Book Review

புத்தக அறிமுகம்: கன்ஜூல் கறாமாத்து: அற்புதங்களின் ஆசீர்வாதம் – கவிஞர் யுகபாரதி

Spread the love
தண்ணீரில் விளக்கெரித்தல், இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றுதல், கடல்மேல் நடத்தல், கற்களைப் பேச வைத்தல், நோயுற்ற தேகிகளை ஷணத்தில் குணமாக்குதல் என எத்தனையோ அற்புதங்களை ஞானமார்க்கத்தில் ஈடுபட்டவர்கள் செய்ததாகக் கதைகளுண்டு. அறிவின் கண்கொண்டு பார்க்கையில் அவை கதைகள். அறிவிற்கு அப்பால் ஓர் ஏகமும் சக்தியும் இருப்பதாக எண்ணுபவர்களுக்கு அவை கதைகளல்ல, அற்புதங்கள்.
1902இல் வெளிவந்த ‘கன்ஜூல் கறாமாத்து’ என்கிற நூல் மகாவித்வான் வா. குலாம் காதிறு நாவலரால் எழுதப்பட்டது. கன்ஜூல் கறாமாத்து எனில், `அற்புதக் கடல்’ என்று அந்நூலைப் பதிப்பித்துள்ள முரளி அரூபன் தெரிவித்திருக்கிறார். புதுக்கல்லூரித் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் முரளி, இலக்கியத்தைத் தீவிரத்துடன் அணுகக்கூடியவர்.
என்னுடைய நண்பர் என்பதற்காக அவருடைய பணிகளை நான் பாராட்டுவதில்லை. பாராட்டும்படியான பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதால் என் நண்பராகவும் தொடர்வதில் மகிழ்ச்சி. நவீன இலக்கியப் புரிதலுள்ள ஒருவர், பழந்தமிழ் இலக்கியத்திலும் பற்றுவைப்பது, இன்றைய இலக்கியச் சூழலில் ஆச்சர்யமல்லாமல் வேறென்ன? ஏறக்குறைய நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன் வந்த ஒருநூலை, இன்றைய வாசகனின் வாசிப்பிற்கேற்ப வாக்கியங்களைப் பதம்பிரித்து, தேவைப்படும் இடங்களில் குறிப்புகளை எழுதி, ஓர் அரிய பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறார்.
பின் இணைப்பாக அரபு மற்றும் உருது சொற்களுக்கான பொருள்களும் தரப்பட்டுள்ளன.
அந்நூலில் நாகூர் ஆண்டவரின் அற்புதங்களைக் குலாம் காதிறு மிகைப்பட எழுதியிருக்கிறாரோ எனத் தோன்றினாலும், அவர் வரிசைப்படுத்தியுள்ள அற்புதங்கள் ஒவ்வொன்றும் ஆச்சர்யப்படுத்தாமலில்லை. புனைவின் சாத்தியங்களுடன் எழுதப்பட்ட நாகூர் ஆண்டவரின் வரலாறு எனும்விதத்தில் அந்நூல், முக்கியமான நூல் என்பதில் சந்தேகமில்லை. ‘உமறு பாஷா யுத்த சரித்திரம்’ நூலையும் முரளி அரூபன், தம்முடைய கல்தச்சன் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Welcome to nagore dargah shariff: February 2013
ஞானிகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் அற்புதங்கள், இன்றைய நிலையில் நம்பக்கூடியவை இல்லை எனினும், வழிவழியாக அவ்வற்புதங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டு வருகின்றன. நம்பிக்கை எனில் நம்பிக்கைதான். அதற்குமேல் கேள்விகளோ தயக்கங்களோ தேவையில்லை. நல்ல நம்பிக்கை கேள்விகளைக் கடந்தவை. மூட நம்பிக்கைகள் அப்படியல்ல.
எழுத்தாளர் தோப்பில் முகமதுமீரான் தம்முடைய சிறுகதை ஒன்றில், நாகூர் ஆண்டவரின் அற்புதக் கதையை வேறுவிதமாகச் சொல்லியிருக்கிறார். சவரக்கண்ணாடியினால் கப்பலின் ஓட்டையை அடைத்த சம்பவமே அது. கன்ஜுல் கறாமாத்துவில் ‘ஜின்னைக் கடலில் ஆழ்த்தினது’ என்றொரு கதை வருகிறது. ஒருமுறை முகல்ல தீவுக்கு நாகூர் ஆண்டவர் போயிருந்தபோது நிகழ்ந்த சம்பவமே அதுவென்று காதிறு குறிப்பிட்டிருக்கிறார். ஜின் என்றால் பிசாசு. ஜின்னை லோட்டாவில் அடைத்த பகுதிகளை இரண்டுமுறை வாசித்தேன்.
கருணையும் பக்தியின் பேருண்மையும் கதையின் சாரத்தில் பிடிபடுகின்றன. ஆனால், கதையாக்கத்தில் குலாம் காதிறு வேறொரு எல்லையைத் தொட்டிருக்கிறார். ஒரு கதையை உருவாக்குவதிலும் அதைச் சொல்வதிலும் தேர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாகூர் ஆண்டவரை முன்வைத்தே அத்தனைக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன. என்றாலும், அக்கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன.
பக்தி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அக்கதைகள் எந்த பாதிப்பைத் தருகின்றனவோ அதே அளவிலான பாதிப்பை அதைப் பின்பற்றாதவர்களுக்கும் தருகின்றன. பழந்தமிழ் சொற்கள் நூல்முழுதும் விரவிக்கின்றன. இந்நூல் குறித்து என் நண்பரும் எழுத்தாளருமான நாகூர் ரூமி தம்முடைய `நாகூர் ஆண்டவர் அற்புதவரலாறு’ நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். அற்புதங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கட்டும். கன்ஜூல் கறாமாத்துக்கு நானெழுதியுள்ள கட்டுரையின் சிறு அறிமுகம் மட்டுமே இது. முழு கட்டுரையையும் வாசிக்க `இடம் பொருள் இசை’ நூலை வாசிக்கலாம். முரளி அரூபனுக்கு இந்தக் காலையும் அற்புதங்களால் ஆசீர்வதிக்கப்படுமாக.
– *கவிஞர் யுகபாரதி*

Leave a Response

Top Reviews

Video Widget

gallery