Book Review

நூல் அறிமுகம்: டாக்டர் கோவூரின் “கடவுள் மதக் கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்” – கி.ரா.சு

Spread the love

 

கேரள மாநிலம் மிகப்பல பகுத்தறிவாளர்களை ஈன்ற மாநிலம்.  அவர்களில் ஒருவர்தான் டாக்டர் கோவூர்.  1898 ஏப்ரல் 10 அன்று பிறந்த கோவூர் பின்னாட்களில் இலங்கையில் குடியேறினார்.  அங்கு பகுத்தறிவாளர் சங்கம் உருவாக்கப்பட்ட போது அதில் சேர்ந்தார்.  தமது ஓய்வுக்குப் பிறகு முழுநேரமும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராட உறுதி கொண்டு, தமது இறப்பு வரை போலி சாமியார்களை அம்பலப்படுத்துவது, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது, பகுத்தறிவை வளர்ப்பதற்கு அர்ப்பணித்துக் கொண்டார்.  அவரது கட்டுரைகளை அலைகள் பதிப்பகம் இரண்டு புத்தகங்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது.  அதில் ஒன்றுதான் இந்தப் புத்தகம்.

இதயமில்லாத இந்த உலகின் இதயமாகத் திகழ்வது மதம் என்றும், மனிதனின் துன்பங்களை மறக்க ஒரு போதை மருந்தைப் போல் கடவுள் நம்பிக்கை உள்ளது என்றும் காரல் மார்க்ஸ் கூறுவார்.

”உலகம் முழுவதையும் படைத்து காப்பது கடவுள்தான் என்பதே சாமினிய மக்களின் நம்பிக்கை.  அந்தக் கடவுள் சர்வ வல்லமை உடையவன் என்றும் எங்கும் நிறைந்தவன் என்றும் அனைத்தையும் அறிபவன் என்றும் கண்ணுக்குப் புலனாகாதவன் என்றும் மத பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால், எல்லா காலகட்டத்திலும் நிலவிய கடவுள் கற்பிதம் இது அல்ல.  ஆதி மனிதன் காற்று, தீ, நீர், மலை, மரங்கள் முதலிய இயற்கை ஆற்றல்களை தெய்வமாக வழிபட்டான்.  வீர மாந்தர்கள், மரணமடைந்த முன்னோர்கள் ஆகியோரையும் வழிபட்ட காலமும் உண்டு.  அறிவின் வளர்ச்சியால் கடவுள் கற்பிதத்துக்கும் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.”

மு.சரவணக்குமார்/mu.saravanakumar: டாக்டர் ...

”தன்னைச் சுற்றிலும் நிகழ்கின்ற சம்பவங்கள் தன்னுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்றும் அத்தகைய சம்பவங்களின் பின்னணியிலுள்ள சக்திகளை தன்னுடைய நடவடிக்கைகள் சினம் கொள்ள வைக்கின்றன என்றும் பண்டைக்கால மனிதன் நம்பினான்.  சினத்தை நட்பாக மாற்றுவதற்காக அவன் புகழ் பாடுவதையும், பிரார்த்தனையும் நம்பினான்.  அது மட்டுமல்ல, தன்னுடைய திறமையின் பெரும் பகுதியைப் பயன்படுத்தி, தன் கற்பனையிலுள்ள கடவுளின் உருவத்தை கல்லையும், மரத்தையும் செதுக்கி உண்டாக்கினான்.  இந்த உருவங்களைப் பாதுகாப்பதற்காக அவன் முதலில் ஒரு குடிலைக் கட்டினான்.  பிறகு அது வழிபாட்டுத் தலமாகவோ கோவிலாகவோ பரிணமித்தது.  பொம்மைகளுக்கு முன்னால் அவன் தலை குனிந்தான்.  பணத்தை வாரி இறைத்துச் செலவு செய்து கட்டிய கோவில்களின் மூலம் தனக்கும் தன் அன்புக்குரிய குடும்பத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று அவன் நம்பினான்.”

(பகுதி 81, மேற்கூறிய புத்தகம்)

இவ்வாறாக கோவூர் கடவுள் தோன்றிய விதத்தை விளக்குகிறார்.  ஆனால் இந்தக் கடவுளுக்கும், பக்தனுக்கு இடையில் புகுந்த இடைத்தரகர்களான சாமியார்கள், மதத்தையும், மனிதனின் நம்பிக்கை, மூடநம்பிக்கையையும் பயன்படுத்திக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.  இது காலகாலமாக மத வேறுபாடின்றி நடைபெற்று வருகிறது.  பாதிக்கப்படுபவன் பக்தனாகவே இருக்கிறான்.  எனவே அவனது பகுத்தறிவை வளர்த்து, அவனைக் கடவுள் நம்பிக்கையிலிருந்து விடுபட வைப்பதே இதற்குத் தீர்வு என கோவூர் வாதிடுகிறார்.  தெய்வ நிந்தனைக்கு உட்பட்டு விடுவோம், சாபத்துக்கு ஆளாவோம் என்று பக்தன் அஞ்சுவதுதான் அவர்களது வலிமை என்கிறார் கோவூர்.

அவர் அதை செயல்படுத்தவும் செய்தார்.  அவரது காலத்தில் மனித செயல்பாட்டுக்கு அப்பாலுள்ள செயல்களைச் செய்வேன் என்று கூறிக் கொண்டு ஏராளமான செல்வத்தைக் குவித்துக் கொண்டிருந்த காட்மேன்களிடம் அவர் நேரடியாக சவால் விட்டார்.  அவர் கூறும் சிறு பரிசோதனைகளுக்கு உட்பட்டு அவர்கள் தமது கடவுட்தன்மையை நிரூபித்தால், அவரது பணம் ஒரு லட்சம் ரூபாயை வெல்பவருக்குப் பரிசாக அறிவித்தார்.  அவரது மரணம் வரை யாரும் அதை ஏற்று நிரூபிக்க முன்வரவில்லை.  வந்த ஒன்றிரண்டு பேரும் கடைசி நிமிடத்தில் காணாமல் போய் விட்டனர். அது மட்டுமல்ல, அவரைக் கொல்வேன் என்று சொல்லி சுமார் 50 பேர் அவருக்கு மந்திரித்த தகடுகளை அனுப்பினர்.  சுமார் 50 தகடுகள் இப்படித் தம்மிடம் உள்ளன என்று ஏளனம் செய்கிறார் கோவூர்.

எந்த மதவேறுபாடுமின்றி அவற்றின் வேதங்களிலுள்ள அபத்தங்களைத் தோலுரிக்கிறார்.  அவற்றைப் படிக்கும்போதே நமக்கு பகீரென்கிறது.  இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் என்னவாகியிருக்குமோ என்று தோன்றுகிறது.

கடவுள் மதக் கட்டுக்கதைகளும் காசு ...

குழந்தைகளை மூடநம்பிக்கைகளை ஊட்டியே வளர்ப்பதால்தான் அவை அப்படி வளர்கின்றன.  எனவே சிறு வயதிலிருந்தே பகுத்தறிவை ஊட்டி வளர்க்க வேண்டும் என்கிறார்.  ஒரு கிருத்தவனாக, ஒரு கிருத்தவப் பாதிரியாரின் குழந்தையாகப் பி|றந்தும் அவர் பகுத்தறிவுவாதியாகத் திகழ்ந்தார் என்பதையும், தமது குழந்தைகள் எந்த மதத்தையும், எந்த சாதியையும், எந்த மொழியையும் கொண்டவர்களல்ல, அவர்கள் சுதந்திரமானவர்கள் என்கிறார்.  அவரது சர்வதேசியக் கண்ணோட்டம் மிகவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது.  ”தேசத்தின் எல்லைக் கோடுகள் அவை தீரட்டும்;’ தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்” என்ற கவிஞர் வைரமுத்துவின் பாடல் நினைவுக்கு வந்தது.

அது மட்டுமல்ல, அவர் பல காலங்களில் வாழ்ந்து, மறைந்த (?!) பல கடவுள்களையும் பட்டியலிடுகிறார்.  கடவுள் ஒன்றே என்றால் ஏன் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு மதத்தில் ஒவ்வொரு மாதிரி அந்தக் கடவுள் ஏன் கூறுகிறார் என்று கேள்வி எழுப்புகிறார்.  எல்லா மதங்களுமே மூடநம்பிக்கையைப் பரப்புவதால், எந்த மதத்திலிருப்பதும், மதம் மாறுவதும் வீணான வேலை என்று கூறுகிறார்.

அதேபோல் மூடநம்பிக்கைகளைத் தோலுரிக்கிறார்.  அவற்றை எதிர்த்துப் போரிடுகிறார்.  நாடு நாடாகச் சென்று மாநாடுகள் நடத்தி இந்தப் போலி காட்மேன்களின் தந்திரங்களைச் செய்து காட்டி மக்களை விடுவிக்க முயன்றுள்ளார்.

இந்த மாபெரும் பகுத்தறிவாளரின் கட்டுரைகளும், அவரது கருத்துக்களும் அனைத்துப் பகுத்தறிவாளர்கள் கையிலும் ஒரு ஆயுதமாக இருக்க வேண்டியவை.  அந்தக் கடமையை எப்போதும் போல் நிறைவாக நிறைவேற்றி இருக்கிறார் அலைகள் தோழர் சிவம். அவர் எப்போதும் கண்ட புத்தகங்களையும் பதிப்பிப்பதில்லை.  எது முற்போக்கு இயக்கங்களுக்கு உதவியாக இருக்குமோ அதை மட்டுமே பதிப்பிப்பார்.  அது மட்டுமின்றி, அவரது உழைப்பு அந்தப் புத்தகத்தில் பளிச்சிடும்.  எந்தச் சிறு தவறையும் அவர் ஏற்க மாட்டார்.  அந்த உழைப்பு இந்தப் புத்தகத்திலும் வெளிப்படுகிறது.  கோவூர் பல காலங்களில் எழுதிய கட்டுரைகளை பிரித்து, தகுந்தாற்போல் அமைத்து சரியானபடி வழங்கியுள்ளார் பதிப்பாசிரியர்.  அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Atheist Society of India: Dr. Jaya Gopal with Dr. A.T. Kovoor

அதேபோல் மொழிபெயர்ப்பாளரின் உழைப்பு மின்னுகிறது.  431 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியிலும் இது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் என்பதே தெரியவில்லை. மேலும் வேதங்கள், பைபிள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டும்போது அப்படியே அந்தப் புத்தகங்களிலிருந்து எடுத்தாண்டிருப்பது சிறப்பு.  தமிழாக்கம் செய்துள்ள திருமிகு த.அமலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  அவர் மேலும் மேலும் சிறந்த படைப்புக்களை மொழியாக்கம் செய்து தமிழுலகுக்கு அளிக்க வேண்டும்.

வெளியீடு: அலைகள் பதிப்பகம்

பக்கம் 431

விலை.325/-

 புத்தக விமர்சனம்: கி.ரா.சு.

 

 

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery