Book Review

புத்தக அறிமுகம்: குழந்தை இலக்கியக் குளத்தில் ஒரு குட்டித்தவளை! – அ.குமரேசன்

 

கதை சொல்வதும் கதை கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. போகிற பொழுதைப் பொருளுள்ளதாக்கி, வருகிற பொழுதை உயிர்ப்புள்ளதாக்கிடும் மானுடப் பண்பாட்டுத் தளச் செயல்களில் ஒன்றுதான் கதை.

ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் என்னவெல்லாம் நடந்ததென்பதைச் சைகை மொழியிலேயே கதையாகச் சொன்னார்கள். அப்புறம் வந்தவர்கள் பாறைகளில் சித்திரங்களாகப் பொறித்தார்கள். களிமண் ஓடுகளில் எழுத்துகளைப் பதித்தார்கள். ஓலை ஏடுகளில் எழுதினார்கள். காகிதம் வந்தபின் அச்சிட்டார்கள். இன்று மின்னணுப் புத்தகங்களை இணையத்தில் ஏற்றுகிறார்கள். வலைக்காட்சித் தளங்களில் வாய்மொழியாகக் கதைக்கிறார்கள். வடிவங்கள் மாறினாலும் கதை சொல்வதும் கதை கேட்பதும் கதை படிப்பதும் மாறவில்லை. நாளை இதிலே இன்னொரு தொழில்நுட்பம் வரும் – அதிலே கதை தொடரும்.

தொடரும் கதைக் கலையில் முக்கியமானது குழந்தைகளுக்குக் கதை சொல்வது. அது உணவூட்டுவது, மருந்து கொடுப்பது, பள்ளிக்கு அனுப்புவது ஆகியவற்றுக்கு நிகரானதொரு குடும்பப் பொறுப்பு என்றால் மிகையில்லை. நிறையக் குழந்தைகளுக்குக் கதைகள் தேவைப்படுகின்றன, நிறையக் கதைகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன என்பதால் இதுவொரு சமூகப் பொறுப்புமாகிறது. தனக்குத் தெரிந்த கதைகளைச் சொல்வது பொறுப்பு, தானே புனைந்த கதைகளைச் சொல்வது சிறப்பு.

அந்தச் சிறப்பான பொறுப்பை நிறைவேற்றுகிற எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது ‘கெட்டிக்காரக் குட்டித் தவளை’ புத்தகத்தின் மூலம் இணைகிறார் துரை ஆனந்த். ஏற்கெனவே குழந்தைகளுக்குக் கதை சொல்கிற யூ டியூப் தளம் ஒன்றை நடத்தி வருகிற அவருக்கும், உருவாக்கி வெளியிட்டிருக்கும் ‘சாரல் வெளியீடு’ குழுவினருக்கும் இது முதல் புத்தக முயற்சி.

children story Archives - Bookday

குழந்தைகளுக்குக் கதை எழுத வருகிறவர்களில் பலரும் பின்தங்கிவிடுவதற்கு ஒரு முக்கியக் காரணம், குழந்தைகளுக்குத்தானே எழுதுகிறோம் என்று எண்ணுவதுதான். நாவல், சிறுகதை உள்ளிட்ட இலக்கிய வெளியின் கதையாக்கங்களுக்கு எவ்வளவு அக்கறையும் ஈடுபாடும் செய்நேர்த்தியும் தேவையோ அவ்வளவும் குழந்தைக் கதைகளுக்கும் தேவை. “குழந்தை இலக்கியம்” அல்லது “சிறார் இலக்கியம்” என்று குழந்தைகளுக்கான கதைகளையும் பாட்டுகளையும் இலக்கிய மேடையில் ஏற்றுகிற சொல்லாக்கங்கள் சும்மா வந்துவிடவில்லை. இந்தப் புரிதலோடு எழுத்தாளரும் வெளியீட்டாளர்களும் உழைத்திருப்பதற்கு இந்தப் புத்தகமே சாட்சி.

புத்தகத் தலைப்புக்குரிய முதல் கதை உண்மை நண்பர்களை எப்படி அடையாளம் காண்பதென்று சொல்கிறது. ஒரு கதை கூண்டுப் பறவைகள் மீதான உண்மையான நேசம் அவற்றைச் சிறகடித்துப் பறக்க விடுவதில்தான் இருக்கிறது என்கிறது. மற்றொரு கதை பொருந்தாப் பெருமையின் போலித்தனத்தை உணர்த்துகிறது. வாழ்க்கையின் அலைகளில் நீந்திக் கடக்க வேண்டுமென்றால் தயக்கத்தை உதறிவிட்டு பிரச்சினைக்குள் குதித்தாக வேண்டும் என்கிறது வேறொரு கதை. பசிக்காக இல்லாமல் வெறும் ருசிக்காக அளவின்றிச் சாப்பிடுவது நல்லதா என்று யோசிக்க வைக்கிறது கடைசிக் கதை.

இப்படி ஒவ்வொரு கதையிலும் புரிந்துகொள்ளவும் பின்பற்றவுமான ஒரு கருத்து இருக்கிறது. இல்லாதது என்னவென்றால், “இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்” என்ற முடிவுரை. கதையின் செய்தியை குழந்தைகளின் சொந்த முடிவுக்கு விட்டிருப்பது அவர்களது சிந்தனைத் திறனை வளர்க்க உதவும். சின்னஞ்சிறு வாக்கியங்களோடு குட்டிக் குட்டிக் கதைகளாக இருப்பது வாசிப்பதில் விருப்பத்தையும் யோசிப்பதில் முனைப்பையும் தூண்டக்கூடியதுதான்.

குளக்கரை மரத்தில் இருக்கும் பறவைகள் வறட்சிக் காலம் வருகிறபோது நீர் கிடைக்கும் பகுதிக்குச் செல்வதும், பூங்கொடிகள் குளத்தின் மண்ணில் புதைவதும் இயற்கையான நிகழ்வுகள். அதை மனிதர்களின் நட்பு பற்றிய மதிப்பீட்டிற்கான உவமையாக்குவது சரிதானா? காட்டு விலங்குகளுக்கு சிங்கம்தான் அரசன் என்று யாரோ எப்போதோ உருவாக்கிய கற்பிதத்தை இன்றும் தொடர வேண்டுமா?

பிடித்த கதைகள்.. - Google Groups

–இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனால், அது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிறபோது விவாதிக்க வேண்டிய சிந்தனை.

நரித்தந்திரம், முதலைக்கண்ணீர், எருமைக்குணம், குரங்குப்புத்தி, காக்கைக்கள்ளம் என்றெல்லாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிற உவமைச் சொற்களைப் பேச்சிலும் எழுத்திலும் தவிர்க்கிறவன் நான். விலங்குகளின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வது வேறு, மனிதத் தவறுகளுக்கு விலங்குகளின் செயல்பாட்டை உதாரணமாக்குவது வேறு. ஆயினும், நோக்கத்தைப் பதிய வைக்க இப்படியான உவமைகள் பயன்படுகின்றன என்று புரிவதால் இக்கதைகளை ரசிப்பதில் எந்தத் தடையுமில்லை.

அதே போல், ‘ஃபேன்டசி’ எனப்படும் மாயவுலகக் கற்பனைகளிலும் முரண்பாடு இல்லை. குழந்தைகளின் கனவுலகத்தோடு நெருங்க முயல்கிற கதைகள் அவை. இந்தப் புத்தகத்தில் நேரடியாக மாய சாகசக் கதைகள் இல்லை என்றாலும், பறவைகளும் தவளைகளும் செடிகொடிகளும் குளத்து நீரும் பேசிக்கொள்வதே சுகமான மாயக் கற்பனைதான்.

“நான் என்ன சின்னப்பிள்ளையா, இப்போதும் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று பெற்றோரை மௌனப்படுத்துகிற வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து மாறுபட்டு, தன்னை இன்றுவரையில் ஒரு குழந்தையாக உணரவைக்கும் பெற்றோருக்குப் புத்தகத்தைக் காணிக்கையாக்கியிருக்கிறார் கதாசிரியர். அவர்கள் மகிழ்ந்து பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் புத்தகம் வந்திருக்கிறது.

குட்டிக் கதைகள் புத்தகத்திற்குப் பொருத்தமாக ஒரு குட்டி முன்னுரையை அளித்துள்ளார் குழந்தை இலக்கிய அரங்கில் இன்றொரு முக்கிய ஆளுமையான விழியன். சிறார் இலக்கியம் தொடர்பான ஒரு விரிந்த உரையாடலுக்கும், தமிழில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் ஒரு சுருக்கமான நிகழ்ச்சி நிரலை அவர் முன்வைத்திருக்கிறார் எனலாம்.

Chennai book fair to end today, 12 lakh books sold

கதைகளுக்கான சித்திரங்களைத் தீட்டியிருக்கிறார் வளரும் ஓவியர் ந.க.தீப்ஷிகா. பெரியவர்களுக்கான நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பு நூல்கள் ஓவியம் இல்லாமல் வர முடியும். ஆனால், குழந்தைகளுக்கான புத்தகங்கள் முதலில் அவர்களுடைய கண்களை ஈர்க்க வேண்டும். அப்படி ஈர்த்து, இந்தக் கதைகளைப் படி என்று சொல்வதாக வண்ண விளையாட்டு விளையாடியிருக்கிறார் இந்தத் தூரிகைத் தோழி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு நடத்திவரும் ‘புத்தக நண்பன்’ நிகழ்வில் எழுத்தாளர் கமலாலயன் குட்டித்தவளையை அறிமுகப்படுத்திய பிறகு பேசிய குழந்தைகள் இந்தப் புத்தகம் தங்களுக்குப் பிடித்திருப்பதற்கு முதல் காரணமாக ஓவியங்களைக் குறிப்பிட்டடார்கள். எப்பேற்பட்ட அங்கீகாரம் அது! வாழ்த்துகள் தீப்ஷிகா.

குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லி மகிழ்வதற்குமான கதைகளை வழங்கியுள்ள துரை ஆனந்த் குமாருக்கும், மழைச்சாரலின் குளுமையோடு புத்தகத்தைக் கொண்டுவந்துள்ள நந்தா உள்ளிட்ட பதிப்பகத்தாருக்கும் கைகுலுக்கல்கள். குழந்தைகளிடையே வெவ்வேறு வயது, வாழ்நிலை என்ற மாறுபாடுகள் இருப்பினும் தங்களை ஈர்க்கிற கதைகளை எதிர்பார்ப்பதில் மாறுபாடில்லை. அவர்களுக்காகப் பன்முகச் சிந்தனைகளோடு மாறுபட்ட பல கதைகளைத் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்ற விருப்பமே என் வாழ்த்து.

கெட்டிக்காரக் குட்டித்தவளை
துரை ஆனந்த் குமார்
வெளியீடு:
சாரல் வெளியீடு,
131/1 முனியப்பன் தெரு,
கீழ அம்பிகாபுரம்,
திருச்சி – 620 004
7358968695
பக்கங்கள்: 32
விலை: ரூ.100

அ. குமரேசன்

1 Comment

  1. வாங்கி வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்திய பதிவு.சிறப்பான சிறார் இலக்கியத்தை அறிமுகப்படுத்திய தோழருக்கு நன்றியும் அன்பும்.🤝🙏😍

Leave a Response