நேர்காணல்

சமத்துவமின்மையை எதிர்கொண்டு இந்தியா தீர்வு காண வேண்டும்: தாமஸ் பிகெட்டி (தமிழில் தா.சந்திரகுரு)

Spread the love

 

இந்த ஆண்டு உலகைத் தாக்கிய முதல் அலையாக, கோவிட்-19 தொற்றுநோயால் மனிதர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பேரழிவு இருக்கிறது என்றால், இரண்டாவது அலையாக ஏழைகள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழப்பது, மிகப்பெரிய அளவில் புலம்பெயர்வது, பட்டினி ஆகியவற்றிற்கு வழிவகுக்கின்ற கடுமையான பொருளாதார விளைவுகள் இருக்கப் போகின்றன.

பாரிஸில் உள்ள ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மற்றும் பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரப் பேராசிரியராகவும், உலக சமத்துவமின்மை ஆய்வகம் மற்றும் உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தில் இணை இயக்குநராகவும் இருக்கின்ற பேராசிரியர் தாமஸ் பிகெட்டியின் பொருளாதார சமத்துவமின்மை குறித்த முக்கியமான ஆய்வுகள், இன்றைய சூழலில் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. சமத்துவமின்மை குறித்து, இந்தியாவிற்கான அதன் பொருத்தப்பாடு உட்பட தனது கருத்துக்களை நாராயண் லக்ஷ்மணுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

நேர்காணலின் சுருக்கப்பட்ட எழுத்தாக்கம்:

தற்போதைய சூழ்நிலை குறித்த பகுப்பாய்விற்குள் செல்வதற்கு முன்பாக, உங்களுடைய மூலதனம் மற்றும் கருத்தியல்‘ (கேப்பிட்டல் அண்ட் ஐடியாலஜி) என்ற சமீபத்திய புத்தகத்தில் நீங்கள் ஆய்வுக்குட்படுத்தியிருக்கின்ற பங்கேற்பு’ சோசலிசம் என்ற அனைவரையும் ஈர்த்திருக்கின்ற கருத்திலிருந்து நாம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அது குறித்து உங்களால் கொஞ்சம் பேச முடியுமாஇந்த உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்தையும் ஆக்கிரமித்திருக்கின்ற தடையற்ற சந்தை முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலின் தீங்குகளைக் களைவதற்கான முக்கியமான படி என்று நீங்கள் ஏன் அதைப் பார்க்கிறீர்கள்?

எனது பார்வையில் பங்கேற்பு சோசலிசத்தின் அடிப்படைக் கருத்து, பொருளாதாரத்தில் பங்கேற்க அனைவருக்கும் அதிகாரம் உள்ளது என்பதே ஆகும். இதன் பொருள் சொத்துக்களைத் தனியார் பெறுவதாகும். தனியாருக்கான சொத்து என்பதை நான் நம்புகிறேன்; அரசு சொத்து அல்லது கம்யூனிசத்தின் மீது எனக்கு நாட்டமில்லை. சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு வரிவிதிப்பைக் குறைப்பதற்கும், அறக்கொடையாகவோ அல்லது மரபுவழியாகவோ அனைவரும் பணம் பெறுவதற்கும், நமக்கு இன்னும் முற்போக்கான வரி அமைப்பு தேவைப்படுகிறது. சம வாய்ப்பை நம்புகிறோம் என்று நாம் கூறிவருகின்ற நிலையில், அடித்தட்டில் உள்ள 50% மக்கள் மேல்தட்டினரிடமிருந்து எந்தவொரு செல்வத்தையும் மரபுவழியாகப் பெறாத உலகிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், வேறு சிலரால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற முடிகிறது.

தங்களுடைய நிறுவனத்தின் மூலதனத்தில் தொழிலாளிகளுக்கு பங்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பொருட்படுத்தாது, அந்த நிறுவனங்களின் நிர்வாகத்தில் தொழிலாளர்களால் அதிகம் பங்கேற்க முடியும் என்பதே பங்கேற்பு சோசலிசத்தின் மற்றொரு பரிமாணமாக உள்ளது. நாம் இதற்கு எடுத்துக்காட்டாக, ஜெர்மனியில் இருந்த பெரிய தொழில்நிறுவனங்களின் போர்டுகளில், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 50% வரை வாக்களிக்கும் உரிமைகளைக் கொண்டிருந்த 1950களில் இருந்து, சுவீடன், ஜெர்மனி போன்ற வெற்றிகரமான நாடுகள் உட்பட பல நாடுகளில் இதுவரையிலும் செய்யப்பட்டுள்ளவற்றை கூறலாம். இந்த இரண்டு நாடுகளிலுமே ஆரம்பத்தில், நிறுவனங்களின் பங்குதாரர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது யாரும் அதைக் கேள்வி கேட்பதே இல்லை. அனைவரும் இப்போது அதை, தொழிலாளர்களிடமிருந்து அதிக ஈடுபாட்டைப் பெறுவதற்காக நிறுவனங்களிடம் இருந்து வருகின்ற நீண்டகால உத்தியாகவே கருதுகிறர்கள்.

Ingrid Harvold Kvangraven's Review Of Thomas Piketty's Capital And ...

இந்த வகையிலான பரிணாம வளர்ச்சியை ஏதோவொரு வகையில் நிறுவனப் பங்குதாரர்கள் எதிர்த்து வந்த அமெரிக்காவிலும், ஐக்கிய பேரரசிலும், எனது நாடான பிரான்சிலும்கூட, இப்போது இதுபோன்ற கேள்வி அதிக அளவில் எழுப்பப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இங்கேயும் அது விதிமுறையாக மாறி விடக்கூடும் என்றே நான் கருதுகிறேன். சமத்துவமின்மையின் பரிணாமத்தில், பொதுவாக காலப்போக்கில் ஆழமான மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடியும் என்பதே என்னுடைய மூலதனம் மற்றும் கருத்தியல் புத்தகத்தின் கருப்பொருளில் ஒன்றாக இருக்கிறது. வருங்காலத்தில், அதிக அளவிலான சமத்துவத்தை நோக்கிய இந்த பரிணாமம், கல்விக்கான பரந்த அணுகல், சுகாதாரம் உள்ளிட்ட பிற அடிப்படையான கட்டமைப்பின் மூலமாகவே நடைபெறும்.

இருபதாம் நூற்றாண்டின் காலப்போக்கில், சொத்து உடைமையாளர்களின் உரிமைகள் மீது, தொழிலாளர்கள், நுகர்வோர் மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்கு இருக்கின்ற உரிமைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று நாம் முனைந்திருப்பதைக் காண முடிகிறது. சொத்துக்களை அதிகாரத்திடமிருந்து நீக்குவது மிகவும் முக்கியமானது. பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான செயல்பாட்டில் அது முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், கல்விக்கான முதலீடு, சமத்துவமின்மையை அகற்றுவது போன்ற செயல்பாடுகளில் இருந்தே பொருளாதார வளம் பெருகுகிறது. ’செல்வத்தையும் பொருளாதார ஆற்றலையும் அதிக அளவில் மேல்மட்டத்திலே குவிக்க வேண்டும், ஒன்று அல்லது பத்து நபர்களிடம் அதிகாரம் இருந்தாலே போதும், அதனால் மேலும் ஏராளமான வளம் கிடைக்கும்’ என்ற பார்வை இனிமேல் நிலைத்து நிற்காது என்றே நான் கருதுகிறேன்.

வரலாற்று ரீதியாக வெவ்வேறு சமூகங்களை, முக்கியமாக இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களை ஒப்பிட்டு வரலாற்றுரீதியான ஆதாரங்களை வரலாறு குறித்த என்னுடைய புத்தகத்தில்  வழங்கியிருக்கிறேன். நாட்டின் வளமானது சமத்துவம் மற்றும் கல்வியிலிருந்து வருகிறதே ஒழிய, அசமத்துவமின்மையைப் பேணுவதால் அல்ல. பங்கேற்பு சோசலிசத்தின் அடிப்படைக் கருத்தாக, தனியார் சொத்து மற்றும் சந்தை சக்திகளிடம் உள்ள நல்ல அம்சங்களைப் பயன்படுத்தி, அவற்றை மிகவும் சமமான, சமத்துவ வளர்ச்சி மாதிரி மற்றும் பொருளாதார அமைப்பின் சேவைக்குள் இணைப்பதே இருக்கிறது.

உங்களுடைய புத்தகத்தில், இந்தியாவின் காலனித்துவ வரலாறு ள்ளிட்டு, அதன் அரசியல் பொருளாதாரம் குறித்த பகுப்பாய்விற்காக ஒரு அத்தியாயம் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுநிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் அசமத்துவமின்மையை சமாளிப்பதற்குத் தேவையான தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில்இந்தியா எதிரெதிரான சமூக குழுக்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையைக் கொண்டிருக்கிறதா?

ஒட்டுமொத்த இந்தியாவில் மிகப்பெரிய வேறுபாடுகள் ஆங்காங்கே இருக்கின்றன. சமூக முதலீடுகளைச் செய்வதற்கும், அசமத்துவமின்மையைக் குறைப்பதற்குமான மிகப் பெரிய முயற்சிகள் இந்தியாவில், சில மாநிலங்களில் நடந்துள்ளன. மகாராஷ்டிரா, பஞ்சாப் அல்லது மேற்கு வங்கத்திலிருந்து, கேரள மாநிலம் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் இருக்கிறது. நிச்சயமாக ஏராளமான வித்தியாசங்கள் அவற்றிற்கிடையே இருக்கின்றன. இந்தியாவை பொதுவாகப் பார்த்தால், அங்கே ஒருபோதும் சமூகப் புரட்சி நிகழ்ந்ததில்லை. சமூகப் பிரிவுகள் மற்றும் சாதிகளுக்கு இடையிலான எல்லைகளைக் கடினப்படுத்துவதில் பல வழிகளிலும் பங்காற்றியிருந்த பண்டைய சமூக அமைப்புகள் மற்றும் காலனித்துவ காலங்களிலிருந்து நீடித்து வந்து கொண்டிருக்கும்  அசமத்துவமின்மையை எதிர்கொள்வதற்கான வலுவான முயற்சிகளை இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசாங்கங்கள் அனைத்தும் மேற்கொண்டு வந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக மக்களைப் பிளவுபடுத்தி வைத்திருந்த, பிரிட்டிஷ் காலனித்துவம் இல்லாத 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதிகளில் இருந்த ஒட்டுமொத்த அமைப்பு எவ்வாறு உருவாகியிருக்கும் என்று சொல்வது மிகவும் கடினம். பிரிட்டிஷ் காலனித்துவ மக்கள் தொகை கணக்கெடுப்புகள் மூலம். மக்கள் எந்த வகைக்குள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் வழங்கப்பட்டன.

Coronavirus Update: India Inc seeks fiscal stimulus to soften ...

சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசாங்கங்கள் ஒதுக்கீடுகள் மற்றும் இட ஒதுக்கீடு மூலமாக இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு முயற்சித்தன. தாழ்த்தப்பட்ட இந்திய மக்களுக்கும், மற்ற சமூகத்தினருக்கும் இடையில் அதிக அளவில் இருக்கின்ற அசமத்துவம், காலப்போக்கில் குறைந்து கொண்டு வந்திருக்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க சமூகத்தின் மற்றவர்களுக்கு இடையிலான அசமத்துவம் குறைந்திருப்பதை விட, இந்தியாவில் அது அதிகமாகவே குறைந்திருக்கிறது. அதன் விளைவாக இந்தியாவில் சில வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள் என்று என்னுடைய புத்தகத்தில் வாதங்களை முன் வைத்திருக்கிறேன். இது முழுக்க சரியானது என்ற பொருளில் சொல்லப்படாமல், இந்தியாவிற்கு படிப்பினைகளை வழங்குவதற்கு முன்பாக, அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள சமத்துவமின்மையை முதலில் பார்க்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள மற்றவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும் என்ற பொருளிலேயே அது  சொல்லப்பட்டிருக்கிறது.

