Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: டிஜிட்டல் வதந்திகளின் முகமும் முகவரியும் – பழனி ஷஹான்

Spread the love

 

டோப் நிறுவனத்தின் “போட்டோ ஷாப்” மென்பொருளை, இந்த டிஜிட்டல் யுகம் “வதந்திகளுக்கான தோற்றுவாயாக” மாற்றியமைத்துவிட்டது. வீடியோ எடிட்டிங்கிலும் “வதந்தி வல்லுநர்கள்” வாழ்கிறார்கள் என்றாலும், அவை போட்டோஷாப் அளவிற்கு இன்னும் விரிவடையவில்லை. போட்டோஷாப் மென்பொருளைக் கடந்து, ஆண்ட்ராய்ட் ஃபோன் மென்பொருள்களிலும் போலி புகைப்பட வடிவமைப்பாளர்கள் காத்திரமாகவே இயங்குகிறார்கள். வதந்திக் கூட்டங்களுக்கு இப்படியான மென்பொருள்கள் ஒரு வரப்பிரசாதம். இவை இல்லையென்றால் டிஜிட்டல் வதந்தியாளர்களின் கரங்கள் நடுக்கமெடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.

பொதுவாக வதந்திகள் என்பது நீண்ட நெடுங்காலமாகவே மக்களின் வழமைகளில் கரைந்துபோன ஒன்றுதான். நிலாவில் பாட்டி கதை, மரத்திற்குள் வாழும் கன்னிப்பெண், வேப்பமர உச்சியில் பேய் என்கிற வாய்வழி அமானுஷ்ய கதைகள்தொட்டு; “இதை இத்தனை பேருக்குப் பகிர்ந்தால் இத்தனை கோடி நன்மைகள்” என்பதாகவும், “வானில் வட்டத்தட்டு பறந்ததாக நாசா அறிவிப்பு” என்கிற ரீதியிலும் வரிசை கட்டிவந்த குறுஞ்செய்திகள்வரை ஏராளமான வதந்திகளை இந்த உலகம் கண்டிருக்கிறது. இவையெல்லாம் நம்மை “முட்டாளாக்கியும்”, நம்மிடையே “மூடநம்பிக்கையை”ப் பரப்பியும் கடந்துசென்றுவிட்டன. ஆனால் நவீன யுகத்தின் “டிஜிட்டல் வதந்திகள்” அப்படியல்ல.

வாய் வழி வதந்திகளையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொண்டு, வல்லாதிக்கம்பெற்று நிற்கின்றன டிஜிட்டல் வதந்தித் தளங்கள். அரசியல், அறிவியல், ஆன்மீகம், மருத்துவம் என ஏராளமான தளங்களில் போலிச் செய்திகளை நிரப்புகிறார்கள் டிஜிட்டல் வதந்தியாளர்கள். இவர்கள் உருவாக்கிய போலிச் செய்திகளால் ஆட்சி மாற்றங்களே நிகழ்ந்திருக்கின்றனவாம். இவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் மததுவேசங்களைப் பரப்பி, பல மனித உயிர்களையே காவு வாங்கியிருக்கின்ற கொலைக்களங்களாக மாறியிருக்கின்றன.

மனித இனத்தின் ரத்தம் குடிக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ள டிஜிட்டல் வதந்திகளின் முகங்களையும், முகவரிகளையும் தோலுரித்துக் காட்டிவருகிறது ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளம். “வதந்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன? யாரால் யாருக்கு எதிராக உருவாக்கப்படுகின்றன? அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? அவற்றின் உண்மைத் தன்மை என்ன?” என்கிற கோணங்களில் தனது புலனாய்வுகளை மேற்கொண்டு, “உண்மைகளை” வெளிச்சம்போட்டும் காட்டுவதுதான் “ஆல்ட் நியூஸ்” (www.altnews.com) தளத்தின் பிரதான பணி. இந்தத் தளத்தில் பதிவேற்றப்பட்ட வதந்திகளின் வலைப்பின்னல்களை உடைத்து உண்மைகளை உரைக்கும் ஏராளமான கட்டுரைகளிலிருந்து, தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து, ஹார்பர் காலின்ஸ் இந்தியா பதிப்பகம் (HarperCollins India) ஏப்ரல் 2019இல் “India Misinformed” என்கிற ஆங்கில புத்தகத்தை வெளிக்கொண்டு வந்தது.

Ananya Borgohain on Twitter: "Thrilled to share the Tamil ...

பிரதீக் சின்ஹா, டாக்டர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தினை ஜனவரி 2020இல் தமிழுக்குத் தரவிறக்கம் செய்திருக்கிறது “எதிர் வெளியீடு” பதிப்பகம். சமீபத்தில் வெளிவந்த மிகமுக்கியமான இந்தப் புத்தகத்தை, “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்கிற தலைப்பில் தமிழுக்கு மொழிபெயர்த்து நாமும் வாசித்தறியக் கடத்தியிருக்கிறார் இ.பா.சிந்தன். ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்பதையே மறந்து, தமிழில் எழுதப்பட்ட ஒன்றாகவே இதை உணரமுடிகிற அளவிற்கு அமைந்திருக்கிறது சிந்தனின் மொழிபெயர்ப்புத் திறன். எளிய வார்த்தைகளால் புத்தகத்தை விரித்துச் சென்றிருக்கிற சிந்தனின் மொழிபெயர்ப்பு பாணி, அயற்சியற்ற வாசிப்பைப் பரிசளிக்கின்றன.

“மதவெறியைப் பரப்புதல்;வளர்த்தெடுக்கப்படும் மோடி எனும் மாய பிம்பம்; எதிர்க்கட்சியினரை இந்துவிரோதிகளாகச் சித்தரித்தல்; வரலாற்றுத் திரிபுகள்; அவமானப்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு; வதந்திகளை ஒளிபரப்பும் வெகுமக்கள் ஊடகங்கள்; போலிக் கருத்து கணிப்புகள்; அறிவியல் வதந்திகள்” என அடுக்கிச் செல்லும் ஒவ்வொரு பிரிவுகளிலும், வலதுசாரி / வகுப்புவாதிகளின் பித்தலாட்டங்களையும், அதன் நிமித்தம் இங்கு அவர்கள் பெற்ற வெற்றிகளையும், நிகழ்த்திய வெறியாட்டங்களையும் ஏராளமான ஆதாரங்களின் மூலம் அம்பலப்படுத்துகிறது இந்நூல், “பிரதமர் மோடியையும்; பா.ஜ.க.வையும் குறிவைத்தல்” என்கிற பிரிவும் இப்புத்தகத்தில் உண்டு என்றாலும், புத்தகத்தை நிறைத்து நிற்கும் சங்பரிவாரக் கூட்டத்தின் செயல்களுக்கு முன்னால், இது கவனிக்கத்தக்க ஒன்றாக மேலெழும்பவில்லை.

ஏனெனில் சங்பரிவாரத்தின் போலி போட்டோஷாப் வேலைகள் மனித உயிர்களைப் பலிகொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெதிரான அரசியல் களத்தில் நின்று போலிச் செய்திகளைப் பதிவேற்றம் செய்பவர்களின் செயல்கள் அரசியல் காழ்ப்புணர்வுகளை மட்டுமே தீர்த்துக்கொள்வனவாக இருக்கின்றன. எனினும் எல்லாமே போலிச் செய்திகள் என்கிற அடிப்படையிலும், அவை மக்களை முட்டாள்களாக்கி குழப்பமடைய வைக்கின்றன என்பதன் அடிப்படையிலும் இந்தச் செயல்களை யார் செய்தாலும் தவறுதான் என்பதை அறத்தின் பக்கம் நின்று பேசியிருக்கிறது இந்நூல்.

சமூகவலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்றவையே டிஜிட்டல் வதந்தியாளர்களின் முகாம்களாக உள்ளன. டிஜிட்டல் வதந்திகளைப் பரப்புவோர் ஒரு அணியாக அல்லது அமைப்பாகச் செயல்படுகிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சியினரும், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸினரும் மற்றும் இவர்களின் துணை இயக்கத்தினரும்தான் மிகப்பெரும் அளவில் ஈடுபடுகிறார்கள் என்பதை இப்புத்தகத்தின் வழியாக அறியமுடிகிறது. போலிச் செய்திகளை உருவாக்கி, அதைப் பரப்பி பொதுக்கருத்தாக்கி வெற்றிபெறுவதில் பா.ஜ.க. எந்தளவிற்கு வலுப்பெற்றிருக்கிறது என்பதை, அக்கட்சியின் அப்போதைய தேசிய தலைவரும், இன்றைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வெளிப்படையாகப் பேசியதை இந்நூலிற்கான முகவுரையில் இரவிஷ்குமார் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் :

