Friday, May 29, 2020
Book Reviewஇன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் கரன் கார்க்கியின் “கருப்பர் நகரம்” – கருப்பு அன்பரசன்

222views
Spread the love
சென்னை மாநகரம், பெருநகரமாகி வளர்ந்து நிற்கும் போதும்; டைடல்பார்க்,
டைசல் பார்க், 5 நட்சத்திர ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்புகளென அடையாளங்கள் பல புதிது புதிதாக முளைத்தெழுந்து வானை முட்டி நின்றாலும், சென்னை என்றதுமே மனசுக்குள்
படமாகி நிற்பது இரவுப் பொழுதின் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனும், மெளண்ட் ரோடும், எல்.ஐ.சி, கட்டிடமும்.. பாரிமுனையும், பர்மா பஜாரும், எரிந்தழிந்து போனாலும் அடையாளமாக சொல்லப்படும் மூர்மார்கட்டும், அல்லிக் குளமும் வால்டாக்ஸ் ரோடும், விக்டோரியா ஹாலும், ராயபுரம் கஞ்சி தொட்டி ஆஸ்பிடலும்,ஸ்டேன்லியும், ஜி.எச்சும் ஆகும். இன்றும் கூட பலர் எரிந்து அடையாளமிழந்த மூர்மார்கட் பெயரைச் சொல்லி வழிகாட்டுவது சகஜமாக பார்க்கலாம்.
இப்படிப்பட்ட அடையாளங்கள் அனைத்தும் நிலப்பரப்பில் இருந்து தானாகவே முளைத்தெழுந்து பெயர் சூட்டி நிற்கின்றனவாயென்ன.? அத்தனை அடையாளங்களுக்குள்ளும் உழைக்கும் மக்களின் ரத்தமும், வியர்வையும், உசுரும் கலந்து நிற்கிறது.. சுண்ணாம்புக் கலவைக்குள்ளும், சுட்டச் செங்கற்குள்ளும்.. இணைந்து கிடக்கும் கரும்பாறைக்குள்ளும் தகித்துக் கொண்டிருப்பது எளிய மக்களின் உயிர் மூச்சன்றோ! இந்த உயிர்களின் ஆதி மெட்ராஸ் மட்டும் கிடையாது. அன்று மெட்ராஸ் நோக்கி படிப்பிற்காகவோ, அலுவலக வேலைக்காகவா வந்தவர்களா இம் மக்கள்?. சொந்த ஊரில் வாழ வழியில்லாமல், பஞ்சம் பொழைக்கவும்.. பண்ணையார்களிடமிருந்து தனித்தனியாகவோ.. குடும்பம் குடும்பமாகவோ தப்பித்து ஓடி வந்த அடிமைகள்தான் இம்மக்கள். அப்படி வந்த மக்களின் மூச்சில் இருந்து ஓங்கி வளர்ந்தவைகளே இன்றைய சென்னையின் பல அடையாளங்கள்.
அப்படி 1960, 70களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி பிழைக்க வந்த மக்களின் வலிகளை உழைப்பினை, உண்மையினை மரித்துப் போனவர்களின் அன்பினை, ஏக்கங்களை, ஆசைகளை, கதைக்களமாக்கி வாழும் மனிதர்களையும் தனது புனைவிற்குள்
கொண்டுவந்து வலிமிகுந்த படைப்பாக “கருப்பர் நகரம்” புதினத்தைக் கொண்டுவந்திருக்கிறார் கருப்பு நதியின் அடையாளமாக இருக்கும் அன்புத் தோழர் “கரன் கார்க்கி” அவர்கள்.
மிகச் சிறந்த முறையில் வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது,  நூல் வெளியீட்டு துறையில் அளப்பரிய சாதனைகளை நிதம் நிகழ்த்தி வரும் “பாரதி புத்தகாலயம்”. இவர்களிருவருக்கும் பிழைப்புத் தேடி சென்னைவாசிகளாகிப்போன மனிதர்களின் சார்பில் நன்றி பாராட்டுதல்களும்.. வாழ்த்துக்களும்.
Madras history | Karan Karki speech | karupar nagaram | Che Production
பண்ணையார்களிடம் அடிமைகளாக வேலை செய்தாலும் தனிமனித ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்து வரும் பெரும் குடும்பங்களில் ஒன்றாக கணவனை இழந்த பானுவின் குடும்பமும், அவளின் ஒற்றை வாரிசான செங்காணியும். சூழ்ச்சி செய்த பண்ணை ஒருநாள் பானுவை நெருங்கிடத் துணிய, மினுக்கிக் கொண்டு இருக்கும் சாமியெல்லாம் கண் மூடிக் கிடக்க நிஜ காளியக மாறி பெண்பித்தன் பண்ணையாரின் குரல்வளையை அறுத்தெரிகிறந்த பானு வீட்டிற்கு வந்து தூக்கிட்டுக் கொள்கிறாள்.
வாத்தியாரின் மொழி புரியாமல்; கால்நடைகளின் மொழிமட்டுமே நன்கு உணர்ந்த, பண்ணையில் அடிமையாக வேலை பார்த்துவரும் சிறுவன் செங்கேணியின் உயிருக்கு  பண்ணையாட்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்ற பயத்தில்  அன்று இரவே  ஊரின் எல்லைக்குள் கொஞ்சம் பணத்தோடு கொண்டு விடப்பட்டான் அந்த கிராமத்து நல்ல மனிதர்களால். சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி பட்டணம் வந்து கருப்பு நதியோரம் சின்ன குடிசைக்குள்; சுமை இழுக்கும் வண்டியோடு வாழ்ந்த செங்கேணியும்; அங்கே அவனுக்கான ராசாத்தியாக..
அல்லிக்குளத் தாமரைகளின் தலைவியாக.. குடிசைப்பகுதி இளம் பெண்களின் கருப்பு செம்பருத்தியாக தன் அக்கா செல்வியின் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் ஆராயி. செங்கேணி ஆராயி பாத்திரப்படைப்பினூடாக சென்னை குடிசைப்பகுதி மக்களின் வாழ்க்கையை வாழும் மனிதர்கள் பலரின் கதாப்பாத்திரம் வழியாக போராட்டம் மிகுந்த வலிகளை பதிவாக்கி இருப்பார் ஆசிரியர் கரன்கார்க்கி.
கதை மாந்தர்கள், வாழ்ந்த, இன்றும் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சியின் பெயரால் துரத்துயடிக்கப்பட்டு வாழும் மனிதர்கள் நடமாடிவரும் களமாக “நாயடிச்சான் பறச்சேரியாக” இருந்து “ஜெகனாதபுரமாக” மாறி, இன்று நாம் சூளையில் இருந்து கிழக்கு நோக்கிப்போய்
நெடிய பாலம் ஏறி வியாசர்பாடி செல்ல இடப்பக்கம் திரும்புவதற்கு  இடையிலிருந்திடும் ஒரு பெரும் பகுதியைப் பார்க்கலாம்; தற்போது ஓங்கி குவிந்திருக்கும் குப்பைக்கிடங்காக அங்கே.
அதற்கு அருகிலேயே பூங்கா ஒன்றும் பாழடைந்து.. ஆமாம் அன்றைக்கு சென்னை நகர் வீதியில் அலைந்த வெறி, தெரு  நாய்கள் இழுத்துவரப்பட்டு வலுவுள்ள மனிதனால், கால்கள் கட்டப்பட்ட நாயின் மண்டையில் அடித்து சாகடிப்பட்டு தீயிட்டுப் பொசுக்கப்பட்ட இடம் பூங்காவாக. உயிருள்ள, போராட்ட குணமுள்ள, அன்புசூழ் மனிதர்கள் வாழ்ந்த இடம் குப்பைமேடாக தற்போது.
உனக்கு ராவணன் மாதிரி புருசன் ...
அந்த ஜெகனாதபுரத்தில்தான் ஆராயி-செங்கேணி பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நரியங்காடு பகுதியில் இருந்து ரத்தசம்பந்தம் ஏதுமற்ற முனியம்மாக்காவின் உதவியோடு தங்களின் காதல் வாழ்க்கையை சிறகு முளைத்த பறவைகளாக தொடங்குகிறார்கள்.. தன் காதல் ராசாத்தியான ஆராயிக்கு தன் பிரியங்களை அவள் நேசிக்கும் அல்லிக் குளத்தின் தாமரையாலும், மனம் கிளர்ந்தெழும் வாசம்கொண்ட கொஞ்சம், கொஞ்சும் மல்லிகைப்பூக்களாலும், விதவிதமான கலர் ரிப்பன்களாலும், தலை முடிக்குள் சொருகும் கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலமென பல வண்ண கிளிப்கள், ஹேர் பின்களால் பரவசமூட்டி ஒருவர் மூச்சை ஒருவர் சுவாசித்து, சாணம் பூசி ஜில்லிட்டுக்கிடக்கும் மண்தரையில் படுத்து, நிலக்கரிப் புகை சூழ்ந்த கரியவானமதில் வனப்பு மிக்க ஜோடிப்பறவைகளாக பறந்து திரிந்தவர்களின் வாழ்வதனில் பேரிடியாக நிகழ்ந்த விபத்தொன்றில் செங்கேணி சிக்கிட நேர்கிறது.
ஆண்களின் அத்தனை உயிர்ச் செல்களிலும் “பெண்கள் தங்கள் உடல் இச்சைக்காக மட்டுமே” என்கிற வக்கிரத்தை பழக்கிவைத்த, பழகிய முகங்கள்தானே எங்கும் வெறி கொண்டு உலாவிவருகிறார்கள் மனிதர்களாக; அப்படிப்பட்ட பேய்காளி என்கிற சாராயவியபாரி ஆராயியின் வாழ்க்கையில் குறுக்கிட… என்னவானார்கள் அந்த காதல் கிளிகள்.. பேய்க்காளியின் நிலமை என்னவானது.. குடிசைப்பகுதி மக்களின் நேசத்தை.. அதில் பூமியைத் தொடாத மழைத் துளியின் தூய்மையை.. வருகின்ற சவால்களை சந்தித்திடும் மன உறுதியை.. குடிசைப்பகுதி மக்களின் கொஞ்சலை, கிண்டலை, மாமன் மச்சான் பங்காளியெனும் சந்தோஷச் சண்டைகளை, மனுசனுக்கு எதாவது ஒன்றென்றால் ஒரே நேரத்தில் துடித்திடும் இருதயங்களை நாவல் முழுக்க நிறைத்திருப்பார் அழகிய பரவசமூட்டும் மெட்ராஸ்  மொழியின் வார்த்தைகளில் நாவலாசிரியர்.
நாவலுக்குள் வரும் அனைத்து பெண் பாத்திரங்களும்  பெருமைக்குரிய, மெச்சத் தகுத்தவைகளாகப் படைத்திருப்பார் நூலாசிரியர்.
எழுத்தாளர் கரன் கார்க்கி
ஆராயியின் அக்கா செல்வி தொடங்கி காதலுக்கு துணை புரியும் முனியம்மாக்கா , ஜெகனாதபுரம் வந்ததும் உதவிடும் செல்லக்கண்ணு, பாளையத்தின் மனைவி செந்தாமரை, தெருவில் காய்கறி கடை போட்டிருக்கும் பெண், பேய்க்காளியை பின்னி பெடலெடுக்கும் சாராயம் விற்கும் கோவிந்தம்மா, வயிற்றுப் பசிக்காக நிலக்கரி திருடும் குண்டு பெண்,  அழகு தமிழ் பேசி ஆராயியின் அன்பை ஆரத்தழுவி செங்கேணியுன் நலன் பேனும் ஆஸ்பத்திரி தேவதையான நர்ஸ்,
கறிக்கடை மீசைக்காரனால் வஞ்சகமாக ஏமற்றப்பட்டு தீக்குளிக்கும் காதல் தேவதை, மாரியம்மன், காளியம்மன், கன்னியம்மன், திரெளபதியம்மன் சாமிகளெல்லலாம் வேடிக்கைப் பார்க்க; சீண்ட வரும் பண்ணையாரின் ஆம்பள திமிர் ஆதிக்கத்திற்கெதிராக அரிவாள் தூக்கி எளிய பெண்களுக்கான நியாயம் செய்யுது தன்னையே தூக்கிட்டு செத்துப்போகும் பானு, ஒற்றக் குழந்தை செங்கேணியை காப்பாற்றத் துடிக்கும் செல்வியம்மா.. “புண்ணியவதி போறத போறான்னு பேய அடிச்சிட்டுத்தான் போன போ” வென மாரடித்து அழும் பூர்சம்மாள்..
எல்லாவற்றிற்கும் மேலாக பாளையத்தின் மனைவி செந்தாமரை.. கணவன் பாளையத்தோடு சின்னச் சின்ன அழகிய, ருசிக்கும்படியான சண்டை போட்டுக் கொண்டே அவனின் அத்தனை செயல்களிலும் தன்னை உட்படுத்தி வாழும் போராளியாக.. குடிசைப்பகுதி மக்கள் அத்தனை பேரிடமும் அன்பு பாராட்டும் தாயாக.. அரவணைத்து செல்லும் பேரன்பு மிக்கவராக.. தங்களின் கல்யாண நாளுக்கு கூட கோவிலுக்குப் போகாமல் வாயிம் வயிறுமாக இருக்கும் ஆராயிக்கு
சாப்பிடவும், அவள் தலையில் மல்லிப்பூவையும் சூட்டி மகிழ்வுறும் அவள் அன்பில் தெரியும் குடிசைப்பகுதி மக்களின் நெஞ்சின் ஈரம்.
அரசுத் துறையொன்றில் பணிபுரியும் ஊழியனாக பாளையம்.. மாலை நேரத்தில் ஜெகந்நாதபுரம் குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு இரவு பாடசாலை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் ஏற்றத்திற்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பாங்கும்.. “அறிவு என்பது எவனோ ஒருத்தனுக்கோ, ஒரு கும்பலுக்கோ கெடையாதுடா,  சூழலும், தேவையும், முறையான பயிற்சியும் இருந்தா எவனும் அறிவாளிதான்” என்று மருதுவோடு உரையாடும் போதும்; சிந்தித்துக் கொண்டே இருக்கும் பொதுச் சமூகத்தின் அங்கமான தனிமனிதன் முடிவுகளை எடுத்திடும் போது தான் இலகுவாக இருந்து பொதுமுடிவாக பரப்பிடும் கருத்து ஆட்பட்டு அதோடு தன்னை இணைத்து ஒத்துப்போகும் மனநிலை குறித்து பேசிடும் போது நூலாசிரியரின் அரசியல் புரிதலை வாசகன் உணர முடிகிறது.
Madras: A History #IamMadras | Put Chutney – YouTube
அரசு அதிகாரத்தில் இருப்பவர் குறித்து  தோழர்களோடு கலந்துரையாடும் பாளையம்
 “மேல இருக்குறவன் எதைச் செய்தாலும் நல்லாத்தான் செய்வான். நல்லதைத்தான் செய்வான்னு நம்ப வைக்கிற வேலையத்தான் செய்கிறது நம்ம சனநாயகம். நம்ப ஊர்ல சட்டமெல்லா நெறைய இருக்குதுதான். சட்டத்தை மீறுறவன் கல்லா பெட்டிய நிரப்பத்தானே பயன்படுது இருக்குற சட்டமெல்லாம். புதுசு புதுசா சட்டம் வரும்போதெல்லாம் அதிகாரத்தில் இருக்குறவங்களுக்குத் தானே கொண்டாட்டம்.” என்று பேசிடும்போது இன்றை ஜனநாயகமும், அரசின் சட்டங்களும் எவருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை வாசிப்பவருக்கு தெளிவாக்கிடுவார் தன் அரசியலை.
இப்படி பாளையத்தின் வழியாக அன்றைய அரசியலையும்; தாழ்த்தப்பட்ட மக்களின் சுய முயற்சி தேவையின் அவசியத்தையும் உணர்த்தி இருப்பார். தாழ்த்தப்பட்ட மக்கள் பறையடிக்கும் தொழிலை விட்டு வெளியேறவேண்டும் என்பதை தன் தந்தையரின் மரணத்தின் வழியாகவும்.. உரிமைக்கான உன்னதக் குரலை தன் அண்ணன் சின்னத்தப்பு வழியாக வலிமிகுந்த வலுவான போராட்டத்தின் கட்டாயத்தை வாசிப்பவரை உணரச் செய்வார் நாவலாசிரியர்.
“வெள்ளையின் மீதான மோகம்தான் கருப்பு மனிதர்களை ஆண்டாண்டு காலமாக அடிமையாக வைத்திருக்கிறது. வெள்ளைத்தோல் தனக்குள்ள கிராக்கியைப் பயன்படுத்தி ஆதிக்கம் செய்யவும், சுரண்டவும் கடவுளின் வழி வந்தவர்கள் என்று கூச்சமற்று பொய் பேசவும் வைக்கிறது. ஆனால் காலம் வெள்ளைச்சியின் வயிற்றில் கருப்புக் குழந்தையையும்ம், கருப்பியின் வயிற்றில் வெள்ளைக் குழந்தையையும் உற்பத்தி செய்கிறது.
வெள்ளைத் தோல் அரை வெள்ளைத் தோலாகவும், கருப்புத் தோல் அரைக் கருப்பாகவும் பல்கிப் பெருகி வரும் வேளையில் மிஞ்சி நிற்கும் வெள்ளைத் தோலை  அறிவின் அடையாளமாக காட்ட முயலும் தந்திரமான சூழ்ச்சிகளை முறித்துப்போட முழு கருப்புத்தோல் தனது உன்னதத்தை சூரியனின் சுடர்பட்டு மின்னும் அதன் அழகைக் கண்டு பெருமிதம் கொள்ள கற்க வேண்டும்.” என்று பாளையத்தின் வார்த்தைகளில் பேசிடும் நூலாசிரியர் வெள்ளைத்தோலின் சூழ்ச்சியையும் அதை முறியடிக்க கல்வியும் கற்பிப்பதும் எத்தனை முக்கியமானது என்பதை பெரும்பான்மை பொதுச் சமூகத்திற்கு சொல்வதென்பது இன்றளவும் பொறுத்தபாடு உள்ளதாகவே உணரமுடியும்.
Madras to Chennai Story! | Ithu Enga Ooru Chennai Da! - YouTube
கடந்த கால வரலாறுகளையும் போராட்டத்தையும் இன்றைய சமூகத்திற்கு கடத்திடும் வேலைதனை செம்மையாக செய்து முடித்திருக்கிறார் கரன்கார்க்கி. இந்த நாவலின் சிறப்பே உலகின் எந்த மூலையில் இருந்து எவர் ஒருவர்  வாசித்தாலும்  அவருக்கு அவரின் மூதாதையர்கள் போராட்டமும், பஞ்சம் பொழைக்க வந்த கூட்டமும், அந்த கூட்டத்தில் தானும் ஒருவனாகவோ.. தன் அருகில் இருப்பவன் அந்தக் கூட்டத்தின் ஒருவனாகவோ.. அந்தக் கதாப்பத்திரத்தில் யாரோ ஒருவனை தானகவும்.. மற்றவனாகவும் யோசிக்க வைத்திடும் மாற்றம் கொண்டதொரு சிறப்பான நாவல் கருப்பர் நகரம்.
அற்புதமானதொரு இந்நாவலை  உலக சமூத்திற்கு; பஞ்சம் பொழக்க சென்றவர்களின் வாழ்வியலை, எளிய மக்களின் உழைப்பின் மெய்யான உண்மைகளை கலந்து புனைவாக அளித்திருக்கிறார் நாவலாசிரியர் கரன் கார்க்கி. தேவையுணர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள் பாரதிபுத்தகாலயம். இருவருக்கும் பேரன்பும் வாழ்த்துக்களும்..
மீண்டும் சொல்கிறேன்..
ஆராயியும்.. செங்கேணியும் என்னவானார்கள்..?
பேய்க்காளியின் நிலை என்னவானது..?அவசியம்
கருப்பர்நகருக்குள் கொஞ்சம் போய் வாருங்கள்..
ஆராயிக்கும்- செங்கேணிக்கும்
முத்தங்களால் வாழ்த்துக்களை சொல்லிடுங்கள்.
கருப்பர் நகரம்
கரன் கார்க்கி
பாரதி புத்தகாலயம்
கருப்பு அன்பரசன்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery