Book ReviewPoetry

நூல் அறிமுகம்: தடையினை தகர்த்து தடம் பதித்துச்செல்லும் இக்கவிதைகளை கண்டுகளிப்போம்.. –   செல்வக்குமார் இராஜபாளையம்

தடையின் தடத்தில் 

——————————–

கவிஞர் துரை.நந்தகுமார் அவர்களின் தடையின் தடத்தில் ஹைக்கூ கவிதைகள் நூல் என் கையில் தவழக்காரணமானவர் தம்பி கவிஞர் வீரசோழன் க.சோ. திருமாவளவன் தான். சந்திக்க வாய்ப்பில்லாத இக்கொரோனா காலத்திலும் எப்படியேனும் கவிதை நூலை என்னிடம் சேர்க்க சிரமம் எடுத்துக்கொண்டு

சேர்த்துவிட்டார். அணிந்துரையை வாசிக்கும்போது தெரிந்துகொண்டேன் தம்பி என்னிடம் இந்நூலைக்கொடுக்க காரணமென்ன என்பதை.

கொரோனா காலத்தில் 144தடை உத்தரவின் பொழுதில் இத்தொகுப்பில் 144 ஹைக்கூ கவிதைகளை படைத்துள்ளார் கவிஞர். அனைத்தும் கொரோனா காலச்சூழலினால் நாம் சந்தித்த சந்தித்துக்கொண்டிருக்கிற நிகழ்வுகளை கண் முன்னே நிறுத்தியுள்ளார். மூன்றடி இடைவெளிவிட்டு நான்குபேருக்கு மேல் கூடக்கூடாது சமூக விலகலைக் கடைபிடிக்கவேண்டும் என்ற வாசகங்களை கவிதை நூல் வடிவமைப்பிலும் மறக்காமல் கவிஞர் கடைப்பிடித்துள்ளார்.

இந்த நூலின் அணிந்துரையில் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் கூறியது போல காலத்தின் குறியீடாய் தடம் பதித்துள்ளது இந்நூல். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தார்கள் மருத்துவத்தொழில் புரிந்தோர், கவிஞர்கள் கொரோனா காலத்தில் என்ன செய்தார்கள் என்று பிற்காலத்தில் தேடிப்பார்க்கும்போது இந்த நூல் அங்கே ஜொலித்துக்கொண்டிருக்கும்.

இந்நூலின் அணிந்துரையில் மானா பாஸ்கரன் எடுத்த எடுப்பில் சொன்னபடி இது உண்மையிலே கவிதை ஆவணமாக வீற்றிருக்கும் வருங்காலத்தில். ஆம் மானுடவியல் பதிவாகவும்,இலக்கிய ஆவணமாகவும் சொல் விதை நெல்லாகவும் எக்காலத்திலும் விளங்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்காது.

இயற்கையை மனிதர்கள் சீண்டுவதால் பேரிடர்களான வெள்ளம், புயல், பெரும் மழை, பூகம்பம், காட்டுத்தீயென உலகில் ஒவ்வொரு பகுதியாக தனது செயல்பாட்டினைக்காட்டி இயற்கை பொறுமையைக் களைந்து மனிதர்களை உலுக்கியெடுக்கும். இந்தச் சீனத்து வரவான கொரோனா வைரஸோ ஒரே நேரத்தில் உலகையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. மானுட மனங்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைவரும் எனக்குக் கீழ் ஒன்றுதான் என்பதை உணர்த்திவிட்டது.

உலகில் எங்கும் ஒரே சொல்லில் மாற்றமின்றி உச்சரிக்கப்படும் டாக்ஸி(Taxi) போல் இக்காலத்தில் வாழும் உலக மக்கள் அனைவரும் வாழ்வினில் மறக்கமுடியாத சொல் கொரோனா. அக்கொரோனாவினால் மக்கள் சந்திக்கும் துயரத்தை அணுஅணுவாக மூன்றடிகளில், சமூக இடைவெளியுடன், பக்கத்தினுள் நெருக்கமில்லாமல் நேரில் கண்டதையும் தான் அனுபவித்ததையும் அப்படியே அச்சுப்பிசகாமல் அள்ளித்தெளித்திருப்பார்.

சில கவிதைகளை இங்கு காண்போம், தடையின்றி படித்து இரசியுங்கள் அனைத்து கவிதைகளையும் என்பதனால் தான் கடைசிப்பக்கத்தில் கடைசிக் கவிதையாகப் பொருத்தியுள்ளார்.

Section 144 என்றால் என்ன? – சமூக புலன் விசாரணை (IRA)

“144

காட்சிகள் பதிவானது

பொருத்திய மூன்றாம் கண்ணில்”

என இக்கவிதைத் தொகுப்பை முடித்திருப்பார்.

மனிதன் நடக்கின்ற பாதையில் புல்லு கூட முளைக்காதென்பர், ஊரடங்கில் அப்பாதையில் புற்கள் முளைத்ததாக அமைந்துள்ளது இக்கவிதை..

தனித்திருத்தலில் மறைந்த

ஒத்தையடிப் பாதை

வளர்ந்த புற்கள்.

மரத்தின் கீழ் குழுமியிருப்பர் யாசகர்கள் குடும்பமாக, இந்நோய்த்தொற்றினால் தனித்து அனைவரும் சென்றதால் வெற்றிடமாக உள்ளதைக்கண்டு…பறவையாகிய கவிஞரின் பார்வையில் பூத்த இக்கவிதை

மரத்தின் கீழ் வசித்த

குடும்பங்களைத் தேடுகிறது

குஞ்சுகளோடு பறவை.

இக்கொரோனா ஆரம்பநிலையில் தொலைக்காட்சியில் காணும் செய்தியெல்லாம் உலக மானுடர் அனைவரையும் பயத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றதை உணராதவர் யாருமிருக்க முடியாது. அந்த உணர்வில் உதித்த கவிதை..

கொத்துக் கொத்தாய்

வாசகத்தை கேட்டதும்

குலை நடுங்குகிறது.

ஊர்கூடித் தேர் இழுப்பது சொல் வழக்கு

தனித்து இரு விலகி இரு என்ற இக்காலச்சூழலில் உருவான இக்கவிதை..

விலகியிருத்தலில்

ஊர்

நகராதிருக்கிறது தேர்.

நான்கு பேருக்குமேல் கூடக்கூடாதென 144 தடையுத்தரவால் பெருக்கல் வாய்ப்பாட்டில் கூட 2×2= 4 வுடன் நிறுத்திக்கொண்டார் கவிஞர்..

1×2=2

2×2=4

மீதி சூழல் சரியானதும்.

தூசி ஒவ்வாமையில் முகக் கவசம் சிலர் அணிவதை கேலிபேசிய உலகமோ அணிந்து கொண்டுள்ளது நாணத்துடன் முகக்கவசத்தை…

அறிவிப்புக்கு முன்

தயாரான பொம்மைகள்

முக கவசமில்லாமல்

வீடு தேடி திருமண பத்திரிக்கை கொடுக்க வருபவர்களுக்கு தேநீர் வழங்கி உபசரிப்போம், கால மாற்றத்தில் வாசலோடு நிறுத்தி திருப்பி அனுப்புவதால் கனிந்த கவிதை..

தனித்திருக்கும் மனிதம்

உறுத்துகிறது

வாசலில் நல்வரவு மிதியடி.

ஞாயிற்றுக்கிழமையை முந்தின நாளான சனிக்கிழமையே வரவேற்று மறுநாளைக்கொண்டாடும் கனவுகளோடு உறங்கச்செல்வோம். இன்று என்ன கிழமை என்பதை மறந்த நீண்ட விடுமுறையில் உதயமான கவிதை..

ஏழில் ஒன்றாய்

ஞாயிறு

விலகி இருத்தலில்.

சுதந்திரம் கிட்ட தன் கவிப்பாடல்களால் மக்களை வெகுண்டு எழச் செய்த மகாகவி பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மொத்தம் 14 பேர் கலந்துகொண்டனர் என்ற வரலாற்றை மெல்ல அசைபோடவைத்துள்ளது இக்கவிதை..

இறுதி ஊர்வலங்களில்

உயிர்த்தெழுகிறது

மகாகவியின் இறுதி ஊர்வலம்.

வேலையின்றி உணவின்றி தவித்த புலம்பெயர் மானுடர்கள் தன் சொந்த ஊருக்குத் திரும்பிச்செல்லும் போது நேர்ந்த கொடுமைகளை கண்ணுற்று கண்ணீராய் வடிந்த கவிதை இதோ..

நான்கு மாநிலத்துப் பாதம்

பதிந்திருக்கிறது

புலம்பெயர்ந்தவன் வீட்டில்.

மனிதர்களுக்கு உணவு கிடைக்காமல் தவிக்கும்போது அறச்சிந்தனை சற்று தடுமாறியதால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சோறுபோட ஆளில்லாமல் போனகதை இக்கவிதையை படித்தவுடன் மனதுள் வந்து குரைத்துச்சென்றது..

இடைவெளி விட்டு

தாயின் முலையைக் கவ்வும்

நாய்க் குட்டிகள்.

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்,

ஏக்கரில் விளைந்தது

விற்கப்படுகிறது

வட்டத்துக்குள்.

 

தனித்தனியாக

நான்கே பூக்கள்

சிறுமியின் ஓவியத்தில்.

இப்படியே போனா 144 கவிதைகளையும் தடையின்றி பகிர்ந்துவிடுவேன் என்பதை உணர்ந்தவனாய், அனைத்துலக மக்களிடமும் இக்கவிதைத் தொகுப்பு சென்றடைந்து அனைவரும் வாசித்து வாழ்த்தட்டும் இக்கவிஞரை…

கவிதை நூல்: தடையின் தடத்தில் 

                          ஹைக்கூ கவிதைகள்

ஆசிரியர் : கவிஞர் துரை. நந்தகுமார்

முதல் பதிப்பு : ஜூலை 2020

வெளியீடு :அன்னை ராஜேஸ்வரி 

பதிப்பகம்

சென்னை-600 011.

விலை: ரூ.80/-

நூல் விமர்சனம் :  செல்வக்குமார் இராஜபாளையம்

Leave a Response