Book Review

நூல் அறிமுகம்: காலநதி பிரியா நாவல் – சுப்ரபாரதிமணியன்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம் எழுத்தாளர் பிரியா. சார்ஜாவில் வாழ்கிறார், இந்த நாவலின் களத்தை அவருக்கு பிரியமான கோவை மாவட்ட சார்ந்து எடுத்திருக்கிறார் .பல ஆண்டுகளாக வலைப்பூவில் சுவாரசியமான விஷயங்களை எழுதி வருகிறார் .

இந்த நாவல் இலக்கிய எழுத்தாளர்களின் இறுக்கமான பாணியை கொண்டிருக்கவில்லை என்பது இளம் எழுத்தாளர்களின் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கிறது .ஆனால் அந்த இறுக்கத்தை தவிர்த்து விட்டதால் ஒருவகையான செரிவும் இந்த நாவலில் இல்லாமல் இருக்கிறது. உணவுக் கலாச்சாரத்தை முன்னெடுத்து இந்த நாவல் ஆரம்பித்திருப்பது ஒரு ஆரோக்கியமான விவாதம் . இன்றைய இளைஞர்கள் சிங்கப்பூர் மலேசியா மற்றும் மேற்கத்திய நாடுகள் போன்றவற்றில் இருப்பது போன்று வீட்டில் சமைத்த உணவை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் உணவகங்களில் ஆர்டர் கொடுத்து நிரப்பிக்கொள்வது வெகு சாதாரணமாக இருக்கிறது .அவர்களின் வீட்டு சமையலறையில் வெகு சுத்தமாக இருப்பது கண்டு நான் அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன் .ஆனால் அவர்களுக்கு துரித உணவும் ஆர்டர் கொடுத்து விட்டால் கதவை தட்டும் உணவகங்களும் இருப்பதால் சமையல் பற்றின அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது இந்திய உணவுகளில் இருக்கும் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை இழந்து வந்திருக்கிறார்கள் .இந்த சூழலில் துரித உணவகங்கள் மேற்கத்திய பாணி உணவகங்கள் தமிழ் சமையல் அல்லாத வடநாட்டு உணவு தயாரிப்புகள் போன்றவை சாதாரணமாகி விட்டன.

உணவு தயாரிக்கும் கிச்சன் மேக்கிங்  வீடுயோக்களுக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு இருக்கிறது.  அதே போல் புட்டீ வீடுயோக்களுக்கும்.   புட்டீ விடியோக்கள் என்பது கையேந்தி பவன் முதல் நட்சத்திர விடுதிகள் வரை உணவினை ருசித்து அதன் சுவை பற்றிச் சொல்லும் வீடியோகள். இதில் பெரும்பான்மையான புட்டீஸ்கள் இளைஞர்களாகவும் இளையப் பெண்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த உணவுச் சூழலை பயன்படுத்தி வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்கிற கதாநாயகி ஒருத்தியை இந்த நாவலில் முன்னிறுத்துகிறார் பிரியா .அவரின் உணவக நடவடிக்கைகளில் கல்லூரி மாணவர்களை இணைத்துக் கொள்கிறார் .அது அவர்களுக்கு பல சமயங்களில் உதவியாக இருக்கிறது .பண உதவியாகவும் வாழ்க்கையின் இன்னொரு அனுபவமும் .அது மாறுவதை இந்த நாவல் சொல்கிறது. இன்றைய உணவு நஞ்சாகி விட்டது ஆனாலும் அந்த நஞ்சை இந்த உடம்பு ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு சகித்துக் கொண்டிருக்கிறது. பழைய மரபான உணவு முறைகளுக்கும் வாழ்க்கைக்கும் நாம் செல்ல வேண்டியதாக இருக்கிறது அப்படித்தான் இந்த நாவலில் வருகிறார் கதாநாயகி இந்திய உணவுக் கலாச்சாரத்தை மையமாக கொண்ட உணவை தயாரித்து விற்பனைக்கு முன்வைக்கிறார் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக பழைய சாதம் என்ற உணவு மறு உருவாக்கம் செய்யப்பட்டு பலருக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்து கண்களில் நீர் ததும்ப வைக்கிறது .பழைய சாதம் என்ற உணவுக்கு தொட்டுக்கொள்ள விநியோகிக்கப்படும் பொருட்கள் வெறும் வத்தல் ஊறுகாய் என்று இல்லாமல் அவை நவீன சாதனங்கள் போன்ற வடிவமைப்புடன் அமைக்கப்படுகிறது .ஒருபுறம் இந்த உணவு சார்ந்த விஷயங்களில் நம்முடைய இளைஞர்கள் எப்படி அன்னியப்பட்டு இருக்கிறார்கள் நம்முடைய மரபான உணவு முறைக்கு அவர்கள் திரும்ப வேண்டிய அவசியத்தை இந்த நாவல் ஒரு ஓரமான செய்தியைக்  கொண்டிருக்கிறது. அதேபோலத்தான் விளையாட்டு முறைகள் வீடியோ கேம்ஸ்  எனப்படும் விளையாட்டு முறைகளில் இருக்கும் குரூரங்கள் தெளிவாக இருக்கின்றன இதில் குறிப்பிடப்படும் பப்ஜி போன்ற விளையாட்டுகள் அப்படித்தான் கொடூரமானக் கொலைகள் ஆக இருக்கின்றன உணவும் விளையாட்டும் எந்தவகையான விபரீதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த நாவல் அக்கறை கொண்டிருக்கிறது ஒரு வகையில் .இளைஞர்கள் பற்றி இளைஞர்களை எழுதுவது ஆரோக்கியமான விஷயம் அப்படித்தான் இளைஞர்களின் மன உணர்வுகளை பிரியா பிரதிபலித்திருக்கிறார் ..

குடும்ப உறவுகளைத் தவர விட்ட குற்ற உணர்வு பலரிடம் தென்ப்டுகிறது. மரபான குடும்பப் பிணைப்பு பற்றிய அக்கறையை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள், ஆனால் நாலுபேர் என்பது ஒரு சமூகம் இதில் ஒருவர் இருவர் இருக்கிறார்கள் .மீதி மனிதர்கள் இல்லை. ஒரு நாவலுக்கு நான்கு பேரும் 40 பேரும் 400 மிகவும் அவசியமாக இருக்கிறது ..ஒரு நெடுஞ்சாலையில் செல்லும் வாகனம் விரைந்து சென்று சக மனிதர்களை சக வாகன ஓட்டிகளை கண்டுகொள்ளாமல் சென்று பயணத்தை முடிப்பது போல இந்த நாவலில் இரண்டு குடும்பங்களின் கதை மற்ற சமூக மனிதர்களை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் , சமூகவியல் நடப்புகள் பற்றிய அக்கறை இல்லாமல் நெடுஞ்சாலை வாகன போக்குவரத்தை மாதிரி விரைந்து சென்று முடிந்து விடுகிறது ஆனால் வாகனம் செல்லும் போது சாலையை ஒட்டி இருக்கிற மனிதர்கள் பிற வாகனங்கள் கிராமங்கள் நகரங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் உள்ளன .அவற்றை  எல்லாம் உள்ளடக்க முடியாதபோது இந்த நாவல் தரையில் கால் பாவாமல் ஆகாயத்தில் பறக்கும் ஒரு வாகனம் போலத்தான் ஆகிவிடுகிறது . மற்றவர்களுடன் எந்தத் தொடர்ப்பில்லாமல்.  ஒரு குடும்பத்தின் கதை அல்லது இரண்டு குடும்பங்களின் கதை ..வீட்டை விட்டு போன ஒரு பெண்ணை பற்றின மையம்.. .காதல் போன்றவற்றில் வீட்டைவிட்டு போகிறவர்கள் ஒருவகை .இதில் வருகிற பெண் இன்னொரு வகை அந்த பெண்ணை கண்டபோது அவர்களுக்குள்ளும் சின்னதாக சலசலப்பும் சங்கடங்களும் நேர்கின்றன அந்த சங்கடங்களை தினசரி வாழ்க்கையின் சம்பவங்களின் மூலமாக எடுத்துக் கூறுகிறார் .மிக குறுகிய கால அளவைக் கொண்டது நாவல் ஒருவகையில் குறு நாவலின் வடிவத்தை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம் .ஒரு அறைக்குள் பார்த்து அதை உள்ளடக்கம் கொண்டதாக  இருக்கிறது. ஆனால் ஜன்னலை திறந்து பார்த்தால் கதவை திறந்து பார்த்தால் வெளிப்படும் உலகமே நாவல் என்ற எல்லைக்குள் வரும் .அந்தக் கணிப்பை பிரியா பின்பற்றுவதில்  தவறி இருக்கிறார் .இந்த நாவலில் ஒரு வாகன ஓட்டி பற்றிய கருத்து விளிம்பு நிலை மக்கள் பற்றிய விமர்சனமாக இருக்கிறது.  கதாபாத்திரங்கள்  அவர்கள் தெரிந்து கொள்ளும் விஷயத்தில் இருக்கும் கொடூரம் மனம் வலிக்கிறது..

எதுவாயினும் அது எதுவோ அதுவே நான் ஆகினேன் என்று ஆறாம் அத்தியாயத்தின் முகப்பு சொல்கிறது .அதுபோல் பல ஆண்டுகளாய் அமீரக நாடுகளில் வசித்து வந்தாலும் அவர் தன்னுடைய நாவலில் களமாய் சொந்த மண்ணை எடுத்திருப்பது ஒரு ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது. அவர்கள் கால்கள் இங்கேயே நடமாடிக் கொண்டிருப்பது நல்ல விஷயம் தான்.

” உடம்பும் மனசும் தெம்பும் இருந்தப்போ பிள்ளைகளை விட எது எதுவோ பெருசா தெரிஞ்சுது இப்போ வயசு ஆகி மூலையில் கிடக்கிறப்பதான் எல்லாம் தெரியுது எதையெதையோ பெரிசா நினைச்சு பிள்ளைகளை விட்டறம்.  முடியாமல் கிடக்கறப்போ  அப்ப பெருசா நெனச்சா எதுவுமே துணைக்கு வரவில்லை .பெத்த்துதான்  வருது .இப்படித்தான் இப்பதான் புரியுது பெத்த பிள்ளைகளை விட எதுவும் பெரிசில்லன்னு. அவர்களை புரிஞ்சுக்கறது  அதைவிடவும் எதுவும் பெரிதில்லை .எங்க காலம் இப்படியே போயிடுச்சு .நீங்களாவது பிள்ளைகளை புரிஞ்சிட்டு ஒரு வாழ்க்கையை வாழ பாருங்க. அதுதான் எப்பவுமே நமக்கு நல்லது “  என்ற முடிவுரையுடன் இந்த நாவல் உள்ளது. இந்த அனுபவங்களை இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்

காலநதி – பிரியா நாவல்

 டிஸ்கவரி புக் பேலஸ்

ப்ரியாவின் முதல் நாவல் முயற்சி இது . 

பக்கங்கள் 224 

விலை 250 

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

சென்னை 

 

 சுப்ரபாரதிமணியன்

Leave a Response