Story

குஜராத்தி சிறுகதை : ஏழாவது மாதம் – ஆ.தங்கராஜூ

Spread the love

 

திருமணம் முடிந்த நாளிலிருந்து அவளுக்குள் பயமும், சந்தேகங்களும் நிறைய தோன்றி இருந்தன. எப்படி ஆகுமோ… என்னால் தாங்க முடியுமா? என்றெல்லாம் பயந்து கொண்டிருந்தாள். பயத்துக்கும், சந்தேகங்களுக்கும் விடைகொடுக்கும் வேளை விரைவில் வரப்போகிறது. ஆனாலும் பதட்டத்துடன் இருந்தாள். உள்ளங்கைகளில், முன் கைகளில் மருதாணியில் கோலம் மாதிரி வரைந்திருந்தாள். அதிலிருந்து மெல்லிய நறுமணம் கமழ்ந்தது. அவள் அணிந்திருந்த துப்பட்டாவில் தங்க ஜரிகையில் பூ வேலைகள் செய்யப்பட்டிருந்தது. அவள் தலையில் அணிந்திருந்த மல்லிகைச் சரங்களிலிருந்தும் இனிய மணம் வீசியது. ஆனால் இவையெல்லாம் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அவளது அழகான அலங்காரமெல்லாம் வியர்வையில் ஈரமாக இருந்தது. முகம் களையிழந்து காணப்பட்டது.

உடம்பு சரியில்லையா? வலி ஏதாவது இருக்கிறதா? பக்கத்து வீட்டுப் பாட்டி கவலையுடன் கேட்டாள்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. நன்றாகத்தான் இருக்கிறேன் என்றாள். அவள் பெரிய கூட்டுக் குடும்பத்திலிருந்து வந்தவள். குடும்பத்தில் திருமணமான பெண்கள் தாய்மை அடைவதையும், குழந்தை பெறுவதையும் அவள் அந்தந்த பருவங்களில் கண்டு வந்திருக்கிறாள். கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் நிறை மாதம் வரை நடைபெறும் அத்தனை பரிணாமங்களையும் பார்த்திருக்கிறாள். அவளுடைய தந்தைவழி உறவுப்பெண்களும், தாய்வழி சொந்தக்காரப் பெண்களும் மாறி மாறி தாய்மை அடைவதும், குழந்தை பெற்றெடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அவளுடைய மனதுக்குள் திகில் தொடர்ந்து இருந்தது.

அரசாங்க குடியிருப்புகள் வரிசையாக இருந்தன. அதில் ஒன்றில் தான் அவள் குடியிருந்து வருகிறாள். குழந்தைச் சத்தம் குடியிருப்பு முழுவதும் கேட்க வேண்டும். மற்ற குழந்தைகளோடு சிரித்து, விளையாடி, சண்டையிட்டு, குறும்புகள் செய்வதைக் கண்டு ஆனந்தமடைய வேண்டுமென்று எண்ணினாள்.

கர்ப்பிணிப் பெண்கள் எல்லோருக்கும், பிள்ளை பெறும் வரை உடல்ரீதியான க~;டங்கள் பொதுவானவை. கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் பசியில்லாமலும், எதைச் சாப்பிட்டாலும் வாந்தியும் வரும். மாதங்கள் செல்லச் செல்ல உடம்பு கனமாகவும், உடலின் சின்ன அசைவு கூட கடினமாகவும், வலி உண்டாக்குவதாகவும் இருக்கும்.

அவள் தாய்மை அடைந்து ஏழாவது மாதம் துவங்கி விட்டது. பிரசவத்தின் நாட்கள் நெருங்க நெருங்க பயம் கூடிக்கொண்டே இருந்தது. குழந்தை பிறப்பின் போது மிக்கடுமையான வலியும், அதிகமான உதிரப் போக்கும் இருக்கும். பெண்களுக்கு இது ஒரு ஜீவ மரணப்போராட்டம் தான். குழந்தை வெளியே வருவதற்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை. அனைத்தையும் தாங்கித் தான் ஆக வேண்டும். மற்ற எல்லா விலங்குகளும் இதே போன்ற வலி, வேதனைகள் மூலம் தான் தனது குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. அவளது உறவுக்காரப் பெண்கள் அவளுக்கு அடிக்கடி தைரியம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு வேதனை இல்லாத, எளிமையான வழிமுறைகள் இருக்க வேண்டுமென்றாள். இதற்கெல்லாம் பயந்தால் பூமியில் மனித இனமே வளர்ந்திருக்காது. உன் தாய் இதைப்போலத்தான் க~;டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து உன்னைப் பெற்றெடுத்தாள். அதுமட்டுமல்ல, உலகிலுள்ள உயிரினங்களெல்லாம் இதே முறையில் தான் இந்தப் பூமிக்கு புதிய உயிர்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன என்று அவள் வீட்டுப் பெண்கள் கூறினார்கள். உற்பத்தியும், மறு உற்பத்தியும் மனித குல பரிணாம வளர்ச்சியின் கூறுகள் தானே.
வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம் என்றால், அந்த வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் பரிசுப்பொருள் இன்மயமாகத்தானே இருக்க வேண்டும். அப்போது தான் அதை உற்சாகமாகக் கொண்டாட முடியும். உயர்ந்த கால்களையும், நீண்ட கழுத்தும் உடைய வெள்ளை நிறப் பறவை ஒன்று, அழகான பிஞ்சுக் குழந்தையை சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்து நம் வீட்டுத் தொட்டிலில் போட்டால், உண்மையிலேயே கடவுள் தந்த பரிசாக இருக்கும். இவ்வளவு வேதனைகளையும், க~;டங்களையும் அனுபவிக்க வேண்டியதில்லை. இது மாதிரியான அதிசயங்கள் நிகழ வேண்டுமென்று அந்த அப்பாவிப் பெண் நினைத்துக் கொண்டிருந்தாள்.

இன்னும் ஒரு மாதமோ அல்லது ஒன்றரை மாதமோ போனால் நிறைமாத வயிற்றைக் கொண்டு நடப்பதே சிரமமாக இருக்கும். இதை நினைத்து சந்தேசப்படுவதா, வருத்தப்படுவதா என்று அவளுக்குத் தெரியவில்லை. குழந்தை பிறக்கப் போகும் அந்த நாளை நினைத்து நினைத்து அவளுக்கு முகமெல்லாம் வாடி வெளிறிப் போய்விட்டது.

How the Tamil Nadu govt is taking care of pregnant women during ...

எல்லாப் பெண்களைப் போலவே நானும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு உடம்பு வேதனையெல்லாம் தீர்ந்துவிடும். புதிய மகிழ்ச்சி பிறக்குமென்று அவருடைய நெருங்கிய தோழி சொன்னாள்.

ஆனால் அவையெல்லாம் உண்மையா? கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். அந்த குழந்தைகள் தானாக வளர்ந்து விடுகின்றனவா? குழந்தை பிறந்ததிலிருந்து பேசத் துவங்கும் வரை தாயின் இடைவிடாத கவனிப்பு தேவைப்படுகிறது. குழந்தை மலம் கழித்த, சிறுநீரில் நனைந்த துணிகளை அலசி, வேறு துணி மாற்றுவது, மலம் கழிக்கப் பழக்குவது, எப்போதும் குழந்தையை சுத்தமாக வைத்திருப்பது, தாய்ப் பாலுக்குப்பின், சாப்பிடும் பருவம் வரும் போது சரியான சரிவிகித உணவை ஊட்டுவது போன்றவைகளெல்லாம் தாய்மார்களுக்கே ஒதுக்கப்பட்ட வேலையாக அன்றாடம் ஆகிவிடுகிறது.

குழந்தையை பராமரிக்க இருபத்து நான்கு மணி நேரம் போதவில்லை. நாள் முழுக்க உச்சி முதல் பாதம் வரை கண்காணிக்க வேண்டியுள்ளது. குழந்தை திடீர் திடீரென்று அழும்போது எதற்காக அழுகிறது என்பதே தெரியாமல் இருக்கும். சில நாட்களுக்கு முன்பு அவளுடைய உறவுக்கார பெண்ணின் குழந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை. இரவு பகலாக தூங்காமல் அந்தத் தாய் குழந்தையை கவனித்து வந்தாள். பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை பகல் முழுவதும் நன்றாகத் தூங்கி, இரவெல்லாம் விழித்து அழுது கொண்டிருந்தது. அவளுடைய கணவர் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாக குறட்டை விட்டுத் தூங்குவார். பூகம்பமே வந்தாலும் அசையமாட்டார். குழந்தை வளர்ப்பில் பெண்களே ஒற்றை ஆளாய் அனைத்துக் கடமைகளையும் செய்கிறார்கள். குடும்பத்தலைவராக இருப்பவர்கள் தாய்மார்களின் வேலைகளில் பங்கிட்டுக் கொள்வதோ அல்லது குறைந்தபட்சம் அவர்களிடத்தில் கனிவான ஒரு வார்த்தை கூட சொல்வது இல்லை.

மாலை மங்கிய நேரம் காலனிக்கு வெளியே மனிதர்களின் இரைச்சல் சத்தம் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வேலைக்குச் சென்றவர்கள் களைப்புடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளெல்லாம் பள்ளியிலிருந்து வந்து சீருடைகளையும், காலணிகளையும் மாற்றிக் கொண்டிருந்தார்கள். தள்ளுவண்டிக்காரர்கள் தங்களுடைய மாலை நேர வியாபாரத்தைத் துவங்கி இருந்தார்கள். வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் காய்கறிகளின் வாசைன காற்றில் மிதந்து வந்தது. ஆங்காங்கே இறைச்சி கடைகளும் இருந்தன.

எவ்வளவு நேரம் தான் பிரசவத்தைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளோடு இருப்பது? மாற்றத்திற்காக அவள் சற்று நேரம் வெளியே காலார நடந்து வரலாம் என்று எண்ணனாள். மருத்துவர்கள் தினமும் நடக்க வேண்டுமென்று அவளுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்கள். கதவைப் பூட்டி வெளியேறும் போது ரஸியா அவள் அருகில் வந்தாள்.

அதே வரிசையில் குடியிருக்கும் அவள் அத்தையின் வீட்டிற்கு போபாலிலிருந்து வந்திருக்கிறாள். அடடா… என்ன சுறுசுறுப்பு. ரஸியாவின் நீலக்கண்களும், அழகிய கூந்தலும், புன்னகை மாறாத முகமும் அவளுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. அந்தக் குடியிருப்பில் ரஸியா மீது தான் அவள் அதிகப் பிரியமாக இருந்தாள். அவளைப் போல் ஒரு மகள் தனக்கு கிடைக்க வேண்டுமென்று அவளைப் பார்க்கும் போதெல்லாம் எண்ணுவாள். ஆனால் உண்மையில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் குழந்தைக்குத் தான் ஏங்குகிறார்கள்.

துப்பட்டாவை எடுத்து கனத்த வயிற்றை அவள் மறைத்து விட்டு ரஸியாவைப் பார்த்துச் சிரித்தாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனம் பூரிப்படையும். இரண்டு பெண்கள் புன்சிரிப்பைப் பரிமாறிக் கொள்கிற போது ஒருவருக்கொருவர் அன்பினால் கட்டுண்டு விடுகிறார்கள். இது போன்ற ஒரு சூழ்நிலையில் வேறு ஆடவருடன் இவ்வாறு புன்னகைத்துப் பழக முடியாது. பெண்கள் தான் துணையாக இருக்க முடியும்.

Consensus on criteria for GDM - challenge or opportunity? | World ...

ரஸியா அவளை முழுமையாகப் பார்த்தாள். உடம்புக்கு ஒன்றும் இல்லையே… எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது? தம்பிப் பையன் என்றைக்கு வரப் போகிறான்? என்று கேட்டாள்.
குழந்தை பிறக்கும் நாள் குறித்து அவளுக்கு ஒன்றும் தெரியாது. இரண்டொரு மாதங்களாக அவள் தனியாகத் தான் இருக்கிறாள். குடும்பச் செலவுகளுக்குப் பணம் வருகிறது. அண்டை வீட்டுப் பெண்கள் அனைவரும் அவளுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருக்கிறார்கள். அதனால் தான் அந்தக் குடியிருப்பில் இருந்தவர்களெல்லாம் அவளைப் பற்றிய பயமும், கவலையும் இல்லாமல் இருந்தார்கள்.

ரஸியா மாடியிலிருந்து ஒவ்வொரு படியாகத் தாவித் தாவி இறங்கினாள். அவள் குதிக்கும் போது கைவளையல்களெல்லாம் குலுங்கி ஓசை எழுப்பின. ரஸியாவின் நளினமான நடவடிக்கைகளால் அவளுக்கு மனதில் உற்சாகம் பொங்கியது. ஆறு மாதங்களுக்கு முன்பு அவள் கர்ப்பம் தரிக்காமல் இருந்த போது அவளுடைய உடம்பை நினைத்துப் பார்த்தாள். இப்போது அப்படி இருக்க முடியவில்லை. நிலைமைக்குத் தகுந்தாற்போல் உடல் அசைவுகளையும், பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றவுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிகக் குழந்தைகள் பெற்றால் வளர்க்க முடியாது. வறுமை தான் மிஞ்சும் என்று எண்ணினாள்

என்றைக்கும் போல் தான் அன்றைக்கும் விடிந்தது. கிழக்கே சூரியன் உதித்துத் தகித்துக் கொண்டிருந்தது. அதே நிறம். அதே வெப்பம். நேரம் செல்லச் செல்ல மதியம் நெருங்கும் வேளைவில் சூழ்நிலையே மாறிவிட்டது. நேற்று இரவே வெளியே பெரிய சத்தம் கேட்டது. அந்தப் பெண் குடியிருந்த அரசு காலனியில் தான் முதன் முதலாக விரும்பத்தகாத நிகழ்ச்சி நடந்ததாகத் தகவல் வந்தது. பொதுப் போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது. ஆட்டோ, கார் எதுவும் ஓடவில்லை. நெடுஞ்சாலைகள் பாலைவனம் போல் காட்சியளித்தன. என்ன நடந்தது? எதற்காக இவ்வளவு பதட்டம் என்று அங்கிருந்த ஒருவருக்கும் புரியவில்லை. சைத்தான் மனிதர்களுக்குள் ஊடுருவி வெறிபிடித்து நகரத்தையே நாசம் செய்வது போல் இருந்தது.

காலையில் சூரிய ஒளியில் வானமெல்லாம் பிரகாசமாக இருந்தது. தற்போது என்னவாயிற்று? நிர்மலமாயிருந்த மேகங்களை கருப்பு நிற போர்வை கொண்டு மூடியது போல் வானம் இருட்டாக இருந்தது. இலையுதிர் காலம் போல் மரத்திலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து விழுந்தன. பறவைகள் எல்லாம் மருண்டு பறப்பதை நிறுத்தின. அவைகளின் இறக்கைகளில் கனத்த பொருளைத் தூக்கி வைத்தது போல் தவித்து நின்றன. மோசமான பிணவாடை காற்றில் கலந்து வந்தது. தூரத்தில் மிகப்பெரிய சிதை எரிவது போல் தீப்பிழம்புகள் தெரிந்தன.

எங்கும் ஒரே இருட்டு, பயமும், பீதியும் காலனி முழுக்க நிறைந்திருந்தது. வீட்டுக் கதவுகளும், சன்னல்களும் மடார், மடார் என்று சாத்தப்பட்டன. கர்ப்பிணிப்பெண் பயந்து போய் இருந்தாள். அவளுடைய வயிறு உடம்பின் ஒரு பகுதியாக இல்லாமல் யாரோ பெரிய களிமண் உருண்டையை கட்டித் தொங்க விட்டது போல் உணர்ந்தாள். கதவு, சன்னல்களெல்லாம் மூடப்பட்டுள்ளதால் வெளியில் நடப்பதை பார்கக முடியவில்லை. மனதை அதிர வைக்கிற வெறித்தனமான கூச்சல்களைத்தான் கேட்க முடிந்தது. அப்போது கதவு தட்டப்பட்டது. அவளுக்கு மனது ‘திக்’ என்றது. நான் தான் ரஸியா வந்திருக்கிறேன். கதவைத் திறங்கள் என்ற சத்தம் கேட்டது. கதவைத் திறந்ததும் ரஸியா உள்ளே வந்தாள்.

கதவை உட்புறமாகத் தாழிட்டு, ஒரு நாற்காலியை எடுத்து வந்து கதவுக்குப் பின்னால் வைத்தாள் ரஸியா ஒரு பெரிய அண்டாவில் அரிசி, மாவுப்பொட்டலம்,பலசரக்கு, தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் போட்டு நாற்காலி மீது வைத்தாள். கதவை இன்னும் மறைப்பதற்காக உயரமான இரும்புப் பெட்டியை இழுத்துப் பார்த்தாள். மிகக்கனமாக இருந்தால் முடியவில்லை. இவையெல்லாம் அமைதியாகவும், வேகமாகவும் நடந்தன.

அவள் கணவன் வெளியூர் சென்றிருக்கும் வேளையில் ரஸியா துணைக்கு வந்தது பெரிய ஆறுதலாக இருந்தது. தக்க சமயத்தில் அவளை அனுப்பி வைத்த அவளுடைய அத்தையை நன்றியுடன் நினைத்துக் கொண்டாள். இரண்டு பெண்களும் தரையில் உட்கார்ந்து, மடிமீது கைவைத்துக் கொண்டு வாசலைக் காவல் காத்தார்கள். திகிலுடன் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென மனிதர்களின் வெறிக் கூச்சல்கள் மூடியிருந்த சன்னல் வழியே கேட்டது. கீழே இருந்த வீடுகளையெல்லாம் அடித்து நொறுக்கும் சத்தம் கேட்டது. ஒரே புகை மூட்டம், தூசிகளும், சாம்பல்களும் காற்றோடு வெளியேறியது.

காலனிக்குள் நுழைந்த கலவரக் கும்பல் கண்ணில் கண்டவர்களையெல்லாம் வேட்டையாடினார்கள். உயிருக்குப் பயந்து ஒடி ஒளிந்த பெண்களை இழுத்து வந்து அழித்தார்கள். நெடுங்காலத்துப் பகையை வஞ்சத்தோடு பழி தீர்த்தார்கள். எவ்வித பாதுகாப்பும் இல்லாத, எதிர்த்து தாக்க தெரியாத அப்பாவிப் பெண்கள் கலவரக்காரர்களின் அழிப்பு வேலைக்கு எளிதில் இரையானார்கள். பெண்களின் அலறல் சத்தமும், மரண ஒலமும், விட்டுவிடச் சொல்லி கையெடுத்துக் கும்பிடும் தாய்மார்களின் கதறலும் கேட்டுக் கொண்டே இருந்தது.

தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருந்த ரஸியாவுக்கு, வெளியில் இருந்து வரும் அலறல் சத்தங்கள் பயத்தை ஏற்படுத்தின. அறைக்குள் பதட்டத்துடன் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தாள். கால்கள் பயத்தில் நடுங்கின. மனம் பீதியில் இருந்தது. ஆனால் கர்ப்பிணிப் பெண்ணோ வித்தியாசமாக நினைத்தாள்.

Pregnancy Doctor In Tamil

என்ன இருந்தாலும் கலவரக்காரர்களும் மனிதர்கள் தானே… வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்தால் அவர்களுடைய தாயாகவோ, சகோதரியாகவோ நினைக்கமாட்டார்களா? ஏழுமாத கர்ப்ப வயிற்றை நான் ஒளித்து வைக்க முடியாது. அரைகுறை பார்வை உடையவர்களும் என்னுடைய வயிற்றில் குழந்தை இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள். ஜனங்களெல்லாம் பொதுவாகவே வயிற்றுப் பிள்ளைக்காரியின் மீது அன்பும், கருணையும் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்று எண்ணினாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை அசைபோட்டாள். அவளுடைய உறவுக்காரப் பெண் குழந்தைகளோடு வந்திருந்தாள். அவளோடு பேருந்தில் பயணிக்க வேண்டியிருந்தது. வண்டி முழுக்க கூட்டம். உட்கார இடமில்லை. நின்று கொண்டு தான் வந்தாள். ஓடும் பேருந்தில் டிக்கட்டுக்காக பர்சில் பணத்தை எடுத்த போது நிலை தடுமாறி விழப் போனாள். இதைப் பார்த்த ஒரு மனிதர் எழுந்து அவளுக்கு இடம் கொடுத்தார். அந்த ஆள் முற்றிலும் புதியவர். அதற்கு முன் அவரை அவள் பார்த்ததே இல்லை. அவள் நிலை கண்டு இரக்கத்துடன் உதவினார். பொதுமக்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் மீது மிகுந்த இரக்கம் வைத்திருக்கிறார்கள். ஒரு போதும் தீங்கு செய்யமாட்டார்கள் என்றே நினைத்தாள். ஆனால் கள்ளங்கபடமற்ற அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன நடந்தது…

உட்கார்ந்திருந்த அந்தப் பெண் எழுந்து சென்று, பயந்து நடுங்கிக் கொண்டிருந்த ரஸியா தலை மீது கை வைத்து இதமாக வருடினாள். நீ தைரியமான இளம் பெண்ணல்லவா… பயப்படாதே… ஒன்றும் நடக்காது என்று அவளுக்குத் தைரியம் சொன்னாள். அதே நேரத்தில் கீழ் வீடுகளில் அலறல் சத்தமும், வெறிக் கூச்சல்களும் அதிகமாகக் கேட்டன. மரண ஒலங்கள் சுவர்கள் மீது மோதி மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. திடீரென்று உச்சஸ்தாயில் ஒரு சத்தம். அய்யோ! என் குழந்தையைக் கொன்றுவிட்டார்களோ… பெண்களின் அலறல்களும், மனித ஓலங்களும் நெஞ்சத்தை துளைத்தன. இவைற்றையெல்லாம் காதுகளில் கேட்க முடியவில்லை. கெட்டியான துணியை எடுத்து இரண்டு காதுகளோடு சேர்த்துக் கட்டினாள். அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாய் இருந்தாள்.

தடதடவென காலடிச் சத்தங்கள் நெருங்கி வந்தன. பழைய மரத்திலான மாடிப்படிகள் மனிதக் கூட்டத்தின் காலடிகள் பட்டு அதிர்ந்து நொறுங்கியது. காலனியில் வீடுகளும், வீட்டின் அறைகளும் ஒரு ஒழுங்கமைவோடு கட்டப்படவில்லை. போலியான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி ஒப்பந்தக்காரர் நிறைய பணத்தை சுருட்டிக் கொண்டு போனதாக அவள் நினைத்தாள். அவள் வீட்டிற்கு இன்னும் தவணைப் பாக்கி இருக்கிறது. அந்தப் பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான் அவளுடைய கணவர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார்.
இதே போலத்தான் காலனியிலிருந்த பெரும்பாலான ஆண்கள் வேலை தேடி பல இடங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் எந்த ஊரில் எந்தப் பகுதியில் வேலை செய்கிறார்கள் என்று இங்குள்ளவர்களுக்குச் சரியாகத் தெரியாது. அங்கு குடியிருப்பவர்களில் இரண்டு மூன்று பேரிடம் மட்டும் தான் செல்போன் உள்ளது. அதன் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வார்கள். பல பேருக்கு மொபைல் இல்லாதால், தகவல்களும் கிடைப்பதற்கு தாமதமாகிறது. அதில் ஒருத்தி தான் இந்தக் கர்ப்பிணிப் பெண். கடந்த இருபது நாட்களாக அவள் கணவனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. ஆனால் உறுதியாகத் திரும்பி வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தாள்.

ஆபத்து வந்துவிட்டது… ரஸியா ஓடிச் சென்று அவளை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிறு அழுத்தியது. மூச்சு விட முடியவில்லை. திமிரிப் பார்த்தாள். அதற்குள் கதவு உடைக்கப்பட்டது. கதவை மறைக்க வைக்கப்பட்டிருந்த அண்டாவும், அரிசியும், மாவும், மற்ற சாமான்களும் வீடு முழுக்க சிதறிப் பரவியது. வெறிகொண்ட கூட்டம் உள்ளே நுழைந்தது. கர்ப்பிணிப் பெண்ணைத் தூக்கி சுவர் மீது எறிந்தார்கள். ஓங்கி ஒரு அலறல் சத்தம் தான் கேட்டது. அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சாகக் கிடக்கும் போது கூட ரஸியாவை விட்டு விடச் சொல்லி கைகளால் மன்றாடினாள். அவர்கள் ரஸியாவை நாசப்படுத்தி விட்டு அவளை இரண்டாகப் பிளந்தார்கள். வளையல் நிறைந்த கரம் ஒன்று துண்டிக்கப்பட்டு வீசி எறியப்பட்டது. அந்தக் கை காப்பாற்றக் கெஞ்சியபடியே கீழே விழுந்தது. காப்பிணிப் பெண் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்து கண்களை மூடிக் கொண்டு இருந்தாள். கால் வழியே அடர்த்தியான உதிரம் போய்க் கொண்டிருந்தது. அதற்கு முன்னதாக பருத்த அவள் வயிற்றைக் கிழித்து எதை எடுத்துப் போனார்கள் என்று அவள் உணரும் முன்பே உயிர் போய்விட்டது.

Delhi Communal Violence: Jail for Pregnant Safoora, Bail for 'Gun ...

அநேகமாக காலனியில் இருந்த அனைத்து வீடுகளும் எரிக்கப்பட்டு சாம்பலாயின. தீயணைப்பு வீரர்களால் ஒரு சில வீடுகளே பாதி எரிந்தும் எரியாமலும் மீட்கப்பட்டன. எரிந்து விழுந்த மரப்படிகளுக்கிடையில் வெவ்வேறு வடிவிலான மூன்று கருகிய உடல்கள் கிடந்தன. அந்த மூன்று பேரும் உயிருக்குப் பயந்து படிகளில் இறங்கி வரும்போது கலவரக்காரர்களால் பிடிக்கப்பட்டு வெட்டி தீயில் வீசப்பட்டிருக்கலாம். இங்கிருந்த பெரும்பாலானவர்களைக் காணவில்லை. ஒருவேளை அவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம். அவர்களை எங்கு போய்த் தேடுவது எங்கே போய்த் தோண்டிப் பார்ப்பது?

ரஸியா சிதைக்கப்பட்டு வெட்டி எறியப்பட்டதை வெளியில் சொல்ல முடியவில்லை. வெளி உலகிற்கு அவள் கொல்லப்பட்டாள் என்பது மட்டுமே தெரியும். கருகிய பிரேதங்கள் நமக்கு ஆயிரம் செய்திகளை சொல்லி விட்டுச் செல்கின்றன. கர்ப்பிணிப் பெண்ணுடைய உடல் வீட்டிற்குள்ளேயே கிடந்தது. சுற்றிலும் ரத்தம் பெருகி உறைந்திருந்தது. அவளுடைய அடிவயிற்றைக் கிழித்து, கர்ப்பப்பையை அறுத்து, வாள்முனையில் குத்தி வெளியே வீசியிருக்கிறார்கள். சிசுப்பிண்டம் கூறுகளாக்கி சிதறியிருந்தன. மனித குலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய இந்தக் கொடூரச் செயலைப் பாhத்;தவர்களையும் கேள்விப்படவர்களையும் நெஞ்சம் பதற வைத்தது.

வேலை தேடி வெளியில் சென்றிருந்த ஆண்களெல்லாம் அலறியடித்து காலனிக்கு வந்தார்கள். கலவரக்காரர்களின் அழித்தொழிப்பு நிகழ்ந்ததில் பலர் காணாமல் போயிருந்தார்கள். உறவுகளைத் தேடி வந்தவர்களின் துயரம் சொல்லிமாளாது. மறுநாள் காவல்துறையினர் வந்தார்கள். மனித உயிர்கள் வெறும் எண்களாக மட்டுமே பதிவேட்டில் குறிக்கப்பட்டன. எத்தனை பேர் இறந்தார்கள்… காணாமல் போனவர்கள் எத்தனை பேர்… வீடுகளின் சேத மதிப்பு… வீட்டிலிருந்த பணம் பொருட்கள் காணவில்லையென்றால் அதன் மதிப்பு… இவற்றைக் குறித்துக் கொண்டார்கள்.

மூன்றாம் எண் வீட்டில் எத்தனை பேர் குடியிருந்தார்கள்? காவல்துறை அதிகாரி கூடியிருந்தவர்களிடம் கேட்டார். எண்ணிக்கையை குறிப்பதற்காக பேரேட்டுப் புத்தகத்தைப் பிரித்து, பேனாவைத் திறந்து தயராக இருந்தார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். பாதி எரிந்திருந்த பக்கத்து வீட்டிலிருந்து அடர்ந்த தாடியுடன் ஒருவர் வந்தார். கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன. ரத்தம் தோய்ந்த தரையில் தொடர்ந்து புரண்டு எழுந்ததால் அவருடைய உடைகளிளெல்லாம் ரத்தம் பரவி காய்ந்திருந்தது. அவரைப் பார்த்து போலீஸ்காரர் கேட்டார். இந்த வீட்டில் யார் இருந்தார்கள்? அவர் வாய் திறக்குமுன் பக்கத்திலிருந்தவர் பதிலளித்தார். இவர் வெளியூர் சென்றுவிட்டார். இவரது மனைவியும், பக்கத்து வீட்டுப் பெண்ணான ரஸியாவும் தான் உள்ளே இருந்தார்கள். அதனால் இறந்தவர்கள் இரண்டுபேர் என்று குறித்துக் கொள்ளுங்கள். தாடிக்காரர் போலீஸ்காரரை ஏற இறங்கப் பார்த்தார். உடம்பு அதிர்ந்து நடுங்கியது. சத்தமாகச் சொன்னார் இரண்டு அல்ல. இறந்தது மூன்று பேர்…

பேரேடு புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரிக்கு குழப்பமானது. இதுபோன்ற பெரிய உயிர் இழப்புகளைச் சந்திக்கிற போது சம்பந்தப்பட்ட மனிதனுக்கு புத்தி தடுமாறுவது இயற்கை தான் என அதிகாரி நினைத்தார். மீண்டும் கேட்டார்.

உன் மனைவி, ரஸியா இரண்டு பேர்தானே… மூன்றாவது நபர் எப்படி வரமுடியும்? அவர் உரத்த குரலில் மீண்டும் சொன்னார். என் மனைவி கர்ப்பிணிப்பெண். அவள் வயிற்றில் ஏழுமாதக் குழந்தை இருந்தது. அது உயிர் இல்லையா? இறந்துபோன சிசுவுக்காக நான் எந்த பண உதவியோ, நிவாரணமோ கேட்கமாட்டேன். ஆனால் என் வீட்டில் இறந்தது மூன்று பேர் என்பதை நீங்கள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

தாடிக்கார மனிதர் தரையைப் பார்த்தார். அவர் மனைவி உடல் கிடந்த இடத்தில் இப்போது ரத்தம் இல்லை. காய்ந்து விட்டது. அந்த ரத்தத்தை உட்கொண்ட தரையை கண்ணீர் மல்க வருடினார்.

குஜராத்தி மூலம் : ஹிமான்ஷி செலாட்
ஆங்கிலம் வழித் தமிழில் : மாதா
நன்றி: இண்டியன் லிட்டரேச்சர் – 289

முகவரி

ஆ.தங்கராஜூ,

Phone: 94424 52505

2-7-3 பகவதியம்மன் கோவில் தெரு

சக்கம்பட்டி ஆண்டிபட்டி (Pழ) தேனி (னுவ) – 625512.

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery