Book Review

நூல் அறிமுகம்: கர்ணன் – காலத்தை வென்றவன் | ச.சுப்பாராவ்

100views
Spread the loveமறுவாசிப்பில் பல வகைகள் உண்டு. முழு கதையையும் மறுவாசிப்பாகக் கூறுவது ஒரு வகை.  எஸ்.ராவின் உபபாண்டவம், தேவகாந்தனின் கதாகாலம், பூமணியின் கொம்மை இப்படி இதில் நிறைய உண்டு.  கதையில் ஒரு பாத்திரத்தின் பங்களிப்பை அதன் வாயிலாகவே சொல்லுவது மற்றொரு முறை.  காண்டேகரின் யயாதி, எம்.டியின் இரண்டாம் இடம், பாலகிருஷ்ணனின் இனி அவள் உறங்கட்டே, பிரதிபா ரேயின் யக்ஞசேனி, கவிதா கானேயின் சீதாஸ் சிஸ்டர், கர்ணாஸ் வைஃப், மேனகா. உஷா நாராயணனின் பிரத்யும்னா,  சித்ரா பானர்ஜி திவாகருணியின் தி பேலஸ் ஆஃப் இல்யூஷன் இப்படி இந்த வகையிலும் நிறைய உண்டு. இந்த இரண்டாவது வகையில் மராட்டிய இலக்கியத்தில் மிக முக்கியமான மறுவாசிப்புப் படைப்பு சிவாஜி சாவந்த்தின் மிருத்யுஞ்சயா. தமிழில் இது இப்போது நாகலெட்சுமி சண்முகம் அவர்களால் கர்ணன் – காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது.

கர்ணனின் கதை நமக்கு தெரிந்தது தான் என்பதால், நான் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.சிவாஜி சாவந்தின் படைப்புகளின் தனிச்சிறப்பு அவரது மொழிதான். மராட்டிய மொழியில்தான் அவரைப் படிக்க வேண்டும். வேறு மொழிகளில் படித்தால் அந்த முழு அழகும் கிடைக்காது என்று பலரும் குட்ரீட்ஸிலும், அமேசானிலும் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். எனினும் கூட தமிழிலும் அவரது மொழி ஆளுமையை நம்மால் உணர முடிகிறது.. நான் ரசித்த அவரது கவித்துவமான சில வரிகளை கீழே தருகிறேன் – 

“நினைவுகள் யானையின் பாதச்சுவடுகள் போன்றவை. நம் முடைய ஈரமான மனதில் அவை ஓர் ஆழமான அழிக்க முடியாத தடத்தை விட்டுச் செல்கின்றன.“

“துயரம் எனும் நெருப்பை அழிப்பதில் கண்ணீர்த்துளிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை“

“ஒளியால் எப்போதாவது இருளடைய முடியுமா?“

“வேகத்திற்கும்,நினைவிற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இல்லாவிட்டால் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் நாம் பயணிக்கும் போது ஏன் ஏகப்பட்ட நினைவுகள் நம் மனதில் வந்து குவிகின்றன?“

மறுவாசிப்புக் கதைகளுக்கு ஒரு கனமும்,  வசீகரமும் தருபவை அதில் சொல்லப்படும் நாமறியாத பல புதிய தகவல்கள்தான். அதற்கு படைப்பாளி மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு வரி தகவலுக்காக பத்து புத்தகத்தைப் படிக்க வேண்டும்.  சிவாஜி சாவந்த் அப்படி மிகவும் மெனக் கெட்டிருக்கிறார். தேவகிக்கு பிறந்த எட்டுக் குழந்தைகளின் பெயர்களும் ஒரு இடத்தில் வருகிறது.  கர்ணீ. நாலிகம், லிப்தம், பஸ்திகம், ஸுச்சி, ஜிஹ்மம் இதெல்லாம்  அம்பு வகைகள்.. இன்னமும் ஏராளமான நதிகள், மலைகள்,ஊர்கள் மன்னர்கள், மரம்., செடி, கொடி வகைகளின் பெயர்கள்…..

நல்ல மறுவாசிப்பு நூல் என்றால், அது,  நாம் ஏற்கனவே ஒரு விஷயத்தில் வைத்திருக்கும் மனப்பிம்பத்தை தகர்க்க வேண்டும். இந்த கர்ணன் நாவல் அப்படித் தகர்க்கிறது. கர்ணனின் கவசம் கத்தியால் வெட்டித் தரும் வகையில் மார்பில் மட்டும் ஒட்டி இருக்கும் ஏதோ ஒரு உலோகக் கவசமல்ல. அவனது தோலே இயற்கையாக எதனாலும் பாதிக்கப்படாத அளவு  படு கெட்டியாக இருக்கிறது என்கிறது.

அதே போல, நாம் கர்ணன் படத்தின் அசோகன், சாவித்திரியைப் பார்த்து துரியோதனன், பானுமதி பற்றி ஒரு பிம்பம் வைத்திருக்கிறோம். நாவலில் அதுவும் உடைகிறது. துரியோதனன் அதிகார போதை  உடைய ஒரு சத்ரிய அரசன். உடனிருந்து குழி பறிக்கும் பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரை விட இவனை நம்பினால் பாண்டவர்களை அழிக்கலாம் என்ற சுயநலக்காரன்.

 | 'मृत्युंजय'चे मंत्रभारले दिवस | Loksatta
Mrutyunjay Marathi Novel by Shivaji Sawant

அதேமாதிரிதான் பானுமதியும் எல்லா ராணிகளையும் போலவே ஒரு திமிர் பிடித்த ராணி. எடுக்கவோ, கோர்க்கவோ கதையெல்லாம் சிவாஜி சாவந்திற்குத் தெரியாது போல !

இந்த நாவலின் மிகப் பெரிய ஆச்சரியம் – கீதைக்கு பெரிய முக்கியத்துவம் தராதது.  போரில் கலந்து கொள்ளாத கர்ணன் தன் தம்பியிடம் முதல் நாள் போர் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிந்து கொள்கிறான். அப்போது அவன் தம்பி, சண்டை ஆரம்பிப்பதற்கு முன் அர்ச்சுனன் என்னமோ தயங்கி வில்லைக் கீழே போட்டான். கிருஷ்ணன் என்னமோ அறிவுரை சொன்னான். அர்ச்சுனன் உற்சாகமாக வில்லை எடுத்துக் கொண்டான், என்று சொல்லி முடிக்கிறான். கீதோபதேசம் பற்றி அவ்வளவுதான். இத்தனைக்கும் சாவந்த்  கீதைக்கு மிகப் பெரிய மரியாதை உள்ள மராட்டிய மாநிலத்தவர். பெரிய கிருஷ்ண பக்தர். நாவல் முழுக்க கிருஷ்ணனை கடவுளின் அவதாரமாகவே சித்தரிக்கிறார். எனினும்,  கீதை பாரதத்தில் மிகவும் பின்னால் சேர்க்கப்பட்ட ஒன்று என்ற விஷயம் அவர் மனதில் பட்டிருக்கக் கூடும்.  அதன் காரணமாக, அவரது படைப்பு நேர்மை  அதைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிக்க வேண்டும். சிவாஜி சாவந்த் மேல் எனக்கு மிகப் பெரிய மரியாதை ஏற்பட்ட இடம் இந்த இடம்தான். பூமணியின் கொம்மையிலும் கூட, கீதைக்கு பெரிய முக்கியத்துவம் தரப்படாதது இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

சாவந்தின் அருமையான கவித்துவமான மொழி தமிழிலும் அதே கவித்துவத்தோடு வந்திருப்பது சிறப்பு.  ஆனால், ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால்,  மூல நூலில் அண்ட் வரும் இடங்களில் எல்லாம் மற்றும் போட்டிருப்பது சற்று எரிச்சலூட்டுகிறது. மற்றொன்று  ஆங்கிலத்தில் கிருஷ்ணனை cowherd என்று குறிப்பிட்டுள்ள இடங்களில் எல்லாம் மாட்டிடையன் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் cowherd, sheepherd என்று தனித்தனியாக உண்டு. தமிழில் எல்லாம் இடையன்தான். மாட்டிடையன், ஆட்டிடையன் என்று சொல்லும் வழக்கம் இல்லை என்றே நினைக்கிறேன். எனினும். இவையெல்லாம் மிகச் சிறிய குறைகள். ஒரு மொழிபெயர்ப்பாளன் கண்ணில் மட்டுமே படக்கூடியவை.  வாசகனுக்கு இதனால் பெரிய கஷ்டம் ஒன்றுமிருக்காது.

மறுவாசிப்பு நாவல்கள விரும்பி வாசிப்போர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்களில் சிவாஜி சாவந்த்தின் கர்ணன் மிக முக்கியமானது.கர்ணன் – காலத்தை வென்றவன்

மஞ்சுள் பதிப்பகம்

சிவாஜி சாவந்த்

தமிழில் – நாகலட்சுமி சண்முகம்

பக்கம் 862

விலை ரூ.899.00Leave a Response