Book Review

புத்தக அறிமுகம்: பாண்டி சுந்தர முருகன் ஆய்வு நூலான “இருபதாம் நூற்றாண்டு தமிழ் பெண் கவிஞர்கள்” –  சுப்ரபாரதி மணியன்

Spread the love

 

கல்வித்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகள் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றி வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து மாறுபட்டு அந்த ஆய்வாளர் படைப்பாளியாகவும் இருக்கிற பட்சத்தில் அந்த ஆய்வு படைப்பு சார்ந்த நோக்கத்தோடு ஒரு புதிய பரிமாணத்தை அடைவதை நாம் காணலாம். அந்த வகையில் புதுப்பரிமாணத்தை இந்த நூலும் கொண்டிருக்கிறது .

சுந்தர முருகன் சார்ந்த இளமைக்காலம், ஆசிரியப்பணி சமீபத்திய மொழிபெயர்ப்பு துறைப் பணி போன்றவற்றை அடிநாதமாகப் பலர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். எல்லாம் தாண்டி அவரின் ஆரம்பக்கால வாழ்க்கையும் கல்வியும் இந்த ஆய்வின் அடிப்படையாக அமைந்து சமூகவியல் நோக்கிலான ஒரு ஆய்வாக இதை முன் நிறுத்துகிறது என்று சொல்லலாம் .

அந்த வகையில்தான் இவர் பெண்ணியம் சார்ந்த கருதுகோளை முதன்மைப் படுத்துகிறார் .அந்தப்  பெண்ணியம் தேடும் மிதவாதம் தீவிரவாதம் சமதர்மமும் தலித்தியமும் எப்படி ஊடு பாவுமாய் பெண்களின்  கவிதைப்படைப்புகளில் இணைந்திருக்கின்றன என்று சொல்கிறார் .அதற்காய் அவர் சுமார் 30 பெண் கவிஞர்களை பல்வேறு காலகட்டங்களிலிருந்து எடுக்கிறார் .அதற்கு உதாரணங்களாகப் புதுவை மீனாட்சி, சுகந்தி சுப்ரமணியன் முதற்கொண்டு வெண்ணிலா சுகிர்த ராணி வரை பலரை பல்வேறு நோக்குடன் கற்றுக்கொண்டு  சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கிலும் என .

பெண் உடல்  பாடுபொருளாக வீச்சுடன் இருப்பதைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார். தேசத்தைப் பெண் உடலாகப் பார்த்தல், கொச்சைப்படுத்துதல், மொழி அரசியலில் ஒற்றை கலாச்சார ஆதிக்கம், நவீன மனிதனால் உயிரினங்களுக்கு  ஆபத்து, அழியும் மொழிகளை வைத்துச் சூதாடும் அரசியல், மொழி நீக்கம், கலாச்சார நீக்கம், அந்நியமாதல் பெண்களின் உழைப்பிலும் அந்நிய ஆதிக்கத்திலும் இருந்து வருவது போன்றவற்றை  அங்கங்கே குறிப்பிடுகிறார். இரட்டைக்காலனிய ஆதிக்க முறையில் பெண்கள் அவதிப்படுவது பாடுபொருளாகியிருக்கும் கவிதைகளைச் சுட்டுகிறார்.. ஆண் ஆதிக்கம், காலணி ஆதிக்கம், ஜாதி சார்ந்த ஆதிக்கங்களால் பெண்மை சிதைந்து வெளிறியிருப்பதையும்  முறையான மேற்கோள்களால் சரியாகச் சுட்டுகிறார்.

Image

பெண்கள்  இலக்கிய தளத்தில் இயங்காமலிருந்த சூழல், .குடும்பச்சூழல் அவர்களுக்கு  இலக்கிய உலகம் தராத அங்கீகாரம் ,பிறகு இவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் தங்களின் தீவிரமான பங்களிப்பைச் செய்தது போன்றவற்றை வகைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் கூற்று இயற்கையின் அடிப்படையில் எப்படி பொருத்தமாக இருக்கிறது. அதைத் தாண்டி பெண்கள் இன்றைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது பற்றி பல்வேறு படைப்புகள் மூலமாகச் சொல்கிறார்.

தன் ஆய்வில் அவர் எடுத்துக் கொண்ட பெண் கவிஞர்கள் உடைய படைப்புகள் பற்றிய பட்டியல்கள்,வேலைநிலை பற்றிய விவரங்கள், அவர்களின் குடும்பச்சூழல், பரிசு பெற்ற சூழல் போன்றவை உட்படப் பல முக்கிய தகவல்களைக் கவித்துவம் தாண்டி முன்வைக்கிறார் ,இதைத்தவிர தமிழ்ச்சூழலில் தடம் பதித்த பல பெண் தமிழ் கவிஞர்களை அறிமுகம் என்ற அளவில் அடையாளம் காட்டுகிறார் ,அதற்கு உதாரணமாய் மூத்த மதுரை  நளினி தேவி முதல் இளையதிலகம் திருப்பூர் அம்பிகா குமரன் வரை அவர் பட்டியலிட்டுள்ளார் . இவ்வகை ஆய்வுகளில் எளிமையான குரலைக் கொண்டவர்கள் நிராகரிக்கப்பட்ட சூழலைத் தவிர்த்துவிட்டு ஜனநாயகத் தன்மையோடு அவர்களையும் இந்த பட்டியலுக்குள் கொண்டுவந்து காட்டியிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.

கல்வித்துறை சார்ந்த அணுகுமுறை மட்டுமில்லாமல் கவிதை படைப்பாக்க முறையிலும் வெற்றி கண்ட பல பெண் படைப்பாளிகளை இந்த தொகுப்பு ஆய்வு முறையில் முன்வைக்கிறது

( ரூபாய் 300, வசந்தா பதிப்பகம், சென்னை வெளியீடு)

 

1 Comment

 1. நன்றி சுப்ரபாரதிமணியன் ஐயா

  மிகச் சிறந்த நூல் விமர்சனமாகத் திகழ்கிறது.
  நூலை
  ஆழமாக வாசித்திருக்கிறீர்கள் அருமையாக திறனாய்வு செய்து இருக்கிறீர்கள்.
  சமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும் ஐயா..
  நன்றியும் அன்பும் ஐயா

  முனைவர் சுந்தர முருகன்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery