Book Reviewஇன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்: இந்தியாவில் சாதி முறை – அமுதன் தேவேந்திரன்

 

சமீபமாக பேஸ்புக், வாட்ஸ்அப்பில் சாதி குறித்த பதிவுகளை வாசிக்க நேர்ந்த ஒரு சமயத்தில் தான் சாதி குறித்து ஒரு சில புத்தகங்கள் படித்து அறியலாம் என்ற நோக்கத்தில் வாசித்த புத்தகம்தான் ‘இந்தியாவில் சாதி முறை: ஒரு மார்க்சிய பார்வை’.

நேற்றைய தினம்
தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தேன் எனது மகனும் அருகில் இருந்தான். செய்தியை பார்த்துக் கொண்டிருந்த அவன் என்னை பார்த்து கேட்டான்.
“சாதின்ன என்னப்பா.?”

எனக்குத் தெரிந்த பதில் சொன்னேன்.

அதற்குப் பிறகு அவன் இன்னொன்றை கேட்டான்
“நம்ம எந்த சாதிப்பா.?”

அந்த இடத்தை மௌனமாக கடந்து விட்டேன் அவன் கேட்டுக் கொண்டே இருந்தான்.
அவனுக்கான பதில் என்னிடம் இருந்தும் நான் சொல்ல மறுத்தேன் என்பதைவிட சரியாக சொல்ல தெரியவில்லை.

உண்மையில் சாதி என்றால் என்ன.?
நாம் என்ன சாதி.?
பிறப்பால் ஒருவன் மீது சாதி எப்படி கட்டமைக்கப்படுகிறது.?
திருமணங்கள் நிச்சயிக்கப்படும் போதுதான் சாதி குறித்து பெரும்பாலும் பேசுவார்கள். அதுவரை நம்முடன் சுற்றித்திரியும் நண்பர்கள் கூட..’ மச்சான் உன் தங்கச்சிய நான் கல்யாணம் பண்ணா விரும்புறன்டா”என கேட்கும் போது தான் சாதி தலைக்கு ஏறி அடிதடி முடியும் சம்பவங்களும் உண்டு. (ஒரு சில நண்பர்கள் விதிவிலக்கல்ல).
குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொல்லவே வக்கற்றவர்களாகவே இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் சாதி ஒருபெரும் சாபக்கேடு.

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1 …

‘இந்தியாவில் சாதிகள்’
‘சாதி ஏன் ஒழிய வேண்டும்’ என்ற மிகச் சிறந்த ஆய்வுகளை நடத்திய புரட்சியாளர்.அம்பேத்கர் கூட சாதி ஒழிய வேண்டும் எனில் மதம் மாறுவதுதான் இறுதி இலக்கு என பௌத்தம் தழுவினார் என்பது வரலாறு.
சாதி குறித்து பல ஆய்வுகள் விவாதங்கள் தொடர்ந்து நம் சமூகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன அதன் ஒரு பகுதியாக தோழர்.பிரகாஷ்காரத் அவர்களால் எழுதிய ‘இந்தியாவில் சாதி முறை’ என்ற நூல்
மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில்களை தேடி வாசித்த நூல் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

“இந்தியத் துணைக் கண்டத்திற்கு மட்டுமே உரிய சாதி சமூக அமைப்பு முறை இவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து, முதலாளித்துவ சமூகத்திலும் நிலைபெற்றிருக்கிறது என்பதை இந்த சிறப்புரையில் விளக்கிருக்கும் தோழர் பிரகாஷ் காரத்,
சாதி அமைப்பு குறித்து கட்சியின் ஆரம்ப கால புரிதலின்மையையும், அது மேற்கொண்ட நிர்ணயவாத அணுகுமுறையின் விளைவையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சாதிய சமூக அமைப்பு முறை, இந்திய துணைக்கண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம்) மட்டுமே காணப்படுகிறது.
சமூகவியலாளர்கள் குறிப்பிடும் அகமண முறையைக் கொண்டு பராமரிக்கப்படுகிறது. கண்டிப்பான விதத்தில் கடைபிடிக்கப்படும் இந்த சமூக அமைப்பு முறையினை மத நிறுவனம் அங்கீகரித்து வளர்த்தெடுக்கிறது இதுதான் சாதி அமைப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.

நாம் இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதற்காகச் செயல்படுகிறோம். அதற்காக தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழிலாளி மற்றும் இதர பகுதி உழைக்கும் மக்களைத் திரட்ட வேண்டும்.அவர்கள் நமது சமூகத்தில் வர்க்கமாக மட்டும் வாழவில்லை.வர்க்க மூலங்களையும், வர்க்கப் பண்பு நலன்களையும் தாண்டி சாதிய அடையாளத்தையும் கொண்டுள்ளார்கள். அதனையும் கணக்கில்கொண்டுதான், சரியான உத்தியை வந்தடைய முடியும்.”

மேலும், “சாதி என்பது ஆதியில் அமைந்தவர்கள் அமைப்பின் வடிவமாகும். அதற்கு மத அங்கீகாரம் இருக்கிறது. எனவே, மக்களின் உணர்வு நிலையில்,நான் இவ்வாறு பிறந்தேன்; எனவே இந்த சமூக ஒழுங்கை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அது கடவுள்/மதம் எனக்கு பணித்துள்ள கடமை என்ற ஒப்புதலை உருவாக்குகிறது. இதன் உதவியோடு, ஒரு உற்பத்தியாளர் நிர்பந்திக்காமலே அவர் படைக்கும் உபரியைச் சுரண்ட முடிகிறது. சுரண்டப்படும் ஒருவர் தனது உழைப்பின் உற்பத்தி, தன்னுடைய சொத்து அல்ல என நம்புகிறார். தான் வாழும் சமுதாய ஒழுங்கில், எனது உழைப்பால் உருவாக்கப்படும் உற்பத்தி, என்னுடையது அல்ல என நம்புகிறார். எனவே, அதில் வர்க்கத்தின் அம்சம் இடம்பெறுகிறது; சமூக அதிகாரப் படிநிலை அம்சமும் அடங்கியுள்ளது;
மத அம்சமும் இருக்கிறது. இந்த மூன்றின் இணைப்பில் தான் சாதி அமைப்புமுறை பரிணமித்தது.

வரலாற்றில் 'வலங்கை இடங்கை' ஜாதி ...

இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத்தையும் சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்து பார்த்தவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளே, என்றும் அன்றைய காலகட்டத்தில் இயங்கிவந்த முக்கியமான சமூக சீர்திருத்தவாதிகள் சாதிக்கு எதிரான போராட்டங்களில் முன்நின்ற அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட பலரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்தும் விடுதலைப் போராட்டத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டனர். அவர்கள் எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது;
‘பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் என்ன நடக்கும் பிராமணிய கோட்பாட்டின் அடிப்படையிலான முறை தானே வரும்?’
அப்போதிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு இந்த இரண்டு போராட்டங் களையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வலிமையில்லை என்றும் அதன்பிறகு கட்சியின் அனுபவங்கள் குறித்தும் சாதி ஒழிப்பிற்காக பயணிக்க வேண்டிய தேவையை குறித்தும் சொல்கிறார்.

அடையாள அரசியல் எப்படி
தலித், ஆதிவாசி சிறுபான்மையினரை, பல்வேறு அமைப்புகளாக பிரித்து இருக்கிறது என்பதையும் வர்க்க வெகுஜன இயக்கங்களும் சமூகப் பிரச்சினைகளையும் ஆழமாக விவாதித்துக் கொண்டு செல்கிறார்.
நூலின் இறுதியாக …
“புரட்சியை நடத்தி முடித்து விட்டால், சாதி உட்பட எல்லாம் ஒழிந்து விடும் என்று பழைய வாதங்களை நம்பிக் கொண்டிருப்பது தவறு. நாம் முன்னெடுப்பது தலித் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. சாதி அமைப்பையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டமாகும். சாதிப் படிநிலை அமைப்பில், ஒவ்வொரு சாதியும் இன்றொன்றை ஒடுக்குகிறது. தலித் சாதிகளிலும் கூட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. ஒருவர் இன்னொருவரோடு அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். எனவே, தலித் மீதான ஒடுக்குமுறை மட்டுமல்ல; அனைத்து அநீதியான சாதி கட்டமைப்பிற்கும், முடிவு கட்ட வேண்டும் இந்த போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புரிதலும் களத்தில் நமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.”

தோழர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல் என சம்பிரதாயமான சொல்லையே நான் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், சாதி குறித்து நமது ஒவ்வொரு பார்வையும் மாற வேண்டுமெனில் தீவிரமான வாசிப்பு பழக்கம் தேவை. நாம் எதுபோன்ற புத்தகங்களை வாசிக்கிறோம் என்பது முக்கியமானதொன்று அதிலும் சாதி குறித்து படிக்கும்போது மிகவும் தேர்ந்த புத்தகங்களை வாசிப்பது மிகச்சிறந்தது. சாதி நம்மிடமிருந்தும், நம் குடும்பத்திடமிருந்தும் மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் புத்தக வாசிப்பு ஒன்றே சாத்தியப்படுத்தும். எனவே பக்கங்கள் குறைவாக இருக்கும் புத்தகங்களையாவது நாம் தேடி படிப்போமாக.

சாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன ...

‘இந்தியாவில் சாதி முறை: ஒரு மார்க்சிய பார்வை’ என்ற புத்தகத்தை மிக அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ரா.சிந்தனுக்கும்,
இதுபோன்ற ஏராளமான புத்தகங்களை அதாவது பக்கங்களில் குறைவான புத்தகங்கள் மொத்தம் 16 பக்கங்கள் கொண்ட மிக எளிமையான அனைவருக்கும் புரியக்கூடிய நூல்களை வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயத்திற்கும் இச்சமயத்தில் வாழ்த்துக்களும் நன்றியும்.

நூல் : இந்தியாவில் சாதி முறை
ஒரு மார்க்சிய பார்வை
எழுத்தாளர் : பிரகாஷ்காரத்
தமிழில் : ரா.சிந்தன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 5 ரூபாய்.

Leave a Response