சில சமயங்களில் நிலச்சீர்திருத்தம், சொத்து மறுபகிர்வு, பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளில் முதலீடு, சுகாதார உள்கட்டமைப்பு போன்ற அதுவரையிலும் போதிய அளவிற்கு  இல்லாதிருந்த பொருளாதார சீர்திருத்தங்களின் பெயராலேயே, ஒதுக்கீடுகள் மற்றும் இடஒதுக்கீடுகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பரந்த அளவிலான சுகாதாரம் மற்றும் கல்வி முறையை உருவாக்குவதற்குத் தேவையான வளங்களுக்காக, வரி வருவாய்க்காக என்று இந்திய உயரடுக்கின் ஒரு பகுதியினர் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று வெளிப்படையாக அல்லாமல், அவர்களுக்காக ஒதுக்கீடுகளும், இடஒதுக்கீடுகளும் ஓரளவிற்கு மறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீன அரசியல் அமைப்பிடம் இருக்கின்ற அனைத்து வரம்புகளையும் மீறி, கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக பொது உள்கட்டமைப்பு, அடிப்படை சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக அதிக அளவிலான வளங்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதே, சீனாவின் உயர் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளத்திற்கான காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தன்னிடம் உள்ள சமத்துவமின்மை பிரச்சினையை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னது போல், மிகப் பெரும்பாலும் வரலாற்றில், வரலாற்று மரபில் இருந்து வருகின்ற பெருமளவிலான சமத்துவமின்மையைக் கொண்டதொரு சமூகத்தில் இதற்கான பெரிய அணிதிரட்டல் தேவைப்படும். அவ்வாறு அணிதிரட்டுவது உண்மையில் கடினமானதுதான். ஆனாலும், அதே நேரத்தில், தாங்கள் ஒருபோதும் சமமாக மாற முடியாது என்ற போதிலும், அந்த நிலைமை உண்மையில் விரைவாக மாறக்கூடும். என்று அங்கிருக்கின்ற மக்கள் நினைக்கின்ற, மிகவும் அதிகமாக சமத்துவமின்மை நிலவுகின்ற நாடுகளை எடுத்துக்காட்டாக உங்களால் காண முடியும்.

இன்று மிகவும் சமத்துவம் நிறைந்த நாடாக பலரும் கருதுகின்ற ஸ்வீடனைப் பற்றி எனது புத்தகத்தில் உள்ளதை நான் இப்போது சொல்கிறேன். சில நேரங்களில், தங்களுடைய கலாச்சாரத்தின் காரணமாகவே சமத்துவம் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். அதேசமயத்தில்  இந்தியாவில் இருக்கின்ற கலாச்சாரம் அசமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. நிரந்தரமான அறுதிமுடிபான கலாச்சாரம் போன்ற எதுவும் ஒரு நாட்டை, சமத்துவம் அல்லது சமத்துவமற்றதாக மாற்றக்கூடும் என்று நான் கருதவில்லை.

Sweden Extends Entry Ban for non-EEA Citizens Until June 15 ...

உலக அளவில் இல்லாவிட்டாலும், ஐரோப்பாவிற்குள் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக ஸ்வீடன் இருப்பதைப் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது. 1911ஆம் ஆண்டு வரையிலும், ஒருவரிடம் இருக்கின்ற சொத்திற்கு ஏற்றவாறே அரசியல் மற்றும் வாக்குரிமை முறை அங்கே இருந்து வந்தது. மிக அதிகமாக சொத்து வரி செலுத்துவோருக்கு பாராளுமன்றத்தில் 100 வாக்குகள் வரைக்கும் வாக்குரிமை இருந்தது.  முதல் 20%இல் இருப்பவருக்கு, ஒரு வாக்கு மட்டுமே கிடைக்கும். முதல் 20%க்குள் இருப்பவர்களுக்கு, அவரிடம் இருக்கின்ற சொத்தின் அடிப்படையில், படிப்படியாக வெவ்வேறான அளவிலான வாக்கு உரிமையே 1911 வரையிலும் இருந்து வந்தது. நகராட்சித் தேர்தல்களில்கூட, பணக்காரர் ஒருவர் பெறுகின்ற வாக்குரிமை எண்ணிக்கைக்கான அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இருக்கவில்லை. ஒரே ஒருவரிடம் மட்டுமே 50%க்கும் அதிகமான வாக்குரிமை பல ஸ்வீடன் நகராட்சிகளில் இருந்து வந்தது. 1911 வரையிலும், ஸ்வீடனில் நடந்த நகராட்சித் தேர்தல்களில் தொழில் நிறுவனங்களுக்கும் கூட வாக்களிக்கும் உரிமை இருந்து வந்தது.

அது சொத்து உரிமைகளை புனிதப்படுத்துவதன் அடிப்படையில், அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 1910ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டவரிடம், உங்களுடைய நாடு சமத்துவமான நாடாக மாறப் போகிறது என்று யாராவது கூறியிருந்தால், அதை யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் பின்னர் 1920களில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியோரின் மிகப்பெரிய அணிதிரட்டல் அனைவருக்குமான வாக்குரிமையைப் பெற்றுத் தந்தது. அந்தக் கட்சி 1922ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பல ஆண்டுகளுக்கு, 1980கள் மற்றும் 1990கள் வரை ஆட்சியில் நீடித்தது. முற்றிலும் மாறுபட்ட அமைப்பை ஏற்படுத்தித் தந்து, முற்றிலும் மாறுபட்ட அரசியல் நோக்கங்களுக்காக முந்தைய காலத்தில் ஸ்வீடனில் கட்டப்பட்டிருந்த அரசின் செயல்திறனை, அந்த அமைப்பிற்குள் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

வருமானம் மற்றும் செல்வத்தை பதிவு செய்வதாக ஸ்வீடன் அரசின் செயல்திறன் இருந்தது.  அவற்றிற்கேற்ப வாக்களிக்கும் உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றிற்கான பணத்தைச்  செலுத்துகின்ற மிகவும் முற்போக்கான வரி முறையை அவர்கள் வடிவமைத்தனர். வரலாற்று ரீதியாக அதற்கு முன்னர் யாரும் கண்டிராத, பொது சுகாதாரம் மற்றும் கல்வி முறையை அவர்கள் வடிவமைத்தனர்.

ஒவ்வொரு நாடும் தனக்கேற்ற வகையில் அணிதிரட்டலையும், வரலாறையும் கொண்டுள்ளன. இந்தியாவிலும் அடிமட்த்தில்ட ஏராளமான இயக்கங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சிகளும், ஏராளமான சோசலிச கட்சிகளும் இருக்கின்றன. அவற்றால் பலவிதமான விஷயங்கள் நடக்கலாம். வரலாறு ஆச்சரியம் நிறைந்தது. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வாய்ப்புகள் இப்போது ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளிடமும் இருக்கின்றன. எவ்வாறாயினும், ஒரு நாட்டை சமத்துவமானதா அல்லது சமத்துவமற்றதா என்று நிர்ணயிக்கின்ற சக்தி என்று எதுவுமில்லை என்பதே, என்னுடைய புத்தகத்திலிருந்தும், இந்தியா, சுவீடன் மற்றும் பிற நாடுகளின் பகுப்பாய்விலிருந்தும் கிடைக்கின்ற மிகப்பெரிய படிப்பினையாக இருக்கின்றது.

நீண்ட காலமாக இருந்து வருகின்ற கருத்துக்களை விவாதிப்பது அரசியல் அதிகார சமநிலையையும், வளங்களை ஒதுக்கீடு செய்யும் முறையையும் மாற்றக்கூடும்; அந்த மாற்றம் சமத்துவமின்மையின் அளவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாகவே உங்களுடைய பகுப்பாய்வு மற்றும் உங்களுடைய புத்தகத்தின் மையக் கருத்து இருக்கிறது. சொத்துரிமைகளையும், அவற்றை சட்டப்படி ஒதுக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமான அரசியல் அதிகாரத்தை உள்ளடக்கியதாக இருக்கின்ற, வரலாற்று ரீதியாக பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சி பாதைக்கான உந்து சக்தியாக இருந்திருக்கிற மறுபகிர்வு முரணிலிருந்து சற்றே அப்பாற்பட்டதாக அந்தக் கருத்து இருக்கின்றதா? அல்லது இவை இரண்டுமே முக்கியமா?

இந்த இரண்டு தர்க்கங்களுமே வேலை செய்கின்றன. வெவ்வேறு நலன்களுக்கும், குழுக்களுக்கும் இடையில் முரண்பாடு இருந்தாலும், கற்றல் பரிமாணத்தையும், கலந்துரையாடல் மற்றும் அறிவுசார் அல்லது கருத்தியல் பரிமாணங்களையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வெறுமனே வர்க்க மோதல் மட்டுமே, நிறுவனங்கள், கொள்கை மற்றும் சட்ட அமைப்புகளின் அடிப்படையிலான தனித்துவமான விளைவைத் தீர்மானிக்கவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். சொத்து உரிமைகள், வரி மற்றும் கல்வி மற்றும் எல்லை அமைப்புகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த உலகத்தைப் பற்றிய உங்களுடைய பார்வையை, உங்களுடைய வர்க்க நிலை, அது முக்கியமானது என்றாலும், முழுமையாகத் தீர்மானிக்கவில்லை. மற்ற நாடுகளுடன் நீங்கள் எந்த வகையிலான உறவுகளை வைத்திருக்க வேண்டும்? ஒரு நாடு அல்லது மற்றொரு நாடு என்பதற்கான உண்மையான பொருள் என்ன? எது குறிப்பு சமூகமாக இருக்கிறது? சமத்துவமின்மை ஆட்சிக்கு  சர்வதேச மற்றும் நாடுகடந்த பரிமாணம் என்னுடைய புத்தகத்தில் இருக்கின்றது. அது மிகவும் முக்கியமானது, உலகு குறித்து இருக்கின்ற தூய்மையான, வர்க்க-மோதல் பார்வை, பணக்கார சித்தாந்தங்கள் முழுமையாகப் பங்காற்ற உண்மையில் அனுமதிக்காது. எனது புத்தகத்தின் முடிவுரையில், மார்க்ஸ் மற்றும் வரலாறு குறித்து ஒரு வர்க்க மோதலாகவே பேசுகிறேன், மேலும் வரலாற்றை சித்தாந்தத்தின் மோதலாகவும், நியாயத்தை அறியும் செயல்முறையாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்றே நான் முடிவுரைத்திருக்கிறேன். நான் ஒன்றும் கற்றுக்குட்டி இல்லை என்பதால் – வர்க்க மோதல் மிகமுக்கியமானது, வரலாற்றின் இத்தகைய மாற்றங்கள் அனைத்திலும் வன்முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.

Ekonom Prancis Thomas Piketty Buktikan Ekonomi Islam Layak ...

ஆனால் அதே நேரத்தில், வர்க்க மோதலின் பின்னணியில், கருத்தியல் பரிமாணத்தையும் அறிவுசார் பரிமாணத்தையும் வலியுறுத்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கருத்துக்களுக்கும் அறிவார்ந்த மாற்றத்திற்கும் பெரியதொரு பங்கை அளிப்பவராக நீங்கள் இருந்தால், அதாவது ஜனநாயகத்திற்கு ஒரு பங்கு உண்டு என்று நீங்கள் கருதினால், தேர்தல் மற்றும் கலந்துரையாடல் குறித்த கோட்பாடு உங்களிடம் இருக்குமென்றால், அது எவ்வாறு  ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகளை எவ்வாறு உருவாக்குவது, ஊடகங்களின் பங்கு ஆகியவை குறித்து நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதே இங்கே முக்கிய வேறுபாடாக இருக்கிறது. குழுக்களிடையிலான பரிமாற்றம் உங்களுக்குத் தேவைப்படுகிறது, அது மிகவும் முக்கியமானது.

ஜனநாயகத்தின் மீதான இந்த கவனக்குறைவே, இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கம்யூனிச துயரத்திற்கான காரணம் ஆகும். மேலும் குறிப்பிட்டுச் சொல்வதானால், உங்களுக்குப் பிடிக்காததை நீங்கள் ஒழித்த பிறகு, சொத்துரிமை அமைப்பு மற்றும் பொருளாதார அமைப்பு எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாததால் ஆகும். நிகழ்ந்த பேரழிவின் அளவைப் பொறுத்தவரை, அது இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கம்யூனிசத்தின் சரிவானது, மற்றொரு பொருளாதார அமைப்பிற்கான சாத்தியத்தைக் கலைப்பதற்கான  பங்கை அளித்தன் மூலம், 1980கள் மற்றும் 1990களில் இருந்தே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதற்கான காரணங்களில் ஒன்றாகிப் போனது.

புவி வெப்பமடைதல் பிரச்சனையைக் கடந்து செல்வதற்கு அல்லது அதிகரித்துவரும் சமத்துவமின்மை விடுக்கின்ற  சவால்களை எதிர்கொள்வதற்கோ, அதிக அளவிலான மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்ற மாறுபட்ட பொருளாதார அமைப்பைப் பற்றி சிந்திப்பதற்கோ விரும்பினால், நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையே அது குறிக்கிறது. அதன் அஸ்திவாரம் மற்றும் நிறுவன அடிப்படைகள் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து இதுகுறித்த கற்றல் நடைபெற்று வருவதால், பல்வேறு சமூகக் குழுக்களில் உள்ளவர்கள் அந்த அனுபவத்திலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும் என்பதைக் காணவும் நாம் முயற்சிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்பதாக இது இருக்கவில்லை. சொத்து என்பது உடைமையாளர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், தொழிலாளர்கள், நுகர்வோர் போன்று சமூகத்தில் உள்ள பிறருக்குமானதாகும் வகையில், அவர்களுடைய உரிமைகளை மறுசமநிலைப்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான நீண்டகாலப் போக்கு பற்றியே எனது புத்தகத்தில் நான் சொல்லியிருக்கிறேன். அந்த செயல்முறை, நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும், தொடர வேண்டும், தொடரும்.

இறுதியாகசமீப காலங்களில்பல நாடுகளிலும் தேசியவாதம், வெகுஜன கவர்ச்சி, பாதுகாப்புவாதம், உள்ளூர்வாதம் போன்ற சித்தாந்தங்களை நோக்கிய போக்கு இருப்பதைக் காண்கிறோம். கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னராக பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களுடன் ஏற்பட்ட ஏமாற்றத்துடன் தொடர்புடையதாக உள்ள இந்த மாற்றம் மேலும் தூண்டி விடப்படும் அல்லது இந்த தொற்று நோயால் மீண்டும் அது பழைய நிலைக்கே திரும்பும் என்று இதில் எது நடக்கும் நீங்கள் நினைக்கிறீர்கள்?

வெவ்வேறு விஷயங்கள் நடக்கக்கூடும். கடந்த காலங்களில், வரலாற்று அத்தியாயங்கள் பல்வேறு பாதைகளைக் கொண்டிருந்தன. இன்று இருப்பதைப் போன்று திருப்புமுனைகளும் இருந்தன. இந்த தொற்றுநோய் தேசியவாதம் குறித்து ஏற்கனவே இருந்து வரும் போக்குகளை வலுப்படுத்தவும், தேசிய அரசு என்ற எல்லைக்கும், அடையாளத்திற்கும் திரும்ப நம்மைக் கொண்டு செல்வதற்கான ஆபத்தும் கொண்டுள்ளது. ஆனாலும் அது என்றென்றும் நிலைக்காது என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் புவி வெப்பமடைதல், சமத்துவமின்மை, பொதுமக்களுக்கான நிலப் பிரச்சினைகள் உள்ளிட்ட மிகப்பெரிய சவால்கள் எதையும், இந்த தேசியவாதம் இறுதியில் தீர்க்கப் போவதில்லை. அவற்றிற்கான தீர்வுகளைக் காண்பதற்கு, ஒத்துழைப்பு மற்றும் ஒருவித சர்வதேசவாதமே தேவைப்படும். குறுகிய காலத்திற்குள் அரசியல்வாதிகளால் வேறொன்று ஊக்குவிக்கப்பட்டு முன்மொழியப்படும் என்றால்,  தேசியவாதத்தால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது.

பிரெட்டன் வுட்ஸ் அமைப்புகளில் தொடங்கி அல்லது கடந்த முப்பது அல்லது நாற்பதாண்டுகளில், 1980கள், 1990களில் வலுவூட்டப்பட்ட பிரச்சனையாக, நீங்கள் கூறியது போல, புதிய தாராளமயத்தின் எழுச்சியின் விளைவாக, மிக அதிக பணம் படைத்தவர்களுக்கும், அதிக அளவில் மனித மூலதனம் கொண்டவர்களுக்கும் மிகவும் பயனளிக்கின்ற வழியாக இருக்கின்ற உலகவியம், சர்வதேசவாதம் மற்றும் சர்வதேசப் பொருளாதாரத்தை நாம் ஒழுங்கமைத்திருக்கிறோம். ஆனால் அது தன்னிடம் இருக்க வேண்டிய சமூக மற்றும் மறுபகிர்வு நோக்கங்களை மறந்து விடுகிறது. நாம் வேறு முறையில் மீண்டும் சர்வதேசவாதத்தை கட்டியெழுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, மிகவும் சக்திவாய்ந்த பொருளாதார சக்திகளின் மீது பொதுவான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு எதுவும் இல்லையென்றால், அல்லது கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துகின்ற அமைப்பு அல்லது இலக்குகள், அந்த இலக்குகளை மதிக்காதவர்களுக்கு வரி விதித்தல், குறைந்தபட்ச ஊதியங்கள் குறித்த சமூக விதிகள் என்று எதுவுமே இல்லையென்றால். உங்களால் எந்த இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகம் செய்யவோ அல்லது தாராள மூலதனத்தைப் பாய வைக்கவோ முடியாது, பிரச்சனை என்னவென்றால், இன்றும் பலர் கட்டணங்களை ரத்து செய்வது, மூலதனம் மற்றும் பொருட்கள், சேவைகளின் ஓட்டத்தின் மீதான வரிகளை ரத்து செய்வது போன்றவற்றிற்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Neoliberal policies destroy human potential and devastate ...

அவர்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் குறிப்பாக நிதிக் குவிப்பு, சமூக நோக்கங்கள் அல்லது கார்பன் உமிழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் எந்த நிபந்தனையும் இருக்காத நிலையில், வரியே இல்லை என்பது மிகமிகக் குறைவானதாகும். மிக நீண்ட தூர பயணத்தைக் கொண்டிருக்கும் சில பொருட்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் அந்த பயணத்திலிருந்து வருகின்ற கூடுதல் கார்பன் உமிழ்வையாவது நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் வகையில் சமமான வரி முறையை அமைப்பதற்கு வர்த்தக பங்காளிகளாக இருக்கின்ற மற்ற நாடுகள் ஒத்துழைக்கின்றனவா என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு நாடாக, பெருநிறுவன லாபங்களுக்கு 30% வரி விதிக்க வேண்டும் என்று நினைக்கும் போது, எனது அண்டை நாடு பெருநிறுவன லாபத்திற்கு 0% வரி விதிக்க விரும்பினால், அதை அவர்களால் செய்ய முடியும். ஆனால் அவர்கள் எனது நாட்டிற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்ய விரும்பினால், எனது நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அவர்களுடைய நிறுவனங்கள் வரிப் பற்றாக்குறையில் உள்ளன என்று என்னால் அவர்களிடம் கூற முடியும். எனவே அவர்களுடைய ஏற்றுமதியுடன் தொடர்புடைய வரியை நான் அவர்களிடமிருந்து வசூலிப்பேன்.

இது நிலையான பாதுகாப்புவாதத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. ஏனென்றால் அண்டையில் இருப்பவர்களும் தங்கள் நிறுவன லாப வரி விகிதத்தை 30% ஆக உயர்த்தினால், இந்த கூடுதல் கட்டணம் முற்றிலுமாக மறைந்து விடும். இதன் நோக்கம் பாதுகாப்புவாதமாக இருக்காமல்,  பொது சமூக நோக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து இருக்கின்ற நமது மாதிரியுடன் ஒத்த திசையில் செல்வதற்கு மற்ற நாடுகளையும் தூண்டுவதாகவே இருக்கும்.

நாம் அந்த திசையில் நகரவில்லை என்றால், நிச்சயம் தேசியவாதம் அந்த நாளில் வெல்லும். ஏனென்றால்  எந்த வகையிலும் மக்கள் நம்பிக்கை கொள்ளாத, குறைந்தபட்சமாக எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லாத முறையைக் கொண்டு, தற்போதைய உலகமயமாக்கல் முறையை ஒழித்துக் கட்டுவதையே அது முன்மொழிகிறது, இவையனைத்தும் மக்கள் முன்பாக முன்மொழியப்படும் மாற்று வழிகளின் முழுமையான தொகுப்பைப் பொறுத்ததாகவே இருக்கும். இது வழக்கத்தில் உள்ள நவீன தாராளமயத்திற்கு எதிரான தேசியவாதம் என்றாகுமானால், நிச்சயம் தேசியவாதம் அந்த நாளில் வெல்லும். ஆனால் எனது புத்தகத்தில் நான் பேசுவதைப் போன்று, அதிக சமத்துவம், சமமான வளர்ச்சி மாதிரிகள் மற்றும் பங்கேற்பு சோசலிசம் ஆகியவற்றின் அடிப்படையிலான புதிய வகையான சர்வதேசவாதம் நம்மிடம் இருந்தால், இத்தகைய வாதங்களும், பொது விவாதங்களும் மிகவும் சிக்கலானதாக இருக்கும். அவ்வாறான நிலைமையில், வருங்காலத்தில் தேசியவாத்தால் வெற்றியடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை.

https://www.thehindu.com/news/national/india-has-to-come-to-terms-with-inequality-thomas-piketty/article31636033.ece?utm_campaign=article_share&utm_medium=referral&utm_source=whatsapp.com

நன்றி: தி ஹிந்து ஆங்கில பத்திரிக்கை

நாராயண் லக்ஷ்மண்

தி ஹிந்து, 2020 மே 20

தமிழில்

தா.சந்திரகுரு

Leave a Response

Top Reviews

Video Widget

gallery