Book Review

நூல் அறிமுகம்: இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு – ம. சுரேந்திரன்

Spread the love

 

14 பயணியர் பெட்டிகளை இழுத்துக்கொண்டு மூன்று நீராவி இன்ஜின்களுடன் மதியம்  3.30  மணிக்கு போர்பந்தரில் இருந்து 24 மைல் தொலைவு உள்ள தானேக்கு முதல் இந்திய ரயில் பயணப்பட்டது. மூன்று நீராவி இஞ்சின்களுக்கும் சாஹிப், சிந்து, சுல்தான் என பெயரிடப்பட்டு இருந்தது.  35 மைல் வேகத்திற்கும் குறைவான வேகத்தில் ஓடிய இந்த ரயில் தானே நகரம் சென்றடைய 55 நிமிடங்கள் ஆனது. இடையில் “சையன்” என்ற ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு நீராவி இஞ்சினுக்கு நீர் நிரப்பி இஞ்சின் சக்கரங்களுக்கு கிரிஸ் பூசப்பட்டது. இந்த ரயில் புறப்பாட்டை பார்த்து ரசிக்க சிந்து, காபூல், மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா, அரேபியா, ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு கடற்கரை நாடுகள் என உலகெங்கிலும் இருந்து அயல் நாட்டினர் வந்து இருந்தனர். கிரேட் இந்தியன் பெனிசுலார் ரயில்வே கம்பெனியின் இயக்குனர்களும் இந்திய தலைமை நீதிபதியும் விழாவில் பங்கேற்றனர்.

இப்படி தொடங்கிய இந்திய ரயில்வே கடந்த 167 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. குழந்தையாய் பிறந்து பெரும் அசுரனாய் வளர்ந்து நிற்கும் இந்திய ரயில்வேயின் கதையை சுவாரஸ்யமாய் சொல்வதுதான் இந்த நூல்.

1853க்கு முன்பே சென்னையில் ரயில் ஓடத்துவங்கியது என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை. 1830ல் மெட்ராஸ் பிரசிடன்சியில் சாலை அமைக்கும் பணியை வெள்ளையர் தொடங்கினர். சாலை அமைக்க மூலப்பொருட்களை கொண்டு வரும் செலவு மிகுதியாய் இருந்தது. எனவே ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து மூலப்பொருட்களை கொண்டு வர வசதியாக 1837ல் ரெட்ஹீல்சிற்கும் ரயில்ரோடு செயல்பட துவங்கியது. பரங்கிப்பேட்டையில் இருந்த தொழிற்சாலையில் பாரஞ்சுமக்கும் வண்டிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் தண்டவாளத்தில் ஓடிய இந்த சரக்கு பெட்டிகளை இழுக்க இஞ்சின்களுக்கு பதிலாக மனித சக்தி/குதிரைகள் பயன்பட்டன. சிறிது காலத்திலேயே சரக்கு பெட்டி பயணியர் நான்கைந்து பேர் உட்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஸ்பிரிங் இணைப்பு கொடுத்து சொகுசுப் பயணமாக மாற்றப்பட்டு 12 மைல் வேகத்தில் பயணப்பட்டது. பின்னர் அமெரிக்க நிவாரீக் ரயில்ரோடு நிறுவன ஆவரி ரோட்டரி இஞ்சினை ரயில் இஞ்சினாக கேப்டன் காட்டன் என்பவர் வடிவமைத்து வெற்றி கண்டார். இந்த ஜெனரல் சர்.ஆர்தர் கேப்டன்தான் திருச்சி முக்கொம்பு அணையையும் ஆந்திராவில் தெல்லீஸ்வரம் அணையையும் கட்டியவர். இப்படி இந்த நூல் முழுக்க விரவிக் கிடக்கும் சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

இந்திய ரயில் போக்குவரத்தின் ...

*இங்கிலாந்தின் தொழில் அதிபர்களும் முதலாளிகளும் இந்தியாவில் இருப்புபாதை வசதிகளை ஏற்படுத்த இங்கிலாந்து அரசை நிர்ப்பந்தித்தனர்.

* டல்ஹவுசி பிரபுவே இந்தியாவின் இருப்புப்பாதை அமைப்பின் தந்தை என போற்றப்படுகிறார்.

* டல்ஹவுசி 216 பக்கங்கள் கைப்பட எழுதிய ரயில்வே மினிட்ஸ் இந்திய ரயில்வேயின் “மஹாசாசனம்” எனப்படுகிறது.

* 1853 முதல் 1869க்குள் 16 ஆண்டுகளில் 4225 மைல் தொலைவு ரயில்வே சேவை உண்டானது.

* இந்திய ரயில் சேவையின் முக்கிய ஆறு வழித்தடங்களில் மெட்ராஸ் வழி பேங்களுர், மைசூர், காலிக்கட் மற்றும் மெட்ராஸ் to திருச்சி, திருநெல்வேலி ஆகியவை முக்கியமானதாக இந்திய ரயில் சேவையின் தலைமகன் ஸ்டீவன்சன் குறிப்பிட்டிருந்தார்.

* பம்பாய்க்கும் கல்கத்தாவிற்கும் ரயில் பெட்டிகளும் நீராவி இஞ்சின்களும் இங்கிலாந்திலிருந்து கப்பலில் அனுப்பப்பட்டன. இஞ்சின்களுடன் கல்கத்தா வரவேண்டிய HMS  குட்வின் என்ற கப்பல் தவறுதலாக ஆஸ்திரேலியா போய்விட்டது. ரயில் பெட்டிகளை சுமந்த கப்பல் கடலில் மூழ்கியது. எனவேதான் முதன் முதலில் ரயிலை யார் இயக்குவது என்ற போட்டியில் பம்பாய் முந்தியது.

* 15.08.1854ல் ஹவுராவில் இருந்து 24 மைல் தூரத்தில் உள்ள ஹூக்ளி வரை செல்ல 91 நிமிடங்கள் ஆனது. இதில் 3 முதல் வகுப்பு, 2 இரண்டாம் வகுப்பு, 3 மூன்றாம் வகுப்பு, 1 கார்டு வேன் இணைக்கப்பட்டு இருந்தது. இந்தப் பயணிகள் பெட்டிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

* 121 மைல் தூரமுள்ள ஹவுரா – பர்த்வான் ரயில் சேவை 3-2-1855 அன்று தொடங்கப்பட்டது. 1855ல் இதில் 6,17,281 நபர்கள் பயணித்தனர். 1 லட்சம் டன் நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்டது.

Steam Engine. Steam Locomotive. Historic Stock Footage Video ...

* சென்னை – பம்பாய் வழிதடத்தில் உள்ள போர்காட் கணவாய், கல்கத்தா – பம்பாய் வழிதடத்தில் உள்ள தால்காட் கணவாய் பகுதிகளில் உள்ள ஏற்ற இருப்பு பாதை ஆங்கிலேயப் பொறியாளர்களின் திறமைக்கும் ஏகாதிபத்திய வலுவுக்கும் சான்றாகும். இவை கட்டி முடிக்கப்பட 20 ஆண்டுகள் ஆயின. கிட்டத்தட்ட 1 கோடி தொழிலாளர்கள் உழைப்பினால் இவை உருவாயின.

* சிப்பாய் கலகத்தை முன்னிட்டு 7.7.1857 அன்று அலகாபாத் பார்வாரி கிராமத்தில் பணியில் இருந்த ஆங்கிலேய ஊழியர்கள் கலகக்காரர்களால் தாக்கப்பட்டனர். தப்பிய 14 ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் அருகில் இருந்த 16 அடி உயர ரயில்வே நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தப்பித்தனர். கையில் இருந்த துப்பாக்கி மற்றும் வீசி எறிந்த 3000 ரூபாய்  பணம் மூலம் தாக்குப் பிடித்தனர். அவர்கள் கீழிறங்கி வந்து இஸ்லாமியராகிட சம்மதித்தால் உயிருடன் விட்டு விடுவதாக பேரம் பேசப்பட்டது. 9.7.1857 மாலை 4 மணிக்கு அவர்கள் ஆங்கிலேய சிப்பாய்களால் மீட்கப்படும்போது மிசஸ் ரயோஸ் என்ற ஆங்கிலேய பெண் மரணமடைந்தார்.

* 26.3.1859ல் வில்லியம் இவான்ஸ் என்ற கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியின் ஜபல்பூர் தலைமை பொறியாளர் கலகக்காரர்களால் விரட்டப்பட்டு வேலால் குத்தி, பின் தலையை துண்டித்து கொல்லப்பட்டார்.

* 19.7.1867 அன்று 135 அடி உயரமுள்ள போர்காட் கணவாய் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது. குறைபாடுடைய கட்டுமானமே இது இடிந்ததற்கு காரணம். ஆனால் பாலம் இடிவதற்கு முன்பே அருகில் உள்ள மக்கள் பாலத்தில் விரிசல் உள்ளதாக புகார் அனுப்பினர். அதற்கு காரணமாக அவர்கள் கூறியதுதான் விந்தை. அதாவது பாலத்தின் அடிதளத்தில் குழந்தைகளை புதைத்து உயிர்பலி கொடுக்காததுதான் பால விரிசல்களுக்கு காரணம் என்று கூறினர்.

* 8.11.1875 இந்தியா வந்த இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் 17 வாரங்கள் இந்தியா முழுக்க ரயிலில் சுற்றினார். முதன்முதலாக தூத்துக்குடியில் இருந்து சென்னை கிளம்பிய ரயிலில் பயணப்பட்டார். வழியில் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் எட்டயபுர மைனர் ஜமீந்தார் இளவரசருக்கு விருந்தளித்தார்.

* ரயிலில் மின்விசிறி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு பயணியர் பெட்டி ஜன்னல்களில் ஈரமாயிருக்கும் தென்னந் தட்டியை கட்டும் வழக்கம் இருந்தது.

* 1871ல் ரயில்வே நீளம் 5074 மைல். இது 1905ல் 26955 மைல் என உயர்ந்தது. எனவே ஊழியர் எண்ணிக்கையும் 68517ல் இருந்து 4,37,535 ஆக உயர்ந்தது.

* 50 மைல்களுக்கு மேல் பயண தொலைவு கொண்ட ரயில் பெட்டிகளில் கீழ் வகுப்பு பயணியர் பெட்டிகளில் கழிப்பறை வசதி 1907ல் அறிமுகப்படுத்தப் பட்டது.

* 1935ல் 150 ரயில்வே கம்பெனிகளை அரசு தன் வயப்படுத்தியது. 1935ல் இந்திய ரயில்வே சேவை ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இணையாக இருந்தது.

Indian Railways - Facts

* தாஜ்மகாலுக்கு அடுத்து மிக அதிக அளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட கலை கட்டுமானம் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையமாகும். இது 1878ம் ஆண்டு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்திய பாரம்பரிய கட்டுமான கருத்துருக்களை  ஹை விக்டோரியன் கோதிக் ரிவைவல் கட்டுமான பாணியுடன் ஒன்றிணைத்து கட்டப்பட்டதுதான் விக்டோரியா டெர்மினஸ். நுழைவாயில் தூண்களில் உள்ள சிங்கமும் புலியும் முறையே கிரேட் பிரிட்டனையும் இந்தியாவையும் குறிப்பனவாகும்.

* ரயில் நிலைய நடைமேடைகளில் சொற்பொழிவாற்றிய மகாத்மா அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் நன்கொடை தொகை கொண்டு வரச் சொல்லி பேசினார்.

* 25.09.1917ல் காந்தி எழுதியது:  பயணிகளுக்கு தேநீர் என்ற பெயரில் கழனித் தண்ணீர்தான் கிடைத்தது. தூசும் தும்புமாய் சர்க்கரை, பால் என்னும் பெயரில் வெள்ளை திரவம்… கழிவறை தொட்டியில் தண்ணீர் இல்லை. பயணச் சீட்டும், அமருமிடமும் பெற கையூட்டு கொடுத்த சக பணி……” என்று குறிப்பிடுகிறார்.

KALIGHAT FALTA RAILWAY (KFR) | Indian railways, India railway ...

* பம்பாய் புறநகர் ரயில் சேவை 1928ல் முழுமையாக மின்சார மயமாகியது. உலகளவில் இது முதல் முயற்சியாகும்.

* இந்திய ரயில்வே துறை மெல்ல தளிர் நடை போட்டு வளர்ந்த கதையை சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் மிக்க நடையில் இந்த நூல் சொல்லிச் செல்கிறது. கூடவே ஆங்கில ஏகாதிபத்தியத்தின் உள்நோக்கங்களையும் அது அழுத்தமாக காலூன்ற எடுத்த முயற்சிகளையும் ரயில்வேயின் வரலாற்றோடு கதை போல் சொல்கிறது. ரயில்வே திட்டங்களில் பெரும் சவாலாக இருக்கும் முதலீட்டு பிரச்சினைகள், தனியார் மயம் நுழைந்த கதை, ரயில் ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நிதி மற்றும் நிர்வாக பிரச்சினைகளில் வெள்ளையர் கொண்டு வந்த சீர்திருத்தங்களும் விபரமாக சொல்லப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான ரயில்வே வளர்ந்த கதை இந்திய சுதந்திர போராட்டம் போல அனைவரும் படித்தறிய வேண்டிய ஒன்றாகும்.

நூலாசிரியர்கள் இருவரும் ரயில்வே ஊழியர்களின் மகன்கள் என்பது பெருமைக்குரிய செய்தி.

——

இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு

பேராசிரியர்கள்: பொ.முத்துக்குமரன் ,ம.சாலமன் பெர்னாட்ஷா

வெளியீடு: NCBH பதிப்பகம் 

1 Comment

 1. ரெட் ஹில்ஸ் ரோட் ரயில்வேஸுக்கு வடிவம் கொடுத்ததே சர் ஆர்தர் காட்டன்தான். அவர் டாஸ்மேனியா போகாமல் இருந்திருந்தால் மதராஸில்தான் முதல் பயணிகள் ரயில் ஓடியிருக்கும். அவர் திரும்பி வந்ததும் கோதாவரி திட்டத்தில் இது போன்ற ரயில் சரக்கு போக்குவரத்தை அறிமுகம் செய்தார்.

  ரெட் ஹில்ஸ் ரயில் செங்குன்றத்தில் கோச்சரன் கால்வாயெனும் பக்கிங்காம் கால்வாய் வரையிலும்
  மதராஸில் கூவத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் சாலை வரையிலும் மொத்தமாக ஏழெட்டு கிலோ மீட்டர் தொலைவு அமைக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் ஓடிய முதல் ரயிலாகவும் அமைந்தது.

  ரயில்வே தொழிலாளர்கள் அவர்களின் குடியிருப்புகள் அந்நாளைய சமத்துவபுரங்கள், சாதி மத பேதமற்ற மானுடர்களின் தொகுப்பு அது,

  இந்நூலாசிரியர்களின் இணைப்பு என்பது அத்தகைய இணைப்பை குறியீடாகக் கொண்டுள்ளது,

  பாராட்டுக்கள்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery