Book Review

புத்தக அறிமுகம்: ஜெயகாந்தன் சிறுகதைகள் – பெ. அந்தோணிராஜ் 

Spread the love
        தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் வாசகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய எழுத்தாளர். இவருடைய எழுத்துக்கள் திரைப்படமாகியுள்ளன. சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர்.பத்மபூஷன் விருது பெற்றவர். இந்தியா இலக்கிய விருதுகளில் உயர்ந்த விருதான ஞானபீட விருது பெற்று தமிழுக்கு பெருமைசேர்த்தவர்.
எளிய நடுத்தர மக்கள்தாம் இவருடைய கதாபாத்திரங்கள். சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக எழுத்தில் கொண்டுவருபவர். இவருடைய கதைகள் வெளிவரும்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதே நேரத்தில் நிறைய பாராட்டுதல்களையும் பெற்றது. மனதில் பட்டத்தை யாருக்கும் அஞ்சாமல் பொதுவெளியிலும் பேசும் திண்மை வாய்ந்தவர்.
   இத்தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. 1, அக்னி பிரவேசம், 2, நந்தவனத்தில் ஓர் ஆண்டி, 3, அந்தரங்கம் புனிதமானது 4, இருளைத்தேடி 5, குருபீடம் 6, நான் இருக்கிறேன் 7, சுயதரிசனம் 8, தவறுகள் குற்றங்கள் அல்ல 9, அக்கிரஹாரத்துப் பூனை 10, ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில், 11, ஒரு வீடு பூட்டி கிடக்கிறது 12, சிலுவை 13, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ 14, புதுச்செருப்பு கடிக்கும் 15, நிக்கி  ஆகிய அருமையான பதினைந்து கதைகள் உள்ளன.
Download ஜெயகாந்தனின் 31 சிறுகதைகள் for ...
அக்னிப்பிரவேசம் 
  ஒரு மழை நாள். நகரப்பேருந்திற்கு காத்திருக்கும் அழகான பதின்ம வயதுப்பெண். பேருந்து காலதாமதத்தில் அவளை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்ற எண்ணமுள்ள ஒரு பணக்கார இளைஞன் தன்னுடைய காரில் ஏறுமாறு வற்புறுத்துகிறான். சூழ்நிலை காரணமாக அவள் காரில் இருக்கிறாள். கார் நகர எல்லைக்கு அப்பால் செல்லும்போதுதான் அவளுக்குப் புரிகிறது. காரில் அவன் இவளிடம் எடுத்துக்கொண்ட அக்கறை இவளுக்கு பிடிக்கிறது. காரின் பிரமாண்டம், அவனின் தோற்றம் எல்லாம் அவளை அவன்பால் தள்ளுகிறது. கொஞ்சம் எதிப்பைப் காட்டுகிறாள்,   அவன் விருப்பத்தை நிறைவேற்றிய பின்னர்தான் சுயநினைவு வந்தவளாக அழுகிறாள். தான் ஏமாறிவிட்டது தெரிகிறது. தெருவின் முனையில் இறக்கிவிட்டு போய்விட்டான். வீடு நுழைந்து அம்மாவை பார்த்தவுடன் அழுகிறாள். நடந்ததை கூறவும் கோபமடைந்த அம்மா இவளை அடிக்கிறாள், பக்கத்து குடித்தனங்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என நினைக்கிறாள். பாத்ரூமுக்கு அழைத்து செல்கிறாள். அம்மாவே இவளுடைய ஆடைகளை அவிழ்த்து, தலைவழியே நீருற்றி குளிப்பாட்டுகிறாள். அரண்டு போயிருந்த அந்த மாணவியை பூஜை அறைக்கு அழைத்து போய் வணங்கச்சொல்கிறாள். நெத்தியில் பொட்டு வைத்து, “குழந்தே நீ அறிந்து தப்பு செய்யலே, இப்போது நீ சுத்தமாயிட்டே. எந்த களங்கமும் இல்லை, அந்த சம்பவத்தை மறந்துறு, இதை யார்கிட்டையும் சொல்லிடாதே “என்று தைரியம் அளிக்கிறாள். இப்போதும் அந்தப்பெண் கல்லுரிக்கு போகிறாள், ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவளாக. இக்கதையில் தன் மகளுக்கு  இப்படி நடந்துபோனதே என்று வருந்தும் அம்மாவின் மனவோட்டங்கள், சாபம் இடுதல், ஆறுதல் படுதல் போன்ற இடங்களில் JK யின் கைவண்ணம் பிரமாதம் போங்கள்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி 
நந்தவனம் என்பது குழந்தைகளை மட்டும் புதைக்கும் இடுகாடு. அந்த இடுகாட்டை நந்தவனம் ஆக்கிவைத்திருப்பான் காவலாளி ஆண்டி. எப்போதும் தன்னை சந்தோஷமாகவே வைத்துக்கொள்வான், குழந்தைகளுக்கு குழிவெட்டும்போது, “நந்தவனத்தில் ஓர் ஆண்டி “என்ற பாடலைப்பாடிக்கொண்டே வேலைசெய்வான். அப்போது குழந்தையை பறிகொடுத்தவர்களுக்கு மனது கஷ்டமாக இருக்கும், அந்த ஊர்க்காரர்கள் ஆண்டி ஒரு மாதிரி என்று பேசிக்கொள்வார்கள். சிலநாள்கழித்து ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான். இருளன் என்று பெயரிட்டான். துரதிர்ஷ்ட்டவசமாக இரண்டு வயதில் அவன் இறந்து போகிறான், அவனுக்கும் இவன்தான் குழிவெட்ட வேண்டியுள்ளது, அந்த நிலைமையை நினைத்து மிகுந்த வேதனையடைகிறான். அதற்குப்பிறகு அவன் அந்தப்பாடல் பாடுவது இல்லை. இப்போதும் அந்த ஊர்க்காரர்கள் ஆண்டி ஒரு மாதிரியானவன் என்றே பேசுகின்றனர்.
ஜெயகாந்தன் சிறுகதைகள்: Jayakanthan Short ...
அந்தரங்கம் புனிதமானது 
சுந்தரம் ஒரு கல்லூரி பேராசிரியர். அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரமணியம்மாள் மேல்தட்டு வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவள், அதனால் தனிமனித அந்தரங்கத்திற்கு மதிப்பளிப்பவள். நான்கு குழந்தைகள், மூத்தவன் வேணு சிறு வயதில் இருந்தே தாத்தா பாட்டியிடம் வளர்கிறான். நகர நாகரிகத்தில் ஒட்டாமல் வளர்கிறான். கல்லூரி படிப்பெல்லாம் முடிந்த பின்பும் தாத்தாவின் ஊரிலேயே தங்கி விவசாயம் பண்ண ஆசைப்படுகிறான், ஆனால் தாத்தாவின் அறிவுரையால் நகரத்திற்கு வருகிறான். ஒரு நாள் சுந்தரத்திற்கு வந்த டெலிபோன் அழைப்பை தற்செயலாக எடுக்கிறான். மறுமுனையில் ஒரு பெண்குரல், சுந்தரத்தை இரவுக்காட்சி திரைப்படத்திற்கு அழைக்கிறாள். எந்தப்பதிலும் சொல்லாமல் வேணு வைத்துவிடுகிறான், அப்பாவின் நடத்தையில் சந்தேகம் வருகிறது. துருவிப்பார்க்கிறான் சந்தேகம் உறுதியாகிறது, தன் அம்மாவுக்கு துரோகம் செய்கிறார் அப்பா என்ற கோபம் வருகிறது. ஒருநாள் அப்பாவும் அவனும் தனியாக இதைப்பற்றி பேசுகின்ற சூழ்நிலையில், இவன் வருத்தத்தை தெரிந்து கொண்ட சுந்தரம் இவனுக்கு தனிமனித அந்தரங்கத்தில் தலையிடுவது குற்றம் எனத்தெரிவித்து இவனை அதைப்பற்றி இனிமேல் எதுவும்பேசாதே என்று கூறிவிடுகிறார், தாளமுடியாமல் அம்மாவிடம் வந்து அப்பாவின் மீது குற்றம் சுமத்துகிறான், அதைக்கேட்ட ரமணியம்மாள் வேணுவை கண்டிக்கிறாள். வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது, எளிதானது அல்ல, அந்த சிக்கலிலும் குழப்பத்திலும் எப்படி ஒரு குடும்பத்தை சந்தோசமாகவும் அமைதியாகவும் நடத்துவது என்பது  ஒரு கலை, அந்தக்கலையை கற்றுக்கொள்ள பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லைன்னா அன்பு காதல்ங்கிறது என்பதில் அர்த்தமில்லை வேணு என்று அவனுக்கு அறிவுரை கூறிய ரமணியம்மாள் அவனறியாமல் தன் கண்ணீரை துடைத்து கொள்கிறாள்.
    சிலநாட்களுக்குப் பின் வேணு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். சுந்தரத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் வேணு, “நான்  தாத்தாவின் பேரனாகத்தான் இருக்க லாயக்கனவன், உங்கள் வாழ்க்கை நெறிகள் புரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும் “என்று எழுதியிருந்தது. அப்போதும் சுந்தரம் பழமைவாதிகள் என்போர் எழுபது வயதிற்கு மேல்தான் இருக்கவேண்டுமென்பதில்லை, இருபது வயதிலும் இருப்பார்கள் என்று கூறவும், ரமணியம்மாள்  தன் சோகத்தையே புன்முறுவலாக்கி இன்னுமா நீங்கள் என்று கேட்கிறாள்.
     எல்லாக்கதைகளும் இதுபோல் அருமையாக உள்ளது, ஜெயகாந்தனை யாருக்குத்தான் பிடிக்காது. வாசியுங்கள்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.
ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan ...
நூல் =ஜெயகாந்தன் சிறுகதைகள் 
ஆசிரியர் =த. ஜெயகாந்தன் 
பதிப்பு =நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 
விலை =ரூ 7.50/

1 Comment

  1. என் பி டி தொகுத்த சிறுகதைகள் முழுமையாக ஜெயகாந்தனை வெளிப்படுத்த வில்லையோ என்று கருதுகிறேன்.
    மாறுபட்ட களங்களைக் கொண்டுள்ள 1)கருணையினால் அல்ல, 2)டிரெடில், 3) பிரளயம் மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாசகர்கள் இக்கதைகளையும் தேடிப்பிடித்து வாசிக்கையில் நிச்சயமாக அவரை உணர முடியும்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery