Book Review

நூல் அறிமுகம்: கிறித்தவர்களின் சொல்லப்படாத சுதந்திரப் போராட்ட வரலாறு..! – சாவித்திரி கண்ணன்

104views
Spread the loveகாலத்தின் தேவையாக இந்தப் புத்தகம் என் கண்களில் பட்டது! நம்மில் பெரும்பாலானோருக்கு வெள்ளைக்காரன் கிறித்தவனாக இருந்ததால், இங்குள்ள கிறித்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் அவ்வளவாகப் பங்கெடுத்திருக்க வாய்ப்பில்லை என பொதுவான ஒரு புரிதல் உள்ளது! ஏனென்றால் வெள்ளைக்காரனால்தான் இங்குள்ள கிறித்தவர்களுக்குக் கல்வி பெறும் வாய்ப்பு, அரசாங்க வேலை, சமூக அந்தஸ்து எனப் பல விஷயங்கள் சாத்தியமானது! ஆன போதிலும் கூட, மேலை நாட்டுக் கல்வியால் கிடைத்த சுதந்திர உணர்வு, ஜனநாயகப்பண்பு, சமத்துவ கோட்பாடு ஆகியவை இயல்பாக அவர்களுக்குள் ஒரு விடுதலை வேட்கையை ஏற்படுத்தி, பிரிட்டிஷாருக்கு எதிராகவே போராட வைத்துள்ளது என்பதை அறியும் போது சிலிர்ப்பு ஏற்பட்டது!

இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாறு என்பது வெறுமனே இந்துக்களை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தியதல்ல. அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்தும், சீக்கியர்களின் பங்களிப்பு குறித்தும் கூட பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் கிறித்தவர்களின் பங்களிப்பு குறித்த தகவல்கள் இது வரை இந்த நூலைப் போன்று காத்திரமாக வெளிப்படவில்லை. அதனால் கிறித்தவர்களில் பெரும்பாலானவர்களே கூட இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் சமூகத்தின் பங்களிப்பு குறித்து போதுமான ஞானம் இல்லாதவர்களாகவே இருந்தனர். இன்றும் இருந்து கொண்டுள்ளனர். இந்த நூல் இந்த அறியாமை இருளிலிருந்து கிறித்தவர்களை மட்டுமல்ல, அனைத்து சமூகத்தினரையும் மீட்டெடுக்கும் என்பதில் பெரும் நம்பிக்கை கொள்ளலாம்!

ஊமைகளாக்கப்பட்ட உண்மைகளை

இருட்டடிக்கப்பட்ட வரலாற்றுத் தரவுகளை

புதைந்துபோன புனிதர்களின் தியாகங்களை

மதமாச்சரியத்தால் மறைக்கப்பட்ட –

மறக்கக் கூடாத – தியாக வரலாறுகளை…

ஓடி ஓடி அலைந்து,

தேடித்தேடித் திரிந்து

ஆவணப்படுத்தியிருக்கிறார் முனைவர் எம்.ஏ.சேவியர்.

இதன் மூலம் மாபெரும் வரலாற்றுச் சேவையை இந்தியச் சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ளார். ‘இந்திய விடுதலை போராட்டமும் கிறித்தவர்களும்’ என்ற இந்த நூல் படிக்கப்படிக்கப் பரவசம் தந்தது. காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடுள்ளவன் என்ற வகையில் காந்தியுடன் இணைந்து பணியாற்றிய ஜே.சி.குமரப்பா, சி.எப்.ஆன்ட்ரூஸ் போன்றவர்களையும், அவரது தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் உறுதியாகப் பங்கெடுத்த ஜோசப் இராயப்பன், லாசரஸ் போன்றவர்களையும், லண்டனிலிருந்து இந்தியா வந்து கடைசி வரை காந்தியின் சீடராக அவரது அனைத்து பணிகளிலும் பங்கெடுத்த மெடலின் என்ற பெயர் மறைந்து மீராபென் என்பதாகவே அறியப்பட்ட அருமைச் சகோதரியையும், ரோசாப்பூ ராசா என்றழைக்கப்பட்ட மதுரை ஜார்ஜ் ஜோசப்பின் மகத்தான தியாகங்களையும் நான் ஓரளவு அறிந்தவன் என்றாலும் கூட, இந்த நூல் எனக்கு இந்திய வரலாறு குறித்த, நான் அறிந்திராத – ஆனால் அறிந்திருக்க வேண்டிய – ஒரு முக்கிய பகுதியை அறியக்கொடுத்தது!

நாட்டின் வளர்ச்சிக்குக் கிறித்தவர்களின் பங்களிப்பு என்ற முதல் அத்தியாயமே அபாரம். இந்தியத் தேசம் என்ற ஒன்று கட்டமைக்கப்பட்டதில் அதுவும் அது கல்வி, ஆரோக்கியம், ஒடுக்கப்பட்டவர்களின் மீட்சி, சமத்துவ உணர்வு, சமூகநலம், கலை, வரலாற்று ஆய்வு என்று பரந்துபட்ட தளத்தில் உருவாக்கிய வளர்ச்சி – இவற்றிலிருந்து கிறித்தவர்களைப் பிரித்துப்பார்க்கவே முடியாது. இது இதயமுள்ள எந்த இந்தியனும் ஏற்றுக்கொண்ட உண்மையே! இந்த உண்மையைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளார், ஆசிரியர்.

அரசியல் வேர்களைத் தேடி என்ற இரண்டாவது அத்தியாயமானது சுதந்திரப் போராட்டத்தின் துவக்கத்திற்கே அல்லது அது துளிர்விடுவதற்கே கிறித்தவர்கள் ஆற்றிய பணியை விவரிக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலைக் கொதிப்புடன் விவரிக்கும் அதே தருணத்தில் இன்றைய உலகமயமாதல் சூழலில் அதுவே வேறொரு வடிவத்தில் நடக்கிறது என்பதையும் ஒப்புநோக்கி நிகழ்காலத்திற்கான விழிப்புணர்வையும் சேர்த்தே உண்டாக்குகிறார் ஆசிரியர். இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

முதன்முதல் எழுந்த அந்நிய எதிர்ப்பே அருட்பணியாளர்களான பாதிரியார்களால் 1787ல் நிகழ்த்தப்பட்டது. அது பிண்டோ புரட்சி என்றழைக்கப்பட்டது என்ற தகவலும் அடுத்த புரட்சி ஆதிவாசிகளான முண்டா இன மக்களால் மத்திய இந்தியாவான பீகாரில் ஆதிவாசிகளால் நிகழ்த்தப்பட்டது என்பதையும் அறிந்தபோது இதயம் சிலிர்த்தது.

மூன்றாவது அத்தியாயமான ‘தொடக்கக்கால போராட்டங்களில்’ என்ற தலைப்பின் கீழ் வரும் நான்கு கட்டுரைகளும் தனிச்சிறப்பு. காந்தியின் தலைமை ஏற்ற கிறித்தவ ஆளுமைகளைப் பட்டியலிட்டுள்ளார். அத்துடன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி சட்ட மறுப்பு இயக்கம் வரை பங்கெடுத்த அநேக கிறித்தவ சமூகத்து ஆளுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நான்காவது அத்தியாயமான தமிழகத்தலைவர்களான சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த மாசிலாமணி, வலோரியன் பெர்னாண்டோ தொடங்கி தியாகி பெஞ்சமின், தியாகி குழந்தைச்சாமி வரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட தியாக சீலர்களை படம்பிடித்துக் காட்டியுள்ளார். ஐந்தாவது அத்தியாயத்தில் இதழியல் தளத்திலும், அறிவுத் தளத்திலும் இயங்கிய கிறித்தவ ஆளுமைகளை அடையாளப்படுத்தியுள்ளார். மாணவர் இயக்கங்களிலும், தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்திலும், 1942ன் ஆகஸ்டு புரட்சியிலும் பங்கெடுத்த அளப்பரிய கிறித்தவ ஆளுமைகளைப் பதிவுசெய்துள்ளார். இத்துடன் நில்லாமல் ஆட்சியிலும் அரசியல் சாசன உருவாக்கத்திலும் பங்கேற்ற மாபெரும் கிறித்தவ ஆளுமைகளையும் அவர் தேடிக் கண்டடைந்துள்ளார்.

இந்தியாவை அடிமைத்தளையில் வைத்திருந்த பிரிட்டிஷார் கிறித்தவர்களே! எனவே இந்தியாவில் மதம் மாறிய கிறித்தவர்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களை எதிர்க்கத் துணியாமல் ஒரு மௌன சாட்சியாகவோதான் இருந்திருக்கக்கூடும் என்ற பொதுவான புரிதலைத் தவிடுபொடியாக்கியது மட்டும் இந்நூலின் சிறப்பல்ல. மாறாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கிறித்தவத்தைப் பரப்புவதற்காக வந்த எண்ணற்ற மிஷினரிகளும் அதில் பணியாற்றிய பாதிரியார்களும் கூட சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுத்ததையும், அதனால் அல்லலுற்றதையும் ஆசிரியர் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதியுள்ளார். ஸ்டாலின்ஜோன்ஸ், ஜி.பி.ஹால்ஸ்ட், ரெஜினால்டு ரெனால்டுஸ், ஜாக்ஜே.சி.வின்ஸ்லோ, வெரீர்எல்வின், சி.பி.எங்…… உள்ளிட்ட எத்தனையோ இதயமுள்ள கிறித்தவ பாதிரியார்களின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பு இதுவரையிலான வரலாற்றுப்பக்கங்களிலிருந்து விடுபட்ட அவலத்தை என்னென்பது?

1930ல் பற்பல திருச்சபைகளை நடத்தும் சுமார் 200 மிஷினரிகள் ஒன்று கூடி இந்தியச் சுதந்திரத்திற்கு ஆதரவாக, இந்தியமக்களின் பக்கம் சார்ந்து வெளியிட்ட அறிக்கை மறக்கமுடியாத அதிசய நிகழ்வாகும். இதன்மூலம் இரக்கமும், கருணையும் மட்டுமின்றி, நியாய உணர்வுக்கும் சமரசமின்றி மதிப்பளித்த அந்த முன்னோடி பாதிரியார்களின் நேர்மை உணர்வு வியப்பளிக்கிறது.மொத்தத்தில் இந்தியா என்ற தேச கட்டமைப்பின் சகலதளங்களிலும் கிறித்தவ மக்களும் மற்ற மக்களின் பங்களிப்புக்குச் சற்றும் குறையாமல் பங்காற்றியுள்ளனர் என்பதையும், இந்தியாவின் சகல அம்சங்களிலும் இரண்டற கலந்துள்ளனர் என்பதையும் நாம் ஆழமாக உணரமுடிகிறது.

இந்நூல் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இடம்பெற வேண்டும். இதன் சில அம்சங்களைப் பாடத்திட்டத்திற்கும் பயன்படுத்தலாம். இனி ஒவ்வொரு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினவிழாக்களின் போதும் இச்செய்திகள் மீண்டும், மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். குறிப்பாக இன்றைய சூழலில் அச்சத்திற்கு ஆளாகியிருக்கும் கிறித்தவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் கிறித்தவ பாதிரியார்கள் திருச்சபை கூட்டப் பிரசங்கங்களின்போது இச்செய்திகளைப் பெருமிதத்துடன் பறைசாற்ற வேண்டும். இந்த நூல் பன்முகத்தன்மைகொண்ட இந்தியச் சமூகங்களிடையில் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தும். இதைப் படிக்கும் உண்மையான தேசபக்தர்கள் கிறித்தவ மக்களிடம் இதுவரை காட்டிய அன்பையும், நேசத்தையும் இன்னும் கூடுதலாக்கிப் பகிர்ந்து மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நூலாசிரியர் எம்.ஏ.சேவியர்: கல்வியாளர், பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர், திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் முதல்வர், சென்னை இலொயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர், பல சர்வதேச கருத்தரங்குகளில் உரையாற்றியவர், ஒன்பது நூல்களின் ஆசிரியர்.

புத்தகம் : இந்திய விடுதலைப் போராட்டமும், கிறித்தவர்களும்

ஆசிரியர் : எம்.ஏ.சேவியர்

வெளியீடு : வைகறை பதிப்பகம்

6,மெயின் ரோடு,திண்டுக்கல்.

விலை : ரூ.150/-

தொலைபேசி : 0451- 2430464.

https://aramonline.in/1326/christiansfreedomfighters-christians/ 

 

Leave a Response