Book Review

நூல் அறிமுகம்: கால் போன போக்கிலே…. – ச.சுப்பாராவ்தமிழில் நல்ல நகைச்சுவைக் கட்டுரை நூல்கள் குறைவு. அப்படி குறைவாக இருப்பவையும், கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற நகைச்சுவையாகத்தான் இருக்குமேயன்றி, சமயங்களில் மெல்லிய புன்னகையோடும், சமயங்களில் நம்மையறியாது வாய்விட்டு உரக்கச் சிரித்துவிடுமளவும் நல்ல தரத்தோடு இருப்பதில்லை. இதற்காக நாம் நகைச்சுவை எழுத்தாளர்களை முழுக்க குற்றம் கூறிவிடவும் முடியாது. நகைச்சுவை எழுத்து குறைவாக இருப்பதன் ஆதார காரணம் எழுத்து பற்றிய நமது புரிதலில் இருக்கிறது.

புத்தகங்கள் எழுதப்பட ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே “ஸ்கிரிப்ட்டா மேன்ன்ட், வெர்பா ரோலன்ட்“ என்ற லத்தீன் பழமொழி உருவாகிவிட்டது. “எழுதப்பட்டது நிரந்தரம், பேசப்படுவது காற்றில் பறந்துவிடும்” என்பது இதன் பொருள். எழுதப்பட்டது நிரந்தரம் எனும் போது படைப்பாளியின் எழுத்து இறுக்கமாகி விடுகிறது. பேசும் போது எவ்வளவு ஜாலியாக, நகைச்சுவையாகப் பேசினாலும். எழுத உட்காரும் போது தன்னையறியாமல் அவன் serious ஆகிவிடுகிறான். அதனால்தான் அலுவலகங்களில் கூட விதிகளுக்கு மாறாக ஏதேனும் ஒன்றைச் செய்யச் சொல்லி வாய்வழி உத்தரவு போடும் மேலதிகாரிகள், “ரிட்டனா குடுங்க ஸார்” என்றால் தயங்குகிறார்கள். ஏனெனில் எழுதப்பட்டது நிரந்தரம். அதில் விளையாடக் கூடாது என்ற அச்சம், தயக்கம். அதனாலேயே நகைச்சுவை எழுத்து குறைந்து போய், எழுதப்படும் படைப்புகள் பெரும்பாலும் வறட்டுத்தனமாகப் போய்விடுகின்றன. இந்த பெரிய தடையை மீறி, விஷயத்தோடு நகைச்சுவையாக எழுதி கலக்குபவர்கள் வெகு சிலரே. அவர்களில் மிக முக்கிமானவரான நந்து சுந்து எழுதிய கால் போன போக்கிலே…. தொகுப்பை வாசித்து ரசித்தேன். இது பயணக்கட்டுரை கம் ஆன்மீகக் கட்டுரை கம் அனுபவக் கட்டுரை என்று அவரே சொல்கிறார். நமக்கோ அது சுகமான வாசிப்பு அனுபவம் தரும் ஜாலிக் கட்டுரை !

நான் சிறுவயதில், பரணீதரனின் ஆன்மீகப் பயணக் கட்டுரைத் தொடர்களை விகடனில் படித்ததுண்டு. அதிலெல்லாம் கோவிலைப் பற்றிய விவரிப்பில் கோவில் விமானம் என்று வரும். நாம் போன கோவில்களில் எங்குமே விமானம் இல்லையே என்ற என் சந்தேகத்தை வீட்டில் பெரியவர்களிடம் கேட்டிருக்கிறேன். நீ எதுக்கு அதெல்லாம் படிக்கற? பேசாம கோகுலத்துல நந்து சுந்து மந்து படிச்சா போதாதா? என்பதுதான் எனக்குக் கிடைத்த பதில். நந்து சுந்து தனது பெயரில் ஏன் இந்த மந்துவை விட்டுவிட்டார் என்பது எனது தீராத சந்தேகம்.. வருத்தமும் கூட. நந்து சுந்துவின் புத்தகம் படித்த தாக்கத்தில் நானும் ஏதோ இரண்டு வரி வேடிக்கையாக எழுதிவிட்டேன். இனி சப்ஜெக்ட்டுக்கு வருகிறேன்.

சிறு வயதில் விறகுக்கடையிலிருந்து விறகு வாங்கி வரும் அனுபவம் பற்றிய அவரது கட்டுரை உலகெங்கும் உள்ள வாட்ஸ்அப் குழுக்கள் முழுவதும் சுற்றி எனக்கும் வந்தது. அதைப் படித்ததிலிருந்து நான் அவரது பரம ரசிகனானேன். முகநூலிலும் நட்பு அழைப்பு தந்து நண்பனானேன். அதனாலேயே இந்தத் தொகுப்பை சுடச்சுட படித்தேன். இப்படி வரிக்கு வரி வேடிக்கையாக எழுத இப்போதைக்கு இவரை விட்டால் வேறு யாருமே இல்லை என்பதற்கு இந்தத் தொகுப்பே சாட்சி.

தொகுப்பில், நந்து சுந்து பத்ரிநாத், கேதார்நாத், ஹரித்வார், ரிஷிகேஷ் என்று ஆன்மீகப் பயணம் போகிறார். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆந்திராவிற்குள் நுழையும்போது தெலுங்கில் குறட்டை விட்டுத் தூங்குகிறார். அஜ்மல்கான் காலையில் பயணக் கோஷ்டியில் பலரும் பைஜாமா வாங்கி பஜன்லால் ஆக முயற்சி செய்கிறார்கள். லாட்ஜ் எதிரே இருக்கும் சாலை மிகவும் குறுகல். ஒரு உசிலைமணி வந்தால், எதிரே ஒரு ஓமக்குச்சி நரசிம்மன்தான் வரமுடியும். சாயம் பொன பஸ்களில் பான்ப்ராக் பிரான்களும், முக்காடு போட்ட முன்னாள் அழகிகளும். வெள்ளைக்காரன் சிரசாசனம் செய்ய ஆரம்பித்த பிறகுதான் நம்மவர்கள் ஷாப்பிங் லிஸ்டில் யோகா மேட் வந்து சேர்ந்தது என்பதை ரிஷிகேஷில்அறிகிறார். கேதார் நாத்திற்கு குதிரையில் போவதற்காக மாமிகள் சுடிதார் போட்டு காதலிக்க நேரமில்லை காஞ்சனாக்களாக மாறுகிறார்கள். மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், மலர்கள், கோவில்கள், வென்னீர் ஊற்றுகள், பனிச் சிகரங்கள் எல்லாம் பார்த்து முடித்து டில்லி வருகிறார்கள். ஆனால் அழகான அந்த டில்லியை நந்து சுந்துவிற்கு பிடிக்கவில்லை. அது கான்க்ரீட் காடு. அங்கு சிக்னலில் சிவப்பு விளக்கு வண்டியை எப்போது நிறுத்தும் என்று தெரியும். ஆனால் பயணத்தில் அவர் பார்த்த இமயத்தில் மலைச்சரிவு வண்டியை எப்போது நிறுத்தும் என்று தெரியாது. அதனாலேயே அவருக்கு அந்த இமயம், அந்த இயற்கை பிடிக்கிறது.இது ஆன்மீகச் சுற்றுலாப் பயணம் குறித்த புத்தகம்தான். ஆனால் மெய்சிலிர்க்க வைக்கும் உபதேசங்கள், அருள்வாக்குகள் கிடையாது. அது பற்றிய அலட்டல் கிடையாது. வென்னீர் ஊற்றில் குளிக்கும் போதும், என்னே இறைவனின் படைப்பின் அற்புதம் ! என்று புல்லரிக்காமல், இதற்கு விஞ்ஞானக் காரணங்கள் உண்டு என்று சேர்த்தே சொல்கிறார். அதோடு, புத்தகத்தில் ஆன்மீக இடங்கள் பற்றிய சமூகப் பார்வையும் உண்டு. அதில் இரண்டு உதாரணங்கள் இங்கே –

“பணக்கார பக்தர்கள் சின்னதாக குக்கர் கேஸ்கட் சைசில் ஒரு கதம்ப மாலையை கழுத்தில் போட்டு நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பின்னால் பைஜாமா போட்ட ஐந்து பேர் உப்பு சத்தியாக்கிரகம் போவது போல தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு மாலை போட்டுக் கொள்ளும் அந்தஸ்து கிடையாது.”

இரண்டாவது, ஹரித்வாரில் ஒரு கோவிலுக்கு ரிக் ஷாவில் செல்லும் சம்பவம். சொற்ப வாடகைக்காக ஒரு முதியவர் அதை ஓட்டி வருகிறார். கோவிலிருந்து வெளியே வந்து ரிக் ஷாவில் ஏறிய பிறகுதான் இவருக்கு செருப்பை கோவில் வாசலிலேயே விட்டு விட்டு வந்தது நினைவிற்கு வருகிறது. இவர் இறங்குவதற்குள் அந்த முதியவர் இவரது செருப்பை எடுத்து வந்து பணிவாக காலடியில் வைக்கிறார். அப்போ நந்து சுந்துவின் மனநிலையை அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன்.

“எனக்கு ஒரு நிமிஷம் மெய் சிலிர்த்து விட்டது. என் தந்தையைப் போல இருந்த அவர் செய்த காரியம் இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை.

எளிமையா? உதவி செய்யும் மனப்பாங்கா? அல்லது ஆண்டாண்டு காலமாக பணம் படைத்தவர்களிடம் அடகு வைக்கப்பட்ட அடிமைத்தனமா?… ஏழு வருடங்கள் ஆனாலும் இந்த நிகழ்ச்சி என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இதை எழுதும் போது கூட ஒரு குற்ற உணர்ச்சி குத்துகிறது.”

ஆன்மீகப் பயணக் கட்டுரை வெறும் நகைச்சுவை கலந்த பயண விபரங்களின் தொகுப்பாக இல்லாமல் இப்படி சில இடங்களில் மிக நுட்பமான இடங்களைத் தொட்டுச் செல்கிறது. ஆன்மீகம் என்பது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, சிரமப்பட்டு, கோவில்களைத் தரிசிப்பது மட்டுமல்ல… இறைவன் படைத்த, அவன் அறிந்தோ, அறியாமலோ, கஷ்டத்தில், வறுமையில் தள்ளி விட்டுவிட்ட, எளிய ஜீவன்களைக் கண்டு மனம் பதறுவதும் தான் என்று சொல்லாமல் சொல்கிறது.

அந்த வகையில் எனக்கு இந்தத் தொகுப்பு மனதுக்கு நெருக்கமாகி விட்டது.

நந்து சுந்துவிற்கு என் நன்றியும், வாழ்த்தும்.

கால் போன போக்கிலே….

பவித்ரா பதிப்பகம்

சிறுவாணி வாசகர் மையத்துக்காக

பக்கம் 120. விலை ரூ.110.00

நன்றி : https://sasubbarao.wordpress.com/Leave a Response