Poetry

ஜே. பிரோஸ்கான் கவிதைகள்!!

Spread the love

ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர் 

***********************************

பருகி முடித்த ஒரு குவளை

பழ ரசத்திலிருந்து

தனியாக பிரித்தறிந்த

புத்தி ததும்பலை

அந்த இரவு வாசித்துக்  கொண்டிருந்தது.

இசையால் நிறைந்த ஒவ்வொரு

ஆதி உம்மத்தும்

தத்தமது சந்தோசங்களை

பகிர்ந்தளித்துக் குதூகலித்துக் கொள்கிறது.

மது நிரம்பி வழியும்

ஆண் தேவதைகள்

ஆளுக்காள் நடன மாதுகளை

ரப்பான் இசைப்பது போல்

மெல்லமாக வருடி ருசிக்கிறார்கள்.

ஆட்டமாவு பெரும் ரொட்டிகளும்

தடை செய்யப்பட்ட மிருக மச்சமுமென

விருந்தளிப்பு விழா நடந்தேறுகிறது.

அவ் ஊரின் எதிர் வாசிகள்

அவசர அவசரமாக

ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்

ஊர் எல்லையில் பதாதைகளை.

இங்கே மனிதர்கள் வாழுகிறார்கள் ஜாக்கிரதையென.

மேய்ச்சலுக்கேனும் ஆட்டு மந்தைகள்

அவ்வூரை நெருங்கியதில்லை.

கறி இறைச்சிகளாக

செல்வதை விடுத்துமென

ஆட்டிடையனொருவனின்

அரேபிய கதையொன்று முடிகிறது.

நியதி

**********

பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக

தீர்ந்து கொண்டிருந்தது.

அறை முழுதும் அழுகை சப்தம்

மறைத்துச் சுற்றப்பட்ட உடல்

திறந்த முகம்

இறுதிப் பார்வைக்காக

லைன் கட்டி நிற்கின்றவர்களின்

உள்ளத்திலிருந்து இப்போது

மரணம்

ஒரு பறவையாய்

ரெக்கை விரித்து

பறக்கத் தொடங்கின.

வலியை மறைதலாக்கும் புன்னகை

******************************************************

ஒரு பிரசவத்தின்

முன் அலறலுக்கும் வலிகளுக்கும்.

பின்னரான

குதூகலத்துக்கும் இடையில்,

நீ அழுகிறாய்.

உன் அழுகையில் தொடங்கிய

எம் புன்னகை

நேற்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

நீயும் நாங்களுமாக இப்போது

புன்னகைக்கிறோம்.

தம்பி உன் பிரதியாகிறான்.

கிளி என்பது…

******************

மனசைப் பிறாண்டும்

கடுவன் பூனையொன்று

தனது நீலக் கண்களை

அகல விரித்து

அந்த இருளடைந்த பொழுதில்

என் இருப்பிடம் வந்து சேர்ந்திருக்க

வேண்டும்.

எனது இருக்கை தனிமைப்படுத்தப்

பட்டிருக்கும் போது

அது தனது கள்ளத் தனத்தை

செய்திருக்க வேண்டும்.

மூன்றாம் சாமத்துக்குப் பின் அது

எனது இருப்பிடத்துக்கு நாற்பது மீட்டர்

தூரத்தில் தூங்கி இருப்பதை

சிலர் கண்டதாக சொல்லிச் சென்றார்கள்.

நான் கையில் அறுவாவுடன்

கோபமாகப் பூனையை நோக்கிச்

செல்கிறேன்.

இடையில் பழக் கடையில்

எனது கிளி கடைக்காரருடன்

உரையாடிக் கொண்டிருக்கிறதென்பது

வெறும் கற்பனை.

மீதமாகிய இரவில் மழையும் நீயும்

******************************************************

மழை என்னை குளிரால்

விறைப்படையச் செய்திருந்தது.

நீ அருகில் வந்து

விடும் மூச்சிக் காற்றின் சூட்டில்

மெது மெதுவாக விடுபடுகிறேன்

விறைப்பிலிருந்து.

அருந்துவதற்கென கையிலெடுத்து

வந்த தேநீர் கோப்பையின்

ஆவி மேலும்

உன் வாசத்தினைப் பறித்து

எனது உடல் முழுதும்

பூசிச் செல்கிறது.

மெது மெதுப்பான சூட்டில்

அருந்தும் அந்தத் தேநீரின்

சுவைக்கு ஒப்பானது

உனது அரவணைப்பு என்கிறேன்.

மழை இன்னும் விடாது பெய்கிறது

நான் தேநீரை அருந்தி முடிக்கிறேன்

நீயும் மழையும்

இரவும் மீதமாக.

..

ஜே.பிரோஸ்கான்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery