Book Review

நூல் அறிமுகம்: ஏன் எதுவுமே எழுதத் தோன்றவில்லை? – திவாகர். ஜெ

Spread the love

 

ஒரு நூல் வாசித்து முடித்தவுடன் அதன் வார்த்தைகளின் லயிப்பில் – அந்த நூலின் செய்திகளின் பிரம்மிப்பிலிருந்து தன் வாசகனை மீள விடாமல் இத்தனை தூரம் கட்டிப்போட ஒரு புத்தகத்தால் இயலுமா? இயலும். இதோ கண்முன் சாட்சியாய் குற்றப் பரம்பரை நூல் வாசித்த பலருண்டு என்னைப்போல்.

களவு, கொள்ளை, கொலை இவற்றையே தொழிலாகக் கொண்டவர்கள் வேலுச்சாமி என்கிற வேயன்னாவைத் தலைவராகக் கொண்ட கொம்பூதி மக்கள். கொள்ளையடித்த பொருளை பச்சமுத்து எனும் ஏமாற்றுக்கார வணிகனிடம் அப்படியே ஒப்படைத்து அவன் தரும் தானிய, தவசங்களால் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் அப்பாவிக் கூட்டம். கொள்ளையையே தொழிலாகக் கொண்டவர்கள் அப்பாவிகளா என்ற வினா எழலாம். அவர்கள் கன்னம் வைத்து கொள்ளையடிப்பது இல்லாதப்பட்ட ஏழைகளின் வயிற்றில் அல்ல. பெட்டி நிறைய பணமிருந்தும் இல்லாதோருக்கு கிஞ்சித்தும் கொடுத்துதவாத கொழுத்த பணக்காரர்களிடமே.

நாவலின் தொடக்கத்தில் காவலர்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் வேலுச்சாமியின் கூட்டத்தினரில் அவர்களால் மறிக்கப்பட்டு, கொல்லப்பட்டோர் போக மீதியுள்ளோரை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனான வையத்துரை காப்பாற்றுகிறான். இதில் வழிதவறி தப்பிச் செல்லும் வேலுச்சாமியின் மூத்த மகன் சேது ஓர் ஆங்கில அதிகாரி வீட்டில் வளர்கிறான்.

கொம்பூதி மக்களும், பெரும்பச்சேரி மக்களும் வேறு வேறு சாதியினராய் இருப்பினும் தங்களுக்குள் அண்ணன், தம்பியாய் பழகி வருகின்றனர். அதனைக் குலைத்து தனது தொழில் லாபத்திற்காக அவர்களுக்குள் பகையை மூட்டி அதில் குளிர் காய்ந்து லாபம் ஈட்டும் பச்சமுத்து போன்ற கயவர்களை நாளும் நாம் காணத்தான் செய்கிறோம். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் உழைக்கும் மக்களை சுரண்டும், அவர்களுக்கிடையில் தீ மூட்டி உண்டு கொழுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கான முடிவு என்னவென்பதையும் நாவலில் உணர வைத்துள்ளார் நூலாசிரியர் திரு. வேல ராமமூர்த்தி அவர்கள்.

குற்றப் பரம்பரை – மண் வாசனை

பெருநாழி கிராமத்தைச் சேர்ந்தோர் ஊர் கிணற்றில் நீர் எடுக்கக் கூட பெரும்பச்சேரி மக்களை அனுமதிப்பதில்லை. உயிர்போகும் நிலையில் ஒரு குடம் நீரெடுக்கும் ராக்காயியின் கணவன் துருவனுக்கு பெருநாழி ஊர் மக்கள் தரும் தண்டனை கொடுமையின் உச்சம். கொம்பூதி மக்களின் ஆதரவிலும், பாதுகாப்பிலும் பெரும்பச்சேரி மக்கள் கிணற்றில் நீரெடுக்க வருகையில் அதில் மலத்தைக் கொட்டி வைத்திருப்பதெல்லாம் மனிதத் தன்மையிலேயே சேர்த்தியில்லை.

கொம்பூதி வேயன்னாவினை அடக்க வெள்ளையருக்கு தங்கள் ஊரில் கச்சேரி அமைக்க அனுமதியளிக்கின்றனர் பெருநாழி மக்கள். காவலர்கள் வேயன்னாவைப் பிடித்தனரா? அவர்களின் கொள்ளையை அவர்களால் தடுக்க முடிந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை.

அதிகாரத்தால் திருத்தமுடியாதவர்களை ஒரே ஒரு சத்தியத்தால் திருத்த முயற்சிக்கின்றான் வழிதப்பிச் சென்று 20 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை அதிகாரியாய் திரும்பும் வேயன்னாவின் மகன் சேது. ஆனால் வேயன்னாவால் பலனடையும் பச்சமுத்து போன்றோர் அதை முறியடிக்க முயற்சிக்கின்றனர். வேயன்னா கூட்டத்தாருக்கு களங்கம் கற்பிக்கின்றனர்.

வேயன்னாவின் இளைய மகன் வில்லாயுதம், நாகமுனியால் நரபலியிட வளர்க்கப்படும் வஜ்ராயினி, அவளை வளர்க்கும் அலி ஹஸார் தினார், வில்லாயுதத்தின் மாப்பிள்ளைக்காரி சிட்டு, வேயன்னாவின் மகள் அன்னமயில், பெரும்பச்சேரியைச் சேர்ந்தவனாய் இருந்தாலும் கொம்பூதி மக்களிலேயே ஒருவனாகிப் போன வையத்துரை, பெருநாழியின் கார்மேக ஆசாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதை விட்டு நீங்காமல் வலம் வருகின்றனர்.

குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி ...

அதிலும் வேயன்னாவின் ஆத்தா கூழானிக்கிழவி தன் செய்கைகளாலும், அனுபவ அறிவாலும் தன் கூட்டத்தை வழிநடத்துவதில் நம்மைக் கவர்கிறார்.

இறுதியில் வேயன்னா தன் மகனான சேதிவின் கையாலேயே துரோகிகளின் வஞ்சனையால் சுடப்பட்டு இறக்கும் போது நம்மையும் அறியாமல் கண் கலங்குகிறது.

இந்நூலாசிரியரின் மற்றொரு நூலான பட்டத்து யானை வாசித்துவிட்டு அவரிடம் பேசிய போது, “நீங்கள் குற்றப் பரம்பரை வாசித்து இருக்கிறீர்களா? இல்லையெனில் வாசியுங்கள். அதுதான் மாஸ்டர் பீஸ்” என்றார். உண்மையில் குற்றப் பரம்பரை நூல் ஒரு Master piece தான். வாசியுங்கள். வாசிப்பில் உங்களையே நீங்கள் மறப்பீர்கள்.

வாசிப்பும், பகிர்வும்

திவாகர். ஜெ

குற்றப்பரம்பரை by Vela Ramamoorthy – Novel review

நூல் : குற்றப் பரம்பரை

ஆசிரியர் : வேல ராமமூர்த்தி

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

பக்கங்கள் : 448

விலை : 400

வகை : நாவல்

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery