Story

நான் தொலைத்த மனிதர்கள்!! ஆவண கதை (சுப்பம்மாள்) – இதய நிலவன்

Spread the love

 

  சுப்பம்மாள், எங்கள் பாட்டி, அதாவது அம்மாவின் அம்மா, தீர்க்கமாகச் சொல்லவேண்டுமானால் என்னை 30 ஆண்டுகள் வளர்த்தவள். நான் விபரம் தெரிந்த நாளிலிருந்தே கிழவியாகவே அவளைப் பார்த்து வந்திருக்கிறேன். 

எனது சொந்த ஊர் காட்டுநாயக்கன்பட்டி தேனி மாவட்டம். இங்குதான் அவள் பிறந்தாள். வாழ்க்கைபட்டது எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டரில் உள்ள தாடிச்சேரியில். வாழ்க்கைபட்டது மிகப்பெரிய விவசாய குடும்பம், ஊரை ஒட்டிய மந்தைத்தோட்டம், வற்றாத கிணறு, எங்கள் தாத்தா தோட்டத்தின் ஒரு மூளையில் (கன்னி மூளையில் ) உள்ள கண்ணன் கோவில் பூசாரி.

 எங்கள் அம்மாதான் குடும்பத்தின் மூத்த பிள்ளை. எங்கள் அம்மா வாழ்க்கைபட்டது காட்டுநாயக்கன்பட்டியில், நான் அண்ணன் அக்கா என நாங்கள் மூன்று பேர் எங்கள் தாத்தா (அப்பாவின் அப்பா) கண்டமனூர் ஜமீனில் வில்லேஜ் முன்சீப், பெரிய குடும்பம் எங்களது. ஆனால், நாங்கள் என்னவோ தாடிச்சேரி அம்மா பாட்டி வீட்டில் இருக்கவே விரும்புவோம். எங்கள் பாட்டியை ஊரில் யாருக்கும் பிடிக்காது சிடுமூஞ்சிக்காரி, ஒரு துரும்பை ஒருத்தருக்கும் தரமாட்டாள் சுருக்கமாகஎச்சக்கையில் காக்கா விரட்ட மாட்டாள்” அது மற்றவர்களுக்கு, ஆனால் எங்களுக்கு? நாங்கள்தான் அவளது உலகம் எங்களுக்கென்று எதுவும் செய்வாள். தாத்தாவிற்கு தெரிந்தும் தெரியாமலும்.

வீட்டில் எப்போதும் இரண்டு மூன்று பசுமாடு கட்டிக்கிடக்கும். பாட்டியேதான் பால் பீய்சுவாள் முதலில் பாலை பீச்சி ஒரு தூக்கில் (அந்தத் தூக்கு இப்போதும் எங்களிடம் குறிப்பாக என்னிடம் இருக்கிறது) காட்டுநாயக்கன்பட்டிக்கு பக்கத்துவீட்டு ஆசாரி பையனிடம் (அவன் பெயர் குமரன்) கொடுத்து அனுப்பிவிட்டு மிச்ச பாலைக்காய்ச்சி தைருக்காக கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு, தண்ணீரில் பால் ஊற்றாமல், பாலில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, காபி பொடி போட்டு,                            கருப்பட்டியைக் கலந்து, ஒரு ஈயப்பாத்திரம் நிறைய கொண்டு வந்து பட்டா சாலையில் வைத்தால் அந்த வாடையே எங்களை எழுப்பி  விட்டுவிடும்.

 என் கடைசி சித்தி ஒரு சொம்பும் டம்ளருமாய் என் தாத்தாவிற்கு கொண்டுபோய் குடுத்துவிட்டு வந்து எங்களுக்கு ஊற்றிக் குடுப்பாள். ஒரு சொம்பு நிறைய (அந்தச் சொம்பும் கூட எங்கள் வீட்டில் உள்ளது) எனக்கு ஊற்றிக் குடுப்பாள், ஒரு அரை மணிநேரமாவது ரசித்தும் ருசித்தும் குடிப்பேன்.

 நாங்கள் எழுவதற்கு முன்பே சமையல் வேலைகளை முடித்துவிட்டு தோட்டத்திற்குச் சென்றால் மாலை வரை வேலை செய்துவிட்டு வந்து குளித்து முடித்து என் சித்தி ஏதாவது சமையல் செய்து வைத்திருப்பதைச் சாப்பிடுவாள்.

 அவளது, அவளுக்கானது என்றால் எனக்குத்தெரிந்து இரண்டு வேளை சாப்பாடு இரண்டு வேலை கருப்பட்டி காப்பி (அவள் கருப்பட்டி கடுங்காப்பி குடிப்பாள்)

 அவளுக்கு நாங்கள் தான் உலகம் என்று இறுதிவரை வாழ்ந்தவள். என் அம்மாவோடு சேர்ந்து ஐந்து பேர் அந்தக் குடும்பத்தில் இரண்டு ஆண், மூன்று பெண்கள்.

 சுப்பம்மாவிற்கான வாழ்க்கை, அவளது இல்லறம், அவளது ஆசாபாசங்கள் அரிதானவை, மிக மிக அரிதானவை. என் தாத்தாவும் பாட்டியும் பேசி என் தாத்தாவின் இறுதிநாட்கள் வரை நான் பார்க்கவில்லை.

Classic Tamil Nadu - MILESWORTH JOURNEYS

கோப்பு படம் 

 என் பாட்டி மிகப்பெரிய கதைசொல்லி. இன்று நான்  பல கதை சொல்லிகளின் கதைசொல்லி தனத்தை பார்க்கிறேன். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் இன்றைய கதை சொல்லிகள் என் பாட்டியிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான கதை சொல்லியவள்.

 எங்கள் பாட்டி வீட்டில் நிலாமுற்றம் இருக்கும். நான், அக்கா, அண்ணன், சித்தி, என் பாட்டி, ஒரு போர்வை (அந்த போர்வை போன்று ஒரு அடர்த்தியான போர்வை நான் இன்றுவரை பார்க்கவில்லை துணி துவைக்கும் வண்ணாத்தி அதை வெளுப்பதற்கென்றே இரண்டு மரக்கால் தனியாக கூலி கேட்பாள்) விரித்து படுத்துக்கிடப்போம், இராமாயாணம், மகாபாரதம், நல்லதங்காள், வள்ளித்திருமணம், கண்ணகி கோவலன் கதை, சில நாடோடி கதைகள், முனீஸ்வரன் கதை, கருப்பசாமி கதை, ஜடா மோகினி கதை, கொள்ளிவாய் பிசாசு கதை, என ஊருப்பட்ட கதைகள் அவள் மூளைக்குள்கிடக்கும். அவள் வாழ்வின் அன்றைய சூழலை ஒட்டி அன்றைய கதைகள் இடம்பெறும்.

 என் தாத்தா கோவில் பூசாரிதானே தவிர ஒரு கடுமையான மனிதர். என் பாட்டியை கண்டாலே பிடிக்காது. சின்னச் சின்ன பிரச்சனைகள் கூட விஸ்வரூபமெடுக்கும்.

ஒரு பெண்ணை இவ்வளவு மூர்க்கத்தனமாகவும் ஒரு மிருக பலத்தோடும் அடிக்க முடியும் என்பதை நான் அங்குதான் நேரடியாகப் பார்த்தேன். அப்படியே பயந்து என் சித்தியுடன் நான் ஒட்டிக் கொள்வேன். என் தாத்தா என் அக்காவின் மிரட்டலுக்கும் கோபத்திற்கும் மட்டுமே பயப்படுவார். என் பாட்டியிடமிருந்து என் தாத்தாவை விளக்கிவிட்டு என் பாட்டியைப் பார்த்தால் அலங்கோலமாக இருக்கும், கலைந்த சீலையும் விரித்த தலைமுடியுமாக, ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. அப்படியே எழுந்து சீலையை சரி செய்து கொண்டு தலையை முடிந்து மூக்கை முந்தானையில் துடைத்துக் கொண்டு மாட்டுச்சாணம் அள்ளவும் தீவணம் போடவும் சென்றுவிடுவாள். அந்த அடியை அவள் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டாள். அந்த அடியும் அவள் பெற்ற வேதனைகளும் அவளால் சொல்ல முடியாத விஷயங்களும் ஆசைகளும் அவள் கதைகளில் வெளிப்படும். 

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த நல்லதங்காள் கதை. அதை அவள் சொல்லத் துவங்கும் போதே ஒரு பாடலோடு தான் துவங்குவாள். ராகமும், சுருதியும் அவ்வளவு சுத்தமாக இருக்கும். நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றுக்குள் தூக்கிப் போடும்போது ஒப்பாரியாக மாறும் அந்தப் பாடல், அவள் கதை சொல்லத் துவங்கும் போதே குடுமி அவிழ்ந்து தலைவிரி கோலமாய் மாறி, கண்ணீர் பெருக்கெடுக்க, குரல் கம்ம, ஆங்காரமாய் தெரிவாள். எங்கள் அனைவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கும். தன் வாழ்க்கையை இணைத்து கலந்து அவள் மொத்த ஆதங்கத்தையும் இயலாமையையும் கொட்டித்தீர்ப்பாள்.

நல்லதங்கா என்ன பெத்தவளே 

உன்னோட தைரியம் ஓமக சுப்பம்மா 

எனக்கு வாய்க்களயேடி பாதகத்தி 

என்று மாரிலடித்து அழுது கதையை முடிப்பாள். நாங்கள் மூன்று பேரும் போய் கட்டிப் பிடித்துக் கொள்வோம். என் சித்திக்கு கண்ணீர் பெருக்கெடுக்கும், எங்களை இழுத்து படுக்க வைப்பாள்.

 சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து விட்டு சீலையை சரி செய்துகொண்டு, முடியை சுருட்டி கொண்டை போட்டுக்கொண்டு, எழுந்து சென்று மாட்டுத் தொழுவத்தின் அரிக்கேன் வெளிச்சத்தை கூட்டி, கூடையும் விளக்குமாறுமாய் சாணியை அகற்றிப் போட்டுவிட்டு தான் எப்போதும் தூங்கும் அடுப்படிக்கு சென்றுவிடுவாள்.

 எனக்கு கொஞ்சம் விபரம் வந்தபின்பு என் சித்தியிடம் நான் கேட்டேன்ஏன் சித்தி இவக ரெண்டு பேரும் எப்பவுமே இப்படித்தானா” என்று, எனக்கு விபரம் தெரிஞ்சு அவக ரெண்டு பேரும் பேசி நாம் பார்த்ததில்லடா என்பார்.

 என் தாத்தாவின் இறுதி நாட்கள் மிக மிகக் கொடுமையானவை இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழ் புண்கண்டு, அவை சரியாகாமல், நோயும் வயோதிகமாக கொடுமையான இறுதி நாட்களை அனுபவித்தார்.

The golden grandma - The Hindu

நான் ஒருநாள் (இறுதிநாட்களில்) தாத்தாவிடம் அமர்ந்திருக்கும்போது தூரமாய் குத்தவைத்து அமர்ந்திருக்கும் பாட்டியைப் பார்க்கிறார். நான் பாட்டியைக் கூப்பிடவா என்கிறேன் அவர் தலையை ஆட்டிவிட்டு எனக்கு மட்டும் கேட்கும் மிக மெல்லிய குரலில்ஓம் பாட்டி தர்ம பத்தினிடா” என்று முனங்குகிறார். இந்த வார்த்தை என்னை என்னமோ செய்தது நான் என் சித்தியிடம் சென்று கேட்கிறேன்.

ஏன் தாத்தா இப்படி சொல்றாரு” அதெல்லாம் உனக்கு புரியாதுடா உங்க தாத்தா பாட்டி பேசாம இருந்தாலும் அவங்களுக்குள்ள ஒரு கொறையும் கிடையாது” இந்த வார்த்தை எனக்கு அப்போது புரியவில்லை, நான் ஒரு எழுத்தாளனாக என்னை வடிவமைத்துக் கொண்ட பின்பு அந்த வார்த்தையின் வீரியம் என்னவென்பதை உணர்ந்து இப்படி ஒரு கவிதை எழுதினேன்.

தாத்தாவுடனான

பேச்சுவார்த்தையை

நிறுத்திவிட்ட பின்பு

இரண்டு பிள்ளைகளை

பெற்றிருந்த பாட்டியைப் பார்த்து

என் தாத்தா சொன்னார்

தன் இறுதி நாளில்,

உன் பாட்டி

தர்ம பத்தினிடா என்று

 என் தாத்தா இறந்துவிட்டார். நல்லதங்காளுக்காகவும்,  சீதைக்காகவும், திரரௌபதிக்காகவும், கண்ணகிக்காகவும் குடம் குடமாய் கண்ணீர் சிந்திய பாட்டி ஒப்பாரி முழங்கிய பாட்டி ஒரு சொட்டு கண்ணீர் சிந்தவில்லை, வாய் திறக்கவில்லை.

 கடைசியாக பூவைத்து, பொட்டு வைத்து, குடம் குடமாய் தண்ணீர் தலையில் ஊற்றி, வளையல் உடைக்கும்போது பாப்பாத்தி கிழவிபாதகத்தி கண்ணீர்விட்டு அழுதுப்புட்நீஎன சொல்ல.

 அப்போது ஆசாரி வீட்டுக்கிழவி கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் கல்வெட்டாய் கிடக்கிறது அந்தக் கிழவி சொன்னாள் 

என்ன மயித்துக்கு அழுகச் சொல்ற”

-முற்றும்-

Leave a Response

Top Reviews

Video Widget

gallery