Book Review

நூலறிமுகம்: சி.சு.செல்லப்பாவின் கள்ளர் மடம் (மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்) – தேனி சுந்தர் 

Spread the love

 

சி.சு.செல்லப்பா எழுதிய கூடுசாலை, கள்ளர் மடம், மூணுலாந்தல், வாழ்க்கை, பைராகி, பந்தயம், குற்றப்பரம்பரை, பெண்டிழந்தான், முறைமைப்பெண் ஆகிய சிறுகதைகள், வாடிவாசல் என்னும் நெடுங்கதை, முறைப்பெண் என்னும் நாடகம் ஆகியவற்றின் தொகுப்பு நூல் தான் கள்ளர் மடம் : மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்.

சி.சு.செல்லப்பா: சின்னமனூர் சுப்ரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கம் தான் சி.சு.செல்லப்பா. ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒவ்வொரு முறையும் விவாதங்கள் எழுகின்ற போதும் வாடிவாசல் நாவலும் நினைவுக்கு வருவதுண்டு. அந்த நாவலை எழுதியவர் தான் சி.சு.செல்லப்பா. பெயரில் சின்னமனூர் என்பதைப் பார்த்ததுமே ஆர்வம் கிளம்பியது. எழுத்தாளர் செல்லப்பாவின் அப்பாவின் சொந்த ஊர் சின்னமனூர், ஆனால் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியின் ஊரான வத்தலக்குண்டுக்கே சென்று விட்டார். 1912ல் பிறந்த செல்லப்பாவின் வாழ்வின் பெரும்பகுதி வத்தலக்குண்டு மற்றும் சென்னையில் தான் கழிந்துள்ளது.
மாணவப் பருவத்திலிருந்தே இந்திய விடுதலைக்கான போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். சிறைகளில் இருந்திருக்கிறார். மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர். எழுத்து மற்றும் கருத்து ஒற்றுமைகளில் அவரது சகாக்களைப் பற்றிக் கூறும் போது “சிதம்பரசுப்ரமணியன், சுந்தர்ராஜன், செல்லப்பா ஆகிய மூன்று பெயர்களின் முதல் எழுத்துகளைக் கோர்த்தால் சி.சு.செ. நாங்கள் மூவரும் ஒருவர் தான்” என்கிறார் செல்லப்பா.

தமிழ்ச் சிற்றிதழ் மரபின் காவிய ...
மனைவியுடன் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா

எழுத்து என்கிற சிறு பத்திரிகை தொடங்கி நடத்தியவர். அதன் மூலம் புதுக்கவிதை மேம்பாட்டிற்கும் இலக்கிய விமர்சனத்தில் ரசனை சார்ந்த விமர்சனத்திற்கு மாற்றாக பகுப்பாய்வு விமர்சனத்தை முன்னெடுத்தவராகக் கருதப்படுகிறார். வாழ்க்கைப் பிழைப்பிற்கும் தன் எழுத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார். தான் நடத்திய எழுத்து இதழுக்காக தன் மனைவியின் நகைகள் உட்பட விற்று இதழைத் தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறார்.

முன்னர் கூறியது போல, செல்லப்பா தான் பங்கேற்ற விடுதலைப் போராட்டம் மற்றும் சிறை அனுபவங்களிலிருந்து ஏராளமான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 16 ஆண்டுகளாகத் திரும்பப் திரும்பப் திருத்தித் திருத்தி 2000 பக்கங்களில் அவர் எழுதியது தான் சுதந்திரத் தாகம் என்கிற அவரது நாவல். அதை அவர் எளிதாக வெளியிடக் கூட முடியவில்லை. கடைசியாக அவர மறைவுக்கு ஓராண்டு முன்பாக அவரது நண்பர்களின் பண உதவியுடன் மூன்று பாகங்களாக எழுத்துப் பிரசுரமாக வெளிவந்திருக்கிறது. எழுத்து பதிப்பகம் மூலமாக அவர் வெளியிட்ட பல நூல்களைப் பைகளில் சுமந்துகொண்டு கல்லூரி கல்லூரியாக அலைந்திருக்கிறார். பெரிய தேசிய விடுதலை இயக்க அனுபவ நூலான சுதந்திர தாகம் நாவலுக்கு நூலக ஆணை கூட கிடைக்கவில்லை என்பது பெரும் துயரமான செய்தியாக உள்ளது. இந்நாவல் குறித்து எழுத்தாளர் சாருநிவேதிதா தினமணி நாளிதழில் எழுதிய சிறப்பான கட்டுரைக்குப் பின்னர் பெரும் வரவேற்பைப் பெற்று டிஸ்கவரி புத்தக நிறுவனத்தின் மூலம் மறுபதிப்பு கண்டிருக்கிறது. 1998ல் அவர் இறந்த பிறகு 2001ல் இந்நாவலுக்காக சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளர் மடம்: சில கதைகளில் சி.சு.செல்லப்பாவே “நான்”ஆக கூடவே பயணிக்கிறார். அவருடைய உறவினர் திருமணத்திற்காக மாட்டு வண்டியில் வத்தலைக்குளத்தில் இருந்து உசிலனூருக்குச் செல்லும் வழியில் சாம்பமூர்த்தி அத்தான் பகிர்ந்துகொள்ளும் நினைவலைகள் தான் கள்ளர் மடம். பல ஆண்டுகளுக்கு முன் வத்தலைக்குளம் ஐயர் வீட்டு எடக்காடன் ஜோடி மாடு இரண்டும் ஒரு நாள் இரவு களவுபோகிறது. பின் கதவு, முன் கதவு எல்லாம் திண்டுக்கல் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டுள்ளது. வைத்த இடத்தில் வைத்தவாறு சாவி இருக்கிறது. ஆனாலும் மாடுகள் களவாடப்பட்டுள்ளன. ஒரு பகல், இரண்டு பகல்கள் என ஆகிறது. ஆனாலும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. வெள்ளையங்கோட்டை கள்ள ஜமீன் அந்தக் காளைகளை விலைக்குக் கேட்டும் கொடுக்காத கோபத்தில் காளிப்பட்டி கள்ளர்களை வைத்து இரவோடு இரவாகக் கடத்தி வெள்ளைக்கல் கரடு, குத்துக்கல் கரடு தாண்டி இருக்கிற தொழுவத்துக்குக் கொண்டுபோய் விடுவார்கள். இதனை கள்ளர்மடம் பக்கத்தில் இருக்கிற உக்ரபாண்டித் தேவர் உதவியுடன் மீட்டு வருகிற கதை.

எப்படித் திருடினார்கள். இத்தனை மலைகளைத் தாண்டி எப்படிக் கொண்டு போனார்கள். எப்படி மீண்டும் கொண்டு வந்து யார்கண்ணிலும் படாமல் கள்ளர் மடம் அருகில் கட்டிவைத்து விட்டுச் சென்றார்கள் என்பதெல்லாம் ஆச்சரியமாக பேசிக் கொள்கிறார்கள். கள்ளன் வித்தை முன்னாடி கண்கட்டு வித்தையெல்லாம் நிக்காது என்கிறார் ஐயருடன் வந்த வெள்ளைத்தேவன். சாதிக்கள்ளன் தெரியும்படியாக் கைவைக்கவும் மாட்டான். கண்பார்க்க திருப்பிக் கொடுக்கவும் மாட்டான். கள்ளர்மடம் பக்கத்தில் இத்தனை நாழிகைக்குள்ளே ஒப்படைக்கிறம்னு சொன்னான். ஒப்படைச்சிட்டான். இதான் கள்ள தர்மம் என்கிறார் உக்ரபாண்டித் தேவர்.

உசிலனூருக்குப் பக்கத்தில் செம்மண் குட்டிச் சுவராக இருக்கும் இந்த இடம்தான் கள்ளர் மடம். “ஒரு காலத்தில் கள்ளர்கள் தங்கள் சம்பாத்யத்தை பிரிச்சுக்கிற இடம் இது. முதல் சாமத்தில் திக்காலுக்கும் பிரிந்து போயிட்டு நாலாம் சாமத்தில் திரும்ப வந்து சேர்ந்து கொள்வார்கள் என்று பேச்சு. இந்த இராஜ்யமே கள்ள ராஜ்யம்..” என்று மருமகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் சாம்பமூர்த்தி ஐயர்.இந்தக் கதையும் சரி, இந்தத் தொகுப்பிலுள்ள கூடுசாலை, பெண்டிழந்தான் ஆகிய கதைகளும் முழுக்க முழுக்க காளை மாடுகளை அதிலும் வண்டி மாடுகளை மையமாகக் கொண்ட கதைகள்.

கள்ளர் மடம் (மதுரை வட்டாரச் ...

கூடுசாலை கதை மூலம் மாட்டு வண்டிப் பந்தயத்தை திரைப்படம் போலக் காட்டுகிறார் எழுத்தாளர். வேகமாகப் போகும் வண்டிகளில் நாமும் பயணிப்பது போல, விழுந்திடாமல் இருக்க பிடிகொம்பு தேட வைக்கிறார்.

பெண்டிழந்தான் கதை மாட்டுக்கு ஜோடி தேடும் கதை. அதையொட்டிய ஏராளமான தகவல்கள், நுணுக்கங்கள், விலை பேசும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் வார்த்தை விடாமல் பேசும் தந்திரங்கள் என கிறங்கடித்து விடுகிறார். மாடுகள் அதன் தன்மைகள், குணங்கள், தோற்றங்கள் குறித்து ஆர்வமூட்டும் வகையில் ஏராளமான உரையாடல்கள் இருக்கின்றன.

“எடக்காடன்கள் இரண்டும் வளர்ந்து வீச்சான காளைகள். அந்தச் சாதிப் பிறவியே அப்படி.. திமிலே பிடிக்கு மேல் தாராளமாக இருக்கும். நீண்ட முகக்கூறுக்குப் போட்டிபோடும் கவட்டையான கொம்புச்சீர், பாய்ச்சலில் சாலையே அதிரும்படியான மிதி..”

“மயிலையும் பில்லையும் நாட்டு மாடுகள் தான். நல்ல கொம்புச்சீர்.. ஒத்தாப்போல.. ஜோடியாவே பிறந்த மாதிரி உடற்கூறும் முகச்சாயலும். அடக்கமான காளைகள். பொடி வால்கள். சுள்ளாப்பாக, ஒரு அடிக்கு மேல் வாங்காமல் ரோஷமாகப் பாயும் ஜாதிப்பிறவிகள்..”

“இரண்டும் கருமயிலை. இரண்டுக்கும் நரிமுகம். அந்த முகக் காளை என்றாலே தனி அழகு தான். இரண்டுக்கும் ஒத்தாப்போலே உச்சக் கொம்பும் நேராக இருக்கும். கொஞ்சம் வளைத்தால் பிராக்கெட் வளைவு ஆகிடும். வளைவு அதிகமானால் கூடு வளைவு ஆகிடும். அப்படி இல்லாமல் ஓர்சாக இருக்கும்..”

“இது இரண்டும் நாட்டு மாடுகள். அடக்கசடக்கமான மாடுகள். உயரம் பதினாலு பிடி இரண்டும். ரசமட்டத்தை இரண்டு முதுகுக்கும் சேர்த்து வச்சுப்பார்த்தால் மத்திரசம் மயிரிழை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஓடாது. இரண்டுக்கும் யானைக்கண். அதுகள் பார்க்கிற போது தாசி சந்திரவதனா பார்க்கிற மாதிரி இருக்கும்..”

“முதுகுப்பாங்கு வழித்துவிட்டாப்லே இருக்கும். இரண்டுக்கும் ஒத்தைநாடி, தாடித் தொங்கல் கிடையாது. ஏறு வாலு தான். ஏறுவால் காளைக்கு சுணை அதிகம். முதுகிலே கைவைக்க விடாது. திமில், சும்மா கலசம் மாதிரி இருக்கும்..”

கள்ளர் மடம் (மதுரை வட்டாரச் ...

“மயிலை நடை காளை, இடத்துக் காளை ஓட்டம்.. சாட்டையாலே இரண்டையும் ஒருதரம் இழுத்து, பிடிக்கயிறுகளை அரக்கிப் பிடித்துவிட்டால் வலத்துக்காளை நடை போடும். இடத்துக் கழுதைக்கு ஈடுகொடுக்க முடியாது. பத்தெட்டுப் போகவும் ஓட ஆரம்பித்துவிடும். வலத்துக் காளை பெருநடை போட்டால், அது குதித்து ஓட ஆரம்பித்து விடும். அது வேகநடை எடுத்துவிட்டால், இது திராட்டிலே புறப்படும். அது திராட்டிலே போனால் இது தவ்வாளி போடும்.. ஆனால் கிளாப்ல போகும்போது சொல்லிக்க முடியாது… அபாரமாகப் போகும்..” என மாடுகளின் வேகத்தில் எத்தனை விதங்கள் என வியக்க வைக்கிறார்..

ராஜாச்சுழி, நெற்றிச்சுழி, முன்பாடைச் சுழி, பின்பாடைச் சுழி, பிச்சுழி, விலங்குச்சுழி, பாசிபடர்ந்தான், புட்டாணிச்சுழி, கொடைமேல் கொடைச் சுழி, பெண்டிழந்தான் சுழி என மாட்டின் சுழிகளை வைத்து இராசியான மாடு, இராசியில்லாத மாடு எனப் பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள். இதில் பெண்டிழந்தான் சுழி உள்ளிட்ட சில வகைகளை கெட்ட சுழி மாடுகள் என்கிறார்கள். இதில் பெண்டிழந்தான் சுழி மாட்டை விலை கொடுத்து வாங்கினால் வீட்டிலுள்ள பெண்களுக்கு ஆகாது. அவர்கள் மரணிக்கலாம் என்றொரு கருத்து. தன் வீட்டில் பிறந்த கன்றுக்குட்டிக்கு பெண்டிழந்தான் சுழி இருந்தால் அது பெரிய பிரச்சனையில்லை.

எடக்காடன் ஜோடி, பூரணையன், வடக்கத்தி ஜோடி.. கூடுசெம்புச் செவலை, நீர்க்காலுக் கரம்பை, விரிகொம்பு.. என மாடுகள் குறித்து பல்வேறு கதைகளில் வரும் வண்டியோட்டிகளான சுப்பையா, வீரையா, வீரமுத்து, மூக்கன் மூலமாக சொல்லி இத்தனை தகவல்களா, இத்தனை அறிவா என வியக்க வைக்கிறார் சி.சு.செ.

குற்றப்பரம்பரை: இரயில் பயண உரையாடலில் தொடங்குகிறது இந்தக் கதை. குற்றப்பரம்பரைச் சட்டத்தை இனி அரசியல் கைதிகளுக்கும் அரசு பயன்படுத்தப் போவதாக பத்திரிகைச் செய்தி. அது அங்குள்ளவர்களிடம் விவாதத்தைத் தூண்டுகிறது. அதெப்படி களவும் கொள்ளையும் தான் வாழ்க்கைன்னு வாழ்கிற கூட்டத்தோட அரசியல்வாதிகளை எப்படிச் சேர்க்கலாம் என்கிறார் ஒரு காங்கிரசுக்காரர். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர், அதெப்படி களவும் கொள்ளையுமே வாழ்க்கையாக ஒரு கூட்டம் இருக்கமுடியும்னு கேட்கிறார். அவர்கள் வாழ்கிற பகுதியைப் பார்த்தவர்கள் அங்கு வேறென்ன செய்யமுடியும்னு தான் கேட்பார்கள். அவர்களுடன் வீரணன் என்பவருடைய கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

வீரணன் இளவயதில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தவர் தான். அப்புறம் அதெல்லாம் தவறுன்னு தானே திருந்தி கொஞ்சம் விவசாயம், வீடு வாசல்னு மாறிட்டார். அவரோட மனைவி இறந்த பின்னாடி மகள் தான் எல்லாம்னு அவளுக்காகவே வாழ்கிறார். நல்ல இடமாகப் பார்த்து கல்யாணம் செய்து தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார். ஆனால் மருமகனுக்கு சமுத்திரம் கடந்து போய் தொழில் செய்யணும்னு ஆசை. எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக இருக்கான். மகளுக்கு அப்பன், வீட்டு ஆடு, மாடு, கோழி, குஞ்சு தவிர வேற உலகம் தெரியாது. கப்பல் பிரயாணத்திற்கான நாள் வந்தது.

தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை …

வீரணன் தன் மகளை பேருந்து ஏற்றிவிட்டு வந்துடலாம்னு போறார். அப்பாவுக்கும் மகளுக்கும் ஒரே கவலை. பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது. மகளின் சோகத்தை தாங்கமாட்டாத வீரணன், சரி அழுகாதே. அப்பா, இயில் ஏற்றிவிட்டு வந்துடறேன்னு சொல்லி கூடவே பஸ் ஏறிட்டார். இரயில் ஏறியாச்சு.. அப்பா நீயும் கூடவே வந்துடுன்னு அழுகிறாள் செல்வி. பெத்த மனசு, அழுகாதடான்னு, வேகவேகமாக ஓடி நாகபட்டினம் வரைக்கு தனக்கும் ஒரு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஏறிவிட்டார். இனி நாகபட்டினம் வரைக்கும் சிறு நிம்மதி. நாகபட்டினம் வந்தாச்சு. இறங்கி அடுத்து கப்பல் ஏறணும்.
மகளும் மருமகனும் முன்னால் போக, வீரணன் பின்னாடி போகிறார். ஏப்பா வீரணான்னு ஒரு குரல். அருகில் சென்றால் நீ தான் வீரணனா? வெளியூர் போறதுக்கு உங்க ஊர்ல அனுமதி வாங்கினியா? உன்னை உடனே பிடித்து, அடுத்த வண்டியில் ஏற்றிவிடச் சொல்லிருக்காங்க என்கிறான் மப்டியில் இருக்கும் போலீஸ். கொஞ்சம் தள்ளி இரு காவலர்கள் நிற்கிறார்கள். அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு முன்னாடிபோகும் மகளிடம் இந்த விசயத்தைச் சொல்லாமல் வழியனுப்பி விட்டுட்டு வருகிறார். துப்புத் துலங்காத வழக்கையெல்லாம் வீரணன் மேலபோட்டு நான்காண்டு சிறையில் அடைச்சுட்டாங்கன்னு சொல்லிப் பெருமூச்சு விட்டார். அப்புறம் என்னாச்சுன்னு கேட்க, இப்பதான் விடுதலையாகி வீட்டுக்குப் போய்கிட்டிருக்கேன் என்கிறார் வீரணன்.

வாடிவாசல் : 1947ல் க.நா.சுப்ரமணியத்தின் சந்திரோதயம் இதழில் தொடராக வெளிவந்த கதை தான் வாடிவாசல். இது குறுநாவலா, சிறுநாவலா, நெடுங்கதையா என தனி விவாதமே இருக்கிறது. இருந்தாலும் ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவது வாடி வாசல் தான். முழுக்க முழுக்க அங்கு நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காட்சிப்படுத்திய வகையில் இந்த நாவலுக்கு என்றைக்குமே தனிச்சிறப்பு உண்டு..

மிருகத்தை ரோசப்படுத்தி, அதன் எல்லையைக் கண்டுவிட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்டத் துணிவதை ஒரு கலையாக சாதகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும். ஒன்று, காளையின் திமிலில் கைபோட்டு அணைந்து, கொம்பு இரண்டையும் கையால் பிடித்து அழுத்தி அது எகிறிவிடாமல் சில விநாடிகளுக்கு நாலு கால்களில் மாடு அசையாமல் நிற்கச் செய்து விட வேண்டும். ஏன், கால்கள் துவளத் தடுமாறி முட்டியிலே மடித்து அது கீழே சரியச் செய்துவிட வேண்டும். இல்லை, அவன் திறமைக்குறைவால் காளையிடம் அவன் வேலை பலிக்காமல் போய்க் கோட்டை விட்டுவிட்டு, தன் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை, காலில்லாதவன் மாதிரி முகத்தைக்காட்டிக் கொண்டு காளையை நெருங்காமல் இருந்துவிட வேண்டும். மனிதனுக்கு தான் இது விளையாட்டு. மிருகத்திற்கு அப்படியல்ல. மனிதனுக்கும் மாட்டுக்குமான, ஒத்தைக்கு ஒத்தையாக நடக்கும் இந்த கோதாவில் இரண்டில் ஒரு முடிவு காணும் இடம் தான் வாடிவாசல்..

Vadivasal | வாடிவாசல் | Book Summary| Novel Review - YouTube

பேரு போன சல்லிக்கட்டு. மாடுண்ணு அணைஞ்சாலும் செல்லாயி அம்மன் கட்டுல அணஞ்சாவுல பெருமை. மாடு பிடி வீரர்களும் வேடிக்கை பார்க்கும் மக்களும் சோறு கட்டிக்கிட்டு சாரை சாரையாய வந்து கொண்டிருக்கிறார்கள். பிச்சியும் அவன் மச்சான் மருதனும் வந்து எந்தெந்த ஊர் மாடுகள் வருகிறது.. தொழுவத்தில் என்ன நடக்கிறது எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

என்னமோ, செல்லாயி சல்லிக்கட்டு சீமையிலே பேரு பெத்ததுன்னு, சொல்லிக்கிட்டாங்க.. தொழுவத்துல ஆயிரக்கணக்கில் மாடுக முண்டிக்கிட்டு இருக்கும்னு தம்பட்டம் அடிச்சானுவ, வந்து பார்த்தாவுல தெரியுதுன்னு பிச்சியும் மருதனும் பேசிக்கொள்வார்கள். பின்னாடி இருந்த உள்ளூர்க் கிழவனுக்குக் கோபம் வந்துடும். யாரப்பா நீங்க, கிழக்குச் சீமைக்காரனுங்களா..? ஐநூறு மாட்டுக்கு ஒரு மாடு கொறஞ்சாலும் வாடியில சீன்னு துப்பிட்டுப் போ என்று கிழவன் சொல்வான். இல்ல பாட்டையா, எதோ எங்களுக்குள்ள பேசிக்கிட்டோம் என்பார்கள். அந்த கிழவனுக்கும் பிச்சி, மருதனுக்குமான உரையாடல்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். இவர்களது உரையாடல் மூலம் தான் கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது.

“கிழக்க எந்த ஊரு
உசிலனூரு பாட்டையா.

உசிலனூரா..
அந்த மண்ணுல பிறக்க போன சன்மத்திலெ தவம் பண்ணிட்டு இருக்கணும் தம்பி. குளந்தைங்க பொறக்கிற போதே சங்குவாடியை நினைச்சுக்கிட்டுல்லா பொறக்கும் ஆத்தா வவுத்திலே இருந்து.. கும்பிட வேண்டிய ஊரு தம்பி உங்க ஊரு.. ம்ம்.. உசிலனுரா..?”கிழவனுக்கு மகிழ்ச்சி..

ஜமீன் மாடுகள் இன்னும் வரலியேன்னு பிச்சியும் மருதனும் கேட்கிறார்கள். வரும், வரும்.. இக்கினிப் பயலா இருந்தா நாள் முதலா செல்லாயி சல்லி பார்த்துகிட்டிருக்கேன். பரம்பரையாய் ஜமீன் மாடு பேர் சொல்லி வந்துகிட்டே தான் இருக்கும்.. வரும்.. என்பான் கிழவன்.

ஜமீன் ஆட்கள் வருகிறார்கள்.. தொடர்ந்து ஜமின் காளைகள் வருகின்றன. ஆனாலும் பிச்சியின் கண்கள் தேடிக்கிட்டே இருக்கின்றன. அதைப் புரிந்து கொண்டு கிழவனே சொல்வான், பெரியபட்டி ஜமீன் கிழக்குச் சீமையிலிருந்து வாங்கிய காரியத் தானே பார்க்கிற.. வரும்.. கரும்பிசாசுல்ல அது.. கடைசியாக ஜமீன் வரும்போது வரும் என்கிறார்.

அதற்கிடையில் கிழவன் உசிலனூர் சல்லிக்கட்டு பற்றிய பெருமைகளைப் பேசுவார். அதில் காளை மாறிக் காளையா விளுந்துகிட்டே இருந்தானப்பா.. கவர்னர் கையில் மெடல் வாங்கினான். பெரியபட்டி ஜமீன் வாங்குவதற்கு முன்பு, உசிலனூர் சல்லிக்கட்டில் இந்தக் காரி தான் குத்திக் கிழிச்சு அவன் செத்தும் போயிட்டானாம்.. எமப்பய.. அவன் பேரு தான் ஞாபகம் வர மாட்டேங்குது என்பான்.

யாரு அம்புலித் தேவனா பாட்டையா என்பான் மருதன்.

ஆமாப்பா, சரியா சொல்லிப்போட்ட என்பான் கிழவன்.

அந்த அம்புலியோட மகன் தான் பிச்சி என்றதும் கிழவனுக்கு உச்சி குளுந்து போகும்.. அதானே பார்த்தேன்.. அப்பனுக்கேத்த புள்ளதான் என்பார். அதற்குள் வாய்மாறி வாய்மாறி பிச்சி பற்றிய தகவல் பரவிடும்.

No photo description available.

“மாடு பிடிக்கத்தான் வந்திருப்பான்.. கிழக்கத்தியான் துடியாத்தான் இருப்பான்.. நம்ம பயக அசந்தாப்போச்சு.. எல்லாத்தையும் தட்டிக்கிட்டு போயிடுவான்.. எல்லாம் சல்லிக்கட்டு ரோசமாத்தான் இருக்கும்.. ஜமீன் மாட்டக்கூட ஒரு கை பார்த்தாலும் பார்ப்பான்.. அப்பனுக்குப் புள்ள சோடையா போயிடுவான்..” பிச்சி பற்றி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருப்பார்கள்.

கொட்டு மேளச் சத்தம் கேட்கிறது. ஜமீன் வந்துட்டார். இனி எந்த நேரத்திலும் சல்லிக்கட்டு விடப்படலாம்.

பாட்டையா, அந்த வாடிபுரம் காளை… என்கிறான் மருதன் கிழவனிடம்.

“உசந்த மாட்டை ஜமீன் எப்பவும் தன் கூடவே தான் கொண்டிட்டு வருவார். ஜமீனுக்கு பின்னாடி நல்லாப்பாரு, ஒரு கரும்பய பிடிச்சுக்கிட்டு வாரான்.. உங்க அப்பன் உசிருக்கு உலைவச்ச காரி இதானப்பா பிச்சி..” என்கிறான் கிழவன்.

“பட்டத்து யானைக்கு படாம் போர்த்தின மாதிரி பல வர்ணபட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணி வரைக்கும் முதுகோடு படிந்த் இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல்ஜல் என்று சலங்கை மாலையும் கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணிந்து கண்கள் கீழ்நோக்கி இருபக்கமும் பார்க்க, கம்பீர நடைபோட்டு அமரிக்கையாக வந்தது காரி..” இது தான் கரும்பிசாசு. ஒரு அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவன் சொல்ற எவனும் இது மேல இதுவரைக்கும் விரல் கூட வச்சதில்ல என்கிறான் கிழவன்.

“வயசுக் காலத்தில இல்லாமல் வயசான காலத்திலே இல்லெ இந்தக் காரிக்களுதை கண்ணிலே பட்டிருச்சு.. இல்லாட்டி அந்த ஒரு பிடியிலே சகதியிலே அமுக்கிறாப்லே அமுக்கி இருப்பேன். இப்போ, மொக்கையத் தேவர் காரிகிட்ட அம்புலித்தேவன் உலுப்பி விளுந்தான்கிற பேச்சுல்ல சாகறப்போ நிலைச்சுப்போச்சு..” என்கிற தன் அப்பாவின் வார்த்தைகளும், தன் கண் முன்னே அப்பா காரியில் தூக்கி வீசப்பட்டதும் நினைவுக்கு வந்து பிச்சியின் கண்களை ஈரமாக்குகின்றன. காளைகள் விடப்படுகின்றன..

பிச்சியும் மருதனும் காத்திருக்கிறார்கள். என்ன வேடிக்கை பார்க்க வந்தீங்களான்னு முருகு என்பவன் கிண்டலடிக்க, மற்றவர்கள் அஞ்சிய, ஆடிசா குடி பில்லக் காளை, பாளையூர் கொராலு இரண்டையும் வெவ்வேறு உத்திகளில் அணைந்துகாட்டி வாயடைக்கிறார்கள்.. ஜமீன் பார்க்கிறார். அழைத்துப் பாராட்டுகிறார்.. பரிசு கொடுக்கிறார்.. ஆனாலும் உள்ளுக்குள் நம்ம காரியையும் பிடிச்சுடுவானோ என்ற எண்ணமும் ஓடுகிறது. சரி, அந்தக் காட்சியையும் தான் பார்த்திடலாமே என்றும் நினைத்துக் கொள்கிறார். காளைகள் வருகின்றன.. சிலவற்றை அணைய கூட்டம் கூடுகிறது. சில மாடுகளுக்கு ஓடிப் பதுங்குகிறது.. கிழக்கத்தியான்கள் பிடிப்பார்களா என்று பார்க்கிறது. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில மாடுகளுக்காகத் தான் வந்திருக்கிறார்கள் என்று அமைதியாகிறது.

அடுத்து, வாடிபுரம் காளை.. கருப்புப் பிசாசு.. ராட்சசக் காரி..

“ஈரேழு உலகம், அஷ்டதிக்குகளிலும் ஜயக்கொடி நாட்டிய தீர வீர பராக்கிரம் பெரியபட்டி ஜமீன்தார் எசமானுடைய இந்த காரிக்காளை கொம்புக்கு நடுவே நெத்தித் திட்டுலே ரெண்டு பவுனு தங்கமா நடுவே கோத்துத் தொங்கவிட்டு இருக்குது. மாடு அணைகிறவன்னு சொல்லிக்கிட்டு, அப்பன், முப்பாட்டன் பெருமையைப் பேசிக்கிட்டு இருக்கிற ஆம்பள, மீசை முறுக்கிகள், பெண்சாதி பிள்ளைகுட்டி இல்லாதவங்க, திறமிருந்துச்சுன்னா பொஞ்சாதியை அணையறாப்ல இந்த காரியை அணைஞ்சு அதை அவுத்துக்கிடலாம். அத்தோடே புடிச்ச அந்த வீரனுக்கு சமீன் தாரு தன் கையாலே சரிகை துப்பட்டாவும் இனாமாக் கொடுப்பாரு.. ஆம்புளையா இருந்தா புடிச்சிக்க.. பொம்பளையா இருந்தா ஓடிப்போ..!

9-ந் தேதி ஜல்லிக்கட்டு ...

இனி காரியும் பிச்சியும் மோதும் காட்சிகள் திரைக்கதை ரகமானவை.. இருவரும் மனிதர்களா.. இல்லை இருவரும் மிருகங்களா என்ற வகையில் பாய்ச்சலும் பதுங்கலும் பிடிகளும் விலகலுமாக அற்புதமான விவரணைகள்.. அதை நாம் வாசித்து உணர வேண்டும்.

கடைசியில் பிச்சி காரியை அணைந்து விடுகிறான். ஜமீன் தாரும் பரிசுகள் தருகிறார். கடைசி வரை வெறியோடு மோதிய காரி, செல்லும் வழியில் பத்துப்பேரைக் குத்திக் கிழிக்கிறது. இருவர் சாகிறார்கள்.. கோபம் தணியாமல் ஆற்றங்கரையில் மணலைக் குத்திக் குத்தி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது காரி..

ஜமீன் தார் பின்னாடியே செல்கிறார். தன் இடுப்பில் இருந்த ரிவால்வரை எடுத்து காரியைச் சுட்டுத் தள்ளுகிறார். பாவம், சரிகிறது அந்த ஜீவன்..

ஜமீனோட காரியைப் பிச்சி அடக்கிட்டான்கிற பேச்சு.. காரியை ஜமீன் கொன்னுட்டார்னு மாறுது..

மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு.. மனுசனுக்கு ரோசம்வந்தாலும் போச்சுன்னு முடிகிறது கதை..

ஜல்லிக்கட்டு சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு கௌரவம், சிலருக்கு சாதி, சிலருக்கு வீரம், சிலருக்கு ரோஷம், சிலருக்குப் பெருமை.. சிலருக்கு தைமாதம் மட்டும் விவசாயத்தை, நாட்டு மாடுகளைக் காப்பாற்றுவது பற்றிப் பேசக் கிடைத்த ஒரு வாய்ப்பு என பலவிதங்களில் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. இவை எதுவுமே இல்லை என யாராலும் மறுத்துவிட முடியாது. எல்லாமும் தான். எல்லாமும் தான் இருக்கின்றன.

முறைப்பெண்: முறைப்பெண் என்கிற சிறுகதையையே நாடகமாகவும் எழுதியிருக்கிறார். தேவமார் சமூகத்தில் உள்ள முறைப்பெண் உரிமையை மையமாகக் கொண்ட கதை.. ஆனால் சிறுகதை, நாடகம் இரண்டின் முடிவுகளும் வேறுவேறு. சிறுகதையை விட நாடகம் நன்றாக இருந்தது.

பிற: மூணுலாந்தல் என்னும் கதை அய்யணன் என்னும் குதிரை வண்டியோட்டியின் கதை.. ஐம்பதாண்டுக்கு முன், பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என வாசிப்பவர்களுக்கு வியப்பையும் ஆச்சரித்தையும் காலச் சூழல்கள் எப்படியெல்லாம் வாழ்க்கையை, மதிப்புகளை மாற்றி விடுகின்றன என்கிற ஏக்கப் பெருமூச்சையும் அளிக்கிறது.

இந்தக் கதைகள் எல்லாம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. சில கதைகள் அதற்கும் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்பவை. எனவே நூறாண்டுப் பின்னோக்கி பார்க்க, மதுரை வட்டாரச் சிறுகதைகள் என்கிற இந்த தொகுப்பு உதவுகிறது. பிராமணச் சமூகம் பெரும் நிலவுடைமையாளர்களாக இருந்ததையும் தேவர், நாயக்கர், கவுண்டர் சமூகத்தினர் அவர்கள் பண்ணையாளாகவும், வண்டியோட்டிகளாவும் இந்தக் கதைகளில் வலம் வருகின்றனர்.

இந்நூலின் தொகுப்பாசிரியர் காலசுப்ரமணியம். 2018ல் மதுரை கருத்துப் பட்டறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பக்கங்கள் 328.. விலை ரூ.300. தொடர்புக்கு:9842265884

– தேனி சுந்தர்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery