Article

தமிழ்நாட்டில் நீர்ப்பாசனம்: கோவிட்-19 காலத்திற்கு முன்பும் பின்பும் – பேரா.கி. சிவசுப்பிரமணியன்

Spread the love

 

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கோவிட் -19 நிலைமைகளை முன்னிட்டு தொடராகப் பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதில் நீர்ப்பாசனம் குறித்த இந்த கட்டுரையைத் தமிழில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியைப் பொறுத்தவரை, கோவிட்-19  நோய்த் தொற்று நிலவும் இக்காலத்தில் பின்வரும் உள்ளீடுகளை, அவற்றில் சில ஏற்கெனவே செயல்பாட்டில் இருப்பினும் சரியான முறையில் செயல்படுத்தினால் அது உண்மையில் லாபகர பொருளாதாரமாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை.

கோவிட் -19 க்கு முன் விவசாயத் துறையில் போக்குகள்

தமிழ்நாட்டின், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு காலப்போக்கில் படிப்படியாக குறைந்து வருகிறது. இது 1970ல் 35% ஆகவும், 2000-இல் 17%, 2011-இல் 14.5% ஆகவும் குறைந்தது. அது மேலும் குறைந்து  2016 ல் 11.5% ஆனது. (பொருளாதார மற்றும் செயலாக்க ஆராய்ச்சித் துறை, 2011-12 முதல் 2013-14; சிவசுப்பிரமணியன், 2016: 4; புள்ளிவிவரக் கையேடு தமிழ் நாடு 2018: 581). எனவே, விவசாயத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கு ஒரு பெரும் உந்துவிசை, குறைந்தது ஐந்து வருடங்களுக்கு, தேவைப்படுகிறது. 

விவசாயம் செழிப்பதும், சிறந்த பயிர் சாகுபடியைக் கடைபிடிப்பதும், கிடைக்கக்கூடிய நீர்ப்பாசன ஆதாரங்களின் அளவைப் பொறுத்தது. தமிழ்நாட்டில், தற்போது பத்து லட்சம் (ஒரு மில்லியன்) ஹெக்டேருக்கு சற்று அதிகமாக இருக்கும் நிலநீர் பாசனத்தை (surface irrigation) அவற்றின் சாத்தியமான உச்ச வரம்பான சுமார் இரண்டு மில்லியன் ஹெக்டேர்களாக உயர்த்துவதற்கு ஆறுகள் சார்ந்த கால்வாய்ப் பாசனம் மற்றும் ஏரிகள் சார்ந்த நீர்ப்பாசன முறைகளைப் புதுப்பிப்பதோடு, அதனை அதிகரிப்பதும் இன்றியமையாத இலக்காக இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டின் பல்வேறு நீர்ப்பாசன ஆதாரங்களின் தற்போதைய நிலை என்ன? 

கால்வாய்ப் பாசனம்

Irrigation in India - Wikipedia

கால்வாய்ப் பாசனத்தின் பதிவு செய்யப்பட்ட பரப்பு சுமார் ஒரு மில்லியன் ஹெக்டேர். ஆனால்,  இந்த சாத்தியக்கூறு மிக்க அளவிற்கு கால்வாய்ப் பாசனம் செய்வது, வழக்கமான மழைப்பொழிவு அல்லது ஆறுகள் சார்ந்த கால்வாய்களில் போதிய அளவு நீர்வரத்து இருந்த ஆண்டுகளில் கூட சாத்தியப்படவில்லை (அட்டவணை 1). எனவே, ஆற்றுப்படுகைகளில் ‘மாற்று நீர்ப்பாசன முறையை’ (alternate irrigation system – அதாவது, மொத்த பாசனப் பகுதியை இரு மண்டலங்களாகப் [பிரிவுகளாகப்] பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒன்றுவிட்ட ஆண்டில் பாசனம் அளித்தல் முறையை) பயன்படுத்தி கால்வாய்ப் பாசனப் பரப்பை அதிகரிக்கச் செய்வதன் அவசியம் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானதாகும். 

எடுத்துக்காட்டாக, காவிரி ஆற்றுப்பாசனம் தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களிலுள்ள (திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல் மற்றும் சேலம்) மொத்தக் கால்வாய்ப்பாசன பரப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பாசனம் செய்தாலும், இந்த அளவு பாசன பரப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட காவிரி கால்வாய்ப் பாசனத்தை (அதாவது 6.7 லட்சம் ஹெக்டேர் நிகர பாசன பரப்பு) ஈடுசெய்ய மற்றும் அதிகரிக்க, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ‘ஒன்றுவிட்ட’ ஆண்டில் நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில், காவிரிக் கால்வாய் பாசன பரப்பை இரண்டு மண்டலங்களாகப் பிரிப்பதன் மூலம் இரட்டிப்பாக்க முடியும். (இந்த மறுசீரமைப்புக்கு முதன்மையான காரணம் யாதெனில், இந்த காவிரிப் பாசன மாவட்டங்கள் ஒன்பதில், ஆறு மாவட்டங்களின் நிகர சாகுபடிப் பரப்பில் 48% இன்னும் நீர்ப்பாசனம் பெறாமலேயே உள்ளது). ஏற்கனவே பரம்பிக்குளம் ஆளியார் திட்டப் பாசன பகுதி மற்றும் கீழ் பவானி திட்டப் பாசன பகுதி ஆகியவற்றில் ‘ஒன்றுவிட்ட’ பாசன முறை நடைமுறையில் உள்ளது போல இந்த பணியைச் செய்ய முடியும்.

ஏரிப் பாசனம்

கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி ...

ஏரிப் பாசனத்தின் முக்கியத்துவம் பன்முகப் பட்டதாகும். தமிழக அரசின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் தற்போது சிறிய (40 ஹெக்டேருக்குக் குறைவானவை 33,142) மற்றும் பெரிய (40 ஹெக்டேருக்குக் கூடுதலானவை 7,985) அளவு ஆயக்கட்டு (பாசனப் பரப்பு) கொண்ட ஏரிகளின் மொத்த எண்ணிக்கை 41,127. அனைத்து ஏரிகளின் பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டு சற்று கூடுதலாக ஒரு மில்லியன் ஹெக்டேராகும். (கால மற்றும் பயிர் அறிக்கை 2015-16: 91; வைத்தியநாதன் அ. & கி. சிவசுப்பிரமணியன், 2001).   

பெரும்பான்மையான ஏரிகளுக்கு, அவைகளுக்கான நீர்ப்பிடிப்புப் பரப்பு உள்ளது, மேலும், குறைந்த எண்ணிக்கையிலான பெரிய ஏரிகளுக்கு மட்டுமே, ஆறுகள் மற்றும் அணைக்கட்டுகளுடன் இணைக்கப்பட்ட கால்வாய்கள் வழியாக  பெறப்படும் நீர்வரத்து மூலமான, அதிக அளவிலான நீர்ப்பிடிப்புப் பரப்பு உள்ளன. ஏரிப் பாசனத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்கள் அதிக அளவில் இல்லை. தற்போதைய சூழ்நிலையில், ஏரிப் பாசனத்தின் பரப்பை தக்கவைத்துக் கொள்ள, தமிழகம் ஒவ்வொரு ஆற்றின் குறுக்கேயும் குறைந்தபட்ச உயரத்திலான பல தடுப்பணைகளை அடிப்படையாகக் கொண்ட சிறிய அணைக்கட்டுகளை அமைத்து அவற்றின் மூலமாக முடிந்த அளவில் ஏரிகளை இணைக்க வேண்டும். இப்படி அமைக்கப்படும் ஏரிகளையே ஒழுங்குபடுத்தப்பட்ட ஏரிகள் (system tanks) என குறிப்பிடப் படுகிறது. 

வேளாண்மையில், 1960-கள் வரை, தமிழ்நாட்டில் ஏரிப்பாசனமே முதன்மையான ஆதாரமாக இருந்தது. அதிகபட்சமாக 1960-களில் 9.1 லட்சம் ஹெக்டேர் ஏரிகளின் மூலமாக பாசனம் பெற்றது. தமிழகத்தில், அதிகபட்சமாக 1967-68-இல் 9.90 லட்சம் ஹெக்டேர், மற்றும் 1966-67-இல் 9.66 லட்சம் ஹெக்டேர் ஏரிப் பாசனம் பதிவாகியுள்ளது (சிவசுப்பிரமனியன், கி, டிசம்பர் 2016: 17). ஆனால், இப்போது, ஏரிப்பாசனம் தன் பெருமையை இழந்து நிற்கிறது. ஏரிகள் மூலம் பாசனம் பெற்றுவந்த பரப்பு தொடர்ந்து, சீராகக் குறைந்து 2016-17-இல் 2,58,207 ஹெக்டேரை எட்டியுள்ளது. இது குளங்களின் கீழ்ப்பதிவு செய்யப்பட்டுள்ள பரப்பளவில் (ஒரு மில்லியன் ஹெக்டாருக்கும் அதிகம்) சுமார் 25% ஆகும்.   இத்தகைய சரிவிற்குக் காரணமான பல காரணிகளைப் பொதுவாக physical – பௌதீக அதாவது வெளிப்படையான (உ.ம். கால்வாய் ஆக்கிரமிப்பு), institutional – ஸ்தாபன ரீதியிலானவை (உ.ம். பாசன சங்கங்களின் ஸ்திரமற்ற நிலை) மற்றும் technical – தொழில்நுட்பம் சார்ந்தவை (உ.ம். கிணற்றுப் பாசனத்தால் ஏரி மற்றும் கால்வாய் பாசனத்தின் வீழ்ச்சி) என்று வகைப்படுத்தலாம். நடைமுறையில் காணப்படுகின்ற இந்தக் காரணிகள் அனைத்தும் ஏரிப்பாசனத்தைப் புதுப்பிப்பதற்குக்  கவனம் கொள்ளத் தக்கவையாகும். 

தற்போதுள்ள நிலை, தண்ணீரை திறம்பட பயன்படுத்துவதற்காக விவேகமாக செயல்பட்டு ஆறுகளின் குறுக்கே, சிறிய அணைக்கட்டுகளை அமைத்து நேரடிப் பாசனம் மற்றும் குளங்களுடன் இணைக்கக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து செயல்படுவதே ஆகும். மேலும், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள ஏரிப்பாசன ஆதாரங்களை வலுவாக்குவதோடு, குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் இது சாத்தியமாகும். அத்துடன், இம்முன்னேற்ற நடவடிக்கைகள், ஒரு முறை செயல்படுத்தப்பட்டால், அது, விவசாயத்தின் மூலம் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு நீண்டகால வருமானம் கிடைக்கச் செய்யும். 

வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்ட்) தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்தும் தனது சமீபத்திய ’மாநில மைய அறிக்கையில்’ குறிப்பிட்டுள்ளதாவது, ‘நீர் கிடைப்பது ஒரு முக்கிய அம்சம் என்பதோடு, விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை பாதிக்கும் ஒரு வரையறைக்குட்பட்ட காரணியாகும். விவசாய நிலங்களை திறம்பட பயன்படுத்துவதற்கு சரியான நேரத்தில் நீர்ப்பாசனம் வழங்குவது அவசியம். எனவே, தமிழக அரசு தயாரித்துள்ள தமிழ்நாடு முன்னோக்குத் திட்டம் 2023-இன் கீழ் அடுத்த பத்து ஆண்டுகளில் அனைத்து சாகுபடி நிலங்களுக்கும் நீர்ப்பாசனம் கிடைக்கச் செய்வதை ஒரு முக்கிய நோக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.’ (நபார்ட், 2020: 10-11). 

நிலநீர் (surface) பாசனத்தில் கோவிட்-19 இன் தாக்கம் 

Minor Irrigation Census

சிறுபாசன (minor irrigation) துறையில் கோவிட்-19 இன் தாக்கத்திற்கு மூன்று பரிமாணங்கள் உள்ளன.

முதலாவது தமிழ்நாட்டில் தொற்றுநோய்களின் காலத்துடன் தொடர்புடையது. மார்ச் 2020 கடைசி வாரத்திலிருந்து இந்த காலம் தொடங்கியது. வழக்கமாக கோடை (ஏப்ரல்-மே) காலம் விவசாயத்திற்கு முக்கியமானது, ஏனெனில் குறுவை பயிரிடுவதற்காக இந்த காலகட்டத்தில் விவசாயிகள் கோடை ஏர் உழுதல், நில பராமரிப்பு மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பருவகால வேளாண்மைக்கான ஆயத்தப் பணிகளை தனித்தனியாகவும், குடிமராமத்து மூலம் நீர்நிலைகளைப் பராமரிக்க கூட்டாகவும் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்தப் பணிகள் விதைப்பதற்கும், ஜூன் மாதத்தில் துவங்கும் தென்மேற்கு பருவமழை காலம் வரை அவசியமானவை. தமிழ்நாட்டிலுள்ள ஏரிகள் வடகிழக்கு பருவமழையின் போதுதான் வளமான நீர்வரத்தைப் பெறுவதால், தென்மேற்கு பருவமழைக்கு முன்-பின் காலங்களில், கால்வாய் பராமரிப்பிற்கும், ஏரி-உள்கட்டமைப்பு தொடர்பான பராமரிப்பிற்கும் குடிமராமத்துப் பணி தேவைப்படுகிறது. குடிமராமத்து என்பது, ஒவ்வொரு ஊரின் மக்களும் தங்களின் சொந்த உடல் உழைப்பைப் பயன்படுத்தி மழைநீர் மற்றும் ஆற்றுநீரை தங்கள் கிராமங்களுக்கு கொண்டு செல்ல சிரமம் பாராமல் கால்வாய் மற்றும் வாய்க்கால்களை பராமரிக்க மக்கள் தானமாக கொடுக்கும் உடல் உழைப்பே ஆகும். அடிப்படைப் பண்ணை வேலைகளைச் சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், சிக்கல்களின் தீவிரம், தாமதமான விதைப்பு, அதிக நீர் விரயம் பலவீனமான ஏரி அல்லது ஆற்றங்கரை மற்றும் பிற உள்கட்டமைப்பு பிரச்னைகளால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஆகியவை, பயிர் சாகுபடியை மோசமாக பாதிக்கும். தற்போதைய 2020-ஆம் ஆண்டில், கோவிட்-19 காரணமாக, உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு அனைத்துப் பண்ணை உள்ளீடுகளையும் திறம்பட பயன்படுத்தி திட்டமிட்ட சாகுபடியை விவேகத்துடன் மேற்கொள்ள இயலவில்லை.

இரண்டாவது பரிமாணம் கோவிட்-19 காலகட்டத்தில் பண்ணைத் தொழிலாளர்கள் கிடைப்பது தொடர்பானது. வழக்கமான விவசாய வேலைகள் மற்றும் குடிமராமத்து போன்ற சிறு பாசனம் தொடர்பான வேலைகளில் கலந்துகொள்ளும் விவசாயத் தொழிலாளர்கள், ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்துவதால் வேலையிலிருந்து விலகி வீட்டில் பாதுகாப்பாக தங்கினர். இது சிறு பாசனம் மற்றும் அவை தொடர்புடைய விவசாயப் பணிகளின் வழக்கமான பராமரிப்பை மோசமாக பாதித்தது. மேலும், அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயத் துறையில் சில தளர்வுகள் இருந்தபோதிலும், ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் இடம்பெயரும் நிகழ்வு விவசாயத்தில் தொழிலாளர் பற்றாக்குறையை மோசமாக்கியது. நீர்ப்பாசன வசதிகளிலிருந்து நல்ல பலனைப் பெறுவதற்கும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்வதற்கும், கால்வாய் மற்றும் ஏரிகளின் உள்கட்டமைப்பை பராமரிப்பதற்கும் கோவிட்-19 க்கு பிந்தைய காலம் பயனுள்ளதாக பயன்படுத்தப்பட வேண்டும்.

மூன்றாவது பரிமாணம் கிராமப்புறங்களில் பண்ணைத் துறையில் உள்ள மக்களின் சுகாதாரத்துடன். கட்டாய நோய்தடுப்பு விதிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும், அவற்றைப் பின்பற்றுவதில் தீவிரமின்மையும்- அதாவது உடலளவில் விலகியிருத்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளைக் கழுவுதல் போன்றவை- தனிநபர் அளவில் இத்தகைய விதிமுறைகளை பெரிய அளவில் மீறுவதில் சென்று முடிகின்றன. சமூக மட்டத்தில் ‘கோயம்பேடு காரணி’ மூலம் ஏற்பட்ட பாதிப்பு  கிராமப்புறங்களில் கோவிட்-19 பரவலில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான போக்குகள் வேளாண்துறையில், குறிப்பாக தோட்டக்கலைத் துறையில், வரத்து மற்றும் தேவை மதிப்புச் சங்கிலித் தொடரை (supply and demand value chains) முடக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பை தீவிரமாக பாதிக்கின்றன. கோடையில் கடுமையான புயல் மற்றும் பலத்த மழையும் பயிர்கள் மற்றும் பண்ணை வருமான இழப்பிற்கு மேலும் வழிவகுத்தது. 

குறுகிய கால கொள்கை நடவடிக்கைகள்

Extend TN irrigation law benefits to Kudimaramathu, demand ...

 1. செயலிழந்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மைச் சட்டம் 2000 (TNFMIS Act-2000) பொதுப்பணித் துறை (PWD) அதிகாரிகளின் மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் ஏரிகளின் மேலாளர்களாக பயன்பாட்டிலுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. மிக முக்கியமாக, இந்த சட்டம் ஏரிகளை புதுப்பிக்க மட்டுமல்லாமல், கால்வாய் பாசன நிர்வாகத்தை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம், நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களை (WUAs) உருவாக்கிப் பாதுகாக்க வழி செய்துள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுமானால், கோவிட்-19 காலகட்டத்தில் மட்டுமல்லாமல் மற்ற காலங்களிலும், சிறந்த பயிர் வளர்ச்சிக்குப் போதுமான தண்ணீரை சுலபமாகப் பெற ஏரி மற்றும் கால்வாய் அமைப்பைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் விவசாயிகள் விழிப்புடன் இருப்பார்கள். இந்த TNFMIS Act-2000 மூலம் நீர்ப்பாசன சங்கங்கள் ஒரு முறை சிறப்பாக உருவாக்கப்பட்டுவிட்டால், வேளாண் மற்றும் நீர்ப்பாசன உற்பத்தித்திறன் மேம்படும், விவசாயிகளின் வருமானம் உயரும். கடந்த இருபது ஆண்டுகளாக இது நடக்கவில்லை. எனவே, இதனை தற்போதாவது நிறைவேற்றுவது அரசின் முக்கிய கடமையாகும்.
 2. சாத்தியமான இடங்களில் ஏரிகளில் மீன்பிடிப்பு வருமானத்தை TNFMIS Act-2000 வரையறையின் படி நீர்பயனாளிகள் சங்கங்களுக்கும், தமிழ்நாடு அரசுக்குமாக 50:50 அடிப்படையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். 
 3. ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை, தேவைப்படும்போது, இலவசமாக அகற்றி எடுத்துக் கொள்வதற்கு விவசாயிகள் அனுமதிக்கப்பட வேண்டும். அரசாங்கம் வண்டல் மண்ணை அகற்றுவதற்கு அனுமதியளித்திருந்தாலும், அது இப்போது அரசியல் சார்புடையதாக இருக்கிறது, மேலும் சர்ச்சைகளைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதை தமிழ்நாடு விவசாயிகளின் நீர்ப்பாசன முறைமை சட்டம் 2000 (TNFMIS Act-2000) சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் முழுமையாகச் சரிப்படுத்த முடியும். 
 4. ஏரிகள், கால்வாய்கள் அனைத்திற்கும் திறமை வாய்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்கள் (WUAs) உருவாக்கப்பட்டு, அவைகளை முறையாகச் செயல்பட வைக்க வேண்டும். இந்த சங்கங்களுக்கு ஏரிகளின் குடிமராமத்து, வாய்க்கால் பராமரிப்பு ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளவும், பாசன வயல்களின் நீர்பங்கீட்டை விவசாயிகளே திறமையாக நிர்வகித்துக் கொள்ளவும் அதிகாரமளிக்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கும் கூட, தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மைச் சட்டம் 2000 மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
 5. TNFMIS Act-2000 படி, PWD அதிகாரிகளுக்கு, குறிப்பாக, கால்வாய்கள், வாய்க்கால்கள், மற்றும் நீர்நிலைகளிலுள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டிய கடமைகள் இருக்கின்றன. மேலும் இவை தொடர்பான சிக்கல்களை விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். இதுவரை இது சரிசெய்யப்படவில்லை, இதனாலேயே பல ஏரிகளில் பதிவு செய்யப்பட்ட பாசனப் பரப்பை அடைய இயலவில்லை. இந்நிலை சரிசெய்யப்பட வேண்டும்.
 6. மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக இந்த ஆண்டு, ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரி நீர்பாசனப்பகுதி முழுவதுமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களின் பராமரிப்பை முறையாக மேற்கொள்ள வேண்டிய காலமிது. இந்த நோக்கத்திற்காக, விவசாயிகள் நீர்ப்பாசன சங்கங்களின் மூலமாக தங்கள் கிராம எல்லைக்குள் முறையான கால்வாய் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரு ஆணையை அரசு வெளியிட வேண்டும், இது சாத்தியப்படாத இடங்களில் திறமையான முறையில் காவிரி நீர் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நீர்வழிப்  பராமரிப்புப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இந்த ஆண்டு, மாநில அரசு தற்போது, மேற்சொன்ன நோக்கங்களுக்காக சில சிறப்பு (ஐ.ஏ.எஸ். நிலையிலான) அதிகாரிகளை நியமித்திருந்தாலும், காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு போதுமான அளவு நீர்வரத்தை அளிக்கின்றனவா என்பது தான் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது. தேவையான நீர்வரத்தை அவர்கள் பெற்றால் தான் பராமரிப்பு முறை நன்றாக வேலை செய்திருக்கிறது என்று நாம் சொல்ல முடியும். பல பத்தாண்டுகளாக இது சாத்தியமாகாமல் இருக்கிறது. 
 7. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உழவர் ஊக்குவிப்புக் குழுக்கள் போன்ற கூட்டுச் சந்தைப்படுத்துதல் கட்டமைப்பை தீவிரமாக ஊக்குவிப்பதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்திக்கு பிந்தைய காலகட்டத்தில் விநியோகச் சங்கிலித் தொடர் பலப்படுத்தப்பட வேண்டும். கிராம, மண்டல அளவில் சந்தைப்படுத்தும் வசதி போதுமானதாக இல்லை, அது விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமத்தை அளிப்பதுடன், இழப்பிற்கும் இட்டுச் செல்கிறது. மண்டல அளவிலான உழவர் சந்தைகள், கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு போதுமான நீர், தொற்றுநீக்கி, முகஉறைகள் மற்றும் உடலளவில்- விலக்கு அடையாளக்குறிகள் போன்ற ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். 
 8. மாநில வரவு செலவுத் திட்டத்திற்கு கூடுதலாக, நபார்டு வங்கியின், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் (Rural Infrastructure Development Fund) கீழ் சிறுபாசனப் பணிகளுக்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்தலாம். தடுப்பணைகளையும், ஆறுகளை ஆதாரமாகக் கொண்ட அணைக்கட்டுகளின் கட்டுமானத்தின் மீதும், ஏற்கெனவே நிதியளிக்கப்பட்டு நடப்பிலிருக்கும் சிறுபாசனப் பணிகளின் பராமரிப்பு நிலையை நேரடியாகக் கண்காணிப்பதிலும் அதிக கவனம் செலுத்தலாம். மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமையளித்து விரைந்து முடிப்பதில் அதிக கவனம் செலுத்துவது மிக அவசியம். அனைத்துச் சிறுபாசன ஏரிகளின் நீர்வரத்துக் கால்களையும் முழுமையாகப் புதுப்பிக்க வேண்டிய தேவையிருக்கிறது. 
 9. தொன்மையான அறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட (தெரு நாடகங்கள், கிராமியப் பாடல்கள், கிராமப்புறக் கூத்து, பொம்மலாட்டம் போன்ற) பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக கோவிட்-19 பற்றிய பரப்புரைகளை பெரிய விளம்பரப்பலகைகள் மூலமாக குடிசைப் பகுதிகள், கோவில் வளாகங்கள் போன்ற பொது இடங்களில் வைத்து அவற்றின் மூலம் நோய்த்தடுப்பு விதிகளின் முக்கியத்துவம் குறித்து தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம். இந்த நடவடிக்கையை பல்வேறு துறைகள் (சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, விவசாயத்துறை, மீன்வளத்துறை, வனத்துறை) அமல்படுத்திக் கண்காணிப்பதோடு, பங்கேற்பு அணுகுமுறையின் கீழ் மக்களை ஈடுபடுத்த வேண்டும். கோவிட்-19 தடுப்பு முறை செய்திகளைத் தவிர, தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மைச் சட்டம் 2000-த்தின்  (TNFMIS Act-2000) முக்கியத்துவமும் அதன் பயனும் பற்றிய பிரச்சாரமும் செய்யப்படலாம். இந்த நோக்கங்களுக்காக, சமூக மூலதனம், சுய உதவி குழுக்கள், நீர் பயனாளிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் கூட்டு பொறுப்புக் குழுக்கள் போன்றவற்றைக் கிராம அமைப்புகளுடன் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். 

நடுத்தர-காலக் கொள்கை நடவடிக்கைகள் (3-5 ஆண்டுகள்)

NABARD sanctions Rs 735 cr under RIDF Bengal - Sentinelassam

 1. நபார்டு வங்கியின், கிராமப்புறக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் (RIDF) கீழ் சிறுபாசன பணிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க கொரோனா சிறப்பு ஐந்தாண்டு முன்னோக்கு திட்டம் (2020-2021 முதல் 2024-2025 வரை) தேவைப்படுகிறது. தொற்றுநோயால் விநியோகச் சங்கிலித் தொடரில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை சமாளிக்க, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பண்ணைத்துறை சார்பான கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகளின் முன்னுரிமைத் தேவைகளை அடையாளம் காண நபார்டின் தற்போதைய RIDF புதுப்பிக்கப்பட வேண்டும் (இத்திட்டங்களின் சில குறைபாடுகள் 2016 நபார்டு மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது, அவற்றில் 16 நிழற்படங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன). எடுத்துக்காட்டாக, தோட்டக்கலை பொருட்கள் உட்பட, பயிர் உற்பத்திக்குப் போதுமான சேமிப்பு மற்றும் குளிரூட்டும் வசதியை உறுதி செய்வதற்காக, பெரும்பாலான வருவாய் கிராமங்களில், கிடங்குகள் போன்ற தனியார் முதலீட்டு அடிப்படையிலான சேமிப்பக கட்டமைப்புகள் முறையான மானியக் கூறுகளுடன் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டல அளவில் (block level) சேமிப்பு/குளிரூட்டும் மையத்திற்கான சாத்தியமான, தேவை அடிப்படையிலான சிறப்புத் திட்டத்தை நபார்ட் ஆய்வு செய்யலாம் மற்றும் அவற்றின் சாத்தியமான இணைக்கப்பட்ட கடன் திட்டத்தில் (potential linked credit plan) சேர்க்கலாம். ஏனெனில் இது RIDF ஒதுக்கீட்டின் கீழ் மாநில வரவு செலவுத் திட்டத்திற்கு துணைபுரியும். மேலும், மத்திய நிதியமைச்சர் அறிவித்த தொகுப்பு நிதி போதாது. நீர்ப்பாசனத் துறையின் பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டது. மேழும், முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலநீர்  பாசனம் (surface irrigation) – குறிப்பாக, கால்வாய்-ஏரி- அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தரமுயர்த்த வேண்டும் என்பதே இப்போதைய பரிந்துரை. மேலும், கிராம மற்றும் மண்டல அளவில், பண்ணை உற்பத்தி அடிப்படையிலான சேமிப்பு வசதிகள் (எ.கா., கிட்டங்கிகள்) உருவாக்கப்பட வேண்டும். 
 2. நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள கடன்வசதி இடைவெளியை எதிர்கொள்வதற்கு, பண்ணைத் துறையின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் காண நான்கு முன்னணி வங்கிகள் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், இந்தியன் பேங்க் மற்றும் கனரா பேங்க்) நபார்டுடனும், அந்தந்த மாவட்ட ஆலோசனைக் குழுக்களுடனும்   கலந்தாலோசித்து பிரத்தியேக மூன்று-ஆண்டு (2020-2021 முதல் 2022-2023 வரை) முன்னோக்குக் கொரோனா சிறப்புக் கடன் திட்டத்தை தயாரிக்கலாம். மாநில அளவிலுள்ள வங்கியாளர்கள் குழு (SLBC) இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னணி வங்கித் திட்டத்தின் (LBS) கீழ் இது குறித்துத் திட்டமிடும் முன்முயற்சியை மேற்கொள்ளலாம்.  இந்திய ரிசர்வ் வங்கியின், முன்னணி வங்கித் திட்டத்தின் கீழ் சாத்தியமான இந்தக் கடன் திட்டம் (வங்கி சாராத நிதிச்சேவைக் கம்பெனிகள், நுண்கடன் நிதிநிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் மூலமாக) கூட்டுறவு வங்கிச் சேவைகளையும், நுண்நிதி நிறுவனச் சேவைகளையும் உள்ளடக்கியதாகும். காப்பீட்டு நிறுவனங்களும் எல்.பி.எஸ் இன் வரையறைக்குள் வருகிறார்கள். எனவே, எல்.பி.எஸ் இன் கீழ் பண்ணைத் துறையில் (கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு உட்பட) காப்பீட்டுடன் இணைக்கப்பட்ட சாத்தியமான கடன் திட்டங்களை உள்ளடக்கும் ஒரு விரிவான கொரோனா சிறப்பு மூன்று ஆண்டு திட்டத்தைப் பரிசீலிக்கலாம். இப்பரிந்துரைகளின்படி, SLBC, நபார்ட் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை தமிழ்நாட்டிற்கான விரிவான கொரோனா சிறப்பு திட்டத்திற்கான வழிகாட்டுதல்களைத் தயாரிக்க வேண்டும். 
 3. மண்ணின் தர வரைபடம், பயிர் மற்றும் நீரின் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட பயிரின் மகசூலை அதிகபட்சம் உயர்த்துவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை விவசாயிகள் எடுக்க வேண்டும். இதற்காக, விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகள் (உதாரணமாக, தமிழ்நாடு வேளாண் பல்களைக் கழகம்), விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் சேவைகளை வழங்கி அச்சேவை  அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அளவுக்கு ஏற்பாடு செய்யலாம்.      
 4. நீர் பற்றாக்குறை எங்கு காணப்பட்டாலும், அதிக நீர் தேவைப்படுகின்ற பயிர் சாகுபடியை உடனே நிறுத்த வேண்டும். பாய்தல் மற்றும் காய்தல் (wet and dry) முறையிலான, அதிக நீர் தேவைப்படாத பாசன பயிர்களை மட்டுமே பயிரிட வேண்டும். அந்த பகுதிகளில், நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சொட்டுநீர், தெளிப்புநீர், நீர் துப்பாக்கி மற்றும் மேம்பட்ட துல்லிய நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்காக, நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் நதிநீர் விரிவாக்கத் திட்டங்களைத் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வருடத்தில் குறைந்தது ஒரு பருவத்திற்காவது நதிநீர் அனைத்து ஆற்றுப்படுகைப் பகுதிகளுக்கும் (புதிய விரிவாக்க பகுதிகள் உட்பட) கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். சில மாதங்களுக்காகவாவது நீர் கிடைக்குமா என்ற சந்தேகம் பெரும்பாலான பகுதிகளில் நிலவுவதால், தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்றாமல் இருப்பதற்கு வழிவகுக்கிறது. கிணறுகளில் ஓரளவு தண்ணீர் கிடைக்கும் வரை, இந்த நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒரு பிரச்சனையல்ல, தண்ணீர் கிடைப்பது தான் பிரச்சினை.
 5. விவசாயத்தில், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பதால் சாகுபடிச் செலவும் சீராக அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களின் கூலி உயர்வு என்பது விவசாயிகளால் தாங்க முடியாத அளவில் அது உற்பத்தி செலவில் பெரும் அங்கமாக உள்ளது. மேலும், பல இடங்களில், விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பதில்லை. வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்களையும் வேளாண்மையில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும், விவசாயிகளுக்கு உதவுவதற்கும், விவசாயிகள் தங்கள் பண்ணை வேலைகளைச் செய்யும்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தின் (MGNREGA) கீழ் வேலைசெய்யும்  தொழிலாளர்களைப் பயன்படுத்த வழிவகை செய்யவேண்டும். வேளாண் தொழிலாளர்களின் கூலியில் 50% பயனடையும் விவசாயிகள் மூலமும், மீதமுள்ள 50% கூலி, அரசின் MGNREGA நிதி மூலமும் அந்தந்த பஞ்சாயத்துக்கள் மூலம் வழங்கலாம்.
 6. அரசு உதவி பெறும் பல திட்டங்களில் பயனாளிகளின் ஈடுபாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர்களின் பங்கேற்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெற்றி கேள்விக்குறியாகிறது. உலக வங்கியின் உதவியுடன் சமீபத்தில் முடிக்கப்பட்ட நீர்வள மற்றும் நிலவள மேலாண்மைத் (IAMWARM) திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் – ஒவ்வொரு சொட்டு நீரிலும் அதிக வருமானம் பெறுதல். இதற்காக எட்டு அரசுத் துறைகள் (வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை வளர்ப்பு, விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தல், தோட்டக்கலை, மீன்வளம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பொதுப்பணித் துறை) ஈடுபாடுத்தப்பட்டு, உலக வங்கியின் வழிகாட்டுதல்களின்படியான செயல்பாடு அற்புதமானது. இருப்பினும், திட்டத்தின் குறிக்கோள்களான, சாகுபடிக்கு உறுதியளிக்கப்பட்ட நீர் வழங்கல் மற்றும் பயிர் செய்யத்தக்க மற்றும் பயிர் செய்யப்படும் பரப்பின் இடைவெளி என்கிற வகையில், திருப்தி அடைய இயலவில்லை. மேலும், அபிவிருத்தி நடவடிக்கைகளில் பயனாளி விவசாயிகளை முற்றிலுமாக விலக்கியத்தே இதற்குக் காரணம். அட்டவணை 1-இல் உள்ளபடி, இத்திட்டம்  2007 முதல் 2014 வரை  செயல்பட்ட போதிலும், 2010 களில் கூட ஏரிப் பாசனப் பரப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது (தமிழ்நாட்டில் ஒரு மில்லியன் ஹெக்டேருக்கு மேல் பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டுப்  பரப்பளவுடன் ஒப்பிடும் பொழுது, 4.2 லட்சம் ஹெக்டேர் மட்டுமே ஏரிப் பாசனம் பெற்றுள்ளது). அரசாங்கம், தற்போதைய இரண்டாம் கட்டத்திலாவது, குறைந்த பட்சம் இத்திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் எப்போதுமே சொல்லிக் கொள்ளக்கூடிய அளவில் அதிகரித்தது இல்லை. மேலும் நீர்ப்பாசனத் துறை மோசமாக செயல்படுகிறது என்பதால், பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இத் துறையை மேம்படுத்துவதற்குத் தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலங்கள் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும்.  

ஒன்றோடொன்று தொடர்புடைய துறைகள் / சிக்கல்களுடனான இணைப்புகள்

தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகள்

Policy on Agricultural Labourers | Social Security Act | Welfare ...

 1. MGNREGA திட்டம் செயல்பட்டில் இருப்பதால், பாசன விரிவாக்கத்தின் மூலம் விவசாயத்திற்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவ இந்த தொழிலாளர்களை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும். இதற்காக, ஊதியத்தில் பாதியை MGNREGA நிதி மூலமும், மீதியை பயனாளி விவசாயிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 2. விவசாயிகளின் கடன்களைத் தீர்க்க, அவர்களின் நில உரிமை அடிப்படையில் தாராளமாகக் கடன் வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். வட்டி ஆண்டுக்கு 4% ஆக இருக்கலாம். நடுத்தர காலக் கொள்கையின் கீழ் விவாதிக்கப்பட்டபடி, முன்னணி வங்கிகளின் கொரோனா சிறப்பு மூன்று ஆண்டு கடன் திட்டத்தில் பண்ணைத் துறைக்கான கடன் கோரிக்கை சேர்க்கப்பட வேண்டும்.
 3. விவசாயத்தில் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினைகளைத் தீர்க்க, தென் தீபகற்ப நதிகளை இணைப்பதற்கான திட்டமிடலை மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுத்தி, அதன் மூலம் பெரிய ஏரிகள் இணைக்கப்பட வேண்டும். ஏரிகளின் நீர்வரத்துக்கால்வாய்கள் மற்றும் பிற சேமிப்பு நீர்த்தேக்கங்களின் பராமரிப்பு இல்லாததால் கிடைக்கும் மழைநீர் மற்றும் நதிநீரை சரியாக சேமிக்க இயல்வில்லை. எனவே, நீர் பற்றாக்குறையால் தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கூடுதல் பாசனம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் வருவாயை உயர்த்திக் கொள்ள, குறைந்தபட்சம் மழைக்காலத்தின் போது, ஒரு பருவத்தில் பயிரிட உதவ வேண்டும். பாசன சங்கங்கள் உருவாக்கப்பட்டு பலப்படுத்த வேண்டும் (TN-IAMWARM, 2014). மேலும், தமிழ்நாட்டில் 42.3% நிகர சாகுபடிப் பரப்பு இன்னும் மானாவாரியாகத்தான் இருந்து வருகிறது (2010-2011 முதல் 2016-2017 வரையிலான சராசரி).
 4. தமிழ்நாட்டில், கிராம அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம பஞ்சாயத்து மூலம், ஒரு கிராம மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படலாம். கிராம அளவில் வளர்ச்சித் பணிகளைத் திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவற்கும் பணிக்குழு, திட்டக்குழு மற்றும் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களை மேற்பார்வையிடுவதற்கான குழு போன்றவற்றை அமைக்கலாம். நோய்தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் பின்னணியில் (அதாவது கிராமப்புரங்களில் மனிதர்களைப் பாதுகாக்க உடல் அளவிலான தூரம், முகக்கவசம் மற்றும் கைகழுவுதல்), ஒரு ‘கொரோனா ஹெல்கேர் குழுவை’ அமைத்து தனிநபர் மற்றும் சமூக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கலாம். 

பேரா.கி. சிவசுப்பிரமணியன்

பேராசிரியர் 

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி

 

அட்டவணை 1: 1950–1951 முதல் 2014-2015 வரை இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களால் பயன்பெரும் நிகர நீர்ப்பாசனப் பரப்பு    (லட்சம் ஹெக்டேர்)

Image

Image

குறிப்புகள்: அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் இந்தியாவுடன் ஒப்பிடும்போதான சதவீதம். நி.பா.ப = நிகர பாசனப் பரப்பு. நி.சா.ப = நிகர சாகுபடிப் பரப்பு.

* அணைக்கட்டுகள், தடுப்பணைகள், ஊற்றுக்கால்வாய், குட்டைகள், தாங்கல், சிறிய மாற்றுப்பாதையுடைய அமைப்பு மற்றும் பலவற்றைக் குறிக்கிறது.

ஆதாரங்கள்: இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், விவசாயம், பல்வேறு வெளியீடுகள். இந்திய வேளாண்மை சுருக்கம், 27-ஆவது பதிப்பு, ஜனவரி 2000;

இந்திய வேளாண்மை புள்ளிவிவரங்கள், 1985-86-1989-90, தொகுதி I, வேளாண் அமைச்சகம், இந்திய அரசு; தமிழ்நாடு: ஒர் பொருளாதார மதிப்பீடு, பல்வேறு வெளியீடுகள்; மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சித் துறை, தமிழக அரசு; பருவம் மற்றும் பயிர் அறிக்கை, பல்வேறு வெளியீடுகள், தமிழக அரசு. www.indiaagristat.com.

Status of Irrigation in TN – Impact Evaluation- NABARD-RIDF Field Visits: 1 Ramanathapuram Big Tank

1-2 A view of actual breadth of RBT bund – 10 KM length of standardization completed in 2013

3-4 Unimaginable extent of erosion /breach in many places – uncared both by the PWD and WUA

2 Tiruchirappalli District – Status of Panangudi and Kuyavan Channels

IMG_4580.JPG

5-6 Lack of maintenance in Manakkal channel and intensive growth of weeds in Kuyavan channel

IMG_5009.JPG

IMG_5010.JPG

7-8 Salem Dt: 3 HH Drainage Towards Thirumanimuthar along the Neikkarapatti Tank supply channel

IMG_5041.JPG

IMG_5052.JPG

9-10 A closer view of drainage and its effect is Seen in the nearby irrigation well with full water level

IMG_5090.JPG

IMG_5112.JPG

11-12 At km 4.1 from the anicut across railway line & the channel in Kondalampatti main village

IMG_5156.JPG

IMG_5150.JPG

13-14 Pathetic and highly polluted full storage Neikkarapatti tank – Saline and acidic unusable water storage

4 Tuticorin District – Srivaikuntam Anicut

IMG_6124.JPG

IMG_6122.JPG

15-16 Household drainage is no exception in Palayamparavoo channel – Continuous sewage discharge

 

கோவிட்-19 தொடர்

நாம் தற்போது தொற்றுநோயின் கடும்தாக்கம் மற்றும் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இருக்கிறோம். இந்நிலை அசாதாரண கொள்கை நடவடிக்கைகளைக் கோருகிறது. இருப்பினும், ஒரு புதிய ஆராய்ச்சி திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான அதிக காலஅவகாசம் நம்மிடம் இல்லை. கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், உடனடிச் சிந்தனைக்கும், செயலுக்கும் நிலைமை அழைப்பு விடுகிறது. சிறப்பாக சந்தற்பத்திற்கேற்ற கொள்கைமுடிவு ஆவணங்களின் கோவிட்-19 தொடரில், செ.வ.ஆ.நி. ஆய்வுக்குழு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சிக்கல்களைப் பற்றி சிந்தித்து, சமகால சவாலின் சூழலுக்கேற்ப அவர்களின் பணியைத் தகவமைத்துக் கொண்டு, ஒன்றோடொன்று தொடர்புடைய துறைகளுக்கும், சிக்கல்களுக்கும் இடையிலுள்ள இணைப்புகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதுடன், குறுகிய மற்றும் நடுத்தர கால கொள்கை நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது. இந்தத் தொடர் மாநிலத்தின் தொற்றுநோய்க்குப் பிந்தைய சமூக-பொருளாதாரக் கொள்கையின் வடிவமைப்பிற்கு ஒர் பயனுள்ள உள்ளீடாக இருக்கும்.

 

பி.ஜி. பாபு

இயக்குனர், செ.வ.ஆ.நி

COVID-19 SERIES

Leave a Response

Top Reviews

Video Widget

gallery