Article

ஜே.டி.பெர்னல் – புரட்சியாளனாகத் திகழ்ந்த அறிவியலாளர் எஸ்.சட்டர்ஜி (தமிழில்: தா.சந்திரகுரு)

Spread the love

ஃப்ரண்ட்லைன், 2001 மே 12 – 25 

ஜே.டி.பெர்னல் (10 மே 1901 – 15 செப்டம்பர் 1971) நூற்றாண்டையொட்டி எழுதப்பட்ட கட்டுரை தன்னுடைய அறிவையும், நுட்பத்தையும் மனித நலனுக்காக மட்டுமே அறிவியலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்புக்கு ஜே.டி.பெர்னலின் வாழ்க்கை சான்றாக இருக்கின்றது. 

ஜே.டி.பெர்னல் (1901-1971)

1940ஆம் ஆண்டு ஆங்கிலேய கிராமப்புறம் ஒன்றில் இருந்த ரயில் நிலையத்தில் இரண்டு ஆண்கள் வந்து இறங்கினர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற அறிவியலாளர்களாக இருந்த அவர்கள் இருவரும், தங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, கைவிடப்பட்ட கொட்டகை ஒன்றைத் தேடி அங்கே வந்திருந்தனர். அந்த ஆய்வைச் செய்வதற்கான பயிற்சியோ அல்லது அனுபவமோ அவர்களிடம் இருக்கவில்லை என்பது மட்டுமல்லாது அதனை நடத்துவதற்குத் தேவையான நிதியும் அவர்களிடம் அப்போது இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் இயற்பியல் ஆய்வாளராக இருந்து உயிரியல் ஆய்வாளராக மாறிய ஜே.டி.பெர்னல், மற்றொருவர் மருத்துவராக இருந்து உடற்கூறியியல் நிபுணராக மாறி பின்னர் விலங்கியல் பூங்காவின் பாதுகாவலராக மாறிய சோலி ஸக்கர்மேன்.

அந்த ஆய்வு அப்போது மிகவும் அவசரமான தேவையாக இருந்தது. அது இரண்டாம் உலகப் போர் தொடங்கி இருந்த நேரம். ரேடார் எதுவும் இல்லாத காலம். ஜெர்மனின் லஃப்ட்வெஃப் விமானப்படைத் தாக்குதல்கள் லண்டனில் பீதியை ஏற்படுத்தி இருந்தன. பல்வேறு அளவிலான குண்டுகளின் சேதத்தை எவ்வாறு அளவிடுவது, குண்டு வெடிப்பின் தாக்கம் தூரத்தைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைக் கண்டறிவதே அவர்களுடைய அந்த பரிசோதனையின் நோக்கமாக இருந்தது. அது உண்மையிலேயே மிகவும் எளிமையான சோதனைதான். காவல்துறையின் அனுமதி பெற்று, குரங்குகள், புறாக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளில் இருந்து வேறுபட்ட தொலைவுகளில் குண்டுகளை வெடிக்கச் செய்த பிறகு, அந்த கூண்டுகளுக்கும், அவற்றில் தங்க வைக்கப்பட்டிருந்த விலங்குகளுக்கும் ஏற்பட்ட சேதங்களை அவர்கள் ஆராய வேண்டும். ஏற்கனவே சேதம் குறித்து பொதுவாக இருந்த அளவுகளை விட மிகவும் குறைவாகவே, அவர்களுடைய ஆய்வுகளில் அளவிடப்பட்ட சேதம் இருந்தது. 

அவர்கள் இருவரும், தங்களுடைய ஆய்விற்கான கினி பன்றிகளாகத் தங்களையே பயன்படுத்திக் கொண்டனர். குண்டுகளை வெடிக்கச் செய்த போது, ​​அவர்கள் இருவரும் கூண்டுகளுக்குள் உட்கார்ந்து கொண்டு, குண்டு வெடிப்பால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற தாக்கம் குறித்த முதல்நிலைத் தரவுகளைச் சேகரித்தனர். அவர்களுடைய இந்த கண்டுபிடிப்பு, பிரிட்டிஷ் குடிமக்களின் மனவுறுதியை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தது. அவர்களுடைய ஆய்வு பாதுகாப்பான தங்குமிடங்களையும், சிவில் பாதுகாப்பு அமைப்புகளையும் வடிவமைப்பதற்கும் உதவியது. குறிப்பாகச் சொல்வதானால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவான தொழிலாள வர்க்கத்திற்கு உதவுவதாக அவர்களுடைய கண்டுபிடிப்பு இருந்தது.

’அறிவியலாளர் ஒருவருக்கு குடிமக்களில் ஒருவராக இருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. மேலும் அவர் மனித நலனுக்காக மட்டுமே தன்னுடைய அறிவைப் பயன்படுத்த வேண்டும்’ என்ற செய்தி அவர்களுடைய பரிசோதனையில் கிடைத்த முடிவுகளில் மட்டுமல்லாது, அவர்கள் நடத்திய அந்த பரிசோதனைக்குள்ளும் மறைந்திருந்தது. பெர்னலின் வாழ்க்கை இவ்வாறான அர்ப்பணிப்புக்குச் சான்றாகவே அமைந்திருந்தது. மிகவும் அரிதான பன்முகத்தன்மை கொண்ட மனிதனாக அவர் இருந்தார். அவரது அறிவார்ந்த செல்வாக்கு அறிவியல் சகோதரத்துவத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அறிவியலில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அமைப்புகளில் இருக்கின்ற கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்கிடையிலான உறவைப் புரிந்து கொள்வதில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். சமூகத்தைப் பொறுத்தவரை, அறிவியலின் செயல்பாடுகள் மற்றும் அது செயல்படுகின்ற சமுதாயத்தின் கட்டமைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான உறவை ஆராய முயன்ற அவர், அனைவருக்கும் அந்த திசையிலேயே பாதை வகுத்துக் கொடுத்தவராகவும் இருந்தார். ’உலகத்தை விளக்குவது மட்டுமே என்று இருந்து விடாமல், இந்த உலகை எவ்வாறு மாற்றுவது என்பதையும் தத்துவஞானிகள் பார்க்க வேண்டும்’ என்ற உலகப்பார்வையை தன்னுடைய மனதில் கொண்டிருந்த பெர்னல், ஏழைகளைச் சுரண்டுவதற்கான சலுகைகளைப் பெற்றிருக்கும் வர்க்கத்தின் கைகளில் கருவியாக ஆகிவிடாமல், அறிவியலின் சமூகச் செயல்பாடுகளை மாற்றி அமைப்பதே அறிவியலாளரின் கடமை என்றே கருதியும் வந்தார்.  

1901ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாள் அயர்லாந்து கத்தோலிக்க குடும்பத்தில் ஜான் டெஸ்மண்ட் பெர்னல் பிறந்தார். அவரது தாய் அமெரிக்கர். தன்னுடைய ஒன்பதாவது வயதிலேயே சுயசரிதை எழுதியது உட்பட, பல விஷயங்களை முயற்சி செய்த படுசுட்டிக் குழந்தையாக அவர் இருந்தார். கருவிகளை உருவாக்குகின்ற திறமை இல்லாத போதும், பல்வேறு பொருட்களை உருவாக்க முயன்றவராகவே அவர் இருந்து வந்தார். ஒருமுறை அவரும், அவரது நண்பரும் எக்ஸ்கதிர் குழாயை வடிவமைக்கும் போது மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகினர். தன்னுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் தொலைநோக்கு பார்வையுடன் புதிய கருவிகளை உருவாக்குவது குறித்து தன்னுடைய கருத்துக்களை பிறருக்கு வழங்கி வந்தார். உடைந்த கடிகாரங்கள், சைக்கிள் டியூப்கள் என்று அதிகம் செலவில்லாத பொருட்களைப் பயன்படுத்தி, அவருடன் பணி புரிந்தவர்கள் புதிய கருவிகளை உருவாக்கினர்.  

இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் சேர்வதற்காக, தன்னுடைய பத்தாவது வயதில் பெர்னல் அயர்லாந்தை விட்டுச் சென்றார். ஐரிஷ் சுதந்திர இயக்கத்தைக் கண்டிருந்த அவர் முதலாம் உலகப் போரால் இங்கிலாந்து சமூக வாழ்க்கையில் கொண்டு வரப்பட்ட துயரத்தையும் கண்டார். 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, பெர்னல் முதன்முறையாக அறிவார்ந்த திருப்தி தனக்கு கிடைத்ததை உணர்ந்தார். அங்கே நடைபெற்ற பல கூட்டங்களில் கலந்து கொண்ட அவர் பல்வேறு மக்களைச் சந்தித்தார். அந்த கூட்டங்களில் மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. மாறாக ராணுவ வீரர்கள், தொழிலாளர்களும் அங்கே இருந்தனர். சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருண்ட பகலும், மனச்சோர்வும் மட்டுமே ஏழைகளுக்காக காத்து நிற்பதைக் கண்டு பெர்னல் ஆச்சரியமடைந்தார். 1919ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அவ்வாறான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது, ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி, புதிதாகப் பிறந்திருந்த சோவியத் ஒன்றியத்தில் நடத்தப்பட்ட சோசலிச ஆய்வுகள் குறித்து தன்னுடைய நண்பர் ஒருவர் கூற பெர்னல் கேள்விப்பட்டிருந்தார். அந்த தகவல் அவருக்கு முன்பாக புதியதோர் உலகைத் திறந்து காட்டியது. தான் கொண்டிருந்த ஐரிஷ் தேசியவாதம் எவ்வளவு குறுகியது என்பதை பெர்னல் அப்போது உணர்ந்தார். ’நான் வெறுத்த அனைத்து விஷயங்களையும் மக்களே துடைத்தெறிந்தனர்… அறிவியல் உலகைக் கொண்டு வருவதாக அது இருந்தது’ என்று கூறுமளவிற்கு அந்த தகவல் அவரை மிகவும் கவர்ந்தது. புதிய சோவியத் சமுதாயத்தின் அடிப்படையாக இருந்த கருத்தியலை, அதாவது மார்க்சிசம்-லெனினிசம் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரை அது வழிநடத்தியது. இதன் மூலம் உலகக் கண்ணோட்டத்தைப் பெற்ற பெர்னல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு படிப்புகளையும் பயின்று அறிவியல் குறித்ததொரு பரந்த பார்வையைப் பெற முயன்றார். தன்னுடைய இறுதிப் பட்டத்திற்காக கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் மற்றும் கனிமவியல் போன்ற பல்வேறு பாடங்களை அவர் படித்தார். அவரிடமிருந்த அதிக அளவிலான கலைக்களஞ்சிய அறிவு அவருக்கு ’முனிவர்’ என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது.

மார்க்சிசத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் பெர்னல் கத்தோலிக்க மதத்தைக் கைவிட்டார். நாத்திகராகவும் கம்யூனிஸ்டாகவும் அவர் தன்னை அறிவித்துக் கொண்டார். அவரின் இந்தச் செயல் அவருடைய குடும்பத்தினருக்குத் தொந்தரவை ஏற்படுத்திக் கொடுத்தது. மீண்டும் கடவுள் மீது நம்பிக்கையை பெர்னலிடம் ஏற்படுத்துகின்ற வகையில் அவருடன் பேசுவதற்காக மதகுரு ஒருவரை பெர்னலின் தந்தை அனுப்பி வைத்தார். ஆனால் பெர்னலின் தந்தையின் முயற்சிக்கு நேர் எதிர்விளைவே ஏற்பட்டது. பெர்னலிடம் பேசச் சென்ற அந்த மதகுரு மனம் மாறி தேவாலயத்தை விட்டே வெளியேறி விட்டார். 

கொஞ்சம் வித்தியாசமான இன்னொரு சந்திப்பும் அப்போது நடைபெற்றது. அந்த இளம் கம்யூனிஸ்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு சில இளைஞர்கள் நினைத்தனர். அவர்கள் தன்னுடைய அறையில் இருந்த பெர்னலை ஒரு நாளிரவில் தாக்க முயற்சித்தனர். பின்னர் அட்மிரலாக இருந்த மவுண்ட்பேட்டனுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட அந்தக் குழுவினருக்கு பெர்னலிடம் இருந்து கடுமையான அடி கிடைத்தது. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள். பெர்னலைத் தாக்க வந்த அந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒரு பிழையைச் செய்து விட்டனர். தாக்க வந்த அவர்கள் சிகரெட் புகைத்துக் கொண்டே வந்தனர். தன்னுடைய அறையில் இருந்த விளக்குகளை பெர்னல் அணைத்து விட்டார். எனவே அவர்களால் பெர்னலைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை எளிதாகப் பார்க்க முடிந்த பெர்னலால். அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஓங்கி குத்து விட முடிந்தது. 

1923வாக்கில், பெர்னலும் அவருடைய மனைவியும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகி இருந்தனர். அவர்கள் இருவரும் இணைந்து 1926 பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களை அணி திரட்டினர். பத்தாண்டுகள் கழித்து அவர் கட்சியின் உறுப்பினர் என்பதைக் கைவிட்ட போதிலும், இறுதிவரை அவர் ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்தார். வெளியில் தெரியாதவாறு கட்சியுடன் அவருக்கிருந்த ஆழமான பிணைப்புகள் இறுதி வரையிலும் தொடர்ந்தன. 

மார்க்சிசத்தை ஏற்றுக் கொண்டதில், பெர்னல் மட்டும் தனியாளாக இருக்கவில்லை. அந்த கேம்பிரிட்ஜ் குழு இன்னும் பிற அறிவுஜீவி அறிவியலாளர்களைக் கொண்டதாக இருந்தது. அந்தக் குழுவில் ஜோசப் நீதாம், ஜே.பி.எஸ்.ஹால்டேன் போன்றவர்களும் இருந்தனர். சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தில் இருந்த ஓபரினைப் போலவே, உயிரின் வேதியியல் பரிணாமக் கோட்பாட்டின், அதாவது உயிர் என்பது உயிரற்ற மூலக்கூறுகளாக இருக்கின்றது என்பது போன்ற முன்னோடி வேலைகளை ஹால்டேன் செய்திருந்தார். அதற்கு மற்றுமொரு பரிமாணத்தை பெர்னல் சேர்த்துக் கொடுத்தார். மூலக்கூறுகளின் வேதியியல் பண்புகளை மட்டும் அல்லாது, இந்த மூலக்கூறுகள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை, அதாவது இந்த மூலக்கூறுகளின் அமைப்பு எவ்வாறு அவற்றின் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும் என்று பெர்னல் கூறினார். 1953ஆம் ஆண்டில் வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டிஆக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலத்தின் (டி.என்.ஏ) கட்டமைப்பைக் கண்டறிந்தது இத்தகைய ஆய்வுகளின் முதல் வெற்றியாக அமைந்தது. அதாவது இருபது ஆண்டுகளில், பெர்னலின் முன்னோடி சிந்தனைகள் உயிரியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் ஆகி விட்டன என்பதையே அது குறித்தது. ’உயிர் குறித்து இருந்து வந்த மர்மம் நீங்கி விட்டது’, ’உயிர் குறித்த பெரும்பாலான மர்மங்கள் நீக்கப்படுவதால், உயிரின் சிக்கலான தன்மையை, அழகைப் பாராட்டுகின்ற தன்மை இன்றைய உயிரியலாளர்களின் மனதில் இருந்து சற்றும் குறையப் போவதில்லை’ என்ற பெர்னலின் கூற்று இப்பொழுது மனித ஜீனோம் வரைபடத்தின் மூலம் படம் பிடிக்கப்பட்டு, நடைமுறையில் குறியீடான படமாக, புதிராக, விடை காணக் கூடிய குறியீடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இயற்பியல் மற்றும் கணிதத்தில் அவரிடம் இருந்த தனித்திறமைக்கான அங்கீகாரத்தை ஒரு மாணவராக பெர்னல் பெற்றிருந்த போதிலும், இறுதியாக அவர் உயிரியல் துறையிலேயே தனது ஆய்வுகளைத் தொடங்கி நடத்தினார். உயிரியல் குறித்த ஆய்வுகளில் ஒரு முக்கியமான கருவியாக எக்ஸ்கதிர் படிக வரைவியலை அவர் உருவாக்கினார். அந்த தொழில்நுட்பமே பிற்காலத்தில் உயிரியல் துறையில் ஏற்பட்ட அளவிட முடியாத வளர்ச்சிக்கும், பெர்னலின் எண்ணற்ற மற்ற பிற அறிவியல் பங்களிப்புகளுக்கும் காரணமாகிப் போனது. 

கணினிகள் இல்லாத காலத்தில், படிகங்களின் கட்டமைப்புகள் பற்றி ஆரம்பகால படிகவரைவியலாளர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அட்டவணைகளைத் தயாரித்தது, பாலியல் தொடர்பான ஹார்மோன்கள், புரதங்கள், வைரஸ்கள் மற்றும் பனிக்கட்டி, வெண்பனி மற்றும் நீரின் பிற வெவ்வேறு திட வடிவங்களின் கட்டமைப்புகள் குறித்த முன்னோடி வேலைகள் ஆகியவை பெர்னலின் குறிப்பிடத்தக்க ஆய்வுகளாக இருந்தன. முதன்முதலாக அவர் திரவ நிலைக்கான வடிவமைப்பை உருவாக்கி கொடுத்தார். கூட்டுப் பொருட்களின் இயற்பியல் குறித்து ஆய்வு செய்தவர்களில் முன்னோடியாகவும் அவர் கருதப்படுகிறார். 

புகழ்பெற்ற உயிரியலாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் பலரும், தங்களுடைய ஆய்வுகளின் இறுதிக் கட்டங்களில் பெர்னலின் நுண்ணறிவே தங்களுடைய வெற்றிக்கு காரணமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவரது மாணவியான டோரதி ஹோட்கின், தனக்கு அளிக்கப்பட்ட நோபல் விருதை தனியாக தான் மட்டும் பெறுவதற்குப் பதிலாக, பெர்னலுடன் இணைந்தே பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பெர்னல் அளித்த உள்ளீடுகளுக்கு பெருமளவில் கடமைப்பட்டவையாகவே, நோபல் விருதைப் பெற்ற ஹீமோகுளோபின் மற்றும் மயோகுளோபின் கட்டமைப்பு குறித்த மேக்ஸ் பெருட்ஸ் மற்றும் ஜான் கெண்ட்ரூ ஆகியோரின் ஆய்வுகள், எலெக்ட்ரான் நுண்ணோக்கி கொண்டு ஆரோன் க்ளக் செய்த ஆய்வுகள் இருக்கின்றன. ஆனாலும் பெர்னல் தனக்கென்று நோபல் விருதைப் பெறவே இல்லை. 

நோபல் விருது பெற்ற டோரதி ஹோட்கினுடன் பெர்னல் (பெர்னலின் வலதுபுறம்)

பெர்னலும் அவருடன் பணியாற்றியவர்களும், உயிரியலின் மீது மட்டுமல்லாது, உண்மையில் உயிரின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். ஆய்வகத்திற்கு வெளியே நடந்த நிகழ்வுகள், ஆய்வகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த முழு கவனத்தையும் சிதறடித்தன. உலகளாவிய இந்த பிரச்சினைகளின் காரணமாகவே, கேம்பிரிட்ஜில் இருந்த நாட்களில் பெர்னல் ’போருக்கெதிரான கேம்பிரிட்ஜ் அறிவியலாளர்கள் குழு’ என்ற குழுவை உருவாக்கினார். 1930களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, ஹிட்லரின் ஜெர்மனியில் நாஜிக்கள் உருவாக்கிய பேரச்சம், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், சீனா மீது ஜப்பானிய படையெடுப்பு, பிரிட்டிஷ் காலனிகளில் நடைபெற்ற சுதந்திர இயக்கங்கள் போன்ற பிரச்சனைகள் மீது எழுந்த சிக்கல்களின் மீது அந்தக் குழு தனது கவனத்தைச் செலுத்தியது. இந்த சோகமான சூழலில், சோவியத் யூனியன் மட்டுமே நம்பிக்கைக்கான ஒளிதருகின்ற தீப்பந்தமாக இருந்தது. நிக்கோலாய் இவானோவிச் புஹாரின் 1931இல் இங்கிலாந்திற்கு ஒரு குழுவை வழிநடத்தி வந்த வேளையில், பெர்னல் சோவியத் அறிவியலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். 

தங்களுக்கிடையே நடைபெற்ற விவாதங்களின் மூலம் இரண்டு அவசரத் தேவைகள் இருப்பதை அந்த அறிவியலாளர்கள் உணர்ந்து கொண்டனர். சாதாரண குடிமக்களிடம் அறிவியல் குறித்த, குறிப்பாக அவர்களுடைய வாழ்க்கைக்கு அறிவியல் எவ்வாறு உதவும் என்பது குறித்தும், அழிவுகரமான நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் போது தீங்கு விளைவிக்கின்ற வகையில் அறிவியல் கொண்டிருக்கின்ற சாத்தியங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றியும், சமூகப் பிரச்சினைகள் குறித்து அறிவியலாளர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்தும் இன்னும் அதிகமான கல்வி தேவைப்படுகிறது என்று விரைவிலேயே அவர்களால் உணரப்பட்டது.

இத்தகைய சமூக கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், பெர்னலின் பகுப்பாய்வுகளைத் தொகுத்து ’அறிவியலுக்கான சமூகப் பொறுப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது, 1939ஆம் ஆண்டில் வெளியான போது, அந்தப் புத்தகம் மிகுந்த பரபரப்பை உருவாக்கியது. அந்தப் புத்தகத்தில், சோவியத் ஒன்றியத்தில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியால் ஏற்பட்ட விடுதலையை பெர்னல் பகுப்பாய்வு செய்திருந்தார். முதலாளித்துவ அமைப்பு முறையின் சுரண்டல் தன்மையை அறிவியல் வளர்ச்சிக்கான தடையாகவே அவர் கருதி வந்தார். காலனிய இந்தியாவில் இருந்த அறிவியல் நிலைமை குறித்து அந்தப் புத்தகத்தில் சுருக்கமாக பெர்னல் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கள் இந்திய அறிவியலில் எப்போதாவது எழுகின்ற அறிவார்ந்த தன்மை, நம்பகத்தன்மையற்ற இந்திய அறிவியல் குறித்தவையாக இருந்தன. சுதந்திரம் மற்றும் சுயசார்புக்காக போராடிய அரசியல் போராளிகளே இந்திய அறிவியல் வளர்ச்சிக்குப் பின்னால் இருந்தனரே தவிர, அறிவியலாளர்கள் யாரும் இருக்கவில்லை என்ற கூர்மையான கருத்தையும் பெர்னல் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். 

அந்தப் புத்தகத்தின் பெரும்பகுதி நாஜி ஜெர்மனியில் இருந்த அறிவியல் ஆய்வுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்பட்ட அறிவியலானது தொழிற்துறையுடன் குறிப்பாக வேதித்தொழில்துறைகளுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டிருந்தது. அதன் விளைவாக ராணுவவாதத்திற்கு உதவி, கல்வித் துறைக்குள் பாசிசக் கருத்தியல் நுழைவதற்கு அது வழிகோலியது. ஹிட்லர் கல்வியைத் தவிர்ப்பதற்கான மற்றொரு காரணமாக, யூதர்கள் அல்லாத அறிவுஜீவிகளின் மனநிறைவும்கூட இருந்தது. யூதர்களை கல்வி நிலையங்களில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்களில் பலரும் கருதியதாகவே பெர்னல் கருதினார். 

இனத்தூய்மை, தேசியப் பெருமை, சமாதானம் என்பதை போருக்கான ஆயத்தம் என்று பார்த்தது, தேசிய கல்விக்கான உயர் பள்ளியாக ராணுவத்தைக் கண்டது போன்று, பாசிசத்தின் கீழ் மனிதநேய விழுமியங்களை முற்றிலும் மீளமைப்பதற்கான கருவியாக அறிவியல் மாறியிருந்தது. ’அமைதியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் அநீதிக்கு கட்டுப்பட்டு அமைதியாகவே வாழ வேண்டும்’ என்று கற்றுக் கொடுக்கிற கருவியாக அது ஆகிப் போனது. ஆயினும், பிரெஞ்சு அறிவுஜீவிகளால் நம்பிக்கை ஊட்டப்பட்டது. அவர்கள் பிரெஞ்சு பாசிசத்தை உறுதியாக எதிர்த்து நின்றனர். அவர்கள் பாசிச-எதிர்ப்பு பொதுமக்கள் மேடைக்கு ஆதரவாக மக்களுடைய கருத்துக்களை அணி திரட்டினர். பிரெஞ்சு கம்யூனிஸ்டுகள் முதுகெலும்பாக இருந்து செயல்பட்ட அந்த அமைப்பிற்குப் பின்னால் மக்களைத் திரட்டுகின்ற முக்கிய பிரமுகர்களாக பிரடெரிக் ஜோலியட், ஐரீன் ஜோலியட் கியூரி, லாங்கேவின், பாப்லோ பிக்காசோ, ஜீன் பால் சாத்ரே போன்ற பிரபலமான அறிஞர்கள் இருந்தனர். 

ஹிட்லர் தலைமையிலான மூன்றாவது பேரரசு உலக யுத்தத்தை கட்டவிழ்த்து விடும் என்ற முடிவிற்கு வந்த பெர்னல், போர் தயாரிப்புகளுக்காக பிரிட்டிஷ் அறிவியலாளர்களை அணி திரட்டினார். பெர்னல் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தபோதிலும், அவரிடமிருந்த இத்தகைய ஈடுபாடே, பெர்னல் மற்றும் அவரது நண்பர்களை அரசாங்கப் பாதுகாப்பு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதற்கு உதவி செய்தது. மிகவும் உறுதியான பாசிச எதிர்ப்பாளர்கள் என்பதால், நிச்சயமாக கம்யூனிஸ்டுகளை விலக்கி வைத்திருக்க முடியாது. இந்த போர் காலத்தில் செயல்பாட்டு ஆய்வுக் கருத்துக்களைப் பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவராக இருந்த பெர்னல் நேச நாடுகளின் படை நார்மண்டியில் வந்திறங்குவதில் நேரடியாக ஈடுபட்டார். பல்வேறு காற்றழுத்த நிலைகளில் நார்மண்டி கடற்கரையில் ஏற்படுகின்ற அலைகளின் வடிவங்களை அறிந்து கொள்ளும் வகையில் வான்வழி புகைப்படங்கள் எடுப்பதற்கான வழிமுறைகளை வடிவமைத்துக் கொடுத்தது அவருடைய சிறப்பான பங்களிப்பாக இருந்தது. இந்த அலை வடிவங்களிலிருந்து கடற்கரைகளின் சாய்மானங்களை நிர்ணயித்துக் கொள்ள முடிந்தது, அந்த கடற்கரைகள் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை தாங்கி நிற்க முடியுமா என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு உதவியது.

லெனின் அமைதி விருது பெற்ற பெர்னல் – மாஸ்கோவில் 1953ஆம் ஆண்டு

இரண்டாம் உலகப் போரின் முடிவில், பனிப்போர் தொடங்கியவுடன் இந்த பாசிச எதிர்ப்பு கூட்டணி சீர்குலைவுக்குள்ளானது. பிரான்சில் இருந்த அவரது நண்பரான ஜோலியட்டைப் போன்றே பெர்னலுக்கும் அரசு நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் போனது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுவீச்சு, தங்கள் அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் அழிவுகரமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு அறிவியலாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமைக்கு கொண்டு சென்றது. 

பனிப்போர் ஏற்படுத்திய சேதங்களைக் கட்டுப்படுத்துகின்ற வகையில், அறிவியல் தொழிலாளர்கள் சங்கம், பக்வாஷ் மாநாடு, உலக அமைதிக் குழு போன்ற பல அமைப்புகளை ஏற்படுத்துவதில் பெர்னல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமாதானத்திற்கான இந்த இயக்கத்தில் சாஹா, டி.டி.கோசம்பி, எஸ்.எஸ்.சோகே போன்ற இந்திய விஞ்ஞானிகள் தலைமை வகித்தனர். புதிதாக சுதந்திரமடைந்த காலனிய நாடுகளுக்கான அறிவியலைத் திட்டமிடுவதற்கென்று பிரிட்டிஷ் அறிவியலாளர்களை பெர்னல் ஒருங்கிணைத்தார். யுனெஸ்கோ அமைப்பு உருவாவதற்கான ஆதரவையும் அவர் திரட்டினார்.

1950களில் வெளியான ’வரலாற்றில் அறிவியல்’ என்ற பெர்னலின் அளப்பரிய படைப்பை விவாதிப்பதற்கென்று சோவியத் அறிவியல் அகாடமி தன்னுடைய முழு அமர்வையும் அர்ப்பணித்தது. அந்தப் புத்தகம் வெறுமனே காலவரிசைப்படியான அறிவியல் குறித்த வரலாற்று நூலாக இருக்கவில்லை. வரலாற்றில் அறிவியலின் பங்கை ஆய்வு செய்வதற்கான வழிமுறையை அது வழங்கியது. ’மனிதத்திறன் இன்மையால் அறிவியல் என்பது ஒருபோதும் தோல்வியடையாது, மாறாக அறிவியலின் திறனை சமூக அமைப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் திறன் குறைவாக இருக்கும் போதே அது தோல்வியடையும்’ என்று பெர்னல் கூறினார். ஏகாதிபத்திய அமைப்பானது, வளர்ச்சியின்மையை நீடித்திருக்கச் செய்யும் வகையில் செயல்படுவதாலேயே இவ்வாறான தோல்வி ஏற்படுகிறது. அதன் விளைவாக ஒட்டுமொத்த மனிதகுலமும் அறிவியல் முன்னேற்றத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற்படுகின்ற அழிவே, மனிதகுலம், அறிவியல் ஆகியவற்றின் முன்னேற்றத்தை நோக்கி பெரும் மனிதவளத்தை வெளிப்படுத்துவதற்கான காரணமாக இருக்கும் என்ற கருத்தை பெர்னல் கொண்டிருந்தார். 

இத்தகைய நம்பிக்கை சோசலிச அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் இருப்பதாக பெர்னலின் கருத்து இருந்தது. சோசலிசத்தின் கீழ் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தை அவர் மிகவும் விரிவாக ஆராய்ந்தார். ஒரு சிலரைப் பொறுத்த வரை, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட சோசலிசத்தின் வீழ்ச்சியானது சோசலிச சித்தாந்தத்தின் அழிவு என்பதைக் குறிப்பதாக இருந்தது. ஆயினும், இவ்வாறான சோசலிச சமுதாயங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கும் அறிவியல் முன்னேற்றத்தைப் போல வேறெந்தவொரு சமூகத்திலும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையும், பெருமளவிலான மனிதகுலத்தின் சேவைக்கென்று அறிவியலை இவ்வாறு எந்தவொரு சமூகமும் முன்வைத்தது கிடையாது என்பதையும் வரலாற்றாய்வில் தீவிரமாக இயங்குகிற எந்தவொரு மாணவரும் நிச்சயம் ஒப்புக் கொள்வார். சீன மக்கள் குடியரசு உள்ளிட்ட எந்தவொரு சமுதாயத்திலும் அறிவியலின் எதிர்காலம் என்பது அணு ஆயுதப் போர் உள்ளிட்ட போரின் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், அந்த சமுதாயங்கள் கொண்டுள்ள திறன் மூலமாக சோசலிச முகாம்களுக்கிடையே மோதல்களைத் தவிர்ப்பது. மற்றும் அவற்றிடம் உள்ள உள்நிலைத்தன்மை ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிரது என்ற முடிவிற்கு பெர்னல் வந்திருந்தார். கிழக்கு ஐரோப்பாவில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த முடிவு மிகவும் தீர்க்கதரிசனமான முடிவாக இருப்பதாகவே தோன்றுகிறது. 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாக, 1971 செப்டம்பர் 15 அன்று பெர்னல் மரணமடைந்தார். 1950களில் இருந்தே சோவியத் ஒன்றியத்திற்கு வருகை புரியும் வழக்கமான வருகையாளராக இருந்த அவர், ஸ்டாலின் காலம் மற்றும் அதற்கு அடுத்தடுத்த காலங்களில் இருந்த குறைபாடுகளை நிச்சயம் கவனித்திருப்பார். ஸ்டாலினையோ, அல்லது அவருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்த தலைமையையோ அவர் ஒருபோதும் கண்டிக்கவில்லை என்பதால், அவருடைய மதிப்பீடுகள் என்ன என்பதைத் தெளிவாகக் கூற இயலவில்லை. சூஎன்லாய், குருசேவ், மாசேதுங், குவாமே நிக்ரூமா, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நல்லதொரு உறவை பெர்னல் பேணி வந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டிருந்த அறிஞர்களான பிக்காசோ, நாசிம் ஹிக்மெட், பால் ரோப்சன் மற்றும் பாப்லோ நெருடா போன்றவர்களுடன் நெருக்கமான தொடர்பை அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான முன்னணி ஒன்றை உருவாக்குவதில் அவர் உறுதியாக இருந்ததையே அவருடைய இந்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. 

இந்தியாவுடன் பெர்னலுக்கு இருந்த நெருக்கமான உறவு குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. இந்தியாவிற்கு பலமுறை அவர் வருகை புரிந்துள்ளார். அவரது நண்பரான பிளாக்கெட், இந்தியாவிற்கு பல முறை அறிவியல் ஆலோசகராக வந்திருக்கிறார். இந்திய மாணவர்கள் பலரும் பெர்னலின் மாணவியான டோரதி ஹோட்கினுடன் இணைந்து பணியாற்றி வந்தனர். அவர்களில் பலரும் பின்னர் பெங்களூரில் வேலை செய்து வந்தனர். பெர்னலின் நண்பரான ஜே.பி.எஸ்.ஹால்டேன் 1950களில் இந்தியாவிற்கு வந்து குடியேறி பின்னர் இந்திய குடிமகன் ஆகியிருந்தார். 

இந்திய அறிவியலாளர்கள் இரண்டு காரணங்களுக்காக, பெர்னலுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். போருக்குப் பிந்தைய காலத்தில் புரதங்களின் கட்டமைப்பு குறித்து தீர்வு காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த மிகப்பெரிய இந்திய அறிவியலாளரான ஜிஎன்ஆர் என்று அழைக்கப்பட்ட ஜி.என்.ராமச்சந்திரனின் கவனத்தை ஈர்த்ததில் பெர்னலின் பங்கு மிக முக்கியமானது என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் இருவரும் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சந்தித்த போது, கொலாஜன் என்ற புரதத்தின் கட்டமைப்பு குறித்து ஜிஎன்ஆரிடம் சில முக்கியமான தகவல்களை பெர்னல் தெரிவித்தார். கொலாஜன் புரதத்தின் மாதிரிகள் எங்கே கிடைக்கும் என்பதே அப்போது ஜிஎன்ஆருக்கு இருந்த பிரச்சனையாக இருந்து வந்தது. உங்களுக்கு மிக அருகமையில் இருக்கின்ற சிஎல்ஆர்ஐயில் ஒருவேளை கொலாஜன் கிடைக்கக் கூடும் என்ற பெர்னலின் பரிந்துரை உண்மையாகிப் போனது. சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தையே பெர்னல் அப்போது குறிப்பிட்டிருந்தார். அதுவே கொலாஜன் கட்டமைப்பு குறித்த ஜிஎன்ஆரின் ஆய்வுகளுக்கு வழிவகுத்தது என்பதால். அந்த ஆய்வில் பெர்னல் மிகப்பெரிய வினையூக்கியாக இருந்தார் என்பது புலப்படுகிறது. 

1950இல் புனேவில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸின் போது, டி.டி.கோசம்பிக்கு இந்திய அறிவியல் கழகத்தின் ஏ.ஆர்.வாசுதேவ்மூர்த்தியை பெர்னல் அறிமுகம் செய்து வைத்தார். தேவையைக் கண்டறிவதாக அறிவியல் அறிவு இருப்பதாக கோசம்பி அறிவியல் பற்றி குறிப்பிட்டிருந்ததை தன்னுடைய ’வரலாற்றில் அறிவியல்’ என்ற புத்தகத்தில் பெர்னல் பயன்படுத்தி இருக்கிறார். ’குடும்பம், தனியார் சொத்து, அரசு’ என்ற ஏங்கல்ஸின் புத்தகத்தின் அடிப்படையில் இந்திய வரலாற்றை தான் ஆய்வு செய்ய விரும்புவதாக வாசுதேவ்மூர்த்தியிடம் கோசம்பி கூறியிருக்கிறார். இந்த வழியிலேயே பெங்களூரில் இருந்த அறிவியல் சமூகத்துடன் கோசம்பியின் ஒருங்கிணைப்பு தொடங்கியது. அறிவியலின் சமூக செயல்பாடுகள், பண்டைய இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் பற்றிய உற்சாகம் மிகுந்த விவாதங்களில் அவர்கள் ஈடுபடும் வகையில் அவர் ஊக்கப்படுத்தி வந்தார்.

மனிதகுலத்திற்கு அறிவியல் அளித்திருக்கும் வாக்குறுதியை பெர்னலின் பிற்கால எழுத்துக்களில் காணலாம். இயற்பியல் அறிவியலில் உருவான நெருக்கடியினால் அறிவியலில் தூண்டி விடப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் புரட்சியானது, ’வேலை எதுவும் செய்யாமலே, ஏராளமான உணவைப் பெறுகின்ற வாழ்க்கை’ குறித்து கோடீஸ்வரர்கள் மற்றும் இளவரசர்களிடம் மட்டுமல்லாமல், உலகின் அனைத்து குடிமக்களிடமும் இருந்த மனிதகுலத்தின் பெருங்கனவிற்கு நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது. ஆனால் அதனை அடைவதற்கு போர் இல்லாத உலகத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டியதிருந்தது. முதலாளித்துவம் மற்றும் சோசலிசத்தின் ஒப்பீட்டளவிலான நன்மைகளைப் பற்றிய கருத்து மோதல்கள் இருக்கலாம் என்றாலும், ஒருபோதும் அவை ஆயுத மோதல்களினால் தீர்க்கப்பட வேண்டியவை அல்ல.

இருபதாம் நூற்றாண்டு, அறிவியல் என்பது ’கவர்ந்திழுக்கும் நோக்கம்’ கொண்டதாக இருந்த நிலைமையில் இருந்து, ஏகபோக தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கங்கள் போன்ற நிதி வழங்குகின்ற முகமைகளுக்கு கீழ்ப்படிந்து ’அறிவியல் தொழிலாளிகளின்’ செயல்பாடுகள் இருக்கின்ற வகையில் ஊதியம் பெறுகின்ற தொழிலாக மாறியிருப்பதை கண்டுள்ளது. அறிவை அனைவரும் சமமாகப் பெறுகின்ற உரிமையானது, ’அறிவியல் தொழிலாளிகள்’ உட்பட அனைத்து உழைக்கும் மக்களிடமும் அறிவியலும், அதன் நுட்பமும் சென்றடைய வேண்டிய ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கின்றது. அறிவு என்ற பழத்தை ருசிப்பதே இந்த உலகிற்கான சொர்க்கம் என்ற பார்வையை மனிதனுக்கு வழங்குவதாக இருபதாம் நூற்றாண்டின் ஜனநாயகப் புரட்சிகள் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு நடைமுறைச் செயல்களுக்கான வழிகாட்டியாக விளங்கிய சமுதாய அறிவியல் மிகுந்த நனவுடனான வரலாற்றை உருவாக்க மனிதனுக்கு உதவியிருக்கிறது. மனிதகுலத்தின் உண்மையான வரலாறு, உண்மையில் இதிலிருந்தே தொடங்குவதாக இருக்கிறது. 

 

https://frontline.thehindu.com/other/article30250584.ece

நன்றி: ஃப்ரண்ட்லைன் இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

1 Comment

  1. “பெர்னல்” ஒரு மிக்ச் சிறந்த அறிவியலாளராக இருந்தாலும் கூட, சாமானியர்களுக்கான நலன் மீது அக்கறை கொண்டவராகவும் எளிதில் எல்லோராலும் அனுகக்கூடியவராகவும் இருந்திருக்கிறார். அறிவியலை, சோசலிசம் மற்றும் ஏகாதிபத்தியம் கையாண்ட விதம் குறித்த அவரது குறிப்புகள் தற்பொழுதுள்ள நிலையுடன் ஒத்துப் போவதை, கட்டுரை வாசிப்பவரை உணரச்செய்யும் என்பதில் ஐயமில்லை. சென்னையிலுள்ள தோல்தொழிற்சாலையை அவர் குறிப்பிட்ட விதம் அவருக்கிருந்த உலக ஞானத்தை ஆச்சரியத்துடன் வெளிப்படுத்துகிறது.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery