Tuesday, June 2, 2020
Book Reviewஇன்றைய புத்தகம்

கண்மணி கமலாவுக்கு ….. புதுமைப்பித்தன் என்ற இந்தப் புத்தகம் முழுவதும் கடிதங்கள்…!

170views
Spread the love

கண்மணி கமலாவுக்கு …..
புதுமைப்பித்தன் என்ற இந்தப் புத்தகம் முழுவதும் கடிதங்கள் .

எழுத்தாளர் புதுமைப் பித்தன் தனது மனைவி கமலாவிற்கு தன் கைப்பட எழுதிய 88 கடிதங்களைத் தொகுத்திருக்கிறார் இளைய பாரதி.

எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை முனனிட்டு அரிய தமிழ் நூல்களை வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய நிதி உதவியுடன் வெளியிடப்பட்ட நூல் என்று தொடக்கத்திலேயே குறிப்பிடப் பட்டுள்ளது .

1994 இல் சென்னை சாந்தி பிரசுரம் வெளியிட்டு உள்ளது. அப்போது விலை 60 ரூபாய்கள் .

திருமண வாழ்வு என 16 வருடங்கள் வாழ்ந்த புதுமைப்பித்தன் 10 ஆண்டுகள் அவரது இணையரோடு கடிதங்களால் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்கிறார் அல்லது வாழ்க்கை நடத்தியிருக்கிறார் என்பதை இந்நூலில் உள்ள கடிதம் ஒவ்வொன்றும் நமக்கு சொல்கிறது. இது கதையோ , திரைப்படமோ அல்ல … உண்மை வாழ்க்கை , ஒவ்வொரு கடிதமும் நம்மை அந்த காலகட்டத்தை இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட வைக்கிறது.

88 கடிதங்களில் 80 கடிதங்கள் வறுமையையும் அன்பையும் பிரிவையும் அடி மன ஆழம் வரை உணரச் செய்கின்றது. இந்தக் கடிதங்கள் 1938 இலிருந்து ஆரம்பித்து 1948 வரை எழுதப்பட்டுள்ளன. 2 நாட்கள் , 3 நாட்கள் என இடைவெளி இல்லாமல் தனது மனைவிக்கு எழுதுகிறார். சென்னையில் எழுத்துப் பணி நிமித்தம் வந்ததால் மனைவி திருவனந்தபுரத்தில் வசிக்க …. இருவருக்கும் கடிதங்களே வாழ்க்கை ஆகிறது.

File:புதுமைப்பித்தன் - கமலா அம்மாள்.jpg ...

பல இடங்களில் நம்மை அறியாமல் கண்கள் நீரை வரவழைக்கும் சூழல் , முன்பெல்லாம் சில பழைய திரைப்படங்களில் வேலை தேடி பட்டணம் வரும் கதாநாயகர் கதைகளைப் பார்க்கும் போது நமக்கு மனசு பிசையும் , ஆனா இவர் கடுதாசி ஒவ்வொன்றிலும் அந்த மனசு பிசையறது தான் பிரதானம்.

காசு கிடைப்பது எவ்வளவு அரிது , அணாக்கள் பெறுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா இருந்திருக்கு என என் வீட்டில் பாட்டி காலக் கதைகளைக் கேட்டு நெகிழ்ந்திருக்கேன் , அது சாமானிய மனிதர்கள் ,ஆனால் இவ்வளவு புகழ் பெற்ற மனிதர்கள் வாழ்விலும் இவ்வளவு துன்பங்கள் பணத் தேவையால் .. அது ஆயிரக்கணக்கில் இல்லாமல் , 10 ரூபாய் , 30 ரூபாய் , 50 ரூபாய் , 100 ரூபாய் … இவற்றால் என அறிகையில் இன்றைய சொகுசு வாழ்க்கை நம்மை நிறையக் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது.

3 வேளை உணவும் இருக்க இருப்பிடமும் வஞ்சகமில்லாம கிடைப்பதே அவ்வளவு அரிதாக இருந்திருக்கிறது என்பதை நினைக்கையில் இந்த 75 ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி எனவும் தோன்றும் அதே வேளையில் … இவரோடு பாரதியின் வறுமையும் சேர்ந்தே நம்மை எண்ண வைத்து கஷ்டப்படுத்துகிறது.

இந்தக் கடிதங்கள் முழுவதும் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டும் , 1938 ஆகஸ்ட்டு மாதத்திற்குப் பிறகு 5 மாத இடைவெளி விட்டு ஜனவரி 39 இல் எழுதப்பட்டு இருக்கு. 1940 , 1941 , 1942 1943 ஆண்டுகளில் அதிக இடைவெளியுடன் சில கடிதங்கள் மட்டுமே உள்ளன. 43 ஆம் ஆண்டு முதல் 46 ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட கடிதங்கள் பற்றிய விபரம் குறிப்பிடப்படவில்லை. ஏன் எனத் தெரியவில்லை. பிறகு 1947 , 1948ஆம் ஆண்டுகளில் சில கடிதங்கள் மட்டுமே உள்ளன.

எல்லாக் கடிதங்களும் எனதாருயிர்க் கண்ணாளுக்கு , என் கட்டிக் கரும்பான கண்ணாளுக்கு , எனது அருமைக் கண்ணாளுக்கு … இப்படித்தான் ஆரம்பிக்கிறார். பெரும்பாலான கடிதங்கள் முத்தங்களுடன் , ஆயிரம் முத்தங்களுடன் என தான் முடிக்கிறார். இப்படிக்கு உனதே உனது , உனது என்று தான் முடிக்கிறார். மனைவி மீது இவ்வளவு ஆழமான தவிப்பு இருக்குமா என்று தான் தோன்றுகிறது.

சின்னச் சின்ன விசயங்களாக நாம் எண்ணும் தலைக்குத் தேய்க்கிற எண்ணெய் கூட மனைவிக்கு வாங்கி வைப்பதில் அக்கறை .மனைவிக்கு புடவை , ஜம்பர் , வீட்டு சாமான் என எல்லாம் வாங்கி அனுப்புகிறார். குஞ்சு என்ற ஒரு குழந்தை மீது அவ்வளவு அன்பு வைக்க அது இறந்து போக , அதன் துக்கத்தை பல கடிதங்களில் வெளிப்படுத்துகிறார்.

தன் மனைவியை தொடர்ந்து வாசிக்க நிறைய புத்தகங்கள் அனுப்பி வைப்பது , மனைவியைக் கதைகளை எழுதி அனுப்பச் சொல்வதும், மொழி பெயர்க்க ஊக்குவிப்பது என அத்தனை அருமையாக வழிநடத்துவதும் தன் கஷ்ட ஜீவனத்தைத் தொடர்ந்து பதிவு செய்வதும் என எங்குமோ இடைவெளி இன்றி வாழ்கிறார்.

குழந்தைக்கு கிளுகிளுப்பை வாங்கி அனுப்புவது , பால் பவுடர் , டர்க்கி டவல் வாங்குதல் , ரேஷன் சர்க்கரை , மண்ணெண்ணெய் வாங்கி வீட்டில் சேகரித்தல் ….இப்படி அணு அணுவாக கடிதங்களில் வாழ்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

வானத்து அமரன்! | Read Book Reviews | Buy Tamil ...

வீடு வாங்குவது பற்றி முயற்சி செய்வதாக இறுதி வரை எழுதியுள்ளதில் இருந்து வாங்கினாரா … இல்லையா எனத் தெரியவில்லை.

மகளின் பெயரை தினகரி என்று வைப்பதற்கு காரணங்களைக் கூறி மனைவியிடம் , நீ தேர்வு செய்தாலும் சரியே .. பெயரில் என்ன இருக்கிறது ?அன்பு தானே முக்கியம் என்கிறார்.

காந்தியை ஒரு முறை நேரில் அருகில் நின்று பார்த்ததைக் குறிப்பிட்டு , அப்போதும் நீ இல்லையே கண்ணாளா என்று வருத்தப்படுகிறார்.

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி ஏதாவது எழுதியிருப்பார் என எதிர் பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் பதிவாகவில்லை. 2 முறை சென்னையில் வெள்ளம் , போராட்டம் என ரொம்ப நெருக்கமான சூழலில் சில வாரங்கள் இருந்ததும் கடிதம் வழியே தெரிகிறது .

இதழ்களில் எழுதிய இவர் திரைப்படங்களுக்கும் பணியாற்றி இருப்பது தெரிய வருகிறது. பெரும்பாலான வருடங்கள் சென்னையில் வாழ்ந்ததும் சில மாதங்கள் மதுரையிலும் இறுதியாக ஒரு வருடத்திற்கும் குறைவாக புனேவில் தங்கி இருப்பதும் தெரிகிறது. ஒரே கடிதம் பெங்களூரு லிருந்து எழுதியுள்ளார்.

கடைசி கடிதம் வரையிலுமே பணப் பிரச்சனை அவரைத் தொடர்கிறது . புனேவிற்கு சென்றது கூட எழுதியதற்குப் பணம் பெறுவதற்கே எனக் குறிப்பிட்டு பிறகு அங்கிருந்தே எழுதியிருப்பார் போல …

இப்படியாக எழுத்துத் திறமையை விட வறுமையும் காதலும் அன்பும் போட்டி போட்டு அவரிடத்தில் தங்கி காச நோய்க்கு ஆளாகிவிடுகிறார் .. கடைசி கடிதம் சிதம்பரம் என்பவருக்கு 1948 மே மாதம் 26 இல் எழுதி இருக்கிறார்.

அதில் 2 சுவாசப்பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் சீட்டுக் கிழித்து விட்டனர் , மரணம் தான் முடிவு அவர்களைப் பொறுத்த வரை எனக் கூறி , ஒரு நூறு ரூபாய் இருந்தால் சிகிச்சைக்கு வசதி உண்டு என எழுதியதைப் படிக்கையில் நிஜமாகவே உசிரெல்லாம் நடுங்குது.

திரும்பத் திரும்ப நம்பிக்கையை கண்ணாளுக்கு விதைத்துக் கொண்டே இருக்கிறார். இன்றுள்ள அலைபேசி வசதியெல்லாம் இல்லாத முக்கால் நூற்றாண்டு முன்னர் கடிதங்கள் வழியே மட்டும் அன்பையும் துன்பத்தையும் அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்திய புதுமைப்பித்தன் நம்மை யோசிக்க வைத்ததோடு இத் தொகுப்பு முடியும் போது …
அலை பேசியைத் தூக்கிப் போட்டு விட்டு நண்பர் , காதலர் , உறவினர் யாருக்காவது கடிதம் எழுதத் தோன்றுகிறது.

உமா

Leave a Response

Top Reviews

Video Widget

gallery