Book Review

நூல் அறிமுகம்: பொக்கிஷங்களை உள்ளடக்கியக்ககம்..! – உமா மகேஸ்வரி

இந்தியக் கல்விப் போராளிகள்

நூலாசிரியர் ஆயிஷா நடராஜன், சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியத்திற்காக) விருது பெற்றவர், தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப்பட்டமும் கல்வியியல் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும் அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நூலில், அறிந்திடாத ஆளுமைகளை அறிய வைத்த புத்தகம், அன்னியா ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்கு கல்வி பணியாற்றிய பழைய தலைமுறை செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராஜன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள என்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை இந்தப் புத்தகம் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால் ஆயிஷா நடராஜன் எத்தனை முயற்சி எடுத்து அவர்களைப் பற்றி அறிய தகவல்களை தேடிக் கண்டுபிடித்து கட்டுரைகளை வடித்திருப்பார் என்பது வியப்பை அளிக்கிறது, என்று மூத்த கல்விப் போராளியான ச.சீ.ராஜகோபாலன் இந்த புத்தகம் குறித்து பாராட்டுகிறார் நூலைப்பற்றி…

புத்தகத்தின் உள்ளே 23 கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொக்கிஷம் என்று கூறலாம். ஏனெனில், இன்று கல்வி குறித்து பேசக்கூடிய பலரையும் நமக்கு தெரிகின்றது. கல்வியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் பொதுக்கல்வி வரவில்லை, தாய்மொழிவழிக் கல்வி இல்லை, ஆசிரியர் பயிற்சி சரி இல்லை, பெண்கல்வி இல்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் குறித்து நாம் பேசி வருகிறோம்.

ஆனால், கல்வியே இல்லாத காலம் எப்படி ஒன்று இருந்திருக்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனி வந்தபோதும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் எப்படியெல்லாம் கல்வி பாமர மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது, எப்படி கல்வியைச் சமூகத்திற்குள் கொண்டுவந்து மக்களுக்காக ஒவ்வொருவரும் தங்களது வாழ்வையே அர்ப்பணித்து உள்ளார்கள் என்று ஒவ்வொரு கட்டுரையிலும் விவரித்துள்ளார் ஆசிரியா. இவர்களைக் குறித்து நாம் மேலும் நிறைய தகவல்களை தேடிப் படிக்க வேண்டும் என்ற உணர்வே வருகிறது. நம்முடைய வரலாறு பாடப் புத்தகங்களில் இடம் பெறாத பல தகவல்களை இப்புத்தகம் உள்ளடக்கியுள்ளது.

ராஜா ராம் மோகன் ராய் குறித்துதான் முதல் கட்டுரை, நமக்கெல்லாம் தெரிந்தது ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார் என்றுதான்.

ஆனால், பொதுக்கல்வி முறையை போராடி பெற்றவா இவர்தான், பலமுறை உயிரைப் பணயம் வைத்து சமூகப் போராளியாக, இறுதிவரை உழைத்திருக்கிறார் ராஜாராம் மோகன்ராய், பயணங்களே உண்மையான பாடங்கள் என்று அவரது வாசகமே காந்தியையும் ரயில் பயணியாக ஆக்கியது என்று வரலாறு கூறுகிறது.

இந்தியாவின் சமூக விடுதலைக்கான ஒரே வழி அனைவருக்கும் கல்வி அளிப்பது என்பதனை பயணங்களே அவருக்கு பாடமாக போதித்தது.

கல்வி சமூக மாற்றத்திற்கான சாவி என்று இராஜாராம் மோகன்ராய் எழுதியிருக்கிறார். பள்ளிக்கூட அமைப்பே இல்லாத அந்த 1800களின் தொடக்க ஆண்டுகளில் அனைத்து மக்களுக்குமான பொதுக்கல்வி பற்றி சிந்தித்து இருக்கிறார் என்றால், அவரின் பொதுக் கல்வி குறித்த சிந்தனையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜாராமின் பொதுக்கல்வி முறையை 1834இல் இந்தியா வந்த மெக்காலேவின் குமாஸ்தா கல்வியாக சுருக்கியது வேறுகதை ஆனால், ராஜாராம் மோகனராய் ஆங்கிலக்கல்வியை ஆதரித்தார் என்று குற்றச்சாட்டும் உண்டு.

ஆனால் அவர் மெக்காலே கல்வியை ஆதரித்தவர் அல்ல, பொதுப்பள்ளி அரசின் கடமை என்பதை இங்கிலாந்து வரை சென்று வாதிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தியக் கல்வி சீர்திருத்தங்களாக அவர் கூறியதை அமல்படுத்தியது ஆங்கிலேயர் பெகராம்ஜி மலபாரி என்ற மறக்கப்பட்டு விட்ட இந்தியக் கல்வியாளர் குறித்த கட்டுரை தமக்கு பல தகவல்களைத் தரு கிறது. இளவயதில் குழந்தைகளுக்கு மண முடிப்பதைத் தடுத்து அவர்களை மாணவர் களாக மாற்றிய கதையைப் பற்றியே இவரது போராட்டங்கள் அமைந்திருக்கின்றன.

மணமக்களை மாணவர்கள் ஆக்கியவர்கள் என்ற தலைப்பிட்ட இந்தக கட்டுரையை நாம் கண்டிப்பாக படிக்க வேண்டும் 1813 & 1833 லும் ஆங்கிலேயர்கள் தங்களது பொதுசு கல்வியை அறிமுகம் செய்தபோது பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் பொதுவான தாகத் திறந்துவிட்ட உடனேயே எல்லோரும் பிள்ளைகளை கல்வி கற்க போங்கள் என்று அனுப்பிவிடவில்லை.

மக்களிடம் இருந்து ஏராளமான வரியை சுங்கச்சாவடி முதல் விவசாயம் வரை வசூலித்து 10 சதவிகிதம் மட்டுமே செலவு செய்து 90 சதவிகித இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்து அந்தக் காலகட்டத்தில், எங்களது வரிப்பணத்தை எங்களுக்காகவே செலவு செய்யவேண்டும் என்று அதன் துணுக்கம் அறிந்தவர்கள் குரலெழுப்பினர், இங்கிலாந்திலும் எதிரொலித்தன கல்விக்காக என்று ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்கிறது அரசு, இன்றைய நாட்களை நமக்கு அப்படியே எதிரொலியாக இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இன்றும் நமக்கு கல்வி வரி பிடிக்கப்படுகிறது கல்வி வரை அனைத்தும் கல்விக்காகச் செலவிடப்படுகிறதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது.

அதற்கான குரலாக அப்போதே இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் பெக்ராம்ஜி மலபாரி, இப்படியாக ஒவ்வொரு தலைப்பைப் படிக்கும் போதும் ஒவ்வொரு ஆச்சரியங்கள் நம்மை வந்து ஆட்கொள்கின்றன. மதமாற்றுக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்று கிருஷ்ணா மாலிக் போராளியை குறிப்பிட் டுள்ளார் ஆசிரியர். அவர் ஒரு இந்திய கல்விச் சீர்திருத்தவாதியாக இருந்திருக்கிறார். உலகின் பேரதிசயங்களில் ஒன்றான இந்திய மண்ணின் மதச்சார்பின்மை எனும் உயிர்மூச்சு கிருஷ்ணா மாலிக் தந்த கல்வி போராட்டத்தில் விளைந்ததுதான் என்பதில் சந்தேகமில்லை என்று இந்த கட்டுரை சொல்கிறது.

ராணி கௌரி பார்வதி பாய் – அடிப்படை கல்வியை அரசின் கடமை ஆக்கியவர். இன்று நாம் கல்வி உரிமைச் சட்டம் குறித்து பேசுகிறோம் ஆனால், 1800களிலேயே சுல்வியை சட்டமாக்கிய பெருமைக்குரியவர் இந்த கௌரி பார்வதி, ஆரம்பக் கல்வி கட்டாயம் அனைத்து மக்களுக்கும் தரப்பட வேண்டுமென்று போராடி பெற்றுத் தந்த பெண் போராளி, கல்விக்கு நான்கு புதிய சட்ட வடிவங்களை ஒரே வருடத்தில் வெளியிட்டிருக்கிறார் இவர்.

அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கண்டிப்பாக தரவேண்டும் என்றும் எல்லா பள்ளிகளிலும் பிராந்திய மொழி கற்பிக்க ஆசிரியர்கள் நியமித்து, உயர் குலத்தவரும் பெண் குழத்தைகளும் மோசமான கீழ்ஜாதி பிள்ளைகளும் சேர்ந்து ஒன்றாக கல்வி கற்க சட்டத்தை கொண்டு வந்தவர் இவர். அதேபோல தனது அரசவையில் ஆண்களே ராஜாங்க முடிவுகளை எடுப்பதை தடை செய்து பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் அதற்காகவே ஆரம்பப் பள்ளிகளை நிறுவினார் அதேபோல கல்விச் செலவு முழுவதும் சமஸ்தானத்திற்கு உரிய பத்மநாபசாமி கோயிலுக்கு உட்பட்ட குத்தகை வருமானம் இருக்கிறது என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அதாவது கல்வி இலவசமாக வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே கொண்டு வந்தவர் இவர்.

ஆசிரியர் பயிற்சியை அறிமுகம் செய்தவராக ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற கல்வி அறிஞரை குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

எல்லா இடத்திலும் ஆசிரியர் களாக ஆங்கிலேயர்களே இருக்க இந்தியர்களை ஆசிரியர்களாக நியமித்து அவர்களுக்காக பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்து என்று பல மாறுதல்களை செய்து வித்யாசாகர் முதல் -ஆசிரியர் சங்கத்தையும் ஏற்படுத்தி முதல் பத்திரிகையையும் ஆரம்பித்துள்ளார் 1891 இல் அவர் காலமானபோது, தாகூர் எழுதியது… எவ்வளவு அற்புதம் கடவுள் லட்சக்கணக்கான வங்காளிகளைப் படைத்து கூடவே ஒரு மனிதரையும் படைத்தார் இந்திய ஆசிரியர்கள் பயிற்சி பெறும் வகையில் 1891 இல் 27 ஆசிரியர் பயிற்சி நிலையங்களை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியது 17 ஆயிரம் இந்தியர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர் என்ற குறிப்பு இந்தப் புத்தகத்தில் உள்ளது.

இன்று ஆசிரியராக இருக்கும் ஒவ்வொருவரும் நாம் இவரை நினைத்துக் கொள்ள வேண்டும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்த காலகட்டத்தை மாற்றி இந்தியர்களையும் ஆசிரியர்களாக மாற்றிய போராளி இவர். விதயாசாகரின் மாணவர் பரமஹம்சரின் ஒரே சீடர் சுவாமி விவேகானந்தர் என்ற குறிப்பும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

அடுத்ததாக நாம் அனைவரும் அறிந்த இந்தியாவின் முதல் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே. அவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் நமக்கு ஓரளவு தெரியும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒன்பது வயதில் திருமணமாகி கணவர் அறிவு புகட்டி, பல கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்து சமூகப் போராளியாக மாறி இந்தியாவின் முதல் ஆசிரியராக மாறி மக்களுக்காகவே கடைசிவரை இருந்து அவர்கள் பிளேக் நோய் தாக்கிய பொழுது அவர்களுடனேயே இருந்து பணி செய்து அதனாலேயே இறந்தார் என்ற வரலாறு நமக்கு நன்கு அறிமுகமானதே

தலித் மக்களின் கல்வி நாயகராக கேரளாவைச் சேர்ந்த அய்யன்காளி, இஸ்லாமியப் பெண்களின் இரண்டு கண் களாக திகழ்ந்தவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த சேக் அப்துல்லா பேகம் வாகித் மூஹான் தம்பதி காஷ்மீரத்தைச் சோந்தவாகள், தமிழகத்தின் ஆதரவற்றவர்களுக்கு ஆதர வாசுக் கல்வி தந்த தமிழ் வேங்கை என்று பாராட்டப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்த 22 கட்டுரைகளும் கல்வி போராளிகளை அறிமுகப் படுத்த 25 ஆவது கட்டுரையில் காந்தியையும் மெக்காலே வாதிகளும் என்று கல்வி குறித்து பேசி இருக்கிறார் நூல் ஆசிரியர்.

ஒரே பிரமிப்பாக உள்ளது இந்தப் புத்தகத்தை படித்து முடித்தபோது. இது சாதாரண புத்தகமல்ல 128 பக்கங்கள் என்றாலும் 1200 பக்கங்கள் கொண்ட நூலாக இதை எழுத முடியும் அந்த அளவிற்கு பொருள் பொதிந்துள்ள மிகச் சிறந்த நூலாக இதனைப் பார்க்கிறேன். அனைவரும் கட்டாயமாக இதைப் படிக்க வேண்டும் என்றும் எழுத்தாளர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறேன்.

நன்றி

நமது காவலன்

https://thamizhbooks.com/product/indiya-kalvi-poraaligal/

இந்தியக் கல்விப் போராளிகள்

Rs. 100.00

Leave a Response