“இரண்டு பெரிய வாட்ஸப் குழுக்களின் வலைப்பின்னல்களை பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கிறது என்றார் அமித்ஷா. அவற்றில் ஒரு வலைப்பின்னலில் பதினைந்து லட்சம் உறுப்பினர்களும்; மற்றொன்றில் பதினேழு லட்சம் வாட்ஸப் உறுப்பினர்களும் இருந்தனராம். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி அளவில், ‘உண்மையை உணருங்கள்’ என்று தலைப்பிட்டு 32 லட்சம் பேருக்கும் செய்தி அனுப்பப்படும். அச்செய்திகள் வாட்ஸப்பில் துவங்கி, அப்படியே பரவி, செய்தி ஊடகங்களையும் சென்றடைந்து செய்தித் தாள்களிலும் அச்சிடப்பட்டு செய்தியாக மாறும். அவற்றில் பலவும் வைரலாகவும் மாறுகின்றன.

Buy India Misinformed: The True Story Book Online at Low Prices in ...

நம்முடைய தொண்டர் ஒருவர், முலாயம்சிங்கை அவருடைய மகனான அகிலேஷ் யாதவ் கன்னத்தில் அறைந்துவிட்டார் என்று ஒருநாள் அக்குழுக்களில் செய்தி அனுப்பிவிட்டார். ஆனால் அப்படியொன்று நடக்கவே இல்லை. முலாயமும், அகிலேஷும் 600 கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறார்கள். இருப்பினும் அப்படி ஒரு செய்தியை நம்முடைய சமூக ஊடகப்பிரிவு பரப்பிவிட்டது. அன்றைய தினம் சுமார் 10 மணி அளவிலேயே என்னுடைய அலைபேசி தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது. சார், முலாயமை அகிலேஷ் அடித்துவிட்டாராமே, கேள்விப்பட்டீர்களா என ஆளாளுக்கு என்னைக் கேட்கத் துவங்கிவிட்டனர். ஆக, அச்செய்தி மிகப்பெரிய அளவில் பரவியிருப்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு பொதுக்கருத்தை நம்முடைய தொண்டர் ஒருவரால் உருவாக்க முடிந்திருக்கிறது பாருங்களேன்!

இவ்வழியில் நம்மால் நல்லதையும் செய்ய முடியும்தான். நல்லதோ கெட்டதோ, இனிப்போ கசப்போ, எப்படியான செய்தியாக இருந்தாலும் நம்மால் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க முடியும் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. வாட்ஸப் குழுக்களின் மூலமாக முப்பத்தியிரண்டு (32) லட்சம் பேரை நம்மால் நேரடியாகச் சென்றுசேர முடிந்திருப்பதாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது” என்றார் அமித்ஷா. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உத்திரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொதுமேடையில் பேசியிருக்கிறார் அமித்ஷா.

முலாயம்சிங்கை அகிலேஷ் அடித்துவிட்டார் என்கிற செய்தி போலியானது என்றாலும், அதில் ஆபத்துகள் ஒன்றுமில்லையே என்பதாகத் தோன்றும். ஆனால் “நம்மால் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க முடியும், அதை உண்மையாக்க முடியும்” என்கிற அமித்ஷாவின் பேச்சு எவ்வளவு ஆபத்தானது என்பதை, இந்நூலில் வரும் அடுக்கடுக்கான போலிச் செய்திகளும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

அக்டோபர் 2018இல் நிகழ்ந்த ‘அமிர்தசரஸ் இரயில் விபத்தை’ ஒரு முஸ்லிம்தான் செய்தார் என்றும்; “இது இரயில் ஜிஹாத்” என்றும் ஒரு வதந்தி பரவுகிறது. “நமாஸ் செய்பவர்கள்மீது மட்டும் ஏன் எந்த இரயிலும் ஏறுவதே இல்லை” என்பதாகவும்; “250க்கும் மேற்பட்டோரை இரயிலேற்றிக் கொன்றவரின் பெயர் ‘இம்தியாஸ்’. மற்ற உண்மைகளை நீங்களே எளிதில் யூகித்துக்கொள்ள முடியும்” எனவும் டிவிட்டரில் ட்வீட் செய்து இந்த வதந்தியை வலுப்பெறச் செய்துள்ளார்கள். இந்தப் போலிச் செய்தியைப் பகிர்ந்த டிவிட்டர் கணக்குகளில் சிலவற்றை பிரதமர் நரேந்திர மோடியே பின்தொடர்பவராக (Follower) இருக்கிறார் எனச் சுட்டிக்காட்டும் ஆல்ட் நியூஸ், அமிர்தசரஸ் இரயில் விபத்திற்கு காரணமான இரயிலை ஓட்டியவரின் பெயர் ‘அரவிந்த் குமார்’ என்பதை ஆதாரங்களுடன் இப்புத்தகத்தின் முதல் கட்டுரையில் கூறியிருக்கிறது.

அமிர்தசரஸ் இரயில் விபத்தை திட்டமிட்ட தாக்குதலாகச் சித்தரித்து, அப்பழியை முஸ்லிம்கள்மீது போட்டதற்கு என்ன காரணமோ, அதே காரணத்திற்காகப் பரப்பட்ட பல வதந்திகளை, உடைத்துக் காட்டியிருக்கிறது இந்நூல். அவற்றில் “கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்து இளைஞர் பரேஷ் மேஸ்தா; பசிரத் கலவரத்தில் தாக்கப்பட்ட இந்துக்கள்; இது அல்லாவின் வெற்றி, இராமனின் தோல்வி; இந்துக்களின் சதைகளை உண்ணும் ரோஹிங்கியா அகதிகள்; சுவாமி விவேகானந்தரின் சிலையைச் சேதப்படுத்திய முஸ்லிம்கள்; சமண மதத்துறவியைத் தாக்கிய முஸ்லிம்கள்” போன்ற கட்டுரைகள் முக்கியாமானவை. முஸ்லிம்களை இந்துவிரோதிகளாகச் சித்தரிக்கும் வதந்திகளுக்கு நிகராகத், தங்களது எதிர்க்கட்சிகளையும் இந்துவிரோதிகளாச் சித்தரிக்க பா.ஜ.க. ஐ.டி. விங்க நிறையவே கட்டுக்கதைகளை பரப்பியிருப்பதையும் ஆல்ட் நியூஸின் கட்டுரைகள் அம்பலப்படுதியிருப்பதை இந்நூல் நமக்கு அறியத் தந்திருக்கின்றது.

Getting to truth of the matter

மததுவேசத்திற்கான போலிச் செய்திகளைப் போலவே, பா.ஜ.க. தங்களது தலைவர்களைத் தியாகச் சீலர்களாகவும், அதிமேதாவி ஆளுமைகளாகவும் காட்டிக்கொள்ளவும் நிறையவே சிரத்தை எடுத்து போட்டோஷாப்பில் களமாடியிருக்கிறது. அவற்றில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியைச் சுற்றி உலக நாட்டின் தலைவர்கள் இருப்பதாகவும், அவருடைய வாயிலிருந்து வந்துவிழுகிற அரும்பெறும் ஆலோசனைகளைக் கேட்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் ஆவலாய் காத்திருப்பதைப் போன்றும் பரப்பட்ட போட்டோ வதந்தியை, உங்களால் சிரிக்காமல் கடக்க முயலுமா என்று தெரியவில்லை. இந்த போட்டோவைப் போஸ்ட் செய்து அதற்குமேல் “நண்பர்களே இந்தப் புகைப்படத்தைக் கவனமாகப் பாருங்கள். இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட பெருமிதமான காட்சியைக் காண்பதற்குத்தானே உங்கள் கண்கள் இத்தனை காலமாய் ஏங்கிக்கொண்டிருக்கும்” என்பதாக எழுதி ட்வீட் செய்திருக்கிறார் மோடி அபிமானி ஒருவர்.

இந்த போட்டோ வைரலாகப் பரவியதை ஒட்டி, இதனை ஆய்வுசெய்துள்ளது ஆல்ட் நியூஸ். அந்த ஆய்வில் இது போட்டோஷாப் மென்பொருளால் போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்த ஆல்ட் நியூஸ், ‘இந்தப் புகைப்படம் 2017ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் தேதி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற ‘ஜி-20’ நாடுகளுடைய தலைவர்களின் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம் என்றும்; இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் துருக்கியின் அதிபர் எர்டோகானும் பேசிக்கொண்டிருக்க, அருகில் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் இருந்திருக்கிறார் என்பதை ‘பிசினஸ் இன்சைடர்’ எனும் பத்திரிகை வெளிப்படுத்திவிட்டதை, ஆல்ட் நியூஸ் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும் ‘கெட்டி இமேஜஸ்’ நிறுவனத்திற்காக ‘காயன் ஓசர்’ என்கிற புகைப்படக்கலைஞர் எடுத்த இந்தப் புகைப்படத்தில், மோடி உட்கார்ந்திருப்பதாக எடிட் செய்யப்பட்டுள்ள நாற்காலி, காலி நாற்காலி எனவும் நறுக்கென்று குட்டும் உண்மை உடைத்துப் போட்டிருக்கிறது இக்கட்டுரை.

இந்தப் புகைப்படத்தைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியை வானாளாவப் புகழ்ந்தும்; அவர் கண்ணசைத்தால் அமெரிக்காவும் சீனாவும் நடுநடுங்கிப் போய்விடும் என்பதாகவெல்லாம் பில்டப்பைக் கொடுத்தும் பரப்பட்டும் வேறுசில கட்டுரைகளையும், “வளர்த்தெடுக்கப்படும் மோடியென்கிற மாய பிம்பம்” என்கிற பகுதியில் பதிவுசெய்திருக்கிறது இப்புத்தகம். ஒரு பக்கம் மோடிக்கு பில்டப்பை ஏற்றிக்கொண்டே, மறுபக்கம் ராகுல் காந்தியை டம்மியாக்கும் போலிச் செய்திகளைப் பரப்புகின்ற வேலைகளையும் சங்பரிவாரத்தினர் சங்கடமே இன்றிச் செய்திருப்பதையும் இந்நூலின் கட்டுரைகள் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கின்றன.

ராகுல் காந்தியை ‘பப்பு’ எனக் கிண்டலடித்துச் சிறுமைப்படுத்தும் உத்திக்கு நிகராக, ஜவஹர்லால் நேருவை மோசமான நிர்வாகம் செய்த பிரதமராகக் காட்டுவதிலும் பா.ஜ.க.வின் ஐ.டி. படை கில்லாடிதான். நேருவை பெண் பித்தராகவும், இந்திய நாட்டின் நலன்களுக்கு எதிரானவராகவும் சித்தரிப்பதையும் சிரத்தையோடு செய்துவருகிறார்கள். அவற்றில் ஒருசிலவற்றைப் பட்டியலிட்டு, அதன் போலித்தன்மைகளைச் சில்லுசில்லாக நொறுக்கியிருக்கிற இப்புத்தகம், பா.ஜ.க.வின் “வரலாற்றுத் திரிபுகளையும்” தனிப் பகுதியாக்கி, அதன் பித்தலாட்டங்களையும் விடாது துரத்தி அடித்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தின் இறுதிப் பகுதியில் “அறிவியலின் பெயரால் நிகழ்த்தப்படும் வதந்திகளை”ப் பற்றிய ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இக்கட்டுரைகளைத் தொகுத்துள்ள டாக்டர் சுமையா ஷேக் : “அறிவியலில் குழப்பம் ஏற்படுத்தி, வதந்திகளைப் பரப்பி, அரசியல் ஆதாயம் தேடுவது இந்தியாவிற்குப் புதிதாகத் தோன்றினாலும், உலகின் பல நாடுகளிலும் அதிதீவிர வலதுசாரிகள் ஏற்கனவே இதனைத் துவங்கிவிட்டனர். இனத் தூய்மைவாதத்தை நடைமுறைப்படுத்தியதில் தொடங்கி, மருத்துவ ஆய்விற்காகச் சிறுபான்மையினரைத் துன்புறுத்திய ஹான்ஸ் ஆஸ்பர்ஜஸின் ஆய்வுகளில் பயணித்து, சமீபத்திய ஆல்ட் – ரைட் (வலது மாற்று) இயக்கங்கள் வரையிலும் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது வலதுசாரிகளுக்கு விருப்பமான ஒன்றாகவே இருந்து வருகிறது” என இந்நூலின் அறிவியல் பகுதிக்கான தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

TNIE Podcasts | Decoding fake news this election season- The New ...

அவரின் முன்னுரையில் “இந்தியாவிற்கு இது புதிது” என்பதைச் சொல்லியிருப்பதைக் கவனிக்கலாம். “வேத காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோம்; ஆகாய விமானத் தொழிட்நுட்பம் ஆயிரமாண்டுகளுக்கு முன்பே வைத்திருந்தோம்” என நாகூசாமல் கதையளப்பதை, அதுவும் அறிவியல் மாநாட்டிலேயே பேசுவதை இந்தியாவில் நாம் அண்மைக் காலத்தில்தான் சகிப்போடு பார்த்துவருகிறோம். ஆனால் இந்தியாவிற்கும் முன்பே சில வலதுசாரி தலைவர்கள் உலகில் இப்படி உளறிக்கொண்டிருப்பதை டாக்டர் சுமையா ஷேக்கின் கூற்றின் வழியே அறியமுடிகிறது.

“தடுப்பூசி போடாதீர்கள்” என்கிற பிரச்சாரத்தின் மூலம் ஏற்படும் சிக்கல்களையும், தடுப்பூசி போடுவதனால் உண்டாகும் நலன்களையும் பற்றியதே அறிவியல் பகுதியின் முதல் கட்டுரை. “தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள்” என்கிற கட்டுரை மிகவிரிவான விளக்கங்களோடு இந்த வதந்தியை உடைத்திருக்கிறது. இதைப்போலவே “டெங்குவை ஒழிக்குமா பப்பாளியும், கேரிபிள் மாத்திரையும்; மலேரியாவைக் குணப்படுத்துவதாகக் கூறப்படும் ஆயுஷ் – 64; மனச்சோர்வு – உயிரியல் மூலமாகவும் வருவதற்கான ஆதாரங்கள்” என்கிற கட்டுரைகள், அறிவியல் வதந்திகளுக்கு எதிராக ஆல்ட் நியூஸ் மேற்கொண்ட ஆய்வுகளின் தரவுகளால் நிறைந்திருக்கின்றன. இந்தியாவில் இப்படியான அறிவியல் வதந்திகளுக்கு, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும், பிரதமர் மோடியுமே துணையாக நின்று பிரச்சாரம் செய்வதை இக்கட்டுரைகளில் காணமுடிகின்றது.

328 பக்கங்களைக்கொண்ட இந்நூலில் மொத்தம் 82 கட்டுரைகளும், அவற்றிற்கான ஆதாரச் சுட்டிகளும் புகைப்படங்களும் மிகைத்திருக்கின்றன. ஒவ்வொரு போலிச் செய்திகளின் பின்னணிகளையும் அழுத்தமான ஆதாரங்களோடு முறியடிக்கிற ஆல்ட் நியூஸின் இக்கட்டுரைகள், போலிச் செய்திகளை அடையாளம் காணுகிற வழிமுறைகளையும் ஆங்காங்கு கற்றுத் தருகிற பணியையும் செய்திருக்கிறது. போட்டோஷாப் மென்பொருளால் எடிட் செய்யப்பட்ட போலி புகைப்படத்தின் உண்மைத்தன்மையக் கண்டறிய, ‘கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’ (Google Reverse Image Search) உதவும் என்பதை அநேக இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. மேலும் ஒரு செய்தியை ஆராயும்விதங்களையும், அப்படி ஆராயமல் பகிர்வதன் ஆபத்துகளையும் ஒருசேர நமக்கு எடுத்துரைத்திருக்கிறது இந்நூல்.

சங்பரிவார வலதுசாரிகள் உருவாக்கும் போலிச் செய்திகளை, அரசியல் விழிப்புணர்வற்ற சாமானியர்கள் பகிர்வதற்கு நிகராக, நடப்புச் சூழல்களை அடிக்கடி அறிந்துகொள்ளும் சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களும் பகிரவே செய்கின்றனர். இதில் வேண்டுமென்றே விசமத்தனமாகப் பரப்புகிறவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், ஒரு செய்தியைப் பற்றிய எந்த ஆய்வையுமே செய்யாமல் வெறுமனே ஆர்வக்கோளாறாகப் போலிச் செய்திகளை முண்டியடித்துக்கொண்டு பரப்புவோர் வலதுசாரிகளுக்கு எதிரான முகாம்களிலும் இருப்பதை பெரும்பாலும் முகநூலில் காணமுடியும். இந்த நூலை வாசிப்பவர்கள் கட்டாயம் இதிலிருந்து ஒருவிதத்தில் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் பெறமுடியும் என்றே கருதுகிறேன். நாம் வாழும் காலத்தில் நம்மைச் சுற்றிப் பின்னப்படுகிற சூழ்ச்சிகளை உடைத்துக் காட்டும் “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்கிற இப்புத்தகம் நம் அறிவை விரிவுசெய்யும்!

பழனி ஷஹான்

புத்தக விவரம் :

பெயர் : இந்தியா ஏமாற்றப்படுகிறது

ஆசிரியர் : இ.பா.சிந்தன்

விலை : ரூ. 320

கிடைக்குமிடம் : எதிர் வெளியீடு,

96 ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642 002

அலைபேசி : 99425 11302

Leave a Response