகத் தேடியெடுத்து வாசிக்கப்படுகின்றன என்று ஏற்கெனவே பார்த்தோம். இப்போது ஒரு புத்தம் புதிய நாவல் வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 6 அன்று வெளியான அந்த நாவல்: ‘ஆஃப்டர்லேண்ட்’. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் லாரென் பியூக்ஸ் எழுதியது. லிட்டில் பிரவுன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஒரு பத்திரிகையாளருமான லாரென் பியூக்ஸ், தனது ‘ஷைனிங் கேர்ள்ஸ்’ (ஒளிரும் பெண்கள்), ‘ஜூ சிட்டி’ (விலங்கு நகரம்), ‘புரோக்கன் மான்ஸ்டர்ஸ்’ (உடைந்த கொடூரர்கள்), ‘மாவெரிக்’ (தான்தோன்றி) ‘மாக்ஸிலேண்ட்’ (கணினி உலகக் குற்றங்கள்) ஆகிய முந்தைய நாவல்களுக்காகப் பல விருதுகளைப் பெற்றவர். 26 மொழிகளில் இவருடைய புத்தகங்கள் வந்துள்ளன. சிறுகதை எழுத்தாளருமான இவர் பொதுவாக அறிவியல் புனைவு வகையில், குற்றச் செயல்கள் சார்ந்த விறுவிறுப்புக் கதைகளை எழுதுகிறவர். அவற்றினூடாக சமூக, அரசியல் நிலைமைகளைக் காட்டுகிறவர். அமெரிக்காவில் பத்தாண்டுக் காலம் பத்திரிகையாளராகச் செயல்பட்டபோது, பல்வேறு குற்றப் பின்னணிகளின் அதிர்ச்சிப் பின்னலமைப்புகள் பற்றித் துணிச்சலுடன் எழுதியிருக்கிறார். திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ள இவர் தற்போது தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் வசிக்கிறார்.

Book Trailer Review: Broken Monsters by Lauren Beukes | Readers Lane

‘ஆஃப்டர்லேண்ட்’ (‘பிந்தையநிலம்’) நாவலுக்கு முதலில் ‘மதர்லேண்ட்’ (தாய்நிலம்) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. நாவல் வெளியானபோது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர் உணர்த்துவது போல, அது ஒரு பிந்தைய கால உலகத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆம், ஒரு பெருந்தொற்றுப் பேரழிவுக்குப் பிந்தைய உலகம் பற்றிய கற்பனையை விறுவிறுப்போடும் அறிவியல் நுட்பத்தோடும் உளவியல் பார்வையோடும் இந்த நாவல் முன்வைக்கிறது என்று திறனாய்வாளர்களும் வாசகர்களும் கருத்துக்கூறியுள்ளனர். அவர்களும் பதிப்பகமும் தெரிவித்திருக்கிறபடி கதைச் சுருக்கம் இதுதான்:

தாய், மகன் ரகசியப் பயணம்

கோல் என்ற பெண், மைல்ஸ் என்ற தனது 12 வயது மகனுடன் அமெரிக்காவிலிருந்து தனது சொந்தநாடான தென் ஆப்பிரிக்காவுக்குத் தப்பிச் செல்ல முயல்கிறார். கணவரை இழந்தவரான அந்தப் பெண், மகனுக்குப் பெண் போல ஒப்பனை செய்து, பதுங்கிப் பதுங்கிச் செல்கிறார். ஏன்?

ஹெச்.ஸி.வி. என்று பெயரிடப்படும் ஒரு கொடிய தொற்றுநோய் உலகத்தை ஆட்டிப்படைத்த மூன்று ஆண்டுகள் கழித்து, 2023ல் கதை நிகழ்கிறது (அந்தத் தொற்றுநோய் புறப்பட்டது 2020ம் ஆண்டில் என்பது நாவலில் ஒரு தற்செயல் ஒற்றுமை). அந்தத் தொற்றுக்கு உலகம் முழுவதும் சுமார் 400 கோடி (99 சதவீத) ஆண்கள் பலியாகிவிட்டார்கள். எல்லா நாடுகளிலுமாக சில லட்சம் ஆண்கள்தான் மிச்சமிருக்கிறார்கள். அவர்களின் உடலில் இயற்கையாக ஹெச்.ஸி.வி. எதிர்ப்புத் திறன் இருந்ததே அவர்கள் தப்பிப் பிழைத்ததற்குக் காரணம்.

Broken Monsters’ Lauren Beukes talks “the real Detroit” | SciFiNow …

எங்கும் பெண்கள்தான். அரசாங்க ஆட்சி, தொழில் வணிக நிர்வாகம், பாதுகாப்புப் படைகள், ஆபத்து மிகுந்த ஆழ்கடல் கண்காணிப்புகள், மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பெண்களே ஈடுபட்டாக வேண்டிய நிலை. இத்தகைய சட்டப்பூர்வப் பணிகள் மட்டுமல்ல, ஆட்கடத்தல், போதைமருந்து உள்ளிட்ட சட்டப்பகைக் கும்பல்களும் பெண்களின் பிடியில்தான். அதே வேளையில், பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

மிச்சமிருக்கிற ஆண்கள் இப்போது பெரிதும் நாடப்படுகிற “சரக்கு”! அவர்களது உடலியல்பு காரணமாக, முழு ஆரோக்கியத்துடன் ஆண் சிசுக்களை உருவாக்குவது உள்பட அரசுகளின் பல்வேறு நோக்கங்களுக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். பாலியல் உறவுத் தேவைகளுக்காகவும் அவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். இன்னொருபுறம், சில குற்றக் கும்பல்கள் தங்களது நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்காக இப்படிப்பட்ட ஆண்களுக்கு வலைவீசுகின்றன.

எப்படியோ அரசாங்கத்தின் பிடியில் சிக்குகிறார்கள் தாய், மகன் இருவரும். மகன் ஒரு பாலியல் பொருளாக மாற்றப்படுவதைத் தடுக்க விரும்பும் தாய் மருத்துவக் கண்காணிப்பு என தனிமைக் காவலில் வைக்கப்படுகிறார். மகன், அவனது உடலில் ஹெச்.ஸி.வி. எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறான்.

அப்போது அங்கே வருகிற, கோலின் தங்கை பில்லிஸ் இவர்கள் இருவரும் தப்பிக்க உதவுகிறாள். அந்த பில்லிஸ் செய்த உதவிக்கு உள்நோக்கம் உண்டு. ஆண்களின் உயிரணுக்களை எடுத்துச் சேமித்து, பெரும்பணத்திற்கு விற்பனை செய்கிற ஒரு கும்பலைச் சேர்ந்தவள் அவள். கும்பலின் நோக்கத்தை முறியடிக்கிறார் கோல், அதில் தங்கையை இழக்க வேண்டியதாகிறது.

அதிகாரப்பூர்வமாகவும் சில அத்துமீறிய உத்திகள் கையாளப்படுகின்றன. உதாரணமாக, அமெரிக்க அரசு என்ன செய்கிறது என்றால், எகிப்து, கத்தார், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மென்பொருள் பொறியியலில் வல்லுநர்களாக இருக்கும் பெண்களுக்குக் கவர்ச்சிகரமான ஊதியத்தில் வேலைகள் அளிக்கப்படுவதாக அறிவிக்கிறது. கொலம்பியா அதிபர், போதைமருந்து விற்பனையை அமெரிக்கா சட்டப்பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவுக்கான காபி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கிறார். தனது நாட்டுப் பெண்கள் தங்களுடைய குடும்பங்களில் எஞசியிருக்கும் ஆண்களை இனியும் போதை மருந்துக் கடத்தல்காரர்களுக்கு எதிரான வேட்டைகளில் இழக்க விரும்பவில்லை என்று காரணம் கூறுகிறார்.

கோல், மைல்ஸ் இருவரும் தங்களது ரகசியப் பயணத்தில் பல மோசமான இடங்களையும் அனுபவங்களையும் சந்திக்கிறார்கள். சில நல்ல மனிதர்களையும் கூட. பெரிய ஓட்டல்களின் நுழைவுச் சீட்டுகளைத் திருடி, மற்றவர்கள் தங்குவதற்காக விற்கிற கும்பல்கள், நடந்துகொண்டிருப்பது எல்லாமே கடவுளின் தண்டனைகளே என்று கூறி மக்களை வழிபாடுகளுக்கு அழைக்கும் மதக் குழுவினர், இந்த நேரத்திலும் தாக்குதல்களை நடத்துகிற பயங்கரவாதப் பிரிவுகள் என்று பல பின்னணிகள் கடக்கின்றன. கொஞ்சமும் எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பங்கள் தாயையும் மகனையும் புரட்டியடிக்கின்றன.

கதை நம்பிக்கையளிக்கும் முடிவையே கொண்டிருக்கிறது. இடையில் என்னென்ன நடக்கிறது, எப்படி முடிகிறது என்று புத்தகத்தை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அறிமுகச் சுருக்கத்திலேயே முழுக் கதையையும் தெரிந்துகொள்ள முடியுமா என்ன!

எழுத்தாளருடன் உரையாடல்

நாவல் வெளியீட்டை முன்னிட்டு, வணிக நோக்கமற்ற ‘தி கான்வர்சேஷன்’ செய்தித் தளத்தில் எழுத்தாளருடன் பிரெடோரியா பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்துறை மூத்த விரிவுரையாளர் நெடீம் சம்மி நிகழ்த்தியுள்ள உரையாடல் கவனிக்கத்தத் தக்கது. அந்த உரையாடலை இங்கே ‘தி ஒயர்’ இணைச் செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

Image

தனது நாவல் பெருந்தொற்று பற்றியதல்ல, அதற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றியது என்கிறார் பியூக்ஸ். நாவலின் நுட்பமான அறிவியல் தகவல்களைப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், முற்றிலும் பெண்களின் ஆளுமையே உள்ள சமுதாயமாக மாறுமானால் தற்போதைய ஆணாதிக்க அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேட்டபோது நியூயார்க் நகரக் காவல்துறையினர் அளித்த பதில்கள் ஆகியவை சுவையானவை. எப்படிப்பட்ட மெனக்கிடல்களில் வெற்றிகரமான படைப்பாளிகள் ஈடுபடுகிறார்கள் என்று காட்டுபவை.

இன்றைய கொரோனா போராட்டம் தொடர்பாக நெடீம் சம்மி கேட்டிருக்கிற கேள்விக்கான பதிலில், ”மக்கள் ஒரு புதிய உலகத்தை உருவாக்குவது, முழுமையான சோசலிசத்திற்குச் செல்வது, சமச்சீரான அடிப்படை வருமானத்திற்கு வழி செய்வது, அனைவருக்குமான சுகாதார கவனிப்பு, முறையான குறைந்தபட்சக் கூலி, வருமானப் பாதுகாப்பு, வசதியானவர்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் இடையே தொடர்கிற பரிவும் ஆதரவும் ஆகியவை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அது என்னை ஈர்க்கிறது. ஆனால், முதலாளித்துவம் நெடுங்காலமாக இருப்பதாயிற்றே… அதை முற்றிலுமாகத் துடைத்தெறிவது மிகக் கடினமான பணியாயிற்றே…” என்கிறார் பியூக்ஸ்.

தீவிர பெண்ணியவாதத்திலிருந்து நாவல் விலகியிருக்கிறது என்று கருதுவதாகக் கூறுகிறார் சம்மி. “தீவிரம் என்று என்ன பொருளில் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. பெண்களின் உலகம் என்றால் அன்பான, மென்மையான, நட்பு-வளையல்-சமூகத் தோட்டம் வகையறாக்களின் இடமாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற சிந்தனையை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். ஆண்மை-பெண்மை என இரண்டாக மட்டும் பிரித்துப்பார்ப்பதில் எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை, அதைக் கேள்விக்கு உட்படுத்த முயன்றிருக்கிறேன். பெண்களின் உலகம் என்பது மக்களின் உலகம்தான். நல்லதும் கெட்டதுமான மனிதத் தன்மைகளை முழுமையாகக் கொண்டதுதான். குறிப்பாக நாம் மாறாத அதே சமுதாயத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிறபோது, ஆண்களைப் போலவே பெண்களும் – வேண்டுமானால் வெவ்வேறு வழிகளில் – அதிகாரப் பசி கொண்டவர்களாக, வன்முறையாளர்களாக, சுயநலவாதிகளாக, அத்துமீறுகிறவர்களாக, தீயவர்களாக இருக்கக் கூடியவர்கள்தான். அதே போல ஆண்களும் பரிவுள்ளவர்களாக, பேணுகிறவர்களாக, முதன்மையான கவனிப்பை வழங்குகிறவர்களாக இருக்க முடியும்.”

ஒரு நாவலின் வழியாக எத்தகைய சிந்தனைகளெல்லாம் பகிரப்படுகின்றன!

நக்கீரன் கோபால் குடும்பத்திற்கு ...

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

Leave a Response