Article

இந்தியா முற்றிலும் வேறு நாடாக மாறிப் போய் விட்டது – சலீல் திரிபாதி (தமிழில்: தா.சந்திரகுரு)

Spread the loveநவம்பர் 12, வியாழக்கிழமை. தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ஊடக நிர்வாகியும், தன்னுடைய ரிபப்ளிக் தொலைக்காட்சி நெட்வொர்க்கின் முதன்மைத் தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமியை இந்திய உச்சநீதிமன்றம் தலையிட்டு மும்பை சிறையில் இருந்து விடுவித்தது. அவருக்கு பிணை வழங்கிய நீதிபதி தனஞ்சய் சந்திரசூட் ‘அரசியலமைப்பு நீதிமன்றங்களே சுதந்திரத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், அதை வேறு யார்தான் செய்வது?’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\thequint_2020-11_d8c8f862-5925-42c7-9605-082c058c8a71_hero_image_2_8_.jpg

நீதிமன்றங்களால் பல மாதங்களாகச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கும் இதே போன்றதொரு மரியாதை அளிக்கப்பட்டிருக்கும் என்றால், தனிநபர் சுதந்திரத்தின் மீதான நீதிமன்றம் கொண்டிருந்த அந்த ஆர்வம் இன்னும் நேர்மையானதாக இருந்திருக்கும். அவர்கள் அனைவரின் மீதிருக்கின்ற விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுடைய வழக்குகளை விசாரிப்பதற்கான எந்தவொரு அவசரத்தையும் இந்திய நீதிமன்றங்கள் காட்டவில்லை. ஹிந்து மதத்தின் சாதி படிநிலை வரிசையில் கீழே உள்ளவர்களாக அறியப்படுகின்ற தலித் இளம் பெண் ஒருவர் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்து போனது குறித்த செய்திகளைத் தொகுத்து வழங்கியதற்காக, பத்திரிகையாளரான சித்திக் கப்பன் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த ​​நீதிமன்றம் நவம்பர் 21 அன்று, சிறைக்குள் இருக்கும் கப்பனை சந்திப்பதற்கு அவருடைய வழக்கறிஞர்களுக்கு இறுதியாக அனுமதியை வழங்கிய போதும், கப்பன் ‘தவறான செய்திகளை’ வழங்கியதாக குறை கூறியிருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\1602097864_08case-5c.jpg

கப்பன், அர்னாப் இருவரையும் ஆதரித்து பத்திரிகை சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் பலவும் குரல் கொடுத்தன. பத்திரிகைத் துறையோடு எந்தவொரு தொடர்பும் இல்லாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அர்னாப் சிறையிலிருந்து விடுதலையாகி இருக்கிறார். அதேசமயத்தில் கப்பன் இன்னும் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார். அர்னாபின் கைது சம்பவம் மிகவும் சிக்கலானது: நடிகர் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அர்னாபின் தொலைக்காட்சி நெட்வொர்க், அந்த மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கின்ற மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அர்னாபின் ஆதரவாளர்கள் அர்னாபிடம் உள்ள  தைரியமான இதழியல் செயல்பாடுகளுக்காக அவர் மற்றொரு தற்கொலை வழக்கில் சிக்க வைக்கப்படுவதாகக் கூறி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்ற அமைச்சர்கள் உட்பட பல முன்னணி அரசியல்வாதிகள் தங்களுடைய அச்சத்தைத் தெரிவித்தனர். மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற மாநிலங்களில், பத்திரிகைத் துறையில் மிகவும் தைரியமாகப் பணியாற்றி வருகின்ற மற்ற ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்ற போது,  அரசாங்கத்திடமிருந்து இதுபோன்ற ஆதரவு எதுவும் வருவதில்லை.

பத்திரிகையாளராக இருப்பது, பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் விரும்பாதவற்றை வெளிக்கொணர்வது இந்தியாவில் மிகவும் ஆபத்தான செயலாக இருக்கின்றது. 24 வயதான பத்திரிகையாளரான அஹன் பென்கர் புதுதில்லி காவல்நிலையம் முன்பாக அக்டோபர் 16 அன்று நடைபெற்ற போராட்டம் குறித்து தகவல் சேகரித்துக் கொண்டிருந்தார். அவரை காவல் நிலையத்திற்குள்ளே சிலர் இழுத்துச் சென்றனர். அவர்களில் சிலர் மட்டுமே காவல்துறை சீருடை அணிந்திருந்தனர். நான்கு மணி நேரம் காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதோடு, அவரது தொலைபேசியும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. அந்த தொலைபேசியில் இருந்து பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், அவருடைய கிளவுட் சேகரிப்பை காவல்துறையினர் முழுமையாக நீக்கி விட்டனர்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\Ahan-Penkar-journalist-delh.max-600x400.jpg

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பென்கர் நேர்காணல் கண்டிருந்தார். பின்னர் பென்கர் பணிபுரியும் பத்திரிகையான கேரவானில் (நானும் அதில் எழுதுகிறேன்) உடல் காயங்களுடன் இருந்த பென்கரை காட்டுகின்ற புகைப்படங்கள் வெளியாகின. காவல்துறை துணை ஆணையரான அஜய் குமார் அவரைத் தாக்கியிருந்தார். அங்கிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் அவரை இழிவு செய்தனர். நகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த பென்கரிடம். இந்த விஷயத்தை கவனிப்பதாக அதிகாரிகள் கூறினர்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\143161-lbviqrlimi-1603273731.jpg

காவல்நிலையத்தில் கடுமையாக அவமதிக்கப்பட்ட போது அவரிடம் அதிகாரி ஒருவர், ‘நீங்கள் அனைவரும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? இந்த நாடு மாறி விட்டது உங்களுக்கெல்லாம் தெரியாதா? என்று கூச்சலிட்டார்.

நீங்களும் இப்போது அதைத் திரும்பச் சொல்லலாம். ‘இந்தியா இப்போது மாறி விட்டது’.

அதே வாரத்தில், பழங்குடி சமூகங்கள் என்று இந்தியாவில் அறியப்படுகின்ற ஆதிவாசிகளின் நில உரிமைகளுக்காக பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து உழைத்து வருகின்ற ஸ்டான் சுவாமி என்ற 83 வயதான பாதிரியாரை தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) அனுதாபி என்று குற்றம் சாட்டி தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. சுவாமியின் கைது இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்போது சிறையில் உள்ள, பிணை மறுக்கப்பட்டுள்ள, வழக்குகள் நிலுவையில் உள்ள இந்தியாவின் பின்தங்கிய, விளிம்புநிலை  சமூகங்களுக்காகப் போராடி வருகின்ற அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள், ஆர்வலர்கள், அதிருப்தியாளர்களின் பட்டியலில் ஸ்டான் சுவாமியும் இப்போது சேர்ந்திருக்கிறார்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\maxresdefault.jpg

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், 80 வயதான புரட்சிகர கவிஞர் வரவர ராவ் (சிறையில் இருந்தபோது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பிறகும் பிணை மறுக்கப்பட்டவர்), வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், கவிஞர் சுதிர் தவாலே, சமூக ஆர்வலர் மகேஷ் ரவுத், மனித உரிமை ஆர்வலர்கள் ரோனா வில்சன், அருண் ஃபெரீரா, கல்வியாளர்கள் சோமா சென், வெர்னான் கோன்சால்வ்ஸ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கல்வியாளர்கள் ஆனந்த் டெல்டும்ப்டே, ஹனி பாபு, எழுத்தாளர் கௌதம் நவ்லகா மற்றும் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சார்ந்த கலைஞர்கள் அடங்குவர்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\intellectuals under arrest.jpg

பீமா கோரேகான் வழக்கு 2017ஆம் ஆண்டு இறுதி நாள் மற்றும் 2018ஆம் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டு கொண்டாட்ட நாட்களை நோக்கிச் செல்கிறது. 19ஆம் நூற்றாண்டில் நடந்த போரின் இருநூற்றாண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான தலித்துகள் அங்கே கூடியிருந்தனர். அந்தப் போரில் பிரிட்டிஷ் துருப்புக்களின் ஒரு பகுதியாக இருந்த தலித்துகள், அந்த காலகட்டத்தில் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்த உயர்சாதி பேஷ்வாக்களைத் தோற்கடித்தனர். 2018ஆம் ஆண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் ஒருவர் இறந்தார். சிலர் காயமடைந்தனர். ஆனால் அரசாங்கம், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கணினிகள், புத்தகங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை அரசுக்கு எதிராக சதி நடந்ததாகக் கூறி பறிமுதல் செய்தது. அரசாங்கத்தை விமர்சனம் செய்திருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை வழக்கில் சிக்க வைக்க முயன்றது. ‘பிரதமரைக் கொல்லும் சதித்திட்டம் என்று சந்தேகப்படும் வகையில் அவதூறு, குற்றம் சுமத்துவது என்று தொடங்கிய அந்த முயற்சி – இதுவரையிலும் எங்குமே குறிப்பிடப்படப்படாததாக இருந்த அந்தக் குற்றச்சாட்டு – நம்பகமான ஆதாரங்கள், விசாரணைக்கான அறிகுறிகள் என்று எதுவுமே இல்லாத மிகப்பெரிய சதித்திட்டமாக சிதைந்து போனது’ என்று பத்திரிகையாளர் சமர் ஹலர்கர் அது குறித்து விவரிக்கிறார்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\bima-koregaon-1200.jpg

ஜனநாயகங்களை மதிப்பிடுவதற்கு வெறுமனே கட்டங்களைப் பூர்த்தி செய்வது மட்டுமே போதுமானவையாக இருக்குமென்றால், அவ்வப்போது தேர்தல்களை நடத்துகிறது, அதற்கென்று சுதந்திரமான நீதித்துறை உள்ளது, சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்கின்ற, தனிமனித உரிமைகளை அங்கீகரிக்கின்ற அரசியலமைப்பு உள்ளது, தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் செயல்படுகின்றன, எதிர்க்கட்சிகள் இருக்கின்றன அவை பாராளுமன்றத்திலும் உள்ளன என்று பல கட்டங்களை சரி என்று பூர்த்தி செய்கின்ற நிலையிலேயே இந்தியா தற்போது இருந்து வருகிறது.

ஜனநாயகத்தின் சாராம்சம் அதன் வடிவத்தில் இல்லாமல், அதன் உள்ளடக்கம், விதிமுறைகள், சட்டங்களில் இருக்கிறது; கட்டமைப்புகளின் இருப்பில் இல்லாமல், அந்த கட்டமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டுமோ, அந்த வழியில் செயல்படுகின்றனவா என்பதிலே இருக்கிறது. விஷயங்கள் தவறாக நடக்கும் போது, நடைமுறையில் இருக்கின்ற கட்டுப்பாடுகள் அவற்றைச் சரி செய்கின்றனவா என்பதே ஜனநாயகத்தைத் தீர்மானிக்கிறது. அந்த அளவுகோல்களின்படி பார்த்தால், நீண்டகாலமாக உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று விவரிக்கப்பட்டு வருகின்ற இந்தியா தொடர்ந்து தோல்வியடைந்தே வருகிறது.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\https___s3-ap-northeast-1.amazonaws.com_psh-ex-ftnikkei-3937bb4_images_4_0_7_7_25437704-1-eng-GB_20200311_Modinomics_Main.jpg

இந்தியா எப்போதுமே தன்னுடைய ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கைகளை கொண்டதாக இருந்தே வந்துள்ளது. இங்கே விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் சட்டங்கள் இருக்கின்றன; எதிர்ப்பை முறியடிப்பதற்காக ராணுவத் துருப்புக்கள் அனுப்பப்படுகின்றன; மனித உரிமைக் குழுக்கள் கூறுவதைப் போல, தண்டனை வழங்கும் விதத்தில் ராணுவத்தைச் செயல்பட அனுமதிக்கின்ற வகையில் சட்டங்கள் இருக்கின்றன; குடிமக்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரங்கள் பல கட்டுப்பாடுகளுடனே வருகின்றன; 1975 மற்றும் 1977க்கு இடையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடிநிலையை அறிவித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்ற சட்டங்களை சிலவற்றை நிறுத்தி வைத்தார்; 1984 மற்றும் 2002ஆம் ஆண்டுகளுக்கிடையேயான கலவரங்களைப் போல அவ்வப்போது மிருகத்தனமான வன்முறைக் கலவரங்கள் வெடிக்கின்றன. இவையெல்லாம் ஏற்கனவே நடந்திருந்த போதிலும், கூட்டணியினர் யாரும் தேவையில்லை என்று தன்னுடைய சொந்த பலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி ஹிந்து தேசியவாத அரசாங்கத்தின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், அதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் ஆழமாக, கூர்மையடைந்துள்ளன.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\Amnesty stops operation.jpg

செப்டம்பர் மாதக் கடைசியில், உலகின் முன்னணி மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனலுடனான அரசாங்கத்தின் மோதல்கள் வெளிப்படையாகத் தெரிய வந்த போது, இவ்வாறு  மோசமடைந்து வருகின்ற சூழ்நிலை இந்தியாவில் நிலவுவதை உலகம் முழுவதும் கவனித்தது. இந்தியாவில் தன்னுடைய செயல்பாடுகளை அம்னஸ்டி நிறுத்திக் கொள்ள முடிவு செய்தபோது, பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதுகுறித்த எச்சரிக்கையை வெளிப்படுத்தின. சிவில் சமூகக் குழுக்களுக்கு அளிக்கப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்புகளை ஒழுங்குபடுத்துகின்ற இந்திய சட்டங்களை மீறியதற்காக அந்த அமைப்பு விசாரணையில் இருப்பதாகக் கூறிய இந்திய அரசாங்கம், அம்னஸ்டி தெரிவித்த எதிர்ப்புகளை உடனடியாக நிராகரித்தது. அம்னஸ்டி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. சில காலமாக காஷ்மீரில் அமைதியாக நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைத் தடுத்து வருவது, அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் போன்றவற்றை விமர்சித்த அம்னஸ்டியின் பல அறிக்கைகளால் நிலைகுலைந்த இந்திய அரசு, தேசவிரோதம் என்று அரசாங்கம் கருதுகின்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாக அம்னெஸ்டி மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியது.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\a7ab0c3c69b248a688207de89a1b4afb_18.jpeg

சிவில் சமூகக் குழுக்களுக்கு வருகின்ற வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்துகின்ற மிகவும் சிக்கலான, கடுமையான விதிகள் இந்தியாவில் எப்போதும் இருந்து வருகின்றன. கொள்கை சீர்திருத்தங்களை ஆதரிக்கின்ற குழுக்கள் அல்லது உரிமைகள் பாதுகாப்பிற்கான ஆதரவை வழங்குகின்ற குழுக்கள், வறுமை ஒழிப்பு, சேவைகளை வழங்குதல் போன்ற மனிதாபிமானப் பணிகளைச் செய்யும் குழுக்கள் வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெறுவதைக் கடினமாக்குகிற வகையில் இருக்கின்ற  அந்த விதிகளை மோடி நிர்வாகம் மிகவும் கடுமையாக்கியுள்ளது. உலக அளவில் சிவில் சமூகத்திற்கான இடம் சுருங்கி வருகிறது. பிரேசில், ஹங்கேரி, ரஷ்யாவைப் போலவே, எதிப்பாளர்களுக்கு எதிரான சட்டங்களை இந்தியாவும் கூர்மைப்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து அம்னஸ்டி வெளியேறியது குறித்து எழுந்த அந்த சலசலப்பு நியாயமானது என்றாலும், அது மட்டுமே ஒரு தனிப்பட்ட சம்பவமாக இருக்கவில்லை. அம்னஸ்டியின் அவலநிலை மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துவது கவனச்சிதறலாகவே அமைந்து விடும்.

மனித உரிமைகளுக்கான உண்மையான யுத்தம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது, ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்கள் கடுமையான ஆபத்துகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலர் கண்காணிப்பில் உள்ளனர். துன்புறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய பாதையில் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் அவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். டெல்லியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களைப் போலவே, அவர்கள் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்போது ​​உயர் நீதிமன்றங்கள் அவர்களுடைய மனுக்களைப் புறக்கணிக்கின்றன அல்லது வழக்குகளை ஒத்தி வைத்து விடுகின்றன.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\135915-gdthglkqud-1580826337.jpg

பிப்ரவரி மாதத்தில், மற்ற எந்த விஷயங்களுக்கும் (அப்போது பரவி வந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வது உள்ளிட்ட) முன்னுரிமை தருவதை ஒதுக்கி வைத்து விட்டு,  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகையை முன்னிட்டு நாட்டை தயார்படுத்துவதிலே இந்திய அரசு மும்முரமாக இருந்தது (இந்திய-அமெரிக்க வாக்காளர்களைக் கவர்வதற்கான புகைப்பட வாய்ப்புகளை ட்ரம்பிற்கு வழங்கியதைத் தவிர, அது வேறு எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை). அந்த நேரத்தில், தில்லியில் உள்ள பொது இடத்தில் இந்திய குடியுரிமைச் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. புகலிடம் கோரி இந்தியாவின் அண்மை நாடுகளிலிருந்து வந்திருக்கின்ற முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை பெறுவதை அந்த புதிய சட்டத் திருத்தம் எளிதாக்கித் தந்தது. அதே நேரத்தில், குடிமக்கள் தேசிய பதிவேட்டைத் தயாரிப்பதற்கான பெரிய முயற்சியும் நடந்து கொண்டிருந்தது. தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆவணங்களும், காகிதங்களும் அவர்களிடம் இல்லை என்பதால், ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அந்த சட்டத்திருத்தம் பாகுபாடு காட்டுவதாக மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\895414-feb-24-top-news.jpg

அங்கே நடந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியாகவே நடந்தது என்றாலும், கூர்மையான தொனியிலும், சில சமயங்களில் வன்முறையாலும் அரசு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர். ட்ரம்பின் வருகையின் போது அதிக வன்முறைகள் நிகழ்ந்தன. அப்போது நடைபெற்ற கலவரங்களில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அரசியலமைப்பு மற்றும் அகிம்சை ஆகியவற்றை முழுமையாகக் கடைப்பிடித்து வந்த உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் சஃபூரா சர்கர் (கர்ப்பமாக இருந்தவர்), தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் போன்ற பெண்கள் உரிமைக்கான ஆர்வலர்கள் உட்பட அரசாங்க விமர்சகர்கள் பலரையும் தில்லி காவல்துறை கைது செய்தது.

அமைதியான, காந்திய வழியிலான எதிர்ப்பைக் கூட மோடியின் இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கருத்து வேறுபாடுகள் இங்கே தேசவிரோதம் என்றே அழைக்கப்படுகின்றன. இணையத்தில் மோடி நிர்வாகத்தை ஆதரித்து வருகின்றவர்கள், அரசாங்க விமர்சகர்களை (பெண்களைச் சங்கடப்படுத்துவதற்காக போலியான படங்களைப் பயன்படுத்துவது உட்பட) வேட்டையாடுகின்ற போது, அரசாங்க விமர்சகர்கள் நான்கு பேரின் கொலைகளை விசாரிப்பதற்கான வழக்குகளில் அரசு மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது. சமீப காலங்களில் இந்த அரசாங்க விமர்சகர்களுக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரங்களை பரவலாகப் பார்க்கப்படுகின்ற தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் நடத்தி இருக்கின்றன.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\for-hindu-centrejpg.jpg

காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.  உலகளாவிய பத்திரிகை சுதந்திரம் குறித்த குறியீட்டில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 142 ஆவது இடத்தில், மியான்மர், ஆப்கானிஸ்தானுக்குப் பின்னால் இந்தியா இன்று இடத்தைப் பிடித்துள்ளது. தலித் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் கிராமத்தை பார்வையிட முயற்சித்த பத்திரிகை நிருபர்கள் அவ்வாறு செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு செய்தியாளர்களால் இந்தியாவுக்கு வர முடியாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் அவையின் நெறிமுறையின்படி, அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரிலேயே அவர்களால் இங்கே வர முடியும்.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\4e905d1287369ff4.jpeg

அரசியல் கட்சிகள் கணக்கில் வராத தேர்தல் பத்திரங்களிலிருந்து நிதி பெறுவதால், தேர்தல் நிதி குறித்த விவரங்கள் மிகவும் தெளிவற்றவையாகி விட்டன. அந்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற மேல்முறையீடுகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் மாநில அரசாங்கங்களை நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தூண்டி விடப்படுகிறார்கள். பாரபட்சமின்றி இருக்க வேண்டிய, ஒன்றிய அரசால்  நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்கள் மிகவும் பகிரங்கமாக பாகுபாடு காட்டி வருவதோடு, மதச் சிறுபான்மையினர், அரசியலமைப்பு குறித்து விமர்சிக்கின்ற ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீரில் உரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் எதிர்க்கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் உட்பட சில முக்கியமான வழக்குகளை நீதித்துறை நிலுவையிலேயே வைத்துள்ளது. காஷ்மீர் இதுவரையிலும் அனுபவித்து வந்த அரசியலமைப்பு தந்திருக்கும் உத்தரவாதங்களை மோடி நிர்வாகம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. அதுமட்டுமல்லாது, அந்த மாநிலத்தைப் பிளவுபடுத்தி முழுமையான மாநிலம் என்பதிலிருந்து கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதியாக அதை மாற்றியுள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\India A Different Nation\HINDU-RASHTRA.jpg

நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட இடைவிடாத வேகம், அவை கையகப்படுத்தப்பட்ட, பலவீனப்படுத்தப்பட்ட விதம், பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நடவடிக்கைகளை எளிதாக நிறைவேற்ற முடிந்தது, நீதித்துறை அறிவிப்புகள், உத்தரவுகள் மூலம் உரிமைகளை நீக்க அனுமதித்த விதம் என்று இவை அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து, இந்தியா என்பது எவ்வாறு இருக்கக்கூடாதோ அந்த வகையிலேயே அதை மாற்றியமைத்திருக்கின்றன. இலக்கில் கொள்ளப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்குப் பதிலாக, வளர்ந்து வரும் பிற நாடுகளில் இருப்பதைப் போல உரக்கக் குரல் கொடுப்பவர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவைப் பெற்ற எதேச்சதிகாரத் தலைவர் இங்கேயும் உருவாகியிருப்பது தெரிகிறது.

டெல்லி காவல்துறை அதிகாரி சொன்னது சரிதான்: இந்தியா உண்மையில் வேறு நாடாகவே மாறி விட்டது. ஆனாலும் துணிச்சலான ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், அடிமட்டத் தொழிலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் என்று இந்தியர்கள் பலரும் தங்கள் குடியரசைப் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதுவே அம்னஸ்டி வெளியேறிய போது இருந்ததை விட மிகப் பெரிய குரலாக இருக்கும்.

https://foreignpolicy.com/2020/11/27/why-india-has-become-a-different-country/

தமிழில்: தா.சந்திரகுருLeave a